Wednesday, February 2, 2011

எக்ஸ்-ரே




விபத்தாக இருந்தாலும் சரி, இயற்கையான உடல் உபாதைகளாக இருந்தாலும் சரி, சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன் டாக்டர்கள் செய்யும் முதல் செயல், எக்ஸ்-ரே (X-Ray) எடுப்பது தான். உடலின் எந்த பாகமாக இருந்தாலும், ஊடுருவிச் சென்று எலும்புகளின் நிலையை துல்லியமாக தெரிவிப்பது எக்ஸ்-ரே கருவி என்பது நமக்குத் தெரியும். அனால், எக்ஸ்-ரே எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பது யாருக்காவது தெரியுமா?

1890ம் ஆண்டுகளில், உலோகங்களில் எலக்ட்ரான்கள் ஊடுருவிச் செல்லும் வினை குறித்து, பல்வேறு இயற்பியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன. பல அய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி, குறிப்புகள் எழுதி வைத்திருந்தனர். 1895ம் ஆண்டு ஜெர்மனியின் வில்ஹெல்ம் ரோன்ட்ஜென் என்ற ஆய்வாளர், உலோகங்கள் உள்பட பல்வேறு பொருய்கள் மீது கதிர்களைச் செலுத்தி சோதனை செய்து கொண்டிருந்தார்.

அந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, ஆய்வுக் கூடத்தில் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, கதிர்களை இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். கதிர்கள் பாயும் போது, ஒரு உலோகத்தின் மீது கை வைத்து வேறு திசையில் அதைத் திருப்ப முற்பட்டார். அப்போது சுவரில் இருந்த திரையில் ஒரு எலும்புக் கூடு கை நிழல் தெரிவதைக் கண்டார்.

வேறு யாராவது இருந்திருந்தால், அந்த இடத்தை பேய் பங்களாவாக மாற்றி, "அந்தப் பேய் போற வர்றவங்க கிட்ட பிரியாணி கேக்குதாம்.." என்கிற அளவுக்கு பல கதைகளை கிளப்பியிருப்பர். ஆனால் ரோன்ட்ஜென் ஒரு விஞ்ஞானி என்பதால், மீண்டும் தனது கைகளில் கதிரைப் பாய்ச்சி சோதனை செய்தார். உடலை ஊடுருவிச் சென்ற அந்த கதிருக்கு தற்காலிகமாக X என பெயரிட்டு, அது பற்றிய குறிப்புகளை எழுதி வைத்தார்.

அந்தக் குறிப்புகளையும், கணக்கீடுகளையும் வைத்து, அடுத்து வந்த ஹிட்டாஃப், இவான் புல்யூய், நிக்கோலா டெஸ்லா போன்ற விஞ்ஞானிகள் எக்ஸ்-ரே தொழில்நுட்பத்தை தற்போதுள்ள சூழலுக்கு மாற்றினர். ஆனால் அந்தக் கதிருக்கு மட்டும் ரோன்ட்ஜென் தற்காலிகமாக வைத்த X என்ற பெயரே நிலைத்து விட்டது.

No comments: