Friday, June 17, 2011

ஆடு சிரித்தது!



பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் ஒரு மலை மீது உயரமான தேவதாரு மரமாக இருந்து அப்பகுதியிலுள்ள மக்களின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தார். அந்த மலை அடிவாரத்தில் ஒரு பண்டிதர் ஒரு குருகுலத்தை அமைத்துக் கொண்டு அங்கு வந்த பல சீடர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.
ஒருமுறை அந்தப் பண்டிதர் தாம் செய்த ஒரு பாவத்திற்குப் பரிகாரம் தேட ஒரு விரதத்தை மேற்கொண்டார். அந்த விரதத்தின் முடிவில் ஒரு ஆட்டை பலி கொடுத்தாக வேண்டும் என்ற ஒரு மூடநம்பிக்கை இருந்து வந்தது. அவரும் அவ்வாறு பலியிட நினைத்தார்.
அவர் ஒரு பணக்காரரிடம் போய் ஒரு ஆட்டை யாசகம் கேட்டார். அந்தப் பணக்காரரும் அவருக்கு இல்லையென்று சொல்லாமல் கொழுத்த ஆடு ஒன்றை அவருக்கு தானமாகக் கொடுத்தார். பண்டிதர் தம் குருகுலத்திற்கு அதனை ஓட்டிப் போய் தன் இரு சீடர்களிடம் ஒப்படைத்து "இதனை நதியில் நீராட்டி இதன் கழுத்தில் ஒரு மலர் மாலையைப் போட்டுக் கொண்டு வாருங்கள். அதற்குப் பின் இதனை பலியிடலாம்" எனக் கூறி அனுப்பினார்.
சீடர்களும் அந்த ஆட்டை நதிக்குக் கொண்டு சென்றனர். அப்போது ஆகாயத்தில் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. சீடர்களில் ஒருவன் ஆட்டை நதியில் குளிப்பாட்டினான். மற்றவன் மலர்களைப் பறித்து ஒரு மாலை கட்டலானான்.
மாலை தயாரானதும் அவர்கள் அதன் கழுத்தில் அதனைப் போட்ட போது அந்த ஆடு பலமாகச் சிரித்தது. ஆடு சிரிப்பதைக் கண்டு அந்த இரு சீடர்களும் பயந்து போனார்கள்.


அங்கிருந்து அவர்கள் ஓட நினைத்த போது அந்த ஆடு கண்ணீர் வடிப்பதைக் கண்டார்கள். அது கண்டு பயம் தெளிந்தவர்களாய் அவர்கள் அதனைப் பிடித்துக் கொண்டு போய் தம் குருவின் முன் நிறுத்தினார்கள்.
அவர்கள் தம் குருவிடம் இரகசியமாக "இந்த ஆட்டை ஏதோ பேயோ பிசாசோ பூதமோ பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆற்றில் குளிக்கும் போது இது மனிதனைப் போலச் சிரித்தது. பிறகு அழுதது அதனால் இதனைப் பலி கொடுப்பதால் பலன் கிடைக்குமா என யோசியுங்கள். அதன் பிறகு ஒரு முடிவெடுங்கள்" என்றனர்.
குருவும் ஏதோ சொல்ல நினைத்த போது அந்த ஆடே"என்னை தாராளமாக பலியிடலாம், அதற்குப் பலன் கிட்டும். உங்களுக்கு அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்றது. அது கேட்டு குருவும் சீடர்களும் பயப்படவே அந்த ஆடும் "பயப்படாதீர்கள். உங்களுக்கு எவ்விதக் கெடுதலும் நேராது" என்றது.
குருவும் சற்று பயம் தெளிந்தவராய் "ஒரு ஆடு மனிதனைப் போல பேசுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே" என்றார்.
அந்த ஆடோ "இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? நானும் ஒரு காலத்தில் மெத்தப்படித்த பிராம்மணன் தான்" என்றது.
அது கேட்டு குரு "அப்படியானால் நீ ஏன் இந்தப் பிறப்பை அடைந்தாய்? மனிதன் என்ற உயர் பிறப்பிலிருந்து ஆடு என்கிற மிருகமாகி தாழ் பிறப்பிற்கு வந்து விட்டாயே" எனக் கேட்டார்.
அதற்கு அந்த ஆடும் ஈனக் குரலில் "நானும் பல பாவகாரியங்களைச் செய்தேன். அவற்றிற்குப் பரிகாரமாக உங்களைப் போல ஒரு விரதம் மேற்கொண்டேன். பிரதமுடிவில் நீங்கள் இப்போது செய்ய இருப்பது போல ஒரு ஆட்டை பலி கொடுத்தேன். அதன் பலனாக நான் ஐநூறு பிறப்புகளில் ஆடாகப் பிறக்க வேண்டியதாயிற்று" என்றது.
குருவும் ஆச்சரியப்பட்டு "ஐந்நூறு பிறப்புகளும் ஆடாகவா?" என்று கேட்டார். அதுவும் "ஆமாம். இதுவரை நானூற்றுத் தொண்ணூற்று ஒன்பது பிறப்புகள் எடுத்தாகி விட்டது.


ஒவ்வொரு பிறப்பிலும் யாராவது ஒருவர் என்னைப் பலி கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார். இன்று நான் பலியாகப் போவது ஐந்நூறாவது தடவை. இந்தத் தடவை நான் பலியானதும் எனக்கு விடுதலை கிடைத்து விடும். நதியில் நான் நீராடியதும் எனக்கு என் முன் பிறப்பைப் பற்றித் தெரிந்தது. அதற்காகத் தான் சிரித்தேன்" என்றது.
"அது சரி. பிறகு ஏன் அழுதாய்?" என்று குரு கேட்டார். அதற்கு அந்த ஆடு "ஐந்நூறு பிறப்புகளுக்கு முன் நான் செய்த பாவத்தையே நீங்களும் செய்து விட்டு என்னை பலி கொடுக்கப் போகிறீர்கள். எனவே நீங்களும் என்னைப் போல ஐந்நூறு பிறப்புகள் ஆடாகப் பிறந்து ஐந்நூறு தடவைகள் பலியாக வேண்டுமே என்று நினைத்துத் தான் நான் கண்ணீர் விட்டேன்" என்றது.
அது கேட்டு குரு ஆழ்ந்த யோசனை செய்தார். அவரது சீடர்களும் சற்று தூரத்தில் நின்றவாறே ஆடு கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆடின் நிலைமையைக் கேட்டு இருவரின் கண்களிலிருந்தும் தாரைதாரையாக கண்ணீர் வந்தது. அது மட்டும்
இல்லாமல் அந்த ஆட்டைப் பலி கொடுத்தால் தம் குருவிற்கு என்ன கதி நேரும் என்றும் மிகவும் வருந்தினார்கள்.
குருவும் அந்த ஆட்டையும் சீடர்களையும் மாறி மாறிப் பார்த்தார். தம் பாவத்தைப் போக்க ஒரு ஆட்டை பலி கொடுப்பது அறியாமையே ஆகும் என அவர் உணர்ந்தார். அது மட்டுமல்ல, அப்போது ஒரு ஆட்டை பலியிட்ட அந்தப் பாவத்தையும் ஏற்க வேண்டுமே எனவும் நினைத்தார்.


சற்று நேரம் யோசித்த பிறகு அவர் அந்த ஆட்டிடம் "பயப்படாதே. நான் உன்னை பலியிடப் போவதில்லை" என்றார். ஆடோ "நான் மரணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அது எவ்வளவு விரைவில் எனக்கு வருகிறதோ அவ்வளவுக்கும் நல்லது" என்றது.
ஆனால் குருவோ "நீ என்ன சொன்னாலும் உன்னை நான் பலியிடப் போவதில்லை" என்றார். அந்த ஆடும் "இன்று நான் இறக்க வேண்டும் என்றிருக்கிறது, அதனால் நீங்கள் என்னைக் கொல்லாவிட்டாலும் இன்று வேறு யாராவது என்னைக் கொல்லத்தான் போகிறார்கள்" என்றது. ஆடின் வார்த்தையைக் கேட்ட குருவோ "அதெல்லாம் இல்லை. உன்னை நான் காப்பாற்றுவேன். யாரும் உன்னைக் கொல்லாதபடி பார்த்துக் கொள்வேன். அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்கிறேன்" என்றார்.
அவர் தம் சீடர்களிடம் அந்த ஆட்டை விட்டு விடும்படிக் கூறினார். ஆடும் அங்கிருந்து ஓடி ஒரு பழத்தோட்டத்தில் சற்று நேரம் திரிந்தது. பிறகு அது நதிக்கரை ஒரமாக நடந்தது. குருவும் சீடர்களும் அதனைப் பின் தொடர்ந்து சென்றனர். ஆடு மலை மீது செல்ல அவர்களும் அதன் பின் போய்க் கொண்டே இருந்தார்கள்.
மலை மீது மேகங்கள் சூழ்ந்தன. ஆடு மலை உச்சியை அடைந்தது குருவும் சீடர்களும் அதனைப் பார்த்தவாறே நின்றனர். அப்போது திடீரென இடி இடித்து மின்னல் வெட்டியது. அது அந்த ஆட்டின் மீது விழுந்தது. அது கண்டு குருவும் சீடர்களும் பெருமூச்சு விட்டவாறே தம் குடிலுக்குத் திரும்பினார்கள்.
அவர்களைக் கண்டு தேவதாருமரமாக நின்ற போதிசத்வர் மிக்க மகிழ்ச்சியுற்றார். தாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக விரதங்கள் இருந்து ஜீவராசிகளை பலி கொடுப்பது வீண் என்ற உண்மையை மனிதர்கள் அப்போது முதலாவது உணரத் தலைப்பட்டார்களே என்பதே அவரது மகிழ்ச்சிக்குக் காரணமாம்.



No comments: