அட்சயத் திருதியை அன்று நகை வாங்கினால் வாழ்க்கை கொழிக்கும் என்று எந்த புண்ணியவான் எப்போது கூறினாரோ தெரியாது..
ஆனால் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நகைக்கடைக்காரர்கள் செய்யும் விளம்பரங்கள் மற்றும் கொடுக்கும் சலுகைகள் எத்தனை எத்தனை?
அவ்விளம்பரங்களில் நன்றாக ஏமாந்து மக்கள் அத்தினத்தில் வாங்கிக் குவிக்கும் நகைகள் தான் எத்தனை?
அட்சய திருதி உருவான கதை
வைகாசி மாதத்தில் நீர்தானம் செய்யாத அரசன் ஒருவனுடைய வரலாறு வியப்பூட்டும் வண்ணம் இருக்கிறது. பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். அவனுடைய நாடு திடீரென சோபை இழந்து துர் தசையை அடைந்தது. சேனைகள் நோயால் சேதமாயின.
வேற்று நாட்டு அரசன் போரிட்டு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு பூரியசஸ், அவனுடைய மனைவி சிகிநீ இருவரையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டான். காட்டிற்குச் சென்ற மன்னனும்- ராணியும் முப்பது ஆண்டுகள் சிரமப்பட்டனர். அந்த சமயம் மன்னன் தன் குருவின் நினைவாகவே இருந்தான்.
அப்போது தற்செயலாக அந்த வழியே யாஜகர், உபயாகர் ஆகிய ஞானோத்தமர்கள் செல்லும்போது, பூரியசஸ் அவர்களைப் பார்த்து பரவசமாகி, அவர்களுடைய பாதங்களில் விழுந்து வணங்கி தன் நிலையைச் சொன்னான். மன்னனின் நிலை கண்டு மனம் இரங்கிய தபோதனர்கள், அவன் இந்த நிலையை அடைவதற்கு என்ன காரணம் என்று ஞானதிருஷ்டியினால் அறிந்து மன்னனிடம் சொன்னார்கள்.
“அரசே, நீ பத்து தலைமுறைகள் வேடனாக இருந்தாய். பத்தாவது பிறவியில் கெளட தேசத்திக் காட்டில் வசிக்கும் போது, அந்த வழியாகச் செல்வோரின் பொருட்களை அபகரித்தும், சாதுக்களை அவமதித்தும் பல கொடுமைகளைச் செய்து வந்தாய் அதன் பயனைத்தான் இப்போது நீ அனுபவிக்கிறாய்” என்றனர்.
அதைக் கேட்டு வேதனையுற்ற பூரியசஸ், “தபோதனர்களே, இவ்வளவு கொடுமை செய்திருந்தும் நான் அரசனாக எப்படிப் பிறந்தேன்?” என்று கேட்டான். அதற்கு தபசிகள், “மன்னா! ஒரு சமயம் இரண்டு வைசியர்களும், ஒரு அந்தணரும் இந்தக் காட்டு வழியே செல்லும் போது நீ அவர்களை அடித்துத் துன்புறுத்தினாய் அவர்களுடைய தனங்களைக் கொய்ய நீ முயற்சித்த போது, அந்தணன் தனங்களோடு ஓடிவிட்டார்.
வைசியர்கள் இறந்துவிட்டனர். நீ அந்தணரைத் துரத்திக் கொண்டு ஓடும்போது, அந்தணர் கீழே விழுந்து மூர்ச்சை அடைந்தார். பொருள் மேல் உள்ள ஆசையால் நீ அந்த அந்தணரைத் தூக்கி நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, “பொருளையெல்லாம் எங்கே மறைத்து வைத் திருக்கிறாய்?’ நீ அந்தணனுக்குக் கொடுத்த நீரினால் அவர் மயக்கம் தெளிந்தார். உன்னை அறியாமலேயே உன்னுடைய காரியத்திற்காககச் செய்த நீர் தானம் வைகாசி மாதத்தில் நடந்தது. அந்த புண்ணியத்தினால் நீ அரசைனாகப் பிறந்தாய்” என்று முடித்தனர்.
வைகாசி மாதத்தில் அறிந்தோ அறியாமலோ செய்யும் சிறிது நீர் தானத்திற்கு இவ்வளவு மகிமையா என்று வியந்த அரசன் தன் முற்பிறவிகளை நினைத்து மனம் நொந்து, காட்டில் வசித்தபடியே ஸ்ரீ ஹரியைத் தியானம் செய்து, வெயிலில் வருவோருக்கு நீழல் கொடுத்து, நீர் தானமும் அளித்து நல்ல செயல்களைச் செய்து வந்தான்.
சில நாட்களில் மன்னனின் உறவினர்கள் அவனைத் தேடி வந்து அவனுக்குத் துணை புரிவதா¡கக் கூறினர். அவனது அரசும் அவனை அடைந்தது. மன்னனும் பலகாலம் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து, ஐந்து புதல்வர்களைப் பெற்று இன்பமாக இருந்து வரும்போது ஸ்ரீ நாராயணனே தரிசனம் அளித்தார்.
“மன்னா, என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். “இறைவா! உங்களிடம் மாறாத பக்தியும் நாராயண நாமத்தைத் தவிர வேறு எதுவும் உச்சரிக்காத நாவும் வேண்டும்” என்றான். ஸ்ரீ நாராயணன் மன்னன் வேண்டியபடியே வரம் தந்து மறைந்தார்.
பூரியசஸ் மன்னனுக்கு மகாவிஷ்ணு தரிசனம் அளித்த நாள் திரிதியை அன்று செய்யும் தான தருமங்கள் அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால், அன்று முதல் அந்த திரிதியை நாளை அட்சய திரிதியை என்று அழைத்தனர். புராணங்களை ஒட்டியே இன்றும் ஸ்ரீராம நவமி, புது வருடப் பிறப்பு, அட்சய திரிதியை போன்ற புண்ணிய தினங்களில் பானகம், நீர் மோர் அளிப்பது நடந்து வருகிறது.
1)அட்சய திருதியில் தங்கமா?
கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகிவிடக் கூடாது
2) அட்சயம் என்றால் என்ன?
வளருதல்
3) கெளரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வந்தது எப்போது?
அட்சய திருதியன்று
4) ஸ்ரீ பரசுராமர் அவதரித்தது எப்போது?
அட்சய திருதியன்று
5) அட்சயதிருதியன்று தோன்றிய யுகம் எது?
கிருத யுகம்
6) ஸ்ரீ பரசுராமர் விஷ்ணுவின் எத்தனையாவது அவதாரம்?
ஆறாவது அவதாரம்
7) அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள் என்ன?
எப்போதும் குறையாதது
8) ஏழ்மையில் வாடிய ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பர் யார்?
குசேலர்
9) குசேலர் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்க வந்தது எப்படி?
ஒரு படி அவலை எடுத்து தனது கிழிந்த மேலாடையில் முடிந்து கொண்டு
10) அவரது அவலை சாப்பிட்டிபடி கண்ணன் என்ன கூறினார்?
‘அட்சயம்’ என்று
11) கண்ணன் அட்சயம் என்று கூறியதும் என நடந்தது?
குசேலரின் குடிசை மாளிகையானது. குசேலர் குபேர சம்பத் பெற்றார்.
12) குசேலருக்கு கண்ணன் அருள் புரிந்தது எப்போது?
அட்சயத் திருதியை அன்று
13) அட்சயதிருதியைப் பற்றி தருமருக்கு கதை கூறியவர் யார்?
கண்ணபிரான்
14) கண்ணன் தருமருக்கு கதை கூறியதாக எந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது?
பவிஷ்யோத்ர புராணத்தில்
15) அட்சயதிருதியை அன்று யாரை பூஜித்தால் சகல செளபாக்கியங்களும் கிட்டும்?
சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ லட்சமி.
16) அட்சய திருதியன்று பித்ருக்களுக்கும் மறைந்த முன்னோருக்கும் சிரார்த்தம், பூஜை செய்தால் கிடைக்கும் நன்மை என்ன?
பாவ விமோசனம் பெறலாம்.
17) அட்சய திருமணமான பெண்கள் என்ன செய்யலாம்?
சுமங்கலி பூஜைசெய்து மற்றவர்களுக்கு ஆடை வழங்கலாம்.
18) அட்சய திருதியில் ஆடை தானம் அளித்தால் கிட்டும் நன்மை என்ன?
மறுபிறவியில் ராஜவாழ்வு கிட்டும்.
19) அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கியேயாக வேண்டுமா?
அட்சய திருதியை அன்று தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பண்டங்கள் தானம் செய்தால் திருமணத் தடை அகலும் உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்துகள், அகால மரணம் போன்றவை நடைபெறாது.
கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வு வளம் பெறும் என்று கூறப்படுகிறது.
இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது எந்த விதத்தில் சரி?
வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்யமுடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால் நகை வாங்குவது என்பது முடியாத காரியம் தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம்பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
அழியும் பொருளை வாங்க தம்மிடம் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைக்கும் நேரத்தில் இறைவனைப் பற்றிய தியானங்களிலும் வழிபாடுகளிலும் மனதை செலுத்த முன்வர வேண்டும்.
வாழ்வில் உண்மையான வளம் பெற நாம் தங்க வெள்ளி நகைகளை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தருமங்களைச் செய்யுங்கள்.. பூஜை புனஸ்காரங்களில் மனதை லயிக்கச் செய்யுங்கள்.. பண்டிகைகளின் உண்மையான நோக்கங்களை நாம் என்று சரியாகப் புரிந்து கொள்கிறோமோ அன்று தான் நமக்குத் தெளிவான சிந்தனை கிடைக்கும். அதை விடுத்து விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து எப்பாடு பட்டாவது அட்சயத்திருதியை அன்று நாம் தங்கம் வாங்க வேண்டும் என்ற நினைப்பில் உங்கள் நிம்மதியைக் கெடுத்துக் கொள்வதல்ல.
கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகிவிடக் கூடாது நம் வாழ்க்கை.
No comments:
Post a Comment