Friday, February 25, 2011

ரேடியோ விண்மீன்கள்...


விண்ணில் சில இடங்களில் இருந்து வரும் ரேடியோ அலைகள் ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு விதமான வலிமைகளில் ஒழுங்கின்ற இருந்ததை வானியல் வல்லுனர்கள் கண்டனர். அதாவது சில விநாடிகளுக்கு ஒருமுறை விண்மீன் ஒன்று குறுகலான கால அளவில் அதிக அளவு ரேடியோ அலைகளை உமிர்ந்தது. பின்னர் நார்மலான அளவில் ரேடியோ அலைகளை வெளியிட்டது. இது ஒரு சுழற்சி போல ஒழுங்காக இருந்தது. ரேடியோ அலைகள் வெளிப்படுவது மிகவும் ஒழுங்காக, சம கால இடைவெளியில் அமைந்திருந்ததால், ஒரு ரேடியோ துடிப்புக்கும் அடுத்த துடிப்புக்கும் இடைப்பட்ட கால அளவை வானியல் வல்லுனர்கள் துல்லியமாக அளக்க முடிந்தது.

இது போல ரேடியோ அலைகளை திடீர் துடிப்புகளாக வெளியேற்றும் விண்மீன்களை பல்ஸார்கள் (Pulsar) அல்லது துடிக்கும் விண்மீன்கள் என்கின்றனர். இந்த பல்ஸார்கள் ஒவ்வொரு முறை துடிக்கும் போது குறிப்பிட்ட அளவு ஆற்றலை வெளிவிடுகின்றன. இந்த பல்ஸார்கள் எல்லாமே மிகவும் ஒழுங்கான ரேடியோ துடிப்பு (Radio Pulses) களை பெற்றிருக்கிறது. ஆனால் ஒரு பல்ஸாருக்கும் இன்னொரு பல்ஸாருக்கும் இடையே துடிப்பு கால அளவு மாறுபடுகிறது. ஒரு விநாடிக்கு முப்பது முறை துடிக்கின்ற பல்ஸார்கள் கூட உள்ளன.

பல்ஸார்கள் என்பவை உண்மையில் சுழலும் நியூட்ரான் விண்மீன்கள்தான் என்று தாமஸ் கோல்டு (Thomas Gold) என்ற வானியல் வல்லுனர் கருத்து தெரிவித்தார். நியூட்ரான் விண்மீன்கள் படு வேகமாகச் சுழலும் போது, அவற்றின் காந்த துருவங்களின் (Magnetic Poles) வழியாக எலெக்ட்ரான்கள் எனப்படும் துகல்கள் வெளியேற்றப்படுகின்றன. அப்போது நியூட்ரான்கள் தங்கள் ஆற்றலை மைக்ரோ அலைகள் வடிவத்தில் இழக்கின்றன. நியூட்ரான் விண்மீன் சுழன்று, அது இழக்கின்ற மைக்ரோ அலைகள் பூமியின் திசைநோக்கி வெளிப்படுத்தப்படும் போது, நாம் இவற்றை மைக்ரோ அலை துடிப்புகளாக காண்கிறோம். மேலும் நியூட்ரான் விண்மீன்கள் மைக்ரோ அலைகளை வெளியிடும் போது, அதனுடைய சுழலும் ஆற்றல் (Rotational Energy) குறைகிறது. இதனால் அதனுடைய துடிக்கும் கால அளவு மெதுவாக அதிகமாகிக் கொண்டே வருகிறது.

பல்ஸார்களில் ஒளிரும் பல்ஸார்கள் (Optical Pulsar) என்று இன்னொரு வகை உள்ளது. ஒளிரும் பல்ஸார்கள் என்பவை தன்னுடைய ஒவ்வொரு சுழற்சியின் போதும் குறைவான கால இடைவெளியில் ஒளிக்கற்றைகளை வெளியேற்றுகின்றன. இது போல ஒளித் துடிப்புகளை அவை வெளிவிடுவதால் தான் அவை ஒளிரும் பல்ஸார்கள் எனப்படுகின்றன.

1982 ஆம் ஆண்டு விநாடிக்கு 642 முறை ரேடியோ துடிப்புகளை வெளியேற்றிய ஒரு விரைவாகச் சுற்றும் பல்ஸாரை வானியல் வல்லுனர்கள் கண்டனர். இந்த பல்ஸார் நம் சூரியனைப் போல இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக நிறை கொண்டிருந்தது. ஆனால் அதனுடைய விட்டம் வெறும் 5 கிலோ மீட்டர்கள் தான் இருந்தது.

விண்வெளியில் ஒழுங்கான ஒரு கால இடைவெளியில் ரேடியோ துடிப்புகளை வெளிவிடும் விண்மீன்கள் வானியல் வல்லுனர்களுக்கு பெருத்த வியப்பை அளித்தது. நியூட்ரான் விண்மீன்களின் ஒரு வகை தான் பல்ஸார்கள் என்று முன்பே கண்டோம். நியூட்ரான் விண்மீன்களையும் தாண்டி வானியல் வல்லுனர்கள் யோசித்தனர்.


நன்றி - தினகரன்

No comments: