Wednesday, May 26, 2010

யுக சந்தி - ஜெயகாந்தன் - II



பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்...

பயிற்சி முடித்துப் பல காலம் உள்ளூரிலே பணியாற்றி வந்த கீதாவுக்குப் போன வருஷம்-- புதிதாகப் பிறந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகிய--- நெய்வேலிக்கு உத்தியோக மாற்றல் வந்தபோதும் கணேசய்யர் குழம்பினார்.

"அதற்கென்ன? நான் போகிறேன் துணைக்கு...." என்று. பாட்டியம்மாள் இந்தத் தள்ளாத காலத்தில் மகனையும் குடும்பத்தையும் துறந்து தனிமைப்பட தானே வலிய முன் வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக்கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைப்பட்டுப் போவாளோ என்ற அச்சம்தான்.

இந்த ஒரு வருஷ காலத்தில், நீண்ட விடுமுறைகளின் போது இருவரும் வந்து தங்கிச் செல்வது தவிர, சனி--ஞாயிறுகளில் நினைத்தபோது புறப்பட்டு வந்துவிடுவாள் பாட்டி. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவளது வாடிக்கையான நாவிதன் வேலாயுதத்தையும், அதற்கு முன் அவன் அப்பனையும் தவிர, வேறு எவரிடமும் பாட்டியம்மாள் தலை மழித்துக் கொள்ளப் பழக்கப் படாததுமாகும்.

இப்போது வழியில் எதிர்ப்பட்ட வேலாயுதம், நாளைக் காலை அவள் வீட்டில் வந்து நிற்பான் என்று பாட்டிக்குத் தெரியும். வரவேண்டும் என்பது அவனுக்கும் தெரியும் அது வாடிக்கை.

ஒரு மைலுக்கு குறைவான அந்தத் தூரத்தை அரை மணி நேரமாய் வழி நடந்து அவள் வீட்டருகே வந்தபோது கணேசய்யர் முகத்தில் தினசரிப் பத்திரிக்கையைப் போட்டுக் கொண்டு முன் கூடத்து ஈஸிச்சேரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் திறந்து வைத்த தகர டின்னும் முறத்தில் கொட்டிய உளுத்தம் பருப்புமாய், மூக்குத்தண்டில் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் மருமகள் பார்வதி அம்மாள். கம்பி அழி வைத்து அடைத்த முன்புறக் குறட்டின் ஒரு மூலையில், வெயிலுக்கு மறைவாய்த் தொங்கிய தட்டியோரமாய்ச் செருப்புகள் இறைந்து கிடக்க, வாய்க்குள் ஏதேதோ பொருளற்ற சம்பாஷணைகளைத் தான் மட்டும் ராகமிழுத்து முனகியவாறு குடும்ப விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தாள் கடைசிப் பேத்தியான ஆறு வயது ஜானா.

-- பாட்டி வந்து நின்றதை யாருமே கவனிக்காதபோது, கம்பிக் கதவின் நாதாங்கியை லேசாக ஓசைப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சிறு ஒலியில் விளையாட்டு சுவாரஸ்யத்தோடு திரும்பிப் பார்த்த ஜானா, அன்பில் விளைந்த ஆர்வத்தோடு 'பாட்டி' என்ற முனகலுடன் விழிகளை அகலத்திறந்து முகம் விகஸித்தாள்.

"கதவெத் தெறடி" என்று பாட்டி சொல்வது காதில் விழுமுன், "அம்மா அம்மா... பாட்டி வந்துட்டாம்மா, பாட்டி வந்துட்டா'..." என்று கூவியவாறு உள்ளே ஓடினாள் ஜானா.

கதவைத் திறக்காமல் தன் வரவை அறிவித்தவாறு உள்ளே ஓடும் குழந்தையைக் கண்டு பாட்டி சிரித்தாள்.

கணேசய்யர், முகத்தின் மேல் கிடந்த பத்திரிகையை இழுத்துக் கண் திறந்து பார்த்தார். குழந்தையின் உற்சாகக் கூப்பாட்டால் திடீரென்று எழுந்து சிவந்த விழிகள் மிரண்டு மிரண்டு வெறிக்க ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அதற்குள் "ஏண்டி சனியனே இப்படி அலறிண்டு ஓடிவறே' " என்று குழந்தையை வைதுவிட்டு "வாங்கோ... வெயில்லே நடந்தா வந்தேள்...... ஒரு வண்டி வெச்சுக்கப்படாதோ? " என்று அங்கலாய்த்தவாறே மரியாதையோடு எழுந்தோடி வந்து கதவைத் திறந்தாள் பார்வதி.

"இதோ இருக்கிற இடத்துக்கு என்ன வண்டியும் வாகனமும் வேண்டிக் கெடக்கு? அவனானா பத்தணா குடு, எட்டணா குடும்பான்..." என்று சலித்துக் கொண்டே படியேறி உள்ளே வந்த தாயைக்கண்டதும் "நல்ல வெயில்லே வந்திருக்கயே அம்மா, பார்வதி'... அம்மாவுக்கு மோர் கொண்டு வந்து கொடு" என்று உபசரித்தவாறே ஈஸிசேரியிலிருந்து எழுந்தார் கணேசய்யர்.

"பாவம். அசந்து தூங்கிகொண்டிருந்தே... இன்னும் செத்தே படுத்திண்டிறேன்..." என்று அவரைக் கையமர்த்தியவாறே, ஈஸிசேரின் அருகே கிடந்த ஸ்டூல் மீது பையை வைத்து விட்டு முற்றத்திலிறங்கித் தொட்டித் தண்ணீரை அள்ளிக் கை கால் முகம் அலம்பி, தலையிலும் ஒரு கை வாரித் தௌித்துக் கொண்டாள் பாட்டி, பிறகு முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கூடத்து ஸ்டாண்டிலிருந்த சம்புடத்தை எடுத்து "என்னப்பனே... மகாதேவா" என்று திருநீற்றை அணிந்துக்கொண்டு திரும்பி வரும் வரை, கணேசய்யர் ஈஸிசேரின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அந்த ஈஸிசேர் பாட்டிக்கு மட்டுமே உரிய சிம்மாசனம். அவள் வீட்டிலில்லாத போதுதான் மற்ற யாரும் அதில் உட்காருவது வழக்கம். அவள் ஈஸிசேரில் வந்து அமர்ந்தபின் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டு விசிறினார் கணேசய்யர். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள்போல் பாட்டி உட்கார்ந்ததும் அவள் மடியில் வந்து ஏறினாள் ஜானா.

"பாட்டி வெயில்லே வந்திருக்கா...சித்தே நகந்துக்கோ... வந்ததும் மேலே ஏறிண்டு..." என்று விசிறிக்
கொண்டிருந்த விசிறியால் ஜானாவைத் தட்டினார் கணேசய்யர்.

"இருக்கட்டும்டா....கொழந்தை' நீ உக்காந்துக்கோ.... என்று குழந்தையை மடிமீது இழுத்து இருத்திக் கொண்டாள் பாட்டி.

'இப்ப என்ன பண்ணுவியாம்' என்று நாக்கைக் கடித்து விழித்துத் தந்தைக்கு அழகு காட்டினாள் ஜானா.

ஜானாவை மடியில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஸ்டூலின் மேலிருந்த பையை எடுத்து அதனுள்ளிருந்த வெள்ளிரிப் பிஞ்சுகளை வரிசையாகத் தரையில் வைத்து ஜானாவின் கையில் ஒன்றைத் தந்தாள். முறுக்கிச் சுருட்டி வைத்திருந்த மாற்றுப் புடவையை கொடியில் போடுவதற்காகப் பக்கத்தில் சற்று தள்ளி வைத்தாள். பிறகு பையைத் தலை கீழாகப் பிடித்து அதனுள்ளிருந்த மூன்று படி பச்சை வேர்க் கடலையைக் கொட்டியபோது, அதனூடே ஒரு கவர் விழுந்தது.

"ஆமா, மீனாவும், அம்பியும் எங்கே? காணோம்?" என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு 'இதெ உங்கிட்டே குடுக்கச் சொன்னா கீதா" என்று கவரை நீட்டினாள் பாட்டி.

இருபது வயது நிறைந்த பெண்ணை அம்பியின் துணையோடு மாட்டினி ஷோ பார்க்க என்னதான் பக்கத்திலிருந்தாலும் ---எப்படி சினிமாவுக்கு அனுப்பலாம் என்று தாய் கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு கவரை வாங்கியவாறே, "ஏதோ அவள் படிச்ச நல்ல நாவலாம். படமா வந்திருக்குன்னு காலையிலிருந்து உசிரை வாங்கித்து ரெண்டு சனியன்களும். மாட்டினி ஷோ தானே.... போகட்டும்னு அனுப்பி வெச்சேன்" என்றார் கணேசய்யர்.

"ஓ' தொடர் கதையா வந்துதே....அந்தக் கதை தானா அது?... பேரைப் பார்த்தேன்..." என்று ஒரு பத்திரிக்கையின் பெயர், ஓர் எழுத்தாளரின் பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கேட்டாள் பாட்டி. "இதுக்காகப் போய் ஏன் கொழந்தைகளை சனியன்னு திட்டறாய்?... நோக்கும் எனக்கும் சினிமான்னா என்னன்னே தெரியாது.... இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. நம்ம கொழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனச்சிக்கோ..." என்று மகனுக்குப் புத்தி சொல்லிவிட்டு, "கவர்லே என்ன சொல்லு-- அவளைக் கேட்டப்போ, 'அப்பா சொல்லுவா' ன்னு பூடகமா குடுத்து அனுப்பிச்சாள்" என விளக்கினாள் பாட்டி.

கவரை உடைத்து, கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அதனுள்ளிருந்த ஒரே காகிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த வாசகங்களை படிக்க ஆரம்பித்ததும் --- கணேசய்யரின் கைகள் நடுங்கின; முகமெல்லாம் 'குப்'பென வியர்த்து உதடுகள் துடித்தன. படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து எதிர்ச் சுவரில் தொங்கிய கீதாவின் மணக்கோல போட்டோவை வெறித்துப் பார்த்தார்....

தாயினருகே அமர்ந்து இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடனிருந்த கணேசய்யரின் முகம் திடீரென இருளடைந்தது' நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டு தாயின் முகத்தை வெறித்துப் பார்த்தார். அவர் கையிலிருந்த கடிதம் கீழே நழுவியதைக்கூட அவர் கவனிக்கவில்லை.

'என்ன விபரீதம்' ' என்று துணுக்குற்ற பாட்டியம்மாள், தரையில் விழுந்த அக்கடிதத்தை வௌிச்சத்தில் பிடித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்; அவளால் கண்ணாடியில்லாமலே படிக்க முடியும்'

"என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு....

இந்த கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்து தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தபின் தௌிந்த மனத்தோடுதான் எழுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப் போக்கு வரத்தோ, முகாலோபனமோ கூட அற்றுப் போகலாம் என்பதும் தெரிந்தே எழுதுகிறேன்.

என்னோடு பணி புரியும் ஹிந்தி பண்டிட் திருராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்ததுதான். ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு-- இது பாபகரமான காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு-- போராடித்தான் இம் முடிவுக்கு வந்தேன். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்படமுடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தமுப்பது வயதில்-- இவ்வளவு சோதனைகளைத் தாங்காமல்-- இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே-- இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...

என் காரியம் என் வரைக்கும் சரியானதே'

நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது... இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வௌிச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன்.

இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. ஒரு வேளை நீங்கள் என் முடிவை ஆதரித்தா... இன்னும் ஒரு வாரமிருக்கிறது... உங்களை, உங்கள் அன்பான வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை'கீதா செத்துவிட்டாள்' என்று தலை முழுகி விடுங்கள்.

ஆமாம்; ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து 'தியாகம்' செய்துவிட்டார்கள்? ஏன் செய்யவேண்டும்?

உங்கள் மீது என்றும்

மாறாத அன்பு கொண்டுள்ள

கீதா"

"என்னடா.. இப்படி ஆயிடுத்தே?" என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ செய்யவோ சக்தியிழந்தவளாய் ஏக்கம் பிடித்து வெறித்து விழித்தாள் பாட்டி.

"அவ செத்துட்டா...தலையெ முழுகிட வேண்டியது தான்" என்று நிர்த்தாட்சண்யமான குரலில் உறுதியாகச் சொன்னார் கணேசய்யர்.

பாட்டி திகைத்தாள்'

--தாயின் யோசனைக்கோ, பதிலுக்கோ, கட்டளைக்கோ, உத்தரவுக்கோ காத்திராமல் அந்த 'அம்மாப் பிள்ளை' முதன் முதலில் தானே ஒரு தீர்மானத்துக்கு வந்தது இது தான் முதல் தடவை.

"அப்படியாடா சொல்றே?" என்று கண்களிரண்டும் நீர்க்குளமாக, வயோதிக நெஞ்சு பாசத்தால் துடிக்க, நெஞ்சில் கை வைத்துக் கேட்டாள் பாட்டி.

"வேறே எப்படியம்மா சொல்லச் சொல்றே?...நீ பிறந்த வம்சத்திலே இந்தக்குடும்பத்திலே... ஐயோ...' " என்று இந்த அவலத்தைக் கற்பனை செய்யமுடியாமல் பதறினார் கணேசய்யர்.

'நான் பிறந்த யுகமே வேறேடா' என்ற வார்த்தை பாட்டிக்கு வாயில் வந்து நின்றது. அப்பொழுது தான் பாட்டிக்கு ஓர் அரிய உண்மை இவ்வளவு காலத்திற்குப் பின் புரிந்தது:

'என் மகன் எனது சொல்லுக்கும் எனது உத்தரவுக்கும் காத்திருந்தது வெறும் தாயன்பால் மட்டுமல்ல; நான் ஒரு யுகத்தின் பிரதிநிதி. அது ஆசாரமான யுகம்; நான் பிறந்தது சாஸ்திரத்துக்கு அஞ்சி நடந்த குடும்பத்தில்... அதுபோல் தன் குடும்பமும் நடக்க -- நடத்தி வைக்கத் தன்னால் ஆகாவிடினும் என்னால் ஆகும் என்ற நம்பிக்கையில்-- அந்த யுகத்தை அந்த ஆசார ஜீவிதத்தைக் கௌரவிப்பதன் பொருட்டே என் சொல்லே, என் வார்த்தையை அவன் எதிர்பார்த்திருந்தான்...' என்று தன்னைப்பற்றியும், தன் மகனின் மூர்க்கமான தீர்மானம் பற்றியும், தனித்துப்போன அன்பிற்குரிய கீதாவைப்பற்றியும் எண்ணி மௌனமாய் வாயடைத்து உட்கார்ந்தாள் பாட்டி.

அப்போது அங்குவந்து அவர்களை விபரீதச் சூழ்நிலைக்கு ஆட்படுத்தியிருக்கும் அந்தக் கடிதத்தை எடுத்து படித்த பார்வதி "அடி, பாவி மகளே...என் தலையிலே தீயை வெச்சுட்டியேடி' " என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.

பாட்டி, தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படித்தாள்....

"ரொம்ப சுய நலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப்-பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, 'தியாகம்' செய்து விட்டார்கள்?' --பாட்டிக்குச் 'சுருக்' கென்றது.....உதட்டைக் கடித்துக் கொண்டாள்....

இந்த வார்த்தைகளின் அர்த்தம் மற்றவர்களுக்குப் புரியாது. பாட்டிக்குப் புரியும்.

கீதா, பதினெட்டு வயதில் நெற்றியிலிடும் திலகத்தை மறந்தது போல், கூந்தலில் சூடும் பூவைத் துறந்தது போல்-- 'அது அவள் விதி யென்று சொல்லி அவள் சோகத்தையே மறந்து விடவில்லையா, அவளைப்பெற்ற தாயும் தந்தையும்?... கீதா இப்படியாகி வந்த பிறகுதானே பார்வதி, அம்பியையும் ஜானாவையும் பெற்றெடுத்தாள்'...

(தொடரும்).....

No comments: