Wednesday, February 2, 2011

சிறந்த கலைஞன்

ரகுவரபுரியை ஆண்டு வந்த மன்னர் சசிகாந்தர் சிறந்த கலை ரசிகர்! அதிலும், சிற்பக்கலையை அவர் மிகவும் ரசித்தார். ஒருமுறை, கோடைகாலத்தில் வசிப்பதற்கேற்ற வசந்த மாளிகை ஒன்று செய்ய அவர் திட்டமிட்டு, அதற்காக நதிக்கரையில் ஒரு அழகான மாளிகையை உருவாக்கும் பணியைத் தொடங்கினார். சந்திரபவனம் என்று பெயரிடப்பட்ட அந்த வசந்த மாளிகையின் கட்டட வேலைகள் முடிவடைந்தன. மாளிகையின் உட்புறம் நேர்த்தியான மர வேலைப்பாடுகளை செய்விக்க எண்ணிய மன்னர் அதற்காகத் தச்சுக்கலையில் சிறந்த கலைஞன் ஒருவனைத் தேடும் பொறுப்பைத் தன் மந்திரியிடம் ஒப்படைத்தார்.
அத்தகைய சிறந்த கலைஞனை வலைவீசித் தேடிய மந்திரி இறுதியில் தச்சுக்கலையில் சிறந்தவனான குண்டலகேசியைத் தேர்ந்தெடுத்தார். அவரை அரண்மனைக்கு வரவழைத்து, சந்திரபவன மாளிகையின் உட்புறத்து தச்சுவேலைப் பணியை அவரிடம் ஒப்படைக்க விரும்புவதாகக் கூறினார். அதற்கு குண்டலகேசி, "மந்திரி அவர்களே! இந்த மகத்தான பணியை என்னிடம் ஒப்படைக்க விரும்புவது குறித்து மகிழ்ச்சி! ஆனால், நான் மிகவும் வயதானவன்! என்னால் முன்போல், தச்சுத் தொழிலை சிறப்பாக செய்ய முடிவதில்லை. அதனால் என்னால் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியாது!" என்றார்.
"அப்படியானால், உங்களுக்குத் தெரிந்த சிறந்த கலைஞன் வேறு யாரையாவது சிபாரிசு செய்ய முடியுமா?" என்று மந்திரி கேட்டார்.


"மதிவாணன், குணசீலன், ஜெயபதி என்று என்னுடைய மூன்று மகன்களும் என்னை விட சிறந்த கலைஞர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவன்! இந்த மூவரில் யாரையாவது ஒருவனைத் தேர்ந்து எடுத்து, அவனிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். மூவரில் யாரை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், மற்றவர்கள் அவன் மீது பொறாமைப்பட மாட்டார்கள்!" என்றான்.
"அப்படியானால் மூவரையும் நாளைக்கு என்னைச் சந்திக்க ஏற்பாடு செய்!" என்று சொல்லி மந்திரி அவனை அனுப்பி விட்டார். மறுநாள் மூன்று சகோதரர்களும் மந்திரியைச் சந்திக்க, அவர் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சந்திரபவனத்தின் உட்புறத் தச்சுவேலைகளைப் பற்றி அவர்களிடம் விளக்கியபின், மூவரையும் அவர்களாலேயே செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரச் சொன்னார்.
அவ்வாறே மறுநாள் மூவரும் பொருட்களை எடுத்து வந்து மந்திரியை சந்தித்தனர். மதிவாணன் முக்காலி ஒன்றைக் காட்ட, குணசீலன் நாற்காலி ஒன்றைக் காண்பித்தான். ஜெயபதி ஒரு பெட்டியை எடுத்து வந்திருந்தான். கலைநயத்தோடு செய்யப்பட்டிருந்த குணசீலன் செய்த நாற்காலி மந்திரியை மிகவும் கவர்ந்தது. அவனே சந்திரபவனை அலங்கரிக்கும் பணிக்குத் தகுந்தவன் என்று மந்திரி தீர்மானித்தார்.
மன்னரை அந்த மூன்று பொருட்களையும் பார்வையிட அழைத்தார். மூன்றையும் உற்று நோக்கிய பின், மன்னர் "மூன்றுமே வெவ்வேறு பொருட்களாகஇருப்பதால், எது சிறந்தது என்று முடிவெடுப்பது கடினமாக உள்ளது. அதனால், அவர்கள் மூவருக்கும் அவகாசம் அளித்து, மூவரையும் கட்டில் செய்து கொண்டு வருமாறு சொல்லும்படியாக மந்திரிக்கு உத்தரவு இட்டார். அவ்வாறே, மந்திரியும் மன்னரின் விருப்பத்தை அவர்களிடம் கூறி, அவர்களுக்கு நான்கு நாள்கள் அவகாசமும் அளித்தார்.
மூவரும் தங்கள் வீடு நோக்கிச் சென்று, தனித்தனியே கட்டில் தயாரிக்க இரவு பகலாய் முனைந்தனர். பொதுவாக, அரச குடும்பத்தினர் பயன்படுத்தும் கட்டில் ஒன்றை மதிவாணன் மிக அழகாகத் தயாரித்தான்.


அதே மாதிரிக் கட்டிலை கலை நயத்தோடு மேலும் சிறப்பாகத் தோன்றும்படி குணசீலன் தயாரித்தான். ஆனால் ஜெயபதியோ, இருவரது பாணியிலிருந்து வேறுபட்டுப் புதுவிதமான கட்டில் ஒன்றைத் தன் கற்பனையில் உருவாக்கித் தயாரித்தான். பிறகு மூவரும் ஒருநாள் தாங்கள் செய்தக் கட்டில்களின் மாதிரி வரைப்படத்தை மந்திரிக்குக் காட்டினர். பிறகு மன்னரே நேரில் மந்திரியுடன் வந்து மூன்று கட்டில்களையும் பார்வை இட்டார். உடனே மந்திரியிடம், "நமது சந்திரபவனத் தச்சுவேலைப் பொறுப்பை ஜெயபதியிடம் ஒப்படையுங்கள்!" என்றார். அதைக் கேட்ட மந்திரிக்குப் பெருத்த ஆச்சரியம் உண்டாகியது. அதைக் கண்ட மன்னர் தன் செயலுக்கு விளக்கம் தெரிவித்தார்.
"மதிவாணனும், குணசீலனும் சிறந்த கலைஞர்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால்அவர்கள் செய்திருப்பது போல் கட்டில்களை நான் ஏற்கெனவே அரண்மனையில் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய வேலைப்பாடும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஜெயபதி செய்துள்ள கட்டிலில் அத்தகைய வேலைப்பாடு சிறப்பாக அமையவில்லை. ஆனால் அவனுடைய வடிவமைப்பு இதுவரை நான் பார்க்காத புதுமையாக உள்ளது. நீங்கள் அதை ஒப்புக் கொள்கிறீர்களா?" என்று மன்னர் கேட்க, மந்திரி "ஆம்!" என்று தலையாட்டினார்.
"சந்திரபவனத்தில் செய்யப் போகும் தச்சு வேலைப்பாடுகள் இதுவரை யாரும் எங்கேயும் பார்த்திராத வண்ணம் புதுமையான கற்பனைத் திறனோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகவே, ஜெயபதிக்கு புதிய தச்சு வேலைகளுக்கு வடிவமைக்கும் பொறுப்பைக் கொடுங்கள். ஆனால் அவற்றைத் தயாரிக்கும் பொறுப்பை, மற்ற இரு சகோதரர்களிடம் கொடுங்கள். இவ்வாறு செய்தால், புதுமையான கற்பனைகள், கலைநயத்தோடும், சிறந்த வேலைப்பாடுடனும் சேர்ந்து மிக அற்புதமாக அமையும்!" என்றார்.
மன்னரின் புத்தி கூர்மையை உணர்ந்த மந்திரி அவரை மனமாரப் பாராட்டினார்.



No comments: