Tuesday, March 22, 2011

பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால் பூகம்பம் ஏற்படுமா?

சென்னை: நாளை பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால், பூகம்பமோ, சுனாமியோ ஏற்படும் என பீதியடையத் தேவையில்லை என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். முழு நிலவை காட்டும் பவுர்ணமி ஒவ்வொரு மாதமும் வரும். ஆனால் நாளை வருவது மெகா பவுர்ணமி. ஆம், பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால் வழக்கத்தைவிட சற்று பெரியதாக இருக்கும் என்கிறார்கள் விஞஞானிகள். 'சூப்பர்மூன்' என்ற இந்த அதிசயம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப் போகிறது.

இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகில் சந்திரன் வந்துள்ளது. "வானில் அதிசயங்கள் நிகழும்போது, பூகம்பம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என கடந்த வாரம் செய்தி வெளியானது. இதை மெய்யாக்கும் வகையில், 12ம் தேதி ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் பல நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆனால், பூகம்பம், எரிமலை வெடிப்பு உட்பட பூமியில் நிகழும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது என்றும் இதுபற்றி பயப்படத் தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடல் சீற்றம் இருக்கும்

சந்திரன் பூமியை நெருங்கி வருவதால், பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்படுமா என தினமும் பலர் தொலைபேசி மூலம் கேட்பதாக தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். "பூகம்பமோ, சுனாமியோ ஏற்படுவதற்கு சூப்பர் மூன் எந்த வகையிலும் காரணமாக அமையாது என உறுதியாக கூறுகிறோம். எனவே, வழக்கம்போல இந்த பவுர்ணமியை சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம். வழக்கத்தைவிட சந்திரன் சற்று பெரியதாக இருக்கும்.

எனினும், வழக்கமாக சந்திரன் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அறிந்திராத சாமானிய மக்கள் இந்த வித்தியாசத்தை உணர முடியாது" என இந்த மையத்தின் செயல் இயக்குநர் ஐயம்பெருமாள் தெரிவித்தார். "சூப்பர்மூன் காரணமாக, வெப்பநிலையில் எவ்வித மாறுதலும் ஏற்படாது. கடல் அலைகள் மற்றும் வழக்கத்துக்கு மாறாக சற்று சீற்றத்துடன் இருக்கும்" என சென்னை வானிலை மைய துணை இயக்குநர் ராஜ் தெரிவித்துள்ளார்.

No comments: