Thursday, March 3, 2011

Dersu Uzala (1975) – Russian




ரஷ்யப் படம். குரஸவா முதன்முதலில் இயக்கிய ஜப்பானியப் படமல்லாத ஒரு வெளிநாட்டுப் படம் இது. தலைசிறந்த இயக்குநர்களுக்கு எங்கே சென்றாலும் வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்த படம்.

படத்தின் அடிநாதமாக விளங்குவது, இரண்டு மனிதர்களுக்கிடையே நிலவிய நட்பு என்று தோன்றினாலும், அதைவிட ஆழமாக நமக்கு உறைப்பது என்னவெனில், மனிதர்கள் இயற்கையுடன் மேற்கொள்ளும் யுத்தமே. வீடு கட்டுகிறேன் பேர்வழி என்ற பெயரில், காடுகளையும் இயற்கை வளங்களையும் அழிக்கும் மனிதனின் முயற்சியில் இறுதியில் நடக்கப்போவது என்ன என்பதை மனதைத் தொடும் வகையில் இப்படம் பேசியிருப்பதுவே இப்படம் நமக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்று நினைக்கிறேன். அந்த வகையில், இயற்கைக்கு ஆதரவாகக் குரஸவாவின் குரலை இப்படத்தில் அழுத்தமாகக் கேட்க முடிகிறது.

இந்தப் படத்துக்கு ஆதாரமாக, வ்ளாடிமிர் அர்ஸென்யேவ் என்ற ராணுவ அதிகாரி, 1923ல் எழுதிய ‘டெர்ஸு உஸாலா’ என்ற புத்தகம் விளங்குகிறது. ரஷ்யாவின் கிழக்குக் கோடியில் – சைனாவுடன் ரஷ்யா இணையுமிடத்திற்கு அருகில் – பாயும் நதியின் பெயர், உஸ்ஸூரி என்பதாகும். இந்த நதியின் தடத்தில், அர்ஸென்யேவ் மேற்கொண்ட பல ராணுவப் பயணங்களில், அவருடனிருந்து உதவிய டெர்ஸு உஸாலா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த மனிதனைப் பற்றிய குறிப்புகள், அவரது மேற்சொல்லப்பட்ட புத்தகத்தில் மட்டுமின்றி, அவரது மற்றொரு புத்தகத்திலும் வருகின்றன (Along the Ussuri Land) என்று விகி சொல்கிறது. இந்தப் பயணங்களின் கதையே இப்படம்.

இந்தப் புத்தகம், ஏற்கெனவே 1961ல் திரைப்படமாக எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், குரஸவா எடுத்த படமே உலகின் கவனத்தைப் பெற்றது.

ஒரு மனிதர், காடு ஒன்றின் வெளிப்புற எல்லையில் இருக்கும் ஒரு வீட்டின்முன் வந்து நிற்பதோடு, படம் தொடங்குகிறது. அங்கே ஓரிடத்தைச் சுட்டிக் காட்டும் அம்மனிதர், அந்த இடத்தில் ஒரு சமாதி இருந்ததாகச் சொல்கிறார். அங்கே நிற்கும் பெண்ணுக்கோ ஒன்றுமே புரிவதில்லை. அந்தப் பெண்ணிடம், வெகுநாட்கள் முன்பு அந்த இடத்தில் காடு ஒன்று இருந்ததாகவும், அங்கே டெர்ஸுவின் சமாதி இருந்ததாகவும், அந்த இடத்தில் டெர்ஸுவைப் புதைத்ததே தான்தான் என்றும் அந்த மனிதர் சொல்கிறார். அங்கிருந்து ஃப்ளாஷ்பேக் தொடங்குகிறது.

ஆண்டு – 1902. உஸ்ஸூரி நதியின் வழியே, சர்வே செய்வதற்காக, கேப்டன் அர்ஸென்யேவ், தனது சிறிய படையுடன் காட்டுக்குள் முகாமிட்டு இருக்கிறார். இரைல், புதர்களுக்குள் ஏதோ சலசலப்பு கேட்க, கண்டிப்பாக அது ஒரு காட்டு மிருகம்தான் என்ற முடிவில், அதனைச் சுடுவதற்குத் தயாராக இருக்கையில், ஒரு சிறிய மனிதன் ஓடிவருவது தெரிகிறது. இவர்களது முகாமுக்குள் வரும் அந்த மனிதன், தன் பெயர் டெர்ஸு உஸாலா என்றும், அதே பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்த ஒரு வேட்டைக்காரன் என்றும் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறான். வெளிப்பார்வைக்கு அவன் ஒரு காட்டுமிராண்டியைப் போலவும், பிச்சைக்காரனைப் போலவும் இருப்பதால், முதல் பார்வையில், ராணுவத்தினரின் கேலிக்கு உள்ளாகிறான். ஆனால். அதைப்பற்றியெல்லாம் அவன் கவலைப்பட்டவன் அல்லன். நேராக அர்ஸென்யேவிடம் செல்லும் டெர்ஸு, தனக்கு அந்தப் பிராந்தியம் அத்துப்படி என்றும், அவர் விரும்பினால், அவருடன் வழிகாட்டியாக வரத் தயார் என்றும் சொல்கிறான். சற்றே யோசிக்கும் கேப்டன், சம்மதிக்கிறார். உடனே, அவரிடம் உணவு வாங்கிச் சாப்பிடும் டெர்ஸு, கடந்த சில தினங்களாகவே அவன் எந்த உணவும் உண்ணவில்லை என்று சொல்லிக்கொண்டே உண்கிறான்.

மறுநாள் காலை. ராணுவத்தினர், ஒரு பாட்டிலைத் தொங்கவிட்டு, அதனைத் தொலைவில் இருந்து சுட்டுப் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒருவராலும் அதனைச் சுட முடிவதில்லை. அங்கே வரும் டெர்ஸு, ஒரே முயற்சியில் அந்த பாட்டிலைச் சுட்டு வீழ்த்திவிட, ராணுவத்தினருக்கு அவன் மேல் ஒரு மரியாதை ஏற்பட்டுவிடுகிறது. காட்டில் வசிப்பவர்கள் குறி, முதல் தடவையே சரியாக இருக்க வேண்டும் என்றும், தவறினால், உயிரிழக்க நேரிடும் என்றும் ஒரு ஸென் துறவியைப் போல் சொல்லிக்கொண்டு செல்கிறான் டெர்ஸு.

dersu-uzala6 செல்லும் வழியில், ஒரு பழைய தகர்ந்துபோன வீட்டில் இவர்கள் தங்க நேர்கிறது. அங்கிருந்து கிளம்பும்போது, கேப்டனிடம் நிறைய அரிசியும் சில கம்பளிகளும் வாங்கி, அங்கே பத்திரப்படுத்துகிறான் டெர்ஸு. அங்கு பின்னாட்களில் வரும் வழிப்போக்கர்களுக்கு அது கண்டிப்பாக உதவும் என்று சொல்கிறான். கேப்டனின் நெஞ்சைத் தொடும் நிகழ்வாக இது அமைகிறது.

இதற்குப் பின், ஆற்றங்கரையில் ஒரு இடத்துக்குச் செல்லவேண்டிய வழியில், இதர சோல்ஜர்களைக் கூடாரம் போடச் சொல்லிவிட்டு, சற்றே தொலைவில் உள்ள ஒரு இடத்துக்கு டெர்ஸுவோடு செல்கிறார் கேப்டன். செல்லும் வழியில் அடிக்கும் காற்றில், இவர்களது தடம் அழிந்துவிட, வழிதவறி, சுற்றிக்கொண்டே இருக்கும்படி ஆகிவிடுகிறது. இதன்பின் பெரிய புழுதிக்காற்று வேறு. இதிலிருந்து கேப்டனை எப்படித் தப்புவிக்கிறான் டெர்ஸு என்பது அருமை. பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

அதன்பின், மறுநாள் காலை, படைவீரர்களுடன் இருவரும் சேர்ந்துகொள்கிறார்கள்.

சில நாட்களில், படைப்பிரிவு, தங்கள் ஊரான வ்ளாடிவாஸ்டோக் செல்லும் நேரம் வருகிறது. டெர்ஸு, இவர்களுடன் வர மறுத்துவிடுகிறான். காட்டில் திரிவதே தனக்குப் பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறான். மெல்லப் பனியில் நடக்கும் டெர்ஸுவைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் கேப்டன். தூரமாகச் சென்று மறைகிறான் டெர்ஸு.

காலம் – 1907. மறுபடியும் உஸ்ஸூரி நதிக்கு, சர்வே சம்மந்தமாக கேப்டன் அர்ஸென்யேவ் வர நேர்கிறது. மறுபடியும் டெர்ஸுவைப் பார்க்கிறார். இருவரும் இணைகிறார்கள். இங்கே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்கின்றன.

இறுதியில், டெர்ஸுவைத் தன்னுடனே வந்து தங்கும்படி கேப்டன் அழைக்க, டெர்ஸுவும் கேப்டனுடனே வ்ளாடிவாஸ்டோக் செல்கிறான். கேப்டனின் குட்டி மகன், டெர்ஸுவின்பால் கவரப்பட்டு, டெர்ஸுவின் கானகக் கதைகளையெல்லாம் கேட்டுக் கேட்டுக் குதூகலிக்கிறான். ஆனால், டெர்ஸுவுக்கு, அந்த வீட்டில் ஒரு பிரச்னை காத்திருக்கிறது. மனதை உருக்கும் அந்த விஷயம் என்ன?

Dersuuzala நிஜமான டெர்ஸு உஸாலா

இதன்பின், படத்தைப் பார்த்து பாக்கி கதையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பொதுவாகக் குரஸவாவின் படங்களிலெல்லாம், ஒரு பிரம்மாண்டம் இருக்கும். ஹாலிவுட் படங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவராயிற்றே அவர். ஆகவே, மாபெரும் படை, ரத்தம் தெறிக்கும் யுத்தம், குதிரைகள், தாதா கும்பல் ஆகிய பல விஷயங்கள் இருக்கும். ஆனால், இவை எதுவுமே இல்லாமலும் அவரது சில அருமையான படங்கள் உண்டு. ரஷோமான், ரெட் பியர்ட், ட்ரீம்ஸ் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். இந்தப் படமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். மிக இயல்பான கதை, நல்ல நடிகர்கள் ஆகிய விஷயங்களோடு, இவரது அருமையான திரைக்கதையும் சேர்ந்துகொள்ள, நமக்குக் கிடைக்கிறது நெஞ்சைத் தொடும் ஒரு படம்.

இப்படத்தில் டெர்ஸுவின் கதாபாத்திரத்தை நினைத்துப் பார்க்கும்போது, Dances with the Wolves படத்தின் செவ்விந்தியத் தலைவரின் கதாபாத்திரம் நினைவுக்கு வந்தது. தன்னுடைய பூமி வேகமாக வெள்ளையர்களால் அழிக்கப்படுவதைக் கண்முன் பார்த்தும், எதுவுமே செய்ய முடியாமல், அந்த வெள்ளையர்களில் ஒருவனுடனேயே நட்பாகப் பழகும் நிலைக்கு வந்து, அதன்பின் அந்த வெள்ளையனின் மூலமாகவே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் நிலையில் இருக்கிறார் அவர். அதேபோல், இதில் டெர்ஸுவும், காடுகள் அழிக்கப்படுவதைப் பார்க்கிறான். அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை. இறுதியில், நகரத்துக்குள்ளேயே வந்து வாழத் தலைப்படுகிறான். ஆனால் அங்கும் அவனால் நிம்மதியாக வாழ முடிவதில்லை.

மனிதநேயமே, இப்படம் நமக்குச் சொல்லவரும் செய்தி. அதேபோல், காடுகளை மனிதன் அழிக்கும் கொடுமையும், படத்தின் பின்னணியில் வருகிறது.

எழுத்து - www.karundhel.com

No comments: