Thursday, May 27, 2010

குறைப் பிறவி - ஜெயகாந்தன் - I



குறைப் பிறவி

எழுத்து - ஜெயகாந்தன்

"சீக்கிரம் வந்திடு. நீ வந்துதான் பாலுவுக்குக் கஞ்சி குடுக்கணும்" என்று ரஞ்சிதம் தெருவில் போகும் வரை சொல்லிக்கொண்டிருந்தாள் பங்கஜம்.

பங்கஜத்திற்குச் சொத்தோடு சுகத்தோடு, அன்பும் கனிவும் நிறைந்த கணவனும் இருந்து என்ன பயன்? உடன்பிறந்த நோய் அவளை நித்திய நோயாளியாக்கி இருந்தது. கலியாணம் ஆகி இந்த ஐந்து வருஷங்களில் நான்கு குழந்தைகள் பெற்றாள். வயிற்றில் ஒன்று தரித்ததும், கையிலிருக்கும் மற்றொன்று குழியை அடையும்...இப்படியே மூன்று குழந்தைகளும் இறந்தன. இப்பொழுது வயிற்றில் ஏழுமாதம்.

திடீரென்று போனவாரம் கைக்குழந்தை பாலுவுக்கு இரண்டு நாள் ஜ்உரம் கண்டிருந்தது; மறுநாள் நெற்றியிலும் முகவாயிலும் ஓரிரு முத்துக்கள் தோன்றின. நான்காம் அவை பெருகின; ஒரு வாரத்திற்குள், அம்மைக் கொப்புளங்கள் இல்லா இடமே தெரியாத அளவுக்கு உடம்பெங்கும் பரந்து....

பங்கஜத்துக்கும் அவள் கணவன் ராஜாரமனுக்கும் 'குழந்தை பிழைக்காது' என்ற எண்ணம் வலுவடைந்தது. பங்கஜத்துக்கோ எழுந்து நடமாட முடியாத பலஹீனம்..... அவளுக்கு டி.பி. இருக்கலாமோ என்று வேறு டாக்டர் சந்தேகிக்கிறார்....

பாலு ஸ்மரணையற்றுக் கிடக்கிறான், அவனைப் பங்களாவின் காம்பவுண்ட் சுவரோரமாக அமைந்திருக்கும் 'அவுட் ஹவுஸி'ல் கட்டிலில் கிடத்தி இருக்கிறார்கள். அவனருகே கூட, பங்கஜம் வரக்கூடாதாம். இது டாக்டரின் யோசனை.

சமையல்காரனோ, அவன் ஒரு மாயாவி' அவன் எப்பொழுது வருவான் எப்பொழுது சமைப்பான் என்று யாருக்கும் தெரியாது. காலையில் காப்பி குடிக்கப் போகும்போது 'இன்று என்ன சமைப்பது?' என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொண்டு விட்டால் போதும். அதன்பின் சாப்பாட்டு நேரத்தில் அங்கு எல்லாம் தயாராயிருக்கும். மற்ற நேரத்தில் அவன் கண்ணில் படமாட்டான்.

குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகவே ரஞ்சிதம் வேலைக்கு அமர்த்தப்பட்டாள். தன் குழந்தையைத் தானே கவனித்துக்கொள்ள பங்கஜத்திற்குக் கொள்ளை ஆசையிருந்தும் சக்தி இல்லை' வைத்திய சாஸ்திரமும் வாய்த்திருக்கும் கணவனும் அதற்கு அனுமதிக்கவில்லை.

'இப்பொழுதுதான் ரஞ்சிதம் இல்லையே, அவள் வரும் வரை நான் போய்ப் பார்த்துக் கொண்டால்...'

பங்கஜம் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு, பாலு படுத்துக்கிடக்கும் அந்தத் தனி வீட்டில் நுழைந்தாள். வேப்பிலை சயனத்தில் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான் பாலு. கட்டிலுக்கு அருகே இருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அதன் விதியைக் கணக்கிடுவதுபோல்--குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பங்கஜம்.

மணி ஒன்றாயிற்று.

இன்னும் ரஞ்சிதத்தைக் காணோம்; குழந்தைக்குப் பங்கஜமே மருந்து கொடுத்தாள். கஞ்சி கொடுத்தாள். வேப்பிலைக் கொடுத்தால் விசிறிக்கொண்டு ரஞ்சிதத்தின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

ரஞ்சிதத்தைக் காணோம். பங்கஜத்தின் கணவன் ராஜாராமன் மூன்று மணிக்கு வந்தான். பங்கஜம் பாலுவின் அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டான்.

"பங்கஜம், என்ன இது' ஏன் இங்கே வந்தே?"

"வீட்டுக்குப் போன ரஞ்சிதத்தைக் காணோம்... குழந்தைக்கு யாரு கஞ்சி குடுக்கறது, மருந்து குடுக்கறது...?"

சரி சரி, நீ உள்ளே போ, நான் பார்த்துக்கறேன்...." என்று கோட்டையும் 'டை'யையும் கழற்றி அவளிடம் கொடுத்துவிட்டு, அவன் போய் பாலுவின் அருகில் உட்கார்ந்து கொண்டான்.

ரஞ்சிதமும் செல்லியும் சகோதரிகள். தங்கையின் குடிசையில்தான் செல்லியும் வாழ்கிறாள். ரஞ்சிதத்தின் புருஷன் கொத்தனார் வேலை செய்கிறான். மூத்தவளாய்ப் பிறந்தும் செல்லிக்குக் கலியாணம் ஆகவில்லை; ஆகாது.

செல்லிக்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது என்றாலும் வளர்ச்சி பன்னிரண்டு வயதோடு நின்றுவிட்டது. முகமோ முப்பதுக்கு மேலே முதுமை காட்டியது...நரங்கிப் போன உருவம்; நாலடிக்கும் குறைவான உயரம்; கறுப்புமல்லாத சிவப்புமல்லாத சோகை பிடித்து வௌிறிப்போன சருமம். தலை முடியெல்லாம் ஒன்று சேர்ந்து சிக்குப் பிடித்து, எலிவால் மாதிரி பின்புறம் தொங்கும். முன் பற்கள் இரண்டும் உதட்டைக் கிழித்துக்கொண்டு வௌித்தெரியும்...அவளை யாரும் மணக்க முன்வராததற்குக் காரணம் இந்த அங்க அவலட்சணங்கள் மாத்திரமேயன்று. அவள் முழுமை பெறாத மனித ராசி; குறைப் பிறவி'

குடிசை வாசலில் உட்கார்ந்து முறத்தில் கொட்டிய அரிசியில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் செல்லி.

தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும், அப்படியே உறங்கிப் போவதும் அவளுக்குத் தினசரிப் பழக்கம். ரஞ்சிதத்துக்குத் தன் தமக்கையின் மீது உயிர். செல்லிக்கோ மனிதர்கள் என்றாலே பாசம்தான். மனிதர்கள் என்ன, நாயும் பூனையும்கூட அவளது எல்லையற்ற அன்புக்குப் பாத்திரமாகிவிடும். சொல்லப் போனால் அவைதான் அவளது அன்பை ஏற்றுக் கொண்டன. மனிதர்கள்-- அவள் தங்கையைத் தவிர--மற்றவர்கள் அவளைக் கண்டாலே அருவருத்து ஒதுங்கி நடந்தார்கள். இப்பொழுதும் கூட அவள் அருகே சொறி பிடித்த ஒரு கறுப்பு நாய்க்குட்டி வாஞ்சையுடன் நின்று வாலை ஆட்டிக் கொண்டிருக்கிறது. அவளுக்கும் அதற்கும் அத்யந்த நட்பு.

மணி ஐந்தாகியும் ரஞ்சிதம் வேலைக்குப் போகாததைக் கண்டசெல்லி குடிசைக்குள் எட்டிப் பார்த்தாள்,

"ரஞ்சிதம், நீ வேலைக்குப் போகலியா'..."

"இல்லே....நான் போகமாட்டேன்." "ஏண்டி....என்னா நடந்திச்சு?"

"அந்த புள்ளைக்கி மாரியாத்தா வாத்திருக்கு...பாத்தாவே பயமா இருக்கு...ஸ்...அப்பா" என்று உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள் ரஞ்சிதம்.

"யாருக்கு...பாலுவுக்கா?"

"டாக்டரு வந்து, அந்த வௌிவூடு இருக்கு பாரு அதிலே கொண்டு போயிப் போடச் சொல்லிட்டாரு புள்ளையெ.....பெத்தவகூட கிட்டப் போகக் கூடாதாம்...என்னெப் பாத்துக்கச் சொன்னாங்க புள்ளையெ...வீட்லே போயிச் சொல்லிட்டு வர்ரேன்னு வந்துட்டேன். நான் போக மாட்டேண்டி அம்மா...எனக்குப் பயமாயிருக்கு...." என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு தலையை உசுப்பினாள் ரஞ்சிதம்.

"இம்மா நேரம் புள்ளை எப்படித் துடிக்கிறானோ? பெத்தவளும் கிட்ட இல்லாம அந்த ஐயா எப்படித் தவிக்கிறாரோ" என்று சொல்லித் தவித்தாள்.

அவளது குனிந்த பார்வையில், பாலுவின் சிரித்த முகம் தெரிந்தது. அவனது பிஞ்சுக் கரங்கள் அவள் முகத்தில் ஊர்வதுபோல் இருந்தது.

"நான் போய்ப் பாலுவைப் பார்த்துக்கிட்டா....சம்மதிப்பாங்களா?....அந்த ஐயா என்ன சொல்லுவாரோ?...."

இந்த யோசனைகள் தோன்றியதும் அந்தப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது.

பாலுவைப் பார்த்துக்கொள்ளும் 'ஆயா' உத்தியோகம் முதலில் செல்லிக்குத்தான் கிடைத்தது.

(தொடரும்).....

No comments: