* மருத்துவர்கள் நோயாளிகளிடம் 'எனக்கு வியாதியே இல்லை' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும்படி அறிவுரை கூறுகின்றனர். நோயாளிகள் அப்படிச் சொல்வதனால் வியாதிகள் அகலுவதற்கான சாதகமான நிலை உண்டாகிறது. அதுபோல, இவ்வுலகில் நீ தாழ்ந்தவன் என்று எண்ணிக் கொண்டால், சீக்கிரத்தில் தாழ்ந்தவனாகவே ஆகிவிடுவாய். அளவிட முடியாத அளவிற்குத் திறமை உன்னிடம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டால், அவ்வாறே திறமைகள் மிகுந்தவனாய் ஆகிவிடுவாய்.
* கல்லானது தண்ணீருக்குள் வருடக்கணக்கில் கிடந்தாலும் அதனுள் தண்ணீர் நுழையாது. ஆனால், களிமண் தண்ணீருக்குள் கிடந்தால் கரைந்து விடும். அதுபோல திடமான நம்பிக்கையுள்ள மனமுள்ளவர்கள், சோதனையால் தடுமாற்றம் அடைவதில்லை. நம்பிக்கை இல்லாதவருடைய மனம் சிறு காரணத்திற்கு கூட சலனமடையும்.
* குருவின் சக்தியின்மீது திடமான நம்பிக்கை கொண்ட ஒரு சிஷ்யன், குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆற்றின் மீது நடந்து போனான். இதைக் கண்ட குரு 'என் பெயருக்கே இவ்வளவு மகிமை இருக்கிறதென்றால், எனக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும். இது எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே என்று நினைத்தபடியே, அவரும் தண்ணீரின் மீது நடக்க ஆரம்பித்தார். ஆனால், கால் வைத்தவுடன் மூழ்கிவிட்டார். நம்பிக்கையால் அபூர்வமான காரியங்களைச் சாதிக்கலாம். ஆனால், தற்பெருமை அழிவைத் தரும்.
--ராமகிருஷ்ணர்
No comments:
Post a Comment