Monday, February 28, 2011

நடுநிசி நாய்கள்

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்

கெளதம் மேனன் இயக்கி வெளிவந்த திரைப்படம் நடுநிசி நாய்கள். இப்படத்தில் புதுமுகம் வீரா மற்றும் சமீரா ரெட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்தில் வளர்ப்பு தாயிடம் மகன் தப்பாக நடிப்பது போல் இருக்கும் காட்சி இந்து கலாசாரத்தை கேவலப்படுத்துவது போல் இருப்பதாக கூறி, படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை(பிப் 27) இந்து மக்கள் கட்சி தலைவர் குமார் தலைமையில் 15 பேர் தரமணி பஸ் நிலையத்தில் இருந்து கானகத்தில் உள்ள இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வீட்டிற்கு ஊர்வலமாக சென்றனர்.

அப்போது கிண்டி உதவி கமிஷனர் செந்தில்குமரன், இன்ஸ்பெக்டர்கள் மன்சூர் அலி, அங்குசாமி ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அவர்கள் அறிவித்ததால் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து கவுதம் வாசுதேவ்மேனன் நிருபர்களிடம் கூறுகையில் " யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்த காட்சி அமைக்கப்படவில்லை என்றும் கதைக்கு தேவைப்பட்டதால் இப்படி ஒரு காட்சியை படத்தில் வைத்தேன். நடுநிசி நாய்கள் படத்தின் கதாநாயகன் மனநலம் பாதிக்கப்பட்டவன். அவனை அறியாமல் நடக்கும் நிகழ்வுகளைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. குழந்தைகளுடன் படத்தை பார்க்க வேண்டாம் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன் " என தெரிவித்தார்.

No comments: