Tuesday, January 25, 2011

கவிஞர் உள்ளம்






கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கு 1913-ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. அதே ஆண்டில், வங்கத்தின் டாக்காவில் இலக்கிய மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு தாகூரையே தலைவராகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

தன் சொந்த கிராமத்தில் தன் வேலைக்காரனுடன் தங்கியிருந்தார் தாகூர். மாநாட்டில் தான் கலந்து கொள்ள முடியாதென்று மாநாட்டிற்கு முதல் நாளே தந்தி கொடுத்துவிட்டார். மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களெல்லாம் மிகவும் குழம்பிப் போனார்கள். அவர்களில் ஒருவர் விஷயம் என்னவென்று தெரிந்துகொள்வதற்காக அன்று மாலையே தாகூரின் கிராமத்திற்கு வந்தார்.

கிராமத்தில் காலரா நோய் பரவியிருந்தது. தன்னைக் காண வந்த நண்பரை வரவேற்றார் தாகூர். மேல் மாடியில் தங்க வைத்தார். பிறகு பொறுமையாக, தான் மாநாட்டிற்கு வரமுடியாத காரணத்தை விளக்கினார். ""என் வேலைக்காரன் காலரா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு நான்தான் அருகிலிருந்து பணிவிடை செய்துகொண்டிருக்கிறேன். எனவேதான் என்னால் மாநாட்டிற்கு வரமுடியவில்லை. அவனைத் தனியே விட்டுவிட்டு நான் எப்படி வரமுடியும்? நோயின் கடுமை குறைந்திருக்கிறது என்றாலும் எனது கவனம் அவனுக்குத் தேவைப்படுகிறது. எனவே வேறு யாரையாவது தலைவராகக் கொண்டு மாநாட்டை நடத்திவிடுங்கள்.''

நோயுற்ற தன் வேலைக்காரனுக்குப் பணிவிடை செய்ய வேண்டுமென்று, இலக்கிய மாநாட்டின் தலைமையைத் துறந்த கவிஞரின் அன்பும், காலரா நோய் தனக்கும் தொற்றிக் கொண்டுவிடுமே என்று அஞ்சாத உள்ளமும் கவிஞரை நெகிழ வைத்தன.


நன்றி -தினமணி

No comments: