Thursday, March 3, 2011

Matrubhoomi



”பக்கத்து வீட்டு குழந்த பாரு எவ்வளவு சமத்தா இருக்கு... நீ தான் கெட்ட பையன். எப்ப பார்த்தாலும் கத்தி, அழுது ஆர்பாட்டம் பண்ணுற” என்று அம்மாவோ, அப்பாவோ தன் குழந்தையிடம் சொல்லுவார்கள். தன் குழந்தையிடம் நல்லதே இருந்தாலும், இன்னொரு குழந்தையிடம் ஒப்பிடாமல் பெரும்பாலான பெற்றோர்களால் இருக்க முடியாது. அதே போல் ‘உலக சினிமா’ என்று சொல்லும் போது வேற்று மொழி படங்களைப் பற்றி சொல்லி, நம் நாட்டில் இது போல் படங்கள் இல்லை என்று குறைப்பட்டுக் கொள்வோம். 98% இது உண்மை தான். பஞ்ச் டையலாக், கதாநாயகனுக்கான கதை, அபத்தங்கள் நிறைந்த களம் என்று 100ல் 98 படங்கள் இப்படி தான் வருகிறது. ஆனால், இதில் தப்பி 2 படங்கள் வருகிறது. அதை நாம் பார்க்க தவறவிடுகிறோம். அல்லது திரையரங்கு கிடைக்காமல் மறக்கடிக்கப்படுகிறோம். அப்படி, 100ல் தப்பி வந்த நல்ல படங்களில் ‘மாத்ருபூமி’ படம் குறிப்பிடத்தக்கது. இந்தி, போஜ்புரி மொழிகளில் வெளிவந்தப்படம்.

கிராமங்களில் நடக்கும் பெண் சிசு கொலைகளை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு கிராமத்தில் பெண் சிசுக்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டு, பெண்களே இல்லாமல் எப்படி வாழ்கிறார்கள். அந்த இடத்தில் ஒரு பெண் வாழ்ந்தால் அவளின் நிலை என்ன ? என்று இந்த படம் காட்டியிருக்கிறது.

ஆரம்பக் காட்சியில், பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறப்பது போல் காட்சி தொடங்குகிறது. ஆண் வாரிசு எதிர்பார்த்து இருக்கும் தந்தை அந்த பெண் குழந்தையை அண்டா முழுக்க பால் நிரப்பி, அதில் பெண் குழந்தையை முக்கி கொள்கிறான். ’பெண் குழந்தை வேண்டாம்’ என்று கிராமம் வாழ்ந்த்தால் எதிர்கால சங்ததியனர்களுக்கு திருமணம் செய்துக் கொள்ள எந்த வீட்டிலும் பெண்கள் இல்லாமல் இருக்கிறார்கள். பெண் வாசம் இல்லாமல் அந்த கிராமத்தில் வாழும் ஆண்கள் பெண்ணின் நிர்வாணப்படத்தையும், ஆபாசப் படங்களையும், ஆண் பெண் போல் கவர்ச்சியான ஆடையணிந்து வருவதும் என்று தங்கள் ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள்.

அந்த கிராமத்தில் வசதி படைத்த மனிதன் ராமசந்திரனுக்கு ஐந்து மகன்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவன் தன் வீட்டில் இருக்கும் மாடோடு உறுவுக் கொள்கிறான். மற்ற மகன்கள் வீட்டில் இருக்கும் சாப்பாட்டு மீது குறை சொல்லுகிறார்கள். தன் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தாலும் ஊரில் பெண் இல்லை என்பதால் ராமசந்திரனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்படி இருக்கும் ஊரில் திருமண நிகழ்ச்சி நடக்கும் போது, மணப்பெண்ணின் பாவடை நாடாவை அவிழ்த்து விடுகிறார் திருமணம் செய்து வைக்கும் ப்ரோகிதர். மணமகன் உட்பட காய்ந்து கிடக்கும் பலரின் கண்களுக்கு அந்த பெண் அரை நிர்வாணமாக தெரிவதை ரசிக்கிறார்கள்.

ராமசந்திரன் அந்த ப்ரோகிதரை வைத்து வறுமையில் வாடும் ஒரு குடும்பத்து பெண்ணை தன் மகனுகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறான். அந்த பிரோகிதரும் அவர்கள் கிராமத்தில் இருந்து தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்து பெண்ணான கல்கியை ராமசந்திரனின் ஐந்து மகன்களுக்கு மனைவியாக திருமணம் செய்து வைக்கிறான். இதில், முதலிரவுக்கு யார் செல்வார்கள் என்ற போட்டியில் தந்தை முந்திக் கொண்டு அறைக்கு செல்கிறான். இது வரை ஆண் வாசம் இல்லாமல் வளர்ந்த கல்கி ஒவ்வொரு தினமும் ஒவ்வொருவரிடம் படுக்க வேண்டிய நிலைமை.

இரவு முழுக்க வன்கொடுமையும், காலை முழுக்க வீட்டு வேலையும் என்று கல்கி உடலாலும், மனதாலும் வாட்டி வதைக்கப்படுகிறாள். இதில் ராமசந்திரனின் கடைசி மகன் மட்டும் கல்கியிடம் அன்பாக நடந்துக் கொள்கிறான். அவள் வீட்டு வேலை செய்யும் போது அவளின் உடல்நிலை புரிந்து உதவி செய்கிறான். ஐந்து பேரில் இளையவனிடம் தன் காதலை காட்டுகிறாள் கல்கி. இளைய மகன் கல்கியுடன் நெருங்கி பழகுவது ராமசந்திரன், அவனது மற்ற நான்கு அண்ணன்களாலும் பொருத்துக் கொள்ள முடியவில்லை. படிப்பை சாக்காக வைத்து ராமசந்திரன் இளையவனை அடிக்கிறான். ஒரு கட்டத்தில், மற்ற சகோதரர்கள் இளையவனை கொலை செய்கிறார்கள். இதை அறிந்த கல்கி வீட்டை விட்டு தப்பி ஓட முயற்சிக்கிறாள். அதற்கு அந்த வீட்டில் வேலை செய்யும் சிறுவனும் உதவி செய்கிறான். அதனால், அந்த சிறுவன் ராமசந்திரனின் மற்ற மகன்களால் கொல்லப்படுகிறான்.

கல்கி வீட்டுக்கு இழுத்து வரப்பட்டு, மாடுகளோடு மாடாக கால்கள் கட்டப்பட்டு கிடக்கிறாள். கல்கி மாட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டதை அறிந்த ஒரு சிலர் இரவில் அவளை
கற்பழிக்கிறார்கள். கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்கி வாயில் துணியடைத்து புணர்கின்றவர்களை எதிர்த்து ஒன்றும் செய்யாதவளாய் பிணம் போல் கிடக்கிறாள். ராமசந்திரன், அவன் மகன்களும் அவளுடன் புணர்கிறார்கள். ஒரு கட்டத்தில் செருப்பு சத்தம் கேட்டாலே, அஞ்சும் அளவிற்கு கல்கி பாதிக்கப்படுகிறாள். அவள் கர்ப்பமாகியும் அவளை யாரும் விட்டு வைக்கவில்லை.

கல்கிக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என்று ஜோதிடர் ஆருடம் சொல்லும் போது, கல்கி மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வரப்படுகிறாள். பிறக்க போகும் குழந்தைக்கு யார் அப்பா என்று மகன்கள் சண்டைப்போட்டுக் கொள்ளும், ராமசந்திரன் அவளுடன் தான் முதலில் இருந்ததை கூறி ஜாதகம் எழுதுவதற்கு தன் பெயரை அப்பாவாக போட சொல்கிறான்.

கல்கிக்கு குழந்தை பிறக்கபோவதை அறிந்த ஊர் மக்கள் அந்த குழந்தைக்கு ’தாங்கள் தான் அப்பா’ என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். கல்கியை இத்தனை பேர் புணர்ந்த்தை அறிந்த ராமசந்திரன் தன் மகன்களை விட்டு அவர்களை கொல்ல சொல்கிறான். ஒரு கட்டத்தில் ஜாதி கலவரமாகி ஒருவருக்கு ஒருவர் வெட்டி சாய்த்துக் கொண்டு இறக்கிறார்கள். பலர் அனுபவித்த கல்கியை கொல்ல நினைத்த ராமசந்திரனும் புதிதாய் வந்த வேலைக்காரனான சிறுவனால் கொல்லப்படுகிறான். இறுதியில், கல்கிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அவளுடன் படுத்த ஆண்கள் எல்லாம் பிணமாக கிடக்கிறார்கள்.

அந்த வீட்டு வேலைக்கார சிறுவன், “ஐய்...பெண் குழ்ந்தை” என்று முகன் மலர புன்னகையுடன் சொல்கிறான்.

ஆரம்ப காட்சி பெண் குழந்தை என்று முக சுலித்த கிராமத்தில் பெண் குழந்தை என்றது புன்னகை சிந்துவது போல் காட்டுகிறார்கள். இந்தியாவில், கடந்த 100 வருடத்தில் 3.5 கோடி பெண் சிசுக்கள் ’பெண்’ என்பதால் தொலைந்துப் போனதாக UNFPA அறிகிக்கைக் கொண்டு படம் முடிகிறது.

‘கல்கி’யாக நடித்தவர் துலிப் ஜோஷி. ஆரம்பத்தில் இந்த பாத்திரத்தை ஏற்க்க பயந்தாராம். ஆனால், கதை முழுக்க கல்கி பாத்திரத்தை சுத்தி நடப்பதால் ஏற்று நடித்தாராம். படம் வெளிவந்து பலர் அவரை பாராட்டினாலும், ஏன் இந்த படத்தை நடித்தோம் என்று கவலையாக உள்ளது என்கிறார். இத்தனைக்கும், இந்த படத்தில் ஆபாசக்காட்சியோ, கவர்ச்சியாகவோ நடிக்கவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் கல்கி பாத்திரம் மீது பரிதாபம் வருவது போல் இருந்தது.

’கல்கி’ என்ற ஒன்றை பெண் பாத்திரத்தை வைத்து பெண்கள் படும் எல்லா துயரங்களையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மனிஷ் ஜா. பிகாரில் வளர்ந்த இவர், குஜராத்தில் ’ஒரு கிராமம் பெண்கள் இல்லாமல் இருப்பதை’ செய்திதாளில் படித்ததை மையமாக வைத்து படமாக்க வடித்திருக்கிறார். பெண் சிசு கொலை தொடர்ந்தால் எதிர்கால இந்தியா எப்படி இருக்கும் என்ற கட்டுரைகள் மனிஷ்க்கு மேலும் உதவியாக இருந்துள்ளது.

பெண்களை குத்து விளக்கு, குல தெய்வம் என்று நினைக்க வேண்டாம். குறைந்த பட்சம் அவர்களை மனிதர்களாக வாழவிடுவோம் என்று சொல்ல தோன்றுகிறது.

இந்த படம் 2003 வெனிஸ் திரைப்பட விழாவிலும், 2003 டோரோண்டோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.
எழுத்து - குகன் பக்கங்கள்

No comments: