Wednesday, May 26, 2010

யுக சந்தி - ஜெயகாந்தன் - I


1. யுக சந்தி - ஜெயகாந்தன்


கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள்.

"பாட்டி...பாட்டி' பையைத் தூக்கியாரட்டா? ஓரணா குடு பாட்டி."

"வண்டி வேணுங்களா அம்மா?"

"புதுப்பாளையம் வக்கீல் குமாஸ்தா ஐயர் வீடுதானுங்களே....வாங்க, போவோம்" ---என்று பல்வேறு வரவேற்புக் குரல்களுடன் அவளை இறங்கவிடாமல் தடுத்து நின்ற வண்டிக்காரர்களையும், கூலிக்காரச் சிறுவர்களையும் பார்த்துக் கனிவோடு சிரித்துவிட்டுப் பாட்டி சொன்னாள்:

"எனக்கு ஒண்ணும் வேண்டாம்பா..சித்தே வழியை விட்டேள்னா நான் மெள்ள நடந்தே போயிடுவேன்.... ஏண்டாப்பா, வீட்டெக் கூடத் தெரிஞ்சு வெச்சிருக்காய்... நான்தான் மாசம் ஒருதடவை வர்றேனே, என்னிக்கு வண்டியிலே போனேன்?" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி, அவர்களை விலக்கி வழியமைத்துக் கொண்டு தணலாய்த் தகிக்கும் வெயிலில், முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, இடுப்பில் ஏற்றிய சுமையுடன் வறுத்துக் கொட்டிய புழுதி மண்ணை அழுந்த அழுந்த மிதித்தவாறு ஒரு பக்கமாய்ச் சாய்ந்து சாய்ந்து நடந்தாள் பாட்டி.

பாட்டிக்கு வயது எழுபது என்றாலும் சரீரம் திடமாய்த்தான் இருக்கிறது. மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும், அதனால் விளையும் இளைப்பும் வீட்டுக்குப் போன பின்தானே தெரியும்?...

அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து பரந்து ஓடுகிறார்கள்.

மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள்.

அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? என்ன செய்தால்தான் என்ன?

தகிக்கின்ற புழுதியில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் புதைய, அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள் பாட்டி.

வழியில் சாலையோரத்தில் --- நான்கைந்து மனிதர்கள் நின்று சுகம் காண வாகாய் முளைத்த பெருங்குடைபோல் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது ஒரு சிறிய வேப்பமரம்.

அந்த நிழலில் ஒற்றையாய்ச் சற்றே நின்றாள் பாட்டி.

எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் --சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்-- காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன.

"என்னப்பனே மகாதேவா" என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்தக் குளுமையை அனுபவித்தாள் பாட்டி.

பாட்டியின் முக்காடிட்ட வட்டமான முகத்தில் ஒரு குழந்தைக்களை குடிகொண்டிருந்தது. இந்த வயதிலும் அவள் சிரிக்கும்போது வரிசைப் பற்கள் வடிவாய் அமைந்திருந்தது ஓர் ஆச்சரியமே' அவள் மோவாயின் வலதுபுறத்தில் ஒரு மிளகை விடவும் சற்றுப் பருத்த அழகிய கறுப்பு மச்சம்; அதன்மீது மட்டும் கருகருவென இரண்டு முடி-- இவ்வளவையும் ஒருசேரப் பார்த்தவர்கள், இவள் இளவயதில் எப்படி இருந்திருப்பாள் என்று எண்ணாமல் இருக்க முடியாது.

பாட்டியின் பொன்னிறமான மேனியில் அதிக நிறபேதம் காட்டாத நார்ப்பட்டுப் புடவை காற்றில் படபடத்து; புடவையிலிட்ட முக்காட்டின் விளிம்பெல்லாம் குத்துக் குத்தாய் லேசாகத் தலைகாட்டும்-- மழித்து நாளாகிவிட்டதால் வளர்ந்திருக்கும்-- வெள்ளி முடி. கழுத்தில் ஸ்படிக மாலை. நெற்றியில் வியர்வையால் கலைந்த விபூதிப் பூச்சு. புடவைத் தலைப்பால் முகத்தையும், கைகளையும், மார்புக் குவட்டின் மடிப்புகளையும் அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டாள். அப்போது வலது விலாப்புறத்தில் இருந்த சிறிய பவழம் போன்ற சிவப்பு மச்சம் வௌித் தெரிந்தது.

---மீண்டும் நிழலிலிருந்து வெயிலுக்கு வந்து புழுதி மண்ணிலிருந்து, பழுக்கக் காய்ந்த கெடிலநதிப் பாலத்தின் கான்கிரீட் தளவரிசையில் பாதங்களை அமைதியாகப் படிய வைத்து, அசைந்து அசைந்து அவள் வரும்போது.....

பாலத்தின்மீது கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக் கூடாதே என்ற பய உணர்வோடு ஒதுங்கி நின்று கையிலுள்ள சிறு தகரப்பெட்டியுடன் கும்பிட்டான் ஒரு பழைய பழகிய ---நாவிதன்.

"பாட்டியம்மா....எங்கே, நெய்வேலியிலிருந்தா?" என்று அன்புடன் விசாரித்தான்.

"யாரு வேலாயுதமா?....ஆமா' ....உன் பெண்டாட்டி குளி குளிச்சுட்டாளா?" என்று ஆத்மார்த்தமாய் விசாரித்தாள் கிழவி.

"ஆச்சுங்க...ஆம்பளைப் பையன்தான்."

"நல்லாயிருக்கட்டும்....பகவான் செயல்....' இது மூணாவது பையனா?"

"ஆமாமுங்க" என்று பூரித்துச் சிரித்தான் வேலாயுதம்

"நீ அதிர்ஷ்டக்காரன்தான்...எந்தப் பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா?" என்றதும் வேலாயுதம் குடுமியைச் சொறிந்தவாறு சிரித்தான்.

"அட அசடே, என்ன சிரிக்கிறாய்? காலம் வெகுவாய் மாறிண்டு வரதுடா; உன் அப்பன் காலமும் உன் காலமும் தான் இப்படிப் பொட்டி தூக்கியே போயிடுத்து... இனிமே இதொண்ணும் நடக்காது.... புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப் போறா... பொம்மனாட்டிகள்லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறதுதான் இப்பவே தெரியறதே....ம் ...எல்லாம் சரிதான்; காலம் மாறும்போது மனுஷாளும் மாறணும்.... என்ன, நான் சொல்றது?" என்று கூறி ஏதோ ஹாஸ்யம் பேசிவிட்ட மாதிரி பாட்டி சிரித்தாள். பதிலுக்கு அவனும் சிரித்தான்.

"இந்தா, வெயிலுக்கு ரெண்டைக் கடிச்சிண்டு போ" என்று இடுப்பிலிருந்த பையில் பிதுங்கி நின்ற இரண்டு வெள்ளிரிப் பிஞ்சுகளை எடுத்து அவனது ஏந்திய கைகளில் போட்டாள்.

"பஸ்லே வரச்சே அணாவுக்கு நாலுன்னு வித்தான்.... கொழந்தைங்களுக்கு ஆகுமேன்னு ஒரு நாலணாவுக்கு வாங்கினேன்" என்று அவள் சொன்னதும், வேலாயுதம் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ---தன்னை அவள் கடக்கும்வரை நின்று பின்னர் தன் வழியே நடந்தான்.

சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த கௌரியம்மாள், தனது பத்து வயதில் இந்தக் கடலூரில் நன்கு செயலில் இருந்த ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள். பதினாறு வயதில் கையிலொரு குழந்தையுடன் கைம்மைக் கோலம் பூண்ட பின், இத்தனை காலமாய்த் தன் மகனையும், தன் புருஷன் பங்கில் கிடைத்த வீட்டையும் விட்டு எந்த ஊருக்கும் சென்றதில்லை.

எனினும் தன் மகன் வயிற்றில் பிறந்த மூத்தமகள் கீதா, மணக்கோலம் பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை, நாடகப் பூச்சைக் கலைப்பது போல் கலைத்துவிட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ் சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து வீழ்ந்து குமுறி யழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசி சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கௌரிப் பாட்டி. தன் அரவணைப்பில், தன் அன்பில், தனது கண்ணீரில், தனது ஒட்டுதலில் அவளை இருத்திக் கொள்வதையே தன் கடமையாக ஏற்றுக் கொண்டாள். அதுவரை கீதாவின்மீது, மகன் பெற்ற குழந்தை என்ற பாசம் மட்டுமே கொண்டிருந்த பாட்டி--- கணவன் இழந்த நாள் முதல் தன் உயிரையே மகன் மீது வைத்திருந்த அந்தத் தாய்---அதை மாற்றிக் கொண்டது கீதாவுக்கு வெறும் ஆறுதல் தரும் பொருட்டன்று.

கௌரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதிநிதி யெனத் தன்னையே அவளில் கண்டாள்.

பாட்டியின் மகன் கணேசய்யர் தந்தையின் மரணத்தை--- அதனால் விளைந்த அத்யந்த சோகத்தை உணராதவர் அவரது மனைவி பார்வதி அடிக்கடி ரகசியமாகக் கடிந்து கொள்வதற்கு ஏற்ப அவர் ஒரு 'அம்மா பிள்ளை' தான்.

விதவையாகிவிட்ட கீதாவைப் பற்றிப் பலவாறு குழம்பிக் குழம்பிப் பின்னொரு நாள் ஹைஸ்கூல் படிப்போடு நின்றிருந்த அவளை, உபாத்திமைப் பயிற்சிக்கு அனுப்ப யோசித்து, தயங்கித் தயங்கித் தன் தாயிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவரது முடிவை வெகுவாகப் பாராட்டி அவள் ஏற்றுக் கொண்டதும், கௌரிப் பாட்டியை அவரால் அளக்கவே முடியவில்லை.

(தொடரும்).....

No comments: