Friday, March 18, 2011

The Color Purple



கலர் பர்ப்பிள் (The Color Purple), 1900ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ஆஃப்ரிக்க, அமெரிக்கப் பெண்கள் அனுபவித்த வறுமை, இனவெறி, பாலியல் கஷ்டங்களைத் தாண்டி வெற்றிபெரும் ஒரு பெண்ணின் கதை.

இந்தப் படத்தைப் பார்க்கும் வரையில், ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் (Stephen Spielberg) ‍-க்கு, வேற்று கிரக வாசிகளையும், கொடூரமான விலங்குகளையும் விட்டால் வேறு எதைப் பற்றியும் படமெடுக்கத் தெரியாது எனத்தான் நினைத்திருந்தேன். இந்தத் திரைப்படம், ஸ்பீல்பெர்கின் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. இவ்வளவு உணர்வுப் பூர்வமான படத்தை எடுக்க முடிந்த ஸ்பீல்பெர்க் ஏன் இதுபோன்ற படங்களை தொடர்ந்து எடுக்க முயற்சிக்கவில்லை எனத் தெரியவில்லை.

படத்தின் கதாநாயகி செலியாக (Celie) வரும் வூப்பி கோல்டுபெர்க் (Whoopi Goldberg) -இன் அற்புதமான நடிப்பே இதன் முதுகெலும்பு. கணவனுக்கு பயந்து நடுங்கும் போதும், இறுதியில் அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி விலகும்போதும், கணவனின் தோழியான‌ ஜாஸ் இசைப்பாடகியுடன் நட்பு கொள்ளுமிடத்திலும், தங்கையை பல நாட்கள் கழித்து காணுமிடத்திலும், என ஒவ்வொரு காட்சியிலும் தனது அற்புதமான நடிப்பை பதிவு செய்திருப்பார் இவர். இந்தப் படத்திற்காக இவர் சிறந்த நடிப்புக்கான கோல்டென் க்ளோப் (Golden Globe) விருதினைப் பெற்றார்.

இது போன்ற படங்களில் வில்லன் நடிகரின் நடிப்பு கதை நாயகர்களை விட முக்கியமானது. அதை உணர்ந்து மிகச் சிறப்பாக செய்திருப்பார் செலியின் கணவன் ஆல்பர்ட் ஜான்ச‌னாக வரும் டேனி க்ளோவர் (Danny Glower). கதையின்படி இளம், நடுத்தர, முதுமை என மூன்று நிலைகளிலும் இவரது நடிப்பு பாராட்டுதலுக்குரியதாகவே இருந்தது.

இவர்கள் மட்டுமில்லாமல், முதலில் செலியின் கணவனின் தோழியாக வீட்டுக்குள் வந்து கொஞ்சம், கொஞ்சமாக செலியின் நெருங்கியத் தோழியாகி, செலியின் திறமைகளை அவளுக்கு எடுத்துச்சொல்லி, அவளும் தனியாக வாழும் தைரியத்தை அளிக்கும் கதாபாத்திரமான ஷக் ஆவ்ரி என்னும் ஜாஸ் பாடகராக வரும் மார்கரெட் ஆவ்ரியும் (Margaret Avery), ஆல்பர்ட் ஜான்சனின் முதல் மகனுக்கு மனைவியாக, மிகவும் தைரியமான பெண்ணாக வந்து, பின்னர் வெள்ளையர்களின் அடக்குமுறையால் அடங்கிப் போய், இறுதியில் அவர்களையே எதிர்க்கும் தைரியம் கொள்ளும் ஷோஃபியா கதாப்பாத்திரத்தில் வரும் ஓபரா வின்ஃப்ரே (Oprah Winfrey), செலியின் தங்கை நெட்டீயாக (Nettie) வரும் பெண் என அனைவரது நடிப்புமே மிகச் சிறப்பாக அமைந்திருந்தது இந்தப் படத்தில்.

வழக்கமான ஸ்பீல்பெர்க் படங்களிலிருந்து முற்றிலும் மாறி, ஒரு காட்சி கூட கிராஃபிக்ஸோ, இல்லை வேறு தந்திரங்களோ இல்லாமல், முழுக்க முழுக்க கதையையும், கதாப்பாத்திரங்களின் நடிப்பையும் நம்பி எடுக்கப் பட்ட படம். இதில் ஸ்பீல்பெர்க் வெற்றிபெற்றிருக்கிறார்.

கலர் பர்ப்பிள் (Color Puple) நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

No comments: