Wednesday, March 16, 2011

The Pianist

இரண்டாம் உலகப் போரில் மிகக்கொடூரமான முறையில் இன அழிப்பை மேற்கொண்டிருந்தது ஹிட்லரின் படை. ஆனால் அதிலும் மனதில் சிறிதும் விருப்பமின்றி, இராணுவச் சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டும் அப்படிச் செயற்பட்ட, மனித நேயம் கொண்ட, இரக்கமுள்ள இராணுவ அதிகாரிகள் இருந்திருப்பார்கள் தானே?

எல்லா இடங்களிலும் இருப்பார்கள்தானே...!


போலந்தில் வாழ்ந்த ஸ்பில்மென் தன் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய The Pianist இலிருந்து 2002 இல் வெளிவந்த படம்.


1939 ம் ஆண்டு. போலந்தின் தலைநகர் Warsaw வில் வசிக்கும் திறமையான பியானோக் கலைஞனான ஸ்பில்மென், அங்குள்ள வானொலி நிலையத்தில் பியானோ வாசித்துக் கொண்டிருக்கிறான்.


திடீரெனக் குண்டுகள் வெடிக்க, வானொலி நிலையச் சுவர்கள் தகர்ந்து விழ, வெளியில் வருகிறான். மக்கள் பயந்தோடும் அந்த நேரத்தில் டோரதா என்னும் பெண் ஸ்பில்மெனை அடையாளம் கண்டு அவனது வாசிப்பைப் புகழ, அறிமுகம் ஏற்படுகிறது இருவருக்கும். வீட்டில், எல்லாரும் பாதுகாப்பான இடத்துக்குச்செல்ல தயாராகிறார்கள். வானொலியில் போர் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. ஹிட்லரின் படைகள் ரோந்து வருகின்றன.




யூதர்களான ஸ்பில்மென், டோரதா வீதியில் சந்திக்கிறார்கள், கடைகளில் யூதர்கள் நுழையக் கூடாது, வீதியோர இருக்கைகளில் அமரக்கூடாது என்ற அரசாங்க அறிவிப்பு டோரதாவுக்கு அதிர்ச்சியாகஇருக்கிறது.

யூதர்கள் அனைவரும் வலது கையில் அடையாளத்துக்காக ஒரு Badge அணியச் செய்கிறார்கள். பட்ச் அணிந்தவர்கள் படைவீரர்களால் தாக்கப்படுகிறார்கள். யூதர்களுக்கான தனிக் குடியிருப்பு அமைக்கப்பட்டு, அக்டோபர் 31 க்குள் அனைவரையும் அங்கு குடியேறச் சொல்ல, சோகத்துடன் மக்கள் அந்தச் சிறிய குடியிருப்பில். வறுமையைப் போக்க பியானோவை விற்கிறான் ஸ்பில்மென். யாரும் வெளியேறாமல் குடியிருப்பைச் சுற்றி பெரிய சுவர்.




ஸ்பில்மென் அங்குள்ள ஒரு ஹோட்டலில் பியானோ வாசிக்கும் வேலையில் சேர்கிறான். வறுமை, படையினர் கொடுமை, இரவுகளில் ரோந்து காரணமாக விளக்குகள் அணைத்துவிட்டு வாழ்கிறார்கள். போலீஸ் வேலைக்கு யூதர்களைத் தேர்ந்தெடுக்க, அதில் ஸ்பில்மென் குடும்பத்துக்குத்தெரிந்த யிட்சாக் போலீசாகிறான். அவன் ஸ்பில்மெனை படையின் இசைக்குழுவில் சேருமாறு கேட்க, அவன் மறுக்கிறான்.



ஆகஸ்ட் 16, 1942. எல்லோரும் தங்கள் உடைமைகளுடன் எங்கு போகிறோமெனத் தெரியாமல் அழைத்துச் செல்லப்பட, இறந்த உடல்கள், கூட்டம் கூட்டமாக உறவுகளைதேடியலையும் மனிதர்கள். சித்திரவதை முகாமுக்கு அழைத்துச் செல்லும் ரயிலில் வரிசையாக எல்லோரும் ஏற, யிட்சாக், ஸ்பில்மெனை தனியே இழுத்துவிட, தன் குடும்பத்தைப் பிரிந்து, இறந்த உடல்கள், சிதறிய உடைமைகள், யாருமற்ற வீதியில் அழுதுகொண்டு செல்கிறான்.



குடியிருப்பில் எஞ்சியவர்களோடு ஸ்பில்மென் கட்டடவேலை செய்கிறான். முன்பு தன் இசைக்குழுவில் இருந்த பாடகி ஒருத்தியைச் சந்தித்து, குடியிருப்பிலிருந்து தப்பித்து நகரத்திற்கு செல்கிறான். 16 மே 1943 ம் ஆண்டு. ஜெர்மானியருக்கு எதிரான கலவரத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறி பழைய தோழியான டோரதா வீட்டுக்கு வர, அவளும் கணவனும் அவனுக்கு உதவி செய்து, சந்தேகம் வராதிருக்க, ஜெர்மானியர் தங்கியுள்ள பகுதியிலுள்ள வீடொன்றிலேயே அவனைத் தங்க வைக்கிறார்கள்.


போர் முடிவுக்கு வருகிறது. கிளர்ச்சிப் படையினர் தாக்குதல்களினால் ஆத்திரமடையும் ஜெர்மன் படைகள் ஸ்பில்மென் தங்கியுள்ள பகுதியிலுள்ள கட்டடங்களை எல்லாம் தகர்த்து, கொளுத்த, ஸ்பில்மென் தப்பி ஓடுகிறான்.



ஜெர்மன் படைகள் துரத்த, பசியோடு, இடிந்த கட்டடங்களில் உணவு தேடி, மீந்த தானியங்களை உண்டு, பாசித் தண்ணீரைக் குடித்து, மரணம் துரத்த ஓடுகிறான்.

ஒரு வீட்டில் சமையலறையில் உணவு கொண்ட டின் ஒன்றைக் கண்டெடுத்து, அதைத் திறக்க முயல, பியானோ சத்தம் கேட்க, பயத்தில் மேலே ஏறி, ஒளிந்து கொள்கிறான்.
மறுநாள் அந்த டின்னைத் திறந்து விட்டு நிமிர எதிரே...ஜெர்மன் இராணுவ அதிகாரி ஒருவர். ஸ்பில்மென் பயத்தில் உறைய, யார் நீ? எனக் கேட்கிறார். தான் ஒரு பியானோ கலைஞன் என்று சொன்னதும் அதிகாரி ஆச்சரியப்பட்டு அவனை அங்கிருக்கும் பியானோவை வாசிக்கச் சொல்கிறார்.



பசி, களைப்பு, மரண பீதி, தாடி மீசையுடன் இருக்கும் ஸ்பில்மென் மெதுவாக, வாசிக்கத் தொடங்கி, தன்னை மறந்து அதனோடு ஒன்றிப் போய் வாசிக்க, பிரமிக்கிறார் அந்த அதிகாரி. எங்கே ஒளித்திருந்தாய்? எனக் கேட்க, ஸ்பில்மென் தான் மேலே இருந்த இடத்தைக் காட்டுகிறான்.


அங்கேயே அவனை ஒளிந்திருக்கச் செய்து, அவனுக்குத் தேவையான உணவுகளையும் வழங்குகிறார். இன்னும் சில வாரங்களில் போர் முடிந்துவிடும் எனக்கூறும் அவர், 'அதன்பிறகு என்ன செய்வாய்?' எனக்கேட்க, 'வானொலியில் பியானோ வாசிப்பேன்' என்கிறான் ஸ்பில்மென். 'நான் அதைக் கேட்கிறேன்' எனக் கூறுகிறார் அவர்.
குளிரில் நடுங்கும் ஸ்பில்மெனுக்குத் தனது மேலங்கியைக் கொடுத்து விட்டு விடை பெற்றுச் செல்கிறார் அந்த அதிகாரி.


ஸ்பில்மென், அந்த மனித நேயமுள்ள அதிகாரி என்ன ஆனார்கள்?


-பூட்டப்பட்ட அறையில் தனியாக இருக்கும்போது, அருகில் பியானோ.. வாசிக்கும் ஆவலுடன் ஸ்பில்மென்..ஆனால் சத்தம் கேட்க கூடாது என்ற சூழ்நிலையில், அவன் கை படாமல் காற்றில் கைவிரல்களை அசைக்க, அவன் மனதில் ஒலிக்கும் அந்த இனிய இசை.
-ஜெர்மன் அதிகாரி முன்னிலையில் ஸ்பில்மென் வாசிக்கும் காட்சியும், இசையும்.


-போர் முடிந்து ஜெர்மன் படைகள் போர்க்கைதிகளாக இருக்கும்போது, அந்த அதிகாரி, ஸ்பில்மெனுக்கு உதவியதைக் குறிப்பிட்டு, தன்னைக் காப்பாற்ற முடியுமா? எனக் கேட்கும் நெகிழ்வான காட்சி.
- படம் முழுதும் பின்னணி இசை இவை என்னை வெகுவாகக் கவர்ந்தவை.

இயக்கம் - Roman Polanski
மொழி - Polish

விருதுகள் -
3 Academy Awards - Actor, Director, Screenplay
Cannes Films Festival 2002
2 BAFTA Awards 2003 - Best Film, Best Direction

No comments: