Monday, February 28, 2011

2G மின்னல் சர்வே...

ஸ்பெக்ட்ரம் மாயச் சுழலின் முக்கிய எபிஸோட் - ஆ.ராசாவின் கைது!

விரைவில் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான படுதா விலகும் நிலையில்... கூட்டணிக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சூடு பிடிக்கும் தருணத்தில்... ஆ.ராசாவின் கைது தமிழகத்தில் எந்த மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது? அவர் கைது சரியா? அதனால், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படுமா? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தியா?’ என்பது குறித்தெல்லாம் தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என எல்லாவற்றையும் கணிப்பாக எடுக்க முடிவு செய்தது ஜூ.வி. இதற்காக, மாணவப் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 100 பேர்கொண்ட நிருபர் படை, சுழன்று சுற்றியது!

ஆண், பெண், நகரம், கிராமம், அரசு ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், குடும்பத் தலைவிகள், கல்லூரி மாணவ மாணவியர் என்று எல்லாத் தரப்பு மக்களையும் அணுகி இந்தக் கணிப்பு எடுக்கப்பட்டது. புதுச்சேரி உட்பட மொத்தம் 2,725 பேர் இதில் கலந்துகொண்டனர்.

சொந்தத் தொகுதியான நீலகிரி நகரில் ஆ.ராசாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. ஆனால், ஊட்டி மலையைவிட்டுக் கீழே இறங்கினால், தமிழகம் முழுவதும் நிலைமை தலைகீழ்!

'தம்பி நான் தி.மு.க-காரன்தான். ஆனா, ராசாவுக்கு ஆதரவா தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் போட்டது எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. என்னைக் கேட்டா, அரசாங்கம் அவரை முன்கூட்டியே கைது செய்திருக்கணும். இவங்க, கட்சியைவிட்டே நீக்கியிருக்கணும்...'' - மதுரையில் வாழை இலைக் கடை நடத்துபவரின் கோபம் இது.

''ஸ்பெக்ட்ரம் பத்தி எல்லாம் எங்களுக்கு விவரமாத் தெரியாதுங்க... எது எப்படியோ, எண்ண முடியாத அளவுக்குப் பணம் கொள்ளை போயிருக்கு. அதை எத்தனை திரை போட்டு மறைச்சாலும், ஆளும் கட்சியினர் அதன் பலனை அனுபவிச்சே ஆகணும்!'' என்றனர் திருநெல்வேலி டவுனில்.

''இந்த விஷயத்தில் இந்தியாவின் மானம் உலக அளவில் போனதுன்னா... இந்திய அளவில் தமிழன் மானம் காத்தில் பறக்கிறதுதான் ரொம்பக் கவலையா இருக்கு!'' என்றனர் தூத்துக்குடி மக்கள்.

'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசா கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கை’ என்று சொல்பவர்களைவிட, 'தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு’ என்று சொன்னவர்கள்தான் அதிகம். 'ஆ.ராசாவின் கைது, தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்’ என்று பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருதுகிறார்கள். 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கியக் குடும்ப ஆதிக்கம் இருந்திருக்குமா?’ என்கிற கேள்விக்கு 'நிச்சயம் இருக்கிறது’ என்று அடித்துச் சொன்னவர்கள் மிக அதிகம். எட்டு கேள்விகள் அடங்கிய சர்வேயில், இந்தக் கேள்விக்குத்தான் 71 சதவிகிதம் பேர் கொந்தளித்து இருந்தார்கள். 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு இருக்கிறது?’ என்று 58 சதவிதத்தினர் நெத்தியடியாகச் சொன்னார்கள். '2ஜி விஷயத்தில் மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?’ என்ற கேள்விக்கு, பெரும்பாலானவர்கள், 'அரசியல் செய்கிறது’ என்றார்கள்.

மொத்தத்தில்... ஸ்பெக்ட்ரம், ஆ.ராசா கைது விவகாரங்கள் மக்களின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது? இதோ உங்கள் கண்ணில்... கருத்தில்..!

- ஜூ.வி. சர்வே டீம்


விகடன்

No comments: