Friday, March 11, 2011

The Song of Sparrows


அத்தியாவசிய பொருட்கள் எல்லாமே ஆடம்பர பொருட்களின் விலையாகிவிட்ட பிறகு, விரும்பும் பொருளை வாங்க எப்படியாவது பணம் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நேர்மை, மனித நேயம் விட்டு அதிக விலை சொல்லி விற்றால் தான் தங்களுக்கு தேவையான பொருளை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்த ’எப்படியாவது’ என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கும் மனிதனை விலைவாசி கொலை செய்வதை பார்த்துக் கொண்டுயிருக்கிறோம். வாழ்நாள் தேவை எப்படி ஒரு மனிதனை மாற்றுகிறது. அவனை மீண்டும் பழைய பாதை எப்படி திரும்பிகிறான் என்று சொல்லும் கதை தான் ’The Song of Sparrows’.



ஆஸ்ட்ரிட்ச் பறவைகளை பராமரிக்கும் வேலை செய்கிறான் கரீம். ஒவ்வொரு ஆஸ்ட்ரிட்ச் பறவையும் தன் குழந்தையை போல் பார்த்துக் கொள்கிறான். வேலை செய்யும் போது கரீமின் நண்பன் அவனை மனைவி அழைத்ததாக கூறுகிறான். வீட்டுக்கு சென்ற கரீம் தன் மகள் கேளாத கருவி நீரில் விழுந்ததை மகனும், அவனது நண்பர்களும் தேடுவதை பார்க்கிறான். அதை பார்த்ததும் கரீமும் தேடுகிறான். அப்போது கரீமின் மகன் இங்கு மீன் வளர்க்கலாம் என்று யோசனை சொல்கிறான். கழிவு நீர் செல்ல அடைக்கப்பட்டதாகவும், அதை சுத்தம் செய்ய அதிக செலவாகும் என்று சொல்லி கரீம் மறுக்கிறான். தன் மகளின் காது கேளாத கருவி அவளுக்கு பொருத்துகிறான். ஆனால், அது உடைந்ததால் அவளுக்கு காது கேட்டவில்லை.

அந்த கருவி சரி செய்ய முடியாது, புது கருவி தான் வாங்க வேண்டும் என்று உள்ளூர் விற்பனையாளர் சொல்கிறான். இந்த சமயத்தில் அவன் பாதுகாப்பில் இருக்கும் ஆஸ்ட்ரிட்ச் பறவை ஒன்று தப்பி ஓட, கரீமின் வேலை பரிபோகிறது.

அடுத்த மாதம் தேர்வு தொடங்க போகும் மகளுக்கு காது கேளாத கருவி வாங்க நகரத்துக்கு போகிறான். அதை சோதித்தவரும் புதிதாக வாங்க வேண்டும் என்கிறார். அதற்காக பதிவு செய்த்தால் மூன்று, நான்கு மாதம் காத்திருக்க வேண்டும். வெளி சந்தையில் வாங்கினால் 3,50,000 தோமன் செலவாகும் என்கிறார்.

என்ன செய்யலாம் என்று விழி பிதுங்க தவிக்கும் போது ஒருவர் திடீர் என்று அவன் இரு சக்கிர வாகனத்தின் பின் அமர்ந்து ஒரு இடத்திற்கு போக சொல்கிறான். கரீமும் அவனை விடுகிறான். அந்த மனிதன் விட்டதற்கு கரீமுக்கு பணம் தருகிறான். அன்றில் இருந்து ‘பைக் டாக்ஸி’ தொழில் நடத்துகிறார் கரீம். ஒருவர் மட்டுமே ஏற்றி சென்று அவர்கள் சொல்லும் இடத்தில் விட வேண்டும். சில சமயம் பொருட்களை சுமந்து செல்ல வேண்டும். அதில் வரும் வருமானத்தில் வீட்டுக்கு உணவு பொருட்களை வாங்கி செல்கிறான். நகரத்தில் தேவையில்லை என்று வீசப்பட்ட டி.வி ஆண்டனாவை தன் வீட்டு உபயோகத்திற்காக எடுத்து வருகிறான். கிராமத்தில் தன் வீட்டில் மட்டும் ஆண்டனா டி.வி இருப்பதை பெருமையாக நினைக்கிறான்.


பொருட் தேவை, பணம் சம்பாதிக்கும் ஆசை அவனிடம் இருக்கும் நேர்மையும், பிறருக்கு உதவும் குணம் மாறுகிறது. நகரத்தில் இருந்து தேவையில்லாத வீசப்பட்ட பொருட்களை தன் வீட்டுக்கு எடுத்து வருகிறான். அப்படி கரீம் எடுத்து வந்த ஒரு கதவை கரீம்மின் மனைவி பக்கத்து வீட்டில் உதவியாக கொடுக்க, அதை கரீம் மீண்டும் எடுத்து வருகிறான். தன் வண்டியில் வந்தவர் தவறுதலாக 10,000 தோமன் அதிகமாக கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமல் தயங்கியப்படி தன்னுடன் வைத்துக் கொள்கிறான். ஃபிரிட்ஜ் டெலிவரி கொடுக்க சொன்னவரை பின் தொடர தவறவிட்டதும், அதை விற்க முயற்சிக்கிறான்.

தன் மகனும், அவனது நண்பர்களும் வீட்டு அருகில் நீர் தேக்கத்தை சுத்தம் செய்வதை பார்த்து அவர்களை அதட்டி விரட்டுகிறான். ஆனால், அந்த சிறுவர்கள் நீர் தேக்கத்தை சுத்தம் செய்து, மீன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். அதற்கு தங்கள் தோட்டத்தில் வளர்த்த பூக்களை விற்பனை செய்து பணம் சேர்க்கிறார்கள். தன் மகள் உட்பட சாலையில் பூ விற்பதை பார்த்த கரீம் கோபப்படுகிறான். தன் மகன் மீது இருக்கும் கோபத்தில் நீர் தேக்கத்தை சுற்றி இருக்கும் சுவர்களை உடைக்க செல்கிறான்.

கழிவு நீ தேங்கியிருந்த இடத்தில் சுத்தமான நீர் இருக்கிறது. பாம்புகள் தங்கியிருந்த இடத்தில் குருவிகள் கூடு கட்டி முட்டை போட்டிருந்தது. அதை பார்த்ததும் உடைக்காமல் கரீம் மௌனமாகிறான்.

அவன் நகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருட்களை சுத்தம் செய்யும் போது எல்லா பொருளும் அவன் மீது விழுந்து, பலத்த காயம் ஏற்ப்படுகிறது. அவனால் நடக்கக் கூட முடியாத நிலைமையில் தள்ளப்படுகிறான். வேலைக்கு செல்ல முடியாத அவனுக்கு அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் உதவுகிறார்கள்.

நகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருளை விற்பனை செய்ய உறவினர் ஒருவர் உதவி செய்து, அந்த பணத்தை கரீம் குடும்பத்திற்கு கொடுக்கிறார். தேடி தேடிக் கொண்டு வந்த எல்லா பொருளும் ஒரே நாளில் அவனை விட்டு பிரிந்தது. அதே சமயம் அவனுக்கு உதவி செய்யும் மனிதர்கள் இருப்பதை பார்க்கிறான்.

கரீமின் மகனும், அவன் நண்பர்களும் பூக்கள் விற்ற பணத்தை பக்கெட் முழுக்க மீன்களை வாங்கிறார்கள். கரீமும், அவனது உறவினர் ஒருவரும் பூ தொட்டியோடு, மீன் பக்கெட்டையும் ஏற்றி ஊருக்கு வந்துக் கொண்டு இருக்கும் போது, பக்கெட் உடைந்து தண்ணீர் கீழே சிந்துவதை சிறுவர்கள் பார்க்கிறார்கள். மீன்களை காப்பாற்ற பக்கெட் மேல் இருக்கும் பூ தொட்டிகளை தூக்கி வெளியே ஏறிந்து, பக்கெட்டை வெளியே எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் முயற்சி தோல்வியில் முடிகிறது. வண்டியில் ஊருக்கு திரும்பும் போது ஒரு மீனோடு வருகிறார்கள். மீன்களை காப்பாற்றும் போது அடிப்பட்ட தன் மகன் கைக்கு கட்டு போடுகிறான். அவர்களை மகிழ்விக்க கரீம் பாட்டு பாடுகிறான். வாங்கி வந்த மீன்னை கரீமின் மகன் ஆசையாய் நீர்தொட்டியில் விடுகிறான்.


அடிப்பட்ட தன் காலில் இருக்கும் மாவு கட்டில், படம் வரைய கரீமின் மகன், மகள் சண்டைப்போடும் போது அவர்களுக்கு தன் காலில் இரண்டு இடம் கொடுத்து வரைய சொல்கிறான். விழிக்கும் போது ஒரு குருவி அவன் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் தவிக்கிறது. அந்த குருவிக்கு உதவ உட்கார்ந்தபடி நகர்ந்து கதவை திறக்கிறான். குருவி பறந்து செல்கிறது. இதுவரை அடைப்பட்ட அவன் மனமும் திறக்கப்படுகிறது. அப்போது கரீமின் நண்பன் ஓடிப்போன ஆஸ்ட்ரீட்ச் பறவை திரும்பி வந்துவிட்டதாக சொல்கிறான். கரீம் இழந்த வேலை திரும்பி கிடைக்கிறது. மீண்டும் பழைய கரீம் சிரித்தப்படி இயற்கையை ரசித்துக் கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டு செல்வது போல் படம் முடிகிறது.

உழைக்காமல் கிடைக்கும் பணம் வேறு வழியில் நம்மை விட்டு பிரிந்துவிடும் என்பதை இந்த படம் அழமாக உணர்த்துகிறது.

வயதான பிறகு வாழ்க்கைக்காக போராடும் சமயத்தில் உலகத்தில் இருந்து கற்பதை விட சிறுவர்களிடம் நாம் கற்பது அதிகமாக உள்ளது. நாம் வாழ்க்கையில் எவ்வளவு இழந்து இருக்கிறோம் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்துபவர்கள் அவர்கள் தான். நாம் கடந்து வந்த நினைவு சின்னங்களை நூலாக தொகுப்பவர்கள் சிறுவர்கள். இந்த படத்தில் பணம், பொருள்களை விட அன்பு முக்கியம் என்று கரீம் தன் மகனிடம் இருந்து கற்றுக் கொள்கிறான்.


எத்தனையோ வீட்டில் சிறுவர்கள் மறைமுகமாக பெரியவர்களுக்கு கற்றுக் கொடுகிறார்கள். சிலரது ஈகோ அவர்களை கற்றுக் கொள்ள தடுக்கிறது. ஈகோ பார்க்காதவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.


எழுத்து -குகன் பக்கங்கள்

No comments: