TULPAN (2008).கஜகஸ்தான் நாட்டுத் திரைப்படம்.
பாலைவனப் புயல் அவ்வப்போது வீசிக் கொண்டிருக்கும் மிக வறண்ட நிலப்பரப்பு. ஆட்களே அபூர்வமாக நடமாடும் உள்ளார்ந்த கிராமப்பகுதியில் ஆட்டு மந்தையை கூலிக்காக மேய்த்துப் பிழைக்கும் ஒரு குடும்பம். அந்த குடும்பத்தைச் சார்ந்து நிற்கும் ஒரு இளைஞன். திருமணமாகியிருந்தால்தான் அவனுக்கென்று தனியாக ஒர் ஆட்டு மந்தையை தரமுடியும் என்று உரிமையாளர் கூறிவிடுகிறார். அந்தக் கடுமையான நிலப்பரப்பின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒரே மணவயதுப் பெண் TULPAN. தான் முன்பு பணிபுரிந்து கொண்டிருந்த ராணுவ சாகசங்களை இளைஞன் கூறி அந்தக் குடும்பத்தை கவர முயன்றாலும், மிகப் பெரிய காதுகளையுடைய அவனை பெண்ணுக்கு பிடிக்காமல் போகிறது.
அந்த மந்தையின் ஆடுகள் பிரசவங்களின் போது மர்மமாக இறந்து போகின்றன. உரிமையாளர் கடிந்து கொள்வதால் மன உளைச்சலில் இருக்கும் குடும்பத்தலைவன், வீட்டின் கூடுதல் சுமையாக இருக்கும் தனது மச்சானை அவ்வப் போது கடிந்து கொள்கிறான். இருவருக்குமிடையில் ஏற்படும் மனக்கச்ப்பின் காரணமாக இளைஞனின் சகோதரியான குடும்பத்தலைவி வருத்தமடைகிறாள். ஒரு உச்ச வாக்குவாதத்தில் இளைஞன் மனமுடைந்து நகரத்தை நோக்கி புறப்படுகிறான்.
தங்கள் வீட்டுப் பெண் மணமாகியிருக்கிற இடத்தில் தங்க நேர்வதைப் போன்ற சங்கடமான விஷயம் வேறு எதுவுமேயில்லை. கணவனைச் சார்ந்திருக்கிற பெண் தன்னுடைய சகோதரனின் சங்கடத்தைக் காணச் சகியாமலும் அதற்காக கணவனிடம் அதிகம் போராட முடியாமலிருக்கும் சூழலும் அதையும் விட கொடுமையானது. கடுமையான பணிக்குப் பிறகு திரும்பியிருக்கும் கணவனை ஆற்றுப்படுத்த மனைவி இயல்பாக உடல்உறவிற்கு ஆயுத்தமாவதும், அந்தச் சமயத்தில் இளைஞன் வீட்டிற்குள் நுழைவதால் இருவரும் விலகுவதும், கூட்டுக்குடித்தனத்தில் வசித்த ஒவ்வொருவரும் இந்தச் சங்கடமான அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.
இந்தப் படத்தின் மிகச்சிறப்பானதாக நான் கருதுவது, அந்த வறண்ட நிலப்பரப்பின் உஷ்ணமு்ம் குளிரும் புழுதியும் பார்வையாளன் நெருக்கமாக உணருமளவிற்கு சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது. ஆட்டுக்குட்டியொன்று பிரசவத்தில் இறந்து போவதும், பின்னர் ஒரு சூழ்நிலையில் இளைஞன் தன்னந்தனியாக ஒரு ஆட்டின் பிரசவத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் மிக சாவகாசமாக நேரடி ஒளிபரப்பு போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தன்னுடைய நீண்ட காதுகளின் காரணமாக திருமணமாகவில்லையே என்று அந்த இளைஞன் வருத்தமடைவதும் ஆனால் சற்றும் மனம் தளராமல் மணப்பெண்ணை எப்படியாவது கவர முயல்வதும் சுவாரசியமான காட்சிகள். நகரத்தில் செட்டிலாகி விடுவதையே தன்னுடைய வாழ்க்கை லட்சியமாக கொண்டிருக்கும் இளைஞனின் நண்பன், பெரிய மார்புகள் கொண்ட நடிகைகளின் படங்களின் துணையுடன் அதற்கான கனவில் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். நகரத்தின் கவாச்சி தரும் பிரமிப்பை எப்படியாவது சுகிக்க வேண்டும் என்று கனவு காணும் பெரும்பாலான கிராமத்து இளைஞர்களை அவனது பாத்திரம் எதிரொலிக்கிறது.ஒட்டகக் கடியினால் துன்புறும் மருத்துவரின் காட்சிகள் சொற்ப நேரமே என்றாலும் நகைச்சுவையாக இருக்கிறது.
இறுதிக் காட்சி மிக நெகிழ்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எத்தனை பெரிதான மனக்கசப்புகளையும் குடும்பம் என்கிற நிறுவனமும் உறவுகள் எனும் கட்டமைப்பும் போக்கிவிடுகிறது என்பதை இத்திரைப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது.
இதில் வரும் குழந்தைகள் அதிகப்பிரசங்கத்தனமாக இல்லாமல் அவர்களுக்கேயுரிய பிரத்யேக அப்பாவித்தனங்களுடன் சித்தரிக்கப் பட்டுள்ளார்கள். 'பசங்க' திரைப்படத்தின ஒரு குறிப்பிடத்தக்க காட்சி (மாத்திரம்) நினைவுக்கு வருகிறது. அந்த வீட்டுச் சிறுவன் ஏதோ பேசிக் கொண்டிருக்க, மிக குறைந்த வயதுடைய அவனின் தம்பி, சிறுவனின் தலையில் அட்டை ஒன்றினால் விளையாட்டாக அடித்துக் கொண்டேயிருப்பான். செயற்கைத்தனமாக இயங்காமல் காட்சியை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு செல்ல இந்த மாதிரியான உத்திகளை இயக்குநர் கையாள்வது நல்லது. இத்திரைப்படத்தில் அது போல் பல காட்சிகளை உணர்ந்தேன். படத்தின் துவக்கத்திலேயே நிகழும் அந்த நீளமான காட்சியமைப்பின் மூலம் ஒளிப்பதிவாளரை நாம் சிலாகிக்கலாம்.
குடும்பத்தலைவியின் பாத்திரத்தை தவிர மற்ற அனைவருமே முன்அனுபவம் இல்லாத நடிகர்கள் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது. 2009 அகாதமி விருதுக்காக அந்த நாட்டின் சார்பாக தேர்வு செய்யப்பட்ட இத்திரைப்படத்தை மிக அழுத்தமாக பரிந்துரைக்கிறேன்.
No comments:
Post a Comment