Thursday, March 3, 2011

KARAKTER



தந்தையின் பெயர் தெரியாமல் இச்சமூகத்தில் வாழும் புதல்வர்களை, சமூகம் எப்படி எதிர்கொள்கிறது? நமது ஊராக இருந்தால், அடித்தே கொன்றுவிடுவார்கள். அதுதான் வழக்கம். எனவே, வெளிநாடுகளைப் பற்றி யோசிப்போம். நெதர்லாந்து. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ட்ரெவர்ஹாவன் என்ற கோர்ட் அமீனாவைப் பார்க்கிறோம். ‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது’ என்ற ஒரு சொலவடை தமிழகத்தில் உண்டு. அமீனா ஒரு வீட்டுக்குச் செல்வதே, அந்த வீட்டு மக்களைக் காலி செய்ய வைப்பதற்குத்தான். நெதர்லாந்திலும் இதே தான் நடக்கிறது. ட்ரெவர்ஹாவன் நீதிமன்ற ஆர்டரை வைத்துக்கொண்டு எந்த வீட்டுக்குச் சென்றாலும், அது, அந்த வீட்டு மக்களை உடனடியாகக் காலி செய்ய வைப்பதற்காகத்தான் இருக்கும்.

மழை பெய்தாலும் சரி, வீடே பற்றி எரிந்துகொண்டிருந்தாலும் சரி.. அவரது இந்த வேலையை சீரும் சிறப்புமாகச் செய்வதே அவரது தனித்தன்மை. இவர் செல்ல வேண்டிய இடம், ஒரு போர்க்களத்துக்கு மத்தியில் இருப்பதாக இப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. அங்கேயும் தயங்காமல் சென்று காலிசெய்யச் சொல்லும் நீதிமன்ற உத்தரவை ட்ரெவர்ஹாவன் ஒட்டிவிட்டு வருகிறார்.

இப்படிப்பட்ட கடமை தவறாத கண்ணியமில்லாத அதிகாரியான ட்ரெவர்ஹாவனுக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கிறது.

அவரது வீட்டைப் பார்த்துக்கொள்ளும் யோபா என்ற பெண்மணி, வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் ஆகியும், ட்ரெவர்ஹாவன் அவருடன் ஒரு வார்த்தை கூடப் பேசியவரில்லை. அப்படி இருக்கையில், ஓர் நாள், அந்த அம்மணி ஒரு பொருளை உடைத்துவிட, அவரைக் கோபத்துடன் நெருங்கும் ட்ரெவர்ஹாவன், அந்த அம்மாள் மீது பாய்ந்து மேட்டர் பண்ணி விடுகிறார். இதன் விளைவாக, அந்த அம்மாள் கருத்தரிக்கிறார். உடனேயே வேலையை விட்டும் நின்று விடுகிறார்.

அன்றில் இருந்து, ஒவ்வொரு வருடமும் ட்ரெவர்ஹாவன் அந்த அம்மாளுக்கு ஒரு கடிதம் எழுதுவார். அதில், இந்த ஒரே வரிதான் இடம்பெற்றிருக்கும்.

‘எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் யோபா?’

அதில், பதில் எழுதுவதற்குமான ஒரு தபால் உறையையும் கூடவே வைத்து அனுப்புவார் தலைவர் ட்ரெவர்ஹாவன். ஆனால், ஒவ்வொரு முறையும் அதனை வாங்காமல், திருப்பி அனுப்பிவிடுவது யோபாவின் வழக்கம். ஆனால், விதி, தனது இருண்ட கண்களால் யோபாவைப் பார்த்துச் சிரித்த ஒரு நாள்… இந்தக் கடிதத்தை வாங்கி, அதற்கு ஒரு பதிலும் எழுதி அனுப்புகிறார் யோபா.

‘ஒருக்காலும் உன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் ‘

கடுப்பின் உச்சத்துக்குச் செல்லும் ட்ரெவர்ஹாவன், யோபாவைப் பழிவங்கும் வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கிறார்.

யோபாவுக்கு இதற்குள் பிறந்துவிட்டிருந்த மகன் – பெயர் கேடட்ரூஃப் – பள்ளி செல்லத் தொடங்கிவிடுகிறான். அங்கே, தகப்பன் பெயரைக் கேட்டு இவனைக் கேலி செய்யும் சிறுவர்களுடன் பதிலுக்குச் சண்டையிட்டு, ஒருவனைத் தாக்கி விடுகிறான். இதனால், யோபா வீடு மாறிச் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

புதிய இடத்துக்குச் செல்லும் யோபா, மகனை நல்லபடியாக வளர்க்கத் தலைப்படுகிறாள். ஆனால், சிறுவன் கேடட்ரூஃபுக்கு, தனது தந்தையான ட்ரெவர்ஹாவனைப் பற்றித் தெரிந்திருக்கிறது. அவரது அலுவலகம் முன்பு அடிக்கடி நடமாடத் தொடங்குகிறான்.

இப்படி இருக்கையில், ஒரு திருட்டுக் கேஸில் சிக்கிச் சிறைக்குச் செல்லும் கேடட்ரூஃப், தனது தந்தையின் பெயர் ட்ரெவர்ஹாவன் என்று சொல்ல, போலீஸ் அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு உண்டாகிறது. ஆனால், அங்கு வரும் ட்ரெவர்ஹாவன், தனக்கும் அந்தச் சிறுவனுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். இதனால், தர்ம அடி வாங்கும் சூழ்நிலை கேடட்ரூஃபுக்கு.

அங்கிருந்து தப்பிக்கும் சிறுவன் கேடட்ரூவ், தனது தாயிடம் வந்து சேர்கிறான். தாய் அவனுக்குப் பல புத்திமதிகள் சொல்கிறாள். கேடட்ரூஃப் மெல்ல வளர்ந்து பெரியவன் ஆகிறான் (இந்த இடத்தில் தமிழ்ப்படத்தின் நினைவு தவிர்க்க முடியாமல் வந்தது). தனது தாய், இவன் வேலையே செய்யாமல் சும்மா இருப்பதால் தான் தன்னிடம் பேசுவதில்லை என்று அவனுக்குப் புரிகிறது.

பலவிதமான வேலைகளுக்கும் செல்லும் கேடட்ரூஃபுக்கு, நிலையான வருமானம் இருப்பதில்லை. அந்த நேரத்தில், அவனது வீட்டில், கேடட்ரூஃபின் அறையை, அவனது தாய், இன்னொருவனுக்கு வாடகைக்கு விடும் கொடுமையும் நடக்கிறது. கடுப்பு, கோபம், எரிச்சல், இன்னபிற உணர்வுகளின் உச்ச நிலையை அடையும் கேடட்ரூஃப், தினசரி ஒன்றில் வந்த விளம்பரம் ஒன்றைக் கண்ணுற்று, ஒரு சிகரெட் விற்கும் கடையை வாடகைக்கு எடுக்கத் தலைப்படுகிறான்.

நமது பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் வருவதைப் போலவே, இவன் செல்லும் அத்தனை வங்கிகளும், இவனுக்குப் பணம் தர மறுக்கின்றன. கேடட்ரூஃபை இப்போது நாம் தொட்டால், அவன் வெடித்துச் சிதறி, அவனுக்குள் இருக்கும் கோபம் பொங்கி வழியக்கூடும். அத்தனை வெறியில் நடமாடிக்கொண்டிருக்கிறான்.

ஒரே ஒரு வங்கி மட்டும் இவனுக்குப் பணம் தர முன்வருகிறது. சந்தோஷத்தில், அந்த சிகரெட் கடையை வாங்கிவிடுகிறான். தனது முதல் தொழில் என்ற குஷியில், தாயிடம் சொல்லிக்கொண்டு, வேலைக்கு வருகிறான். அவன் அலுவலகத்தில் நுழையும் நேரத்தில் தொடங்கும் மழை, அடுத்த பல நாட்களுக்குக் கொட்டித் தீர்க்கிறது. கடைக்கு ஒரு வாடிக்கையாளரும் வரவில்லை. அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய பெட்டிகளிலும், சிகரெட்டுகள் இருப்பதில்லை. வெறும் வைக்கோல தான் இருக்கிறது.

தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த கேடட்ரூஃப், மறுபடியும் தாயிடமே வந்து சேர்கிறான். அதே நேரத்தில் தான், அவன் கடன் வாங்கிய வங்கியானது, , தனது பழிவாங்கும் தந்தை ட்ரெவர்ஹாவனின் சொந்த வங்கி என்பது அவனுக்குப் புரிகிறது..

அய்யகோ? இதற்குப் பின் என்ன தில்லுமுல்லு ட்ரெவர்ஹாவன் சிந்தித்து வைத்திருப்பாரோ?என்று கேடட்ரூஃப் எண்ணிக்கொண்டிருக்கையில், அவனது பணத்தை உடனடியாகக் கட்டும்படி, செய்தி வருகிறது. அதுவும் அவனது தந்தையின் வேலைதான் என்பது கேடட்ரூஃஃபுக்குப் புரிகிறது.

இதுவரை நான் சொல்லியுள்ளது, கதையின் ஆரம்ப அரை மணி நேரம் மட்டுமே. இதற்குப் பின் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள, படத்தைப் பாருங்கள்.

பொதுவாக, உலகப்படங்கள் என்றால் கொஞ்சம் மெதுவாகப் போகும். ஒரே சீரியஸாக வேறு இருக்கும் (என்பது உலக நம்பிக்கை). ஆனால், இப்படம், நகைச்சுவையாகவும், கொஞ்சம் விறுவிறுப்பாகவும் செல்கிறது. தந்தை மகனுக்கிடையில் இருக்கும் விரோதமும், குரோதமும், நகைச்சுவை கலந்த நடையில் சொல்லப்பட்டிருப்பதால், இப்படம் அலுப்பதில்லை.

இப்படத்தில், தந்தையாக நடித்திருக்கும் Jan Decleir , கச்சிதமான வேலையைச் செய்திருக்கிறார். அவரைப் பார்க்கும்போதெல்லாம், நமக்கு வரும் வெறுப்பும், சிரிப்புமே இந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை, இவரது கடமை தவறாத காமெடிகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. பிரகாஷ்ராஜை நினைவுபடுத்தியது இவரது கதாபாத்திரம்.

இப்படத்தின் குறைகள் என்று சொன்னால், பெரிதாக ஒன்றும் இல்லை. வங்கி சம்மந்தமாகவும், கோர்ட் சம்மந்தமாகவும் சில சிக்கலான பதங்கள் அவ்வப்போது கையாளப்படுகின்றன. அவை, புரிவதற்குச் சற்று நேரம் பிடிக்கிறது. இருந்தாலும், அவை இப்படத்துக்கு முக்கியமில்லை. இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே நிலவும் முரண்பாடுகளே இப்படத்தை மேலும் மேலும் ரசிக்க வைக்கின்றன.

இப்படம், 1998 ஆஸ்கரில், சிறந்த வெளிநாட்டுப்படத்துக்கான விருதை வாங்கியது. இதன் இயக்குநரான Mike Van Diem இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று நெட்டில் நோண்டினேன்.. அவர் இப்போது விளம்பரப் படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாராம்.

படத்தைக் கொடுத்து உதவியவர், நமது ஹாலிவுட் பாஸ்கரன் அவர்கள். இதுமட்டுமில்லை. இன்னும் பல படங்கள். வரிசையாக வரும் :-) .

No comments: