Monday, October 10, 2011

திருவண்ணாமலை கிரிவலம்


நினைத்தாலே முக்தி தரும்' என்ற பெருமையுடன் திருவண்ணாமலை ஒரு மிகச் சிறந்த ஆன்மீக திருத்தலமாக விளங்குகிறது. புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. சமீபகாலத்தில் இந்த யாத்திரை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக உயர்ந்து உள்ளது. முன்பு மலைகளில் வனங்கள், குகைகள் இருந்தன. அதில் பல சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே அடக்கமாயினர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி விட, மலையைச் சுற்றி வந்து மகான்களின் ஆசிகளைப் பெற்றனர். கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.

ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் நம் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்று கூறப்படுகிறது.

Thiruvannamalai

மலையின் அமைப்பு

அருணாச்சல மலையானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் குறுக்களவுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருன லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.

திருவண்ணாமலையின் சிறப்பு

இங்குள்ள மலையில் அனேக சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும் வாசம் செய்துள்ளனர். அவர்களுள் வேதாந்த மகரிஷி ரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மற்றும் யோகிராம் சுரத்குமார் ஆகியோர் 19 & 20ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் வாழ்ந்து மறைந்தவர்களாவர். இன்றும் இங்கு அனேக சித்தர்கள் உருவகமாகவும் அருவகமாகவும் வாழ்ந்து வருவதாக சொல்கின்றனர்.

தல புராணம்

ஒருமுறை இவ்வுலக ஜீவராசிகளை படைக்கும் தொழிலை மேற்கொண்டவராகிய பிரம்மனுக்கு மும்மூர்த்திகளில் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) தானே உயர்ந்தவர் என்கிற கர்வம் தோன்றியது. நானே அனைத்து ஜீவராசிகளையும் படைப்பவன். நான் இல்லையென்றால் விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் வேலையில்லை. ஆகையால் நானே உயர்ந்தவன் என்று கூற, அதை ஏற்க மறுக்கிறார் விஷ்ணு. அப்போது அங்கே ஒளிப்பிழம்பாய் ஜீவஜோதியாய் அந்த சர்வேஸ்வரனே காட்சி தருகிறார். இதைக் கண்ட விஷ்ணுவும், பிரம்மாவும் அந்த ஜோதியின் ஆதியையும் (ஆரம்பம்) அந்தத்தையும் (முடிவு) காண்பவர்களே உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு போட்டியை ஆரம்பிக்கின்றனர்.

ஜோதியின் அந்தத்தைக் காண்பதற்கு பிரம்மன் மேல்நோக்கி செல்கிறார், அதேபோல் ஆதியை காண்பதற்கு வராக உருவம் கொண்டு பூமியை துளைத்துக் கொண்டு செல்கிறார் விஷ்ணு. இவர்களது செயலைக் கண்ட சர்வேஸ்வரர் தன் அடியையும் (கால்பாதம்) உச்சியையும் (தலைமுடி) இவர்கள் காணாமல் செய்ய வேண்டும் என்பதற்காக மேலும் கீழும் வளர்ந்து கொண்டே செல்கிறார்.

பல ஆண்டுகள் ஆகியும் ஆதியையும் அந்தத்தையும் இருவராலும் காண முடியவில்லை. அப்போது அந்த சர்வேஸ்வரனின் தலையில் இருந்து தாழம்பூ பல ஆண்டுகள் பயணித்து கீழே வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த பிரம்மன் இந்த ஜோதி வடிவத்தில் இருப்பவர் சிவனே என்பதைப் புரிந்து கொள்கிறார். பிரம்மன் தான் மேற்கொள்ளும் பயணம் பற்றி தாழம்பூவிடம் கேட்க, நீங்கள் எத்தனை யுகங்கள் முயற்சி செய்து மேலே சென்றாலும் அந்த சர்வேஸ்வரனின் முடியை காண முடியாது என்றது தாழம்பூ. ஆகவே பிரம்மன் ஒரு முடிவெடுத்து தான் சிவனின் முடியைக் கண்டதாக சாட்சியம் சொல்லவேண்டும் என்றும் அதற்காக உனக்கு அடுத்த பிறவியை நல்விதமாக படைக்கிறேன் என்றும் தாழம்பூவிடம் கூறினார். முதலில் மறுத்தாலும் பின்னர் சரியென ஒத்துக்கொண்டது தாழம்பூ.

Lord shivaபிரம்மன் தன் பயணத்தை முடித்துக் கொண்டவுடன் சிவனும் தான் வளர்வதை நிறுத்துகிறார். அப்போது விஷ்ணு சிவனின் அடியைக் கண்டு தொட்டு வணங்க, சிவன் விஷ்ணுவைத் தூக்கி ‘நானும்(ஈசன்), நீயும்(திருமால்) ஹரிஹரனே(ஒன்றே)' என்றவாறு விஷ்ணுவை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

பிரம்மன் தான் சர்வேஸ்வரனின் முடியைக் கண்டதாகவும் அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்று சொல்ல, தாழம்பூவும், ‘ஆம்' என்று சாட்சி சொல்லிற்று. ‘நான்' என்ற அகங்காரம் கொண்டு என்னுடைய முடியைக் காணாமல் கண்டேன் என்று உரைத்ததால் உனக்கு (பிரம்மாவுக்கு) இந்த பூலோகத்தில் கோவில், பூஜைகள் இருக்காது என்று கூறிவிட்டார் சிவன். அதற்கு பொய் சாட்சியம் சொன்னதற்காக தாழம்பூவை யாரும் பூஜைக்காக பயன்படுத்தமாட்டார்கள் எனவும், தாழம்பூவில் பூ நாகம் என்ற விஷப்பாம்பு குடிகொள்ளும் என்றும் தாழம்பூவிற்கு சாபமிட்டார் சிவன்.

எனவேதான், பிரம்மாவிற்கு என்று இப்புவியில் கோவில்கள் இல்லாமல் போயிற்று. மேலும் பொய் சாட்சி சொன்ன தாழம்பூவையும் இப்புவியில் யாரும் பூஜைக்கு பயன்படுத்துவதில்லை. அந்த சிவன் ஜீவஜோதியாய் காட்சி தந்த மலையே திருவண்ணாமலை ஆயிற்று.

கிரிவலம் வருவதற்கு சிறந்த நாட்கள்

இறைவனால் (இயற்கையாக) படைக்கப்பட்ட அனைத்து நாட்களுமே சிறந்த நாட்கள்தான். இருப்பினும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றில் கிரிவலம் வருவதற்கு சிறந்தது அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களே.

அருள் தரும் அமாவாசை

இறைவனாகிய சிவன் தேவர்களுக்காக விஷம் உட்கொண்ட நாள் அமாவாசையாகும். தேவர்கள் என்றும் இளமையுடனும், அறிவாற்றலுடனும், திடகாத்திரமான உடலுடனும் வாழ்வதற்கு இறைவன் அளித்த வரமே திருபாற்கடலில் உள்ள அமுதமாகும். அந்த அமுதத்தை எடுக்க வேண்டி தேவர்கள் மலைகளையும் ஆதிசேசன் பாம்பையும் பயன்படுத்தினர். அப்போது ஆதிசேசனின் விஷத்தால் கடலில் உள்ள உயிரினங்கள் அழிந்ததோடு அமுதத்தில் விஷமும் கலந்துவிட்டது. தேவர்களின் வேண்டுதலுக்கிணங்க அந்த சர்வேஸ்வரனே திருவோடேந்தி விஷத்தை பருகுகிறார். அதனால் அவர் மேனி நீலநிறமாக மாறுகிறது. அந்த நேரத்தில் சர்வேஸ்வரனைக் காண மூவுலகிலும் உள்ள தேவர்களும், இப்பூவுலகில் இருந்த அனைத்து சித்தர்களும், யோகிகளும் ஒன்று கூடிய நாளே அமாவாசை. ஆகவே அமாவாசை தினத்தில் கிரிவலம் வருவதால் சித்தர்கள், யோகிகள், மூவுலக தேவர்கள் மற்றும் அந்த சர்வேஸ்வரனின் அருளையும் பெற முடியும் என்பது ஐதீகம்.

பொருள் தரும் பெளர்ணமி

கிரிவலம் வருவதற்கு மற்றொரு சிறந்த நாள் பெளர்ணமி ஆகும். இந்த தினத்தில் கிரிவலம் வருபவர்களுக்கு பொருள், நோய் இல்லாத வாழ்க்கை, நினைத்த காரியம் கைகூடுதல் போன்ற நற்பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. எந்த நாளாக இருந்தாலும் சரியான முறையில், அமைதியாக கிரிவலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது மட்டும் திண்ணம்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு இராஜகோபுர வாயிலில் இருந்துதான் பெரும்பான்மையானோர் கிரிவலப் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

கிரிவலப் பயணம்

கிரிவலத்தில் முதல் அரை கிலோமீட்டர் பயணத்தில் நம் கண்ணுக்கு தென்படுவது இந்திர லிங்கமாகும். இது சாலையின் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது. புதிய வேலை, பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றிற்கு இவரை வேண்டிக் கொள்ளலாமாம். அதன் பின்பு நந்தி விநாயகர் ஆலயம், அக்னி விநாயகர் ஆலயமும் சிறிது தொலைவில் இருக்கின்றன. வழி நெடுகே மேலும் பல சிறு கோவில்களும் இருக்கின்றன.

பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு அரை அல்லது ஒரு கிலோமீட்டருக்கும் இடைவெளியில் சாலையின் இடது பக்கம் பலகையில் கடந்து வந்த தூரம் மற்றும் கடக்க வேண்டிய தூரம் ஆகியவற்றை தெளிவாக எழுதியிருக்கின்றனர். மொத்தம் பதினான்கு கிலோமீட்டர்களை கடக்க வேண்டும்.

அடுத்த ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வருவது அக்னி லிங்கமாகும். இது சாலையின் வலது புறத்தில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ளது. இங்கு மட்டும் பிரகாரத்தை சுற்றி வந்து அக்னிலிங்கேஸ்வரரை தரிசிக்க வேண்டியிருக்கிறது. மூலவருக்கு எதிரில் ஒரு பலிபீடம் சற்று சாய்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான லிங்கக்கோவில்கள் இரண்டு அடுக்கு கருவறை மற்றும் சுற்று பிரகாரம் மட்டுமே கொண்டுள்ளன.

அடுத்த அரை கிலோமீட்டரில் சாலையின் வலது பக்கத்தில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஆசிரமம் பரந்து விரிந்ததாக இருக்கிறது. ஆசிரமத்திலிருக்கும் ஒரு ஆலமரத்தில் திருமணம் நடைபெறுவதற்காக வேண்டிக்கொண்டு தாலிக்கொடிகளும், நாணயங்கள் அடங்கிய துணிகளையும் கட்டி தொங்க விட்டிருக்கின்றனர். இலவச அன்னதான மண்டபமும் உள்ளே அமைத்திருக்கின்றனர்.

வெளியில் வந்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தால் சற்று தொலைவில் வலது பக்கத்தில் இரமணரின் ஆசிரமம் இருக்கிறது. இதுவும் நன்றாக பரந்து விரிந்திருக்கிறது. உள்ளே இடது பக்கத்தில் பெரிய தியான மண்டபம் ஒன்று இருக்கிறது. இந்த மண்டபத்தில் உள்ள மேடையில் இருந்துதான் இரமணர் பக்தர்களிடம் பேசிக் கொண்டிருப்பாராம். மேலும் ஆசிரமத்தினுள் இராமானந்தர் மற்றும் இராமகிருஷ்ணரின் சீடரான நிரஞ்சனானந்தர் சமாதிகளும் அமைந்துள்ளன.

மீண்டும் கிரிவலப்பாதை. அடுத்த சிறிது தூரத்தில் யோகி ராம்சுரத்குமாரின் ஆசிரமம் இடதுபுறத்தில் சற்று உள்ளார்ந்து அமைந்திருக்கிறது.

கடந்து வந்த தூரம் 3.5 கிலோமீட்டர் என்ற அறிவிப்பு பலகையுடன் அடுத்து இருப்பது எமலிங்கம். இதுவும் சாலையின் இடதுபுறத்தில் அமந்துள்ளது. எமபயம் நீங்க வேண்டி வணங்குகின்றனர். அதைத் தொடர்ந்து துர்வாச மகரிஷி ஆலயம் உள்ளது.

அதைத் தொடந்து வலதுபுறத்தில் ஆதிபராசக்தி சக்தி பீடம் இருக்கிறது. அடுத்த இரண்டு கிலோமீட்டரில் (கடந்து வந்த தூரம் 5.5 கிலோமீட்டர்) நிருதிலிங்கம் வருகிறது. தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்குவதற்கும், குழந்தை வரம் வேண்டியும் இங்கு வேண்டிச் செல்கின்றனர். அடுத்ததாக வலதுபுறத்தில் நவலிங்க கோவில் ஒன்று உள்ளது.

அடுத்த அரை கிலோமீட்டரில் அண்ணாமலையார் கோவில் ஒன்று வருகிறது. அடுத்து வலது புறத்தில் நித்தியானந்தரின் தியான பீடம் இருக்கிறது. இதுவே அவரின் ஆசிரமுமாக செயல்படுகிறது. நுழைவாயிலில் பக்தர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த குடிதண்ணீர் குழாய்கள் அமைத்திருக்கிறார்கள். உள்ளே சென்றால் நித்தியானந்தரின் தியான சத்சங்க வீடியோ காட்சிகளை பெரிய திரையில் வெட்ட வெளியில் ஒளிபரப்பிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

மீண்டும் கிரிவலப் பாதையில் தொடர்ந்தால் சிறிது தூரத்தில் அடிமுடி மகரிஷி சமாதி அமைந்துள்ளது. அதையும் பார்த்துவிட்டு அங்கிருந்தவரிடம் இந்த மகரிஷியின் பெயர்க் காரணம் கேட்டோம். ஜோதி வடிவமாக திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் காட்சி தந்த சிவனின் அடிமுடி திருவிளையாடலை தன் தவத்தின் மூலம் உணர்ந்து கொண்டவராம். ஆகவே இவருக்கு அப்பெயர் ஏற்பட்டது எனக் கூறுகின்றனர்.

அடுத்த அரை கிலோமீட்டரில் வருவது வருணலிங்கம். இவரை வேண்டிக் கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடலாம் என்று சொல்கின்றனர். அதைத் தொடர்ந்து மகாகாளி சித்தர் பீடமும் ஷீர்டி சாய்பாபாவின் ஆலயமும் இருக்கின்றன.

அடுத்து 8.5 கிலோமீட்டரில் அமைந்திருப்பது வாயு லிங்மாகும். இவரை சுவாசம் சம்பந்தமான மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் குணமாக வேண்டி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதன் பின்பு சிறிது தூரத்தில் வலதுபுறத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயமும், இடதுபுறத்தில் லோபமுத்ரா அகஸ்தியர் ஆசிரமமும் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து பஞ்சமுக தரிசன பகுதியும் வருகிறது. இங்கு இரண்டு சித்தர்களின் சமாதிகள் இருக்கின்றன.

அடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் குபேர லிங்கம் இருக்கிறது. இங்கு மட்டும் பக்தர்கள் கூட்டம் சற்று அலைமோதுகிறது. நாட்டிற்கும் வீட்டிற்கும் செல்வம் வேண்டி வணங்குகின்றனர். இங்கு மூலவரின் கருவறைக்குள் நாணயங்களை எறிகின்றனர். பதிலுக்கு அவர் நமக்கு அளவில்லா செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

அடுத்ததாக உச்சிப்பிளையார் கோவிலும் அதைத் தொடர்ந்து இரண்டு கிலோமீட்டரில் ஈசான்ய லிங்கமும் இருக்கின்றன. ஏழரை நாட்டுச் சனி பிடித்திருப்பவர்கள் இவரை வணங்கி கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாமாம்.

அடுத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தால் அண்ணாமலையார் கோவிலின் கிழக்கு இராஜகோபுரத்தை அடைந்து விடலாம்.
கோவிலினுள் அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மாளும் குடிகொண்டிருக்கின்றனர். கோவில் உள்ளே மூன்று கோபுரங்களுடன் மிக விஸ்தீரணமாக இருக்கிறது.

கோவிலின் மாதிரி வடிவம்

Kovil model

கோவிலின் உள்புறத் தோற்றம்:

Kovil inside

கிரிவலம் வரும்போது கடைபிடிக்க வேண்டியவை :

1.அமாவாசை அன்று ஆண்கள் காவி வேட்டியும், துண்டும் அணிந்து செல்லலாம். பெண்கள் செவ்வாடை அணிந்து செல்லலாம்.

2.பெளர்ணமி அன்று ஆண்கள் பச்சை வேட்டி அல்லது வெண்ணிற ஆடை அணிந்து செல்லலாம். பெண்கள் பச்சை ஆடை அணிந்து செல்வது மிகுந்த பலனைத் தரும்.

3.கிரிவலம் வரும் ஒவ்வொருவரும் ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துச் செல்வது உத்தமம். அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டதாகக் கூறப்படுகிறது.

4.கிரிவலம் வரும் வழியில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஊதுபத்தியும், கற்பூரமும் அவசியம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி நறுமணம் தீய எண்ணங்களைத் தடுக்கும் சக்தி கொண்டது.

5.முக்கியமாக, அமாவாசை-பெளர்ணமி திதி எப்பொழுது ஆரம்பமாகிறது என்று சரியாக பார்த்து செல்ல வேண்டும். திதி முடியும் தருவாயில் அவசர அவசரமாகச் செல்ல வேண்டாம். மேலும் திதி இரவு முழுவதும் இருந்தால் அந்த இரவில் வலம் வருவது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

6.கிரிவலத்தின் போது காலணிகள் இல்லாமல் செல்ல வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் மட்டும் வாகனத்தில் வலம் வரலாம்.

7.கிரிவலம் வரும்போது வீண் அரட்டை அடிக்காமல் அமைதியாக பஞ்சாட்சர மந்திரத்தை மனதில் தியானித்துக் கொண்டு செல்ல வேண்டும்.

8.கிரிவலம் முடிந்ததும் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்றால் அதன் முழு பலனையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக ஐதீகம்.

9.பரம்பரையில் வந்த நல்ல குருநாதர்களிடம் சிவதீட்சை பெற்றுக் கொண்டு கிரிவலம் வந்தால் ‘பிறவியில்லா பெருவாழ்வு’ என்ற பேரானந்த நிலை கிடைக்கப் பெறலாம்.

அமைவிடம், செல்லும் வழி

திருவண்ணாமலை கோவில் விழுப்புரத்திற்கும் காட்பாடிக்கும் இடையில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும், காட்பாடியிலிருந்து 90 கிலோ மீட்டரிலும் மற்றும் சென்னையிலிருந்து 185 கிலோ மீட்டரிலும் உள்ளது. சென்னை, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து வசதி அடிக்கடி உள்ளது. ஆனால் ரயில் தடம் இந்தப் பகுதியில் இல்லை. ஆகவே, தென் தமிழ்நாட்டில் இருந்து ரயிலில் வருபவர்கள் விழுப்புரத்தில் இறங்கி பேருந்தில் செல்லலாம். மேலும், சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு, திண்டிவனம், மதுராந்தகம், வேலூர் மற்றும் போலுரில் இருந்தும் பேருந்து வசதி தாராளமாக உள்ளது. பெளர்ணமி நாளில் மட்டும் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்கு தங்குவதாக இருந்தால் கோவிலுக்குச் சொந்தமான விடுதிகளில் வசதிக்கேற்ப 50 ரூபாயிலிருந்து 200 ரூபாய் அளவு வரை தனி ரூம் பிடித்து தங்கிக் கொள்ளலாம். கோவிலுக்கு அருகிலும், சுற்றிலும் தனியார் விடுதிகளும் நிறைய உள்ளன.

இம்மலையில் பல ஜீவ ஆத்மாக்கள் அடங்கியுள்ளன. அவர்களை வலம் வருவது கோரிக்கைகள் நிறைவேறவும், நிம்மதி கிடைக்கவும், நல்ல பலன்களை அடைவதற்கும் ஒரு வழியாகும். ஜீவ காருண்ய மனதுடன் வலம் வந்தால் தனி நபர் சுபிட்சம் மட்டும் அல்லாது உலக சுபிட்சம் ஏற்படவும் வழி பிறக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!


நன்றி - nilacharal

No comments: