Tuesday, January 25, 2011

எல்லாம் 'இதய' மயம்



சுருக்கமாகச் சொன்னால் 'நான்' என்ற எண்ணமே எல்லாவற்றிற்கும் மூலம். அது உதிக்குமிடம் இதயம்.

இந்த இதயம் ரத்த சுத்திகரிப்புச் செய்யும் அங்கம் அன்று. 'ஹிருதயம்' என்பதற்கு 'இதுவே மையம்' என்பது பொருள். ஆகவே அது ஆன்மாவைக் குறிக்கிறது.

பிரபஞ்சம் முழுவதும் உடலில் அடங்குகிறது. எனவே பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம்.

உலகத்திற்குச் சூரியனை போன்று உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவது போல இதயம் மனத்திற்கு ஒளி தருகிறது.

சூரிய அஸ்தமனத்தின் போது சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று இதயத்திலிருந்து விலகி நிற்கும் போது மனத்தை மட்டுமே காண முடிகிறது.

'பிரக்ஞானம்' என்ற சொல்லுக்கு வெளிப்படையான பொருள் 'மனம்' என்றாலும், அது இதயத்தையே குறிக்கிறது என அறிஞர் உணர்வர். பரம்பொருள் இதயமே.

மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது துக்கம், பயம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும் போது மனம் தனது மூலமாகிய இதயத்திற்கு செல்கிறது. அத்தகைய கலப்பை நாம் உணர்வதில்லை. இருப்பினும் உணர்வோடு இருதயத்தில் நுழையும்போது அது 'சமாதி' என்று அழைக்கப் பெறும். இவ்வாறு, வேறுபாடு வார்த்தைகளில் மட்டுமே.

இதயக் குகையின் நடுவே பிரம்மம் மட்டுமே ஒளிர்கிறது. 'நான்-நான்' என்ற நேரிடையான ஆன்ம அனுபவமே இது, ஆத்ம விசாரத்தின் மூலமோ, அல்லது கலப்பினாலோ, அல்லது மூச்சடக்கத்தினாலோ இதயத்தில் நுழைந்து அதாகவே வேரூன்றி இரு.

--ராமகிருஷ்ணர்

No comments: