Friday, March 18, 2011

Before Sunset - English






நமது வாழ்வில் பத்து ஆண்டுகளுக்கு முன்: அப்பொழுது நாம் எந்தக் கவலையும் இல்லாத, வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகக்கூடிய ஒரு உற்சாகமான நிலையில் இருந்திருப்போம். அந்தச் சமயத்தில், திடீரென்று ஒரு பெண்ணுடன் ஒரு முழு நாள் செலவிடக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் எப்படி இருக்கும்? இருவரும், மெதுவே ஒருவர் மேல் ஒருவர் ஈர்க்கப்படும் அந்தக் கணங்கள் . . . இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் காதல் வயப்படும் அந்த நிமிடங்கள். . சட்டென்று மின்சாரம் பாய்வதைப் போல் உணர்ந்த அந்த நொடிகள் . . சுருக்கமாய்ச் சொல்லப்போனால், பிஃபோர் சன்ரைஸ் படத்தைப் போல் இருக்கும்.

பத்து வருடங்கள் முன், பிஃபோர் சன்ரைஸ் படத்தில் நடந்த கதையின் தொடர்ச்சியே இந்த 'பிஃபோர் சன்செட்'. ஆனால், சன்ரைஸ் படத்தைப் பற்றி எழுதாமல், அதன் இரண்டாம் பாகத்தைப் பற்றி எழுதுவதன் நோக்கம்? முதலில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பின் முதல் பாகத்தைப் பார்த்தால், இரு படங்களின் தாக்கத்தையும் முழுதாய் உணரலாம். இப்படத்தின் ஆரம்ப நிமிடங்களில் நாம் உணரும் ஒரு அற்புதமான மனநிலை, முதல் படத்தைப் பார்க்காமல் இருந்தால் தான் கிடைக்கும்.

ஜெஸ்ஸி (ஈதன் ஹாக்) ஒரு எழுத்தாளன். பத்து வருடங்கள் முன்னால், வியன்னாவில் அவன் பார்த்த ஒரு பெண்ணைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அப்புத்தகத்தைப் பாரிஸில் பிரமோட் செய்வதற்காக, ஒரு நூலகத்தில் ஜெஸ்ஸி பேசுகிறான். அப்பொழுது, அங்கு வந்திருக்கும் பத்திரிக்கை நிருபர்கள், அப்புத்தகத்தைப் பற்றிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர். ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதிலளிக்கிறான் ஜெஸ்ஸி. அப்பொழுது, சாதாரணமாக நூலகத்தின் ஒரு பக்கத்தைப் பார்வையால் துழாவுகையில், ஒரு பெண், இவனையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அதிர்ச்சிக்குள்ளாகிறான். அதே பெண் தான், பத்து வருடங்கள் முன் அவன் சந்தித்த பெண்! பல வருடங்களாக இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அவசர அவசரமாகத் தனது பேச்சை முடித்துக் கொள்ளும் ஜெஸ்ஸி, தனக்கு இன்னமும் ஃப்ளைட்டைப் பிடிக்க மிகக் குறைந்த நேரமே இருக்கும்போதிலும், அந்தப் பெண் செலினிடம் (ஜூலி டெல்ஃபி) சென்று, தன்னுடன் காஃபி அருந்தும்படி அழைக்கிறான்.


பல வருடங்கள் கழித்து ஜெஸ்ஸியைப் பார்த்த மகிழ்ச்சி செலினுக்கு. அவளும் சம்மதிக்கிறாள். இருவரும் மெல்ல செலினுக்குப் பிடித்த காஃபி ஷாப்பை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர். அந்தக் கடை, சில தெருக்கள் தள்ளி இருக்கிறது. மெதுவாக இருவரும் பேசத் தொடங்குகின்றனர். பத்து வருடங்கள் முன், தாங்கள் பிரிந்த போது, ஆறு மாதம் கழித்து வியன்னாவில் சந்திப்பதாகப் போட்டிருந்த திட்டத்தைப் பற்றிப் பேச்சு திரும்புகிறது. தனது பாட்டி திடீரென இறந்து விட்டதால், தன்னால் வர முடியவில்லை என்று சொல்லும் செலின், ஜெஸ்ஸி வியன்னாவுக்கு வந்தானா என்று கேட்கிறாள். தானும் வரவில்லை என்று ஜெஸ்ஸி சொல்கிறான். தனக்கு ஒரு உறுதியான காரணம் இருந்தது என்றும், ஆனால், ஜெஸ்ஸி வராததற்கு ஏதேனும் காரணம் இருந்ததா என்று கேகும் செலின், அவன் வர மறந்து விட்டான் என்று எண்ணிக் கொள்கிறாள். ஆனால், ஜெஸ்ஸியின் கண்கள் அவனைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவன் வியன்னாவுக்கு வந்து, செலினுக்காகக் காத்திருந்து, பின் திரும்பிவிட்டதை அறிந்து கொள்ளும் செலினால், கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஜெஸ்ஸி அவளை சமாதானம் செய்கிறான்.

பேச்சு, மெதுவாக அவர்களது வாழ்க்கையைப் பற்றித் திரும்புகிறது. ஜெஸ்ஸிக்குத் திருமணம் நடந்து, ஒரு பையன் இருப்பதை செலின் அறிந்து கொள்கிறாள். செலினுக்கும் ஒரு காதலன் இருக்கிறான். ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளத் தொடங்குகின்றனர். செலின் தனது உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் எண்ணங்களை மெல்ல வெளியிடத் தொடங்குகிறாள். தங்களது முதல் சந்திப்பிற்குப் பிறகு, தன்னால் எந்த ஆணுடனும் இயல்பாகப் பழக முடிவதில்லை என்றும், எந்த ஆணுடன் தான் இருக்கும்போதும், ஏதோ ஒரு தனிமையைத் தன்னைச் சுற்றி உணர்வதாகவும் சொல்லும் செலின், தன்னுடன் எவரும் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே இந்தத் தனிமை எண்ணத்திலிருந்து விடுபடுவதாகவும் சொல்கிறாள். அதனால் தான் அவளது காதலன் பல நாடுகளுக்கிடையில் சுற்றினாலும் அவள் அதனால் பாதிக்கப்படுவதில்லை என்று சொல்கிறாள்.

செலினின் மனதில், அவள் ஜெஸ்ஸியுடன் சேராமல், அவன் இல்லாமல் போன துயரம் ததும்பி அவள் கண்களினூடே வழிகிறது. இருவருக்குமே, அவர்களது முதல் சந்திப்பிற்குப் பின், தங்களது வாழ்வில் சந்தோஷமான தருணங்களே இல்லாமல் போன உண்மை தெரிந்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில், கடந்த பத்து வருடங்களில், அவர்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் அனைத்தும், ஒருவருக்கு ஒருவரை நினைவுபடுத்திக் கொண்டே இருந்திருக்கின்றன.

இருவரும் காஃபி அருந்துகின்றனர். அங்கிருந்து, செலினை அவளது அபார்ட்மெண்ட்டில் விட்டுவிட்டு வருவதற்காக, ஜெஸ்ஸி அவளுடன் செல்கிறான். காரில், செல்லும் வழியில், ஜெஸ்ஸியின் நெருக்கத்தை உணரும் செலின், அழத்துவங்குகிறாள். அவர்களது முதல் சந்திப்பின் ஒவ்வொரு நொடியையும் நினைவுகூரும் செலின், அவளது மனதில் இருப்பவற்றையெல்லாம் அப்படியே தனது கண்ணீரின் வழியே கொட்டத் தொடங்குகிறாள். தனது மடியில் முகம் புதைத்து அழும் செலினின் தலையை ஆதுரத்துடன் வருடிக் கொடுக்க, ஜெஸ்ஸியின் கரம் எழுகிறது. ஆனால், அவளது தலையை நெருங்கும் கரத்தை, அவன் பின்னிழுத்துக் கொள்கிறான். அதன்பின், தனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை, ஜெஸ்ஸி சொல்லத் துவங்குகிறான். தனது திருமணம், மனைவிக்கும் இவனுக்கும் இடையே எப்போதும் எழும் சண்டைகள், தனது மகனுக்காக மட்டுமே இந்தத் திருமண வாழ்க்கையை இன்னமும் முறிக்காமல் இருப்பது ஆகிய எல்லாவற்றையும் செலினிடம் மனம் திறக்கிறான்.


தங்களாலேயே, தங்கள் மனதில் எழும்பியுள்ள வெறுமையை இருவரும் உணர்கிறார்கள். அந்த வெறுமையைப் போக்கிக்கொள்ள, அவர்களால் மட்டுமே முடியும். ஆனால், அது இனிமேல் சாத்தியமே இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இனிமேல் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பது தெரிந்திருந்தாலும், இன்னுமிருக்கும் மிகக் குறைந்த நேரத்தில், இருவருமே ஒருவரையொருவர் பிரியக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

ஜெஸ்ஸி, செலினின் அபார்ட்மெண்டுக்குள் வருகிறான். செலின், கிதார் பயின்று கொண்டிருப்பதால், அவளை ஒரு பாடல் பாடச் சொல்கிறான். தயக்கமே இல்லாமல், அவர்களது முதல் சந்திப்பினைப் பற்றி செலின் எழுதிய பாடல் ஒன்றை அவள் பாடத் துவங்குகிறாள்.

மிக உருக்கமான வரிகளை, மிகவும் சந்தோஷமான ஒரு மெட்டில் அவள் பாடப்பாட, நம் மனதில் ஒரு அற்புதமான உணர்வு எழும்புகிறது. அந்தப் பாடலை இதோ இங்கு காணுங்கள்.

பாடல் முடிந்ததும், நினா சிமோனின் பாடல்களை ஜெஸ்ஸி அங்கிருக்கும் சிடி ப்ளேயரில் போடுகிறான். செலின், மிக நளினமாக, நினா சிமோனை நினைவுபடுத்தும் முறையில் ஆடுகிறாள். ஜெஸ்ஸியின் ஃப்ளைட்டின் நேரம் நெருங்கி விடுகிறது.

இதன் பின் என்ன நடந்தது? காதலர்கள் இருவரும் இணைந்தார்களா? படத்தில் காணுங்கள்.


நினைத்துப் பாருங்கள்: பல வருடங்கள் முன் நாம் காதலித்த ஒரு ஆணோ பெண்ணோ, திடீரென நம் முன் தோன்றினால், எப்படி இருக்கும்? அவர்களுடன் வாழவும் முடியாது; ஆனால், அவர்களைப் பிரியவும் இயலாது. இந்த இருதலைக்கொள்ளி சூழ்நிலையில், நாம் எப்படி நடந்து கொள்வோம்? இதை, அருமையான முறையில் படமாக்கியிருக்கிறார் ரிச்சர்ட் லிங்க்லேட்டர். பல வருடங்களாக நாம் மறக்க நினைக்கும் சில நினைவுகளை, இப்படம் தூண்டிவிட்டு எழுப்புகிறது. ஆனால், அந்த நினைவுகள், நம்மை வருந்த வைப்பதற்குப் பதில், ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்பட வைக்கின்றன. ஒரு அமைதியான மாலை வேளையில், ரம்மியமான மழை நம் மனதில் என்ன உணர்வை ஏற்படுத்துமோ, அதை இப்படம் ஏற்படுத்துகிறது.

இப்படத்தின் திரைக்கதை, ஈதன் ஹாக் மற்றும் ஜூலி டெல்ஃபி இருவராலும் கட்டமைக்கப்பட்டது. முன்பே எழுதப்படாமல், கேமரா முன் நடிக்கும் அந்த நிமிடத்தில், இயற்கையாக அவர்கள் பேசிக்கொள்வதிலேயே இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டது. அதனாலேயே மிகவும் இயற்கையான வசனங்கள் இதன் ஸ்பெஷாலிட்டி. இப்படத்தில் ஈதன் ஹாக்கின் கேரக்டரான ஜெஸ்ஸி, தனது குழந்தையின் காரணத்தாலேயே தன்னுடைய திருமணத்தை முறிக்காமல் தொடர்வதாகக் காட்டப்பட்டிருக்கும். இப்படம் வெளியானவுடனே, ஈதன் ஹாக், தனது மனைவியான உமா தர்மேனை விவாகரத்து செய்தார். திருமணத்துக்கு முன்னரே உருவான குழந்தையின் காரணத்தாலேயே தான் இருவரும் மணந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், பிஃபோர் சன்ரைஸ் படத்துக்கும் இப்படத்தும், சரியாக பத்து ஆண்டுகள் இடைவெளி.

மொத்தத்தில், வாழ்க்கையில் இழந்த தருணங்களின் வலியை நினைவுபடுத்தும் ஒரு படமே இந்த 'பிஃபோர் சன்செட்'. ஆனால், முற்றிலும் சந்தோஷமான ஒரு முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கு மிகப்பிடித்த காதல் கதைகளில் ஒன்றான இப்படம், நமது மனதில் ஏற்படுத்தும் தாக்கம், விவரிக்க இயலாதது.


Posted by கருந்தேள் கண்ணாயிரம்

No comments: