Thursday, May 27, 2010

யுக சந்தி - ஜெயகாந்தன்-III


அதற்கென்ன அது தான் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை இயல்பு.

வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரிப்பதுபோல் அரித்து அரித்துப் புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா?

ஆனால்...

கீதாவைப் போல் அவளை விடவும் இள வயதில் அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஹிந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந் தீயில் வடுப்பட்டு வாழ்விழந்து, அந்த நினைவுகளையெல்லாம் கொண்டிருந்த, அந்தக் கனவுகளை யெல்லாம் கண்டிருந்த, அந்த ஆசைகளை யெல்லாம் கொன்றிருந்த கௌரிப் பாட்டி, அவற்றை யெல்லாம் கீதாவிடம் காணாமலா, கண்டுணராமலா இருந்திருப்பாள்?

அதனால்தான் கணேசய்யரைப் போலவோ, பார்வதி அம்மாளைப் போலவோ... கீதா இப்படி நடந்து கொள்ளப் போவதைப் அறிந்து.. அவளை வெறுத்து உதறவோ, தூஷித்துச் சபிக்கவோ முடியாமல் 'ஐயோ' என்ன இப்படி ஆய்விட்டதே'... என்ன இப்படியாய் விட்டதே' என்று கையையும் மனசையும் நெறித்துக் கொண்டு தவியாய்த் தவிக்கிறாள் பாட்டி.

பொழுது சாய்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் மாட்டினி ஷோவுக்குப் போயிருந்த மீனாவும் அம்பியும் வீடு திரும்பினார்கள். வாசற்படியில் கால் எடுத்து வைத்த அம்பி, கூடத்து ஈஸி சேரில் சாய்ந்து படுத்து ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்திருக்கும் பாட்டியைக் கண்டதும் சட்டென்று நின்று திரும்பிப் பின்னால் வரும் மீனாவிடம்,

"பாட்டிடீ..." என்று ரகசியமாக எச்சரித்தான்.

'எங்கே? உள்ளே இருக்காளா, கூடத்தில் இருக்காளா?' என்று பின் வாங்கி நின்றாள் மீனா.

"சிம்மாசனத்தில்தான் சாஞ்சிண்டு தூங்கறா..." என்றான் அம்பி.

மீனா தோள் வழியே 'ஸ்டைலாக' கொசுவித் தொங்கவிட்டிருந்த தாவணியை ஒழுங்காய்ப் பிரித்து, இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, மேலாடை ஒழுங்காக இருக்கிறதா என்று ஒரு முறை கவனித்த பின் தலையைக் குனிந்து சாதுவாய் உள்ளே நுழைந்தாள்.

உள்ளே வந்த பின்தான் பாட்டி தூங்கவில்லை என்று தெரிந்தது. அப்பா ஒரு பக்கம் நாற்காலியிலும் அம்மா ஒரு பக்கம் முகத்தில் முந்தானையைப் போட்டுக் கொண்டு விம்மியவாறு ஒரு மூலையிலும் விழுந்து கிடப்பது என்ன விபரீதம் என்று புரியாமல் இருவரும் திகைத்து நின்றனர்.

அப்போது ஜானா சிரித்துக் கொண்டே அம்பியிடம் ஓடி வந்தாள். "பாட்டி வெள்ளிரிப் பிஞ்சு வாங்கியாந்தாளே..." என்ற ஜானாவின் குரல் கேட்டுப் பாட்டி திரும்பிப் பார்த்தாள் மீனாவை.

"எப்ப வந்தேள் பாட்டி?" என்ரு கேட்டுவிட்டு "என்ன விஷயம்-- இதெல்லாம் என்ன?" என்று சைகையால் கேட்டாள் மீனா.

பாட்டியின் கண்கள் குளமாயின.

மீனாவைப் பார்க்கும்போதுதான் அவளுக்கு இன்னொரு விஷயமும்-- கணேசய்யர் கீதாவைத் தலை முழுகச் சொல்வதன் காரணம், பார்வதியம்மாள் கீதாவைச் சபிப்பதன் நியாய ஆவேசம் இரண்டும்--புரிந்தது பாட்டிக்கு.

அங்கே கிடந்த அந்தக் கடிதத்தை மீனா எடுத்துப் படித்தாள்.

"அதை நீ படிக்க வேண்டாம்' என்று தடுக்க நினைத்தாள் பாட்டி. பிறகு ஏனோ 'படிக்கட்டுமே' என்று எண்ணி மீனாவின் முகத்தையே உற்றுக் கவனித்தாள்.

மீனாவின் முகம் அருவருப்பால் சுளித்தது.

"அடி நாசமாப் போக" என்று அங்கலாய்த்தவாறே தொடர்ந்து கடிதத்தைப் படித்தாள். அவள் தோள் வழியே எக்கி நின்று கடிதத்தைப் படித்த அம்பி கூட விளக்கெண்ணெய் குடிப்பது போல் முகத்தை மாற்றிக் கொண்டான்.

வீடே சூன்யப் பட்டது. ஊரெல்லாம் பிளேக் நோய் பரவிக்கிடக்கும் போது வீட்டில் ஒரு எலி செத்து விழக்கண்டவர்கள் போல் ஒவ்வொருவரும் மிகுந்த சங்கடத்தோடு இன்னொருவர் முகத்தைப் பார்த்தனர்.

இரவு முழுதும் கௌரிப் பாட்டி தூங்கவில்லை. சாப்பிடவில்லை; கூடத்து ஈஸிசேரை விட்டு எழுந்திருக்கவும் இல்லை.

மகனைப் பார்த்தும் மருமகளைப் பார்த்தும், மற்றப் பேரக்குழந்தைகளைப் பார்த்தும், கீதாவை நினைத்தும் பெருமூச் செறிந்து கொண்டிருந்தாள்.

'வழக்கத்துக்கு விரோதமாய் என்னை வழியனுப்ப பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, பஸ் புறப்படும் போது முந்தானையால் கண்களைக் கசக்கிக் கொண்டாயடி கீதா? இப்போதல்லவா தெரிகிறது... பாட்டியை நிரந்தரமாப் பிரியறமேன்னுட்டு, பாவம் கொழந்தெ கண்கலங்கி நின்னுருக்கேன்னு... இப்பன்ன புரியறது... கண்ணிலே தூசு விழுந்திருக்கும்னு நினைச்சேனே பாவி'--

'என்னடி இப்படி பண்ணிட்டியே' ' என்று அடிக்கடி தன்னுள் குமுறிக் குமுறிக் கேட்டுக் கொண்டாள் பாட்டி.

விடிகின்ற நேரத்துக்குச் சற்று முன்பு தன்னையறியாமல் கண்ணயர்ந்தாள். கண்மூடிக் கண் விழித்தபோது மாயம் போல் விடிவு கண்டிருந்தது.

தெருவாசற்படியின் கம்பிக் கதவோரமாக கைப் பெட்டியுடன் வந்து காத்திருந்தான் வேலாயுதம்.

கண் விழித்த பாட்டி-- நடந்த தெல்லாம் கனவாகி விடக்கூடாதா என்று நினைத்து முடிக்கு முன் 'இது உண்மை' என்பது போல் அந்தக் கடிதம் ஸ்டூலின் மீது கிடந்தது.

அந்த கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தாள் பாட்டி. அப்போது அறைக்குள்ளிருந்து வந்த கணேசய்யர், இரவெல்லாம் இதே நினைவாய்க் கிடந்து மறுகும் தாயைக் கண்டு தேற்ற எண்ணி "அம்மா வேலாயுதம் வந்திருக்கான்... அவள் செத்துட்டானு நெனைச்சித் தலையை செரைச்சி தண்ணிலே போயி முழுகு..." என்றார்.

"வாயை மூடுடா..." என்று குமுறி எழுந்தாள் பாட்டி. காலங் கார்த்தாலே அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்னபேச்சு... இப்ப என்ன நடந்துட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே?..." என்று கேட்டுவிட்டு, தாங்க முடியாத சோகத்துடன் முகமெல்லாம் சிவந்து குழம்பக் கதறியழுதாள் பாட்டி. பிறகு சிவந்த கண்களைத் திறந்து ஆத்திரத்துடன் கேட்டாள்.

"என்னடா தப்புப் பண்ணிட்டா அவ?... என்ன தப்புப் பண்ணிட்டா, சொல்லு,' என்று தன் தாய் கேட்பதைக் கண்டு, கணேசய்யருக்கு ஒரு விநாடி ஒன்றுமே புரியவில்லை.

"என்ன தப்பா?...... என்னம்மா பேசறே நீ? உனக்குப் பைத்தியம் புடிச்சிடுத்தா?" என்று கத்தினார் கணேசய்யர்.

அடுத்த விநாடி தன் சுபாவப்படி நிதானமாக மகனின் முகத்தைப் பார்த்தவாறு, அமைதியாக யோசித்தாள் பாட்டி. தன் மகன் தன்னிடம் இப்படிப்பேசுவது இதுவே முதல் தடவை.

பாட்டி மெல்லிய குரலில் நிதானமாய்ச் சொன்னாள்: "ஆமாம்டா... எனக்குப் பைத்தியந்தான் ... இப்பப் பிடிக்கலைடா... இது பழைய பைத்தியம்? தீரமுடியாத பைத்தியம்... ஆனால் என்னோட பைத்தியம்-- என்னோட போகட்டும் அந்தப் பைத்தியம் அவளுக்குப் 'படீர்' னு தௌிஞ்சிருக்குன்னு அதுக்கு யார் என்ன பண்றது?...... அவதான் சொல்லிட்டாளே-- என் காரியம் என் வரைக்கும் சரி, வேஷம் போட்டு ஆடி அவப் பேரு வாங்காம விதரணையா செஞ்சிருக்கேன்னு..."

"அதனாலே சரியாகிடுமா அவ காரியம்?" என்று வெட்டிப் பேசினார் கணேசய்யர்.

"அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான்... அதுக்கென்ன சொல்றே?" என்று உள்ளங் கையில் குத்திக் கொண்டாள் பாட்டி.

"சாஸ்திரம் கெட்ட மூதேவி. ஆசாரமான குடும்பத்துப் பேரைக் கெடுத்த சனி -- செத்துத் தொலைஞ்சுட்டானு தலையை முழுகித் தொலைன்னு சொல்றேன்" என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினார் கணேசய்யர். பாட்டியம்மாள் ஒரு விநாடி தன்னையும் தன் எதிரே நிற்கும் மகனையும் வேறு யாரோ போல் விலகி நின்று பார்த்துவிட்டு, ஒரு கைத்த சிரிப்புடன் கூறினாள்.

"நம்ம சாஸ்திரம்...ஆசாரம்' அப்படீன்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம்?....அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா...எனக்குப் பதினைஞ்சி வயசுடா' என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா....' பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே.... அப்படி என்னை, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளேடா' அந்த கோரத்தை நீ ஏண்டா பண்ணலே கீதாவுக்கு?.....ஏன் பண்ணலே சொல்லு" என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்கும்போது, கணேசய்யரும் கண்களை பிழிந்து விட்டுக் கொண்டார்' அவள் தொடர்ந்து பேசினாள்.

"ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவைக் கட்டிக்கச் சொல்லித்தோ? தலையைப் பின்னிச் சுத்திண்டு பள்ளிக்கூடம் போய்வரச் சொல்லித்தோ? தன் வயித்துக்குத் தானே சம்பாத்திச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரின்னேன், ஏன்?.... காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்' நான் பொறந்த குடும்பத்தலேன்னு சொல்றயே.... எனக்கு நீ இருந்தே' வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. சீதா பண்ண காரியத்தை மனசாலே கூட நெனக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாவும் இருந்தது. இப்போ முடியலியேடா.... எனக்கு உன் நிலைமையும் புரியறது---அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா....உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா? அவளுக்கு அது வேண்டாம்னுட்டா....ஆனா, டேய் கணேசா.... என்னெ மன்னிச்சுக்கோடா... எனக்கு அவ வேணும்' அவதாண்டா வேணும்.... எனக்கு இனிமே என்ன வேண்டி இருக்கு' என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட எரியும்.... அதனாலே நீங்க நன்னா இருங்கள்.... நான் போறேன்.... கீதாவோடேயே போயிடறேன்.... அது தான் நல்லது. அதுக்காக நீ உள்ளூரத் திருப்திப் படலாம்---யோசிச்சுப் பாரு இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு' நான் வர்ரேன்" என்று கூறியவாறே மாற்றுப் புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள் பாட்டியம்மாள்.

"அம்மா' ஆ...." என்று கைகளைப் கூப்பிக்கொண்டு தாரை தாரையாய்க் கண்ணீர் வடித்தார் கணேசய்யர்.

"அசடே....எதுக்கு அழறே? நானும் ரொம்ப யோசிச்சுத்தான் இப்படி முடிவு பண்ணினேன்... என்ன பண்ணினாலும் அவ நம்ம கொழந்தேடா" என்று மெதுவாய்ச் சொல்லிவிட்டு உட்புறம் திரும்பிப் பார்த்தாள். "பார்வதி நீ வீட்டெச் சமத்தாப் பார்த்துக்கோ..." என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பாட்டி.

"எனக்கு உடனே போயி கீதாவைப் பார்க்கணும்" என்று தானே சொல்லிக் கொண்டு திரும்பும்போது, வாசற்படியில் நின்றிருந்த வேலாயுதத்தைக் கண்டாள் பாட்டி.

"நீ போடாப்பா....நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு" என்று அவனிடம் நாலணாவைத்தந்து அனுப்பினாள்.

'இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை---அதற்கென்ன? உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது' நான் ஒரு நாவிதனைக்கூட மாற்றிக்கொள்ளக் கூடாதா?' என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள். இடுப்பில் பையை வைத்துக் கொண்டு வாசற்படியிலிறங்கிய பாட்டி, ஒரு முறை திரும்பி நின்று "நான் போயிட்டு வரேன்" என்று மீண்டும் விடை பெற்றுக்கொண்டாள்.

அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துக்கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்.....

வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால்?......

ஓ' அதற்கு ஒரு பக்குவம் தேவை'


முற்றும்

No comments: