Sunday, July 31, 2011

படையப்பா பார்ட்-2

தாம் தூம் சாம் ஆண்டர்சன்
டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள் : எம்.விஜயகுமார்

ஆனந்த விகடன்

சாம் ஆண்டர்சனைத் தெரியுமா? 'யாருக்கு யாரோ?’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்துக்கே 'சாவு பயம்’ காட்டியவர்!

'இன்னிக்கு 'ஜீ தமிழ்’ல சாம் படம் போடுறாங்க மச்சான்... டோன்ட் மிஸ் இட்’ என்று எஸ்.எம்.எஸ். மழை கொட்டும் அளவுக்கு நடிப்பால், நடனத்தால் ரசிகர்களை ரவுண்டு கட்டி சாத்தியவர். யூ-டியூப்பில் சாம் க்ளிப்பிங்ஸ் ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ஹிட் அடித்திருக்கிறது என்றால், எல்லாப் பெருமையும் சாம் ஆண்டர்சனுக்கே. ஈரோட்டில் கூரியர் கம்பெனி நடத்தி வரும் சாம் ஆண்டர்சனை நீண்ட சேஸிங்குக்குப் பின் பிடித்தோம்

''எப்படி இப்படி ஒரு துணிச்சல் வந்துச்சு?''

'' 'களவும் கற்று மற’னு சொல்லி இருக்காங்க. 'சாக்லேட்’தான் நான் முதன்முறையாப் பார்த்த படம். அப்பவே சினிமா தான் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன். தினம் சாக்லேட் படம் பார்த்தேன். கண்ணாடி முன்னாடி நடிச்சேன். கதை எழுதினேன். பாட்டு போட்டு ஆடினேன். இப்படி சினிமாவுக்காக 24 மணி நேரமும் என்னையே நான் அர்ப்பணிச்சேன். இப்போ இருக்குற தமிழ் சினிமா நல்லாதான் இருக்கு. (சாரே சொல்லிட்டாரு... அப்புறம் என்னப்பா!) ஆனா, இன்னும் கொஞ்சம் டெவலப்மென்ட் வேணும். அதை உடனே மாத்த முடியாது இல்லையா? அதனால, பல வருஷமாக் காத்திருந்து சினிமாவுக்குள் குதிச்சேன்!''

''குதிச்சதுல உங்களுக்கு அடிகிடி எதுவும் படலையா? அதாவது, படம் எடுத்த வகையில நஷ்டம் எதுவும் ஏற்படலையா?''

''முன்னாடி பெரிய தயாரிப்பாளர்கள் படம் எடுத்தாலே, படத்தை வெளியிட முடியாது. சன் டி.வி, கலைஞர் டி.வி, இராமநாராயணன்னு ஆயிரத்தெட்டு பாலிடிக்ஸ். ஆனா, இது எல்லாத்தையும் தாண்டி தமிழ்நாடு முழுக்க நாலு தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்ணினேன். படம் நல்ல படம்தான். ஆனா, ஓடுறதுக்கு விளம்பரம் வேணுமே... படத்தை ஓட்டுறதுக்கு படாதபாடு பட்டேன். அப்படியும் இழுத்துப் பிடிச்சு 25 நாளு ஓட்டிட்டேன். நீங்க சொன்ன மாதிரி குதிச்சுதுல கொஞ்சம் அடி பட்டுருச்சுதான்!''

''உங்க எதிர்காலத்தைப் பார்த்தீங்களே... எங்க எதிர்காலத்தை யோசிச்சீங்களா?''

(யோசிக்கிறார்... மனதுக்குள் கேள்வி - பதிலை ரீ-வைண்ட் பண்ணிப் பார்த்தார்போல) ''சார், என்னை வெச்சு காமெடி இன்டர்வியூ எடுக்குறீங்களா?''

''சேச்சே... என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க?''

''அதானே பார்த்தேன். நான் ரொம்ப சீரியஸான ஆளு. அதான் படத்தில் காமெடி ஸீனில் நடிக்கலை. (இது புதுசா இருக்கே!) பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைனு வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டுன்னு ஃபேமஸ் ஆர்ட்டிஸ்ட்டுகளை காமெடிக்காக நடிக்கவெச்சேன். என்ன பிரச்னைனு தெரியலை. நாலஞ்சு பேர்தான் பாராட்டினாங்க. நிறையப் பேர் திட்ட ஆரம்பிச்சாங்க. டக்குனு என் செல் நம்பரை மாத்திட்டேன். நான் யோசிச்சு ரெடி பண்ணின அருமையான ஸ்டோரி சார் அது... கதை சொல்லவா?''

''சொல்லுங்க... அதையும்தான் கேட்போம்...''

''நான் மெக்கானிக் கோர்ஸ் படிச்சவன். அதனால, படத்துல நான் கார் மெக்கானிக்கா வருவேன். 'நானோ’ காருக்குப் போட்டியா 70 ஆயிரத்துல புதுசா கார் உருவாக்குவேன். என் திறமையைப் பார்த்துட்டு, ரெண்டு பொண்ணுங்க என்னைக் காதலிப்பாங்க. நான் யாருக்கு வாழ்க்கை கொடுக்குறேங்கிறது க்ளைமாக்ஸ்!''

''பிரமாதமா இருக்கே... அப்புறம் ஏன் படம் ஓடலை?''

''கேட்கும்போது அழகா இருக்குல்ல... எடுக்கும்போது சொதப்பிட்டேன் சார். மூணே மாசத்துல அவசர அவசரமா ஷூட்டிங் முடிச்சேன். முதல் படம்கிறதால, பயமா இருந்தது. அதுவும் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட். அந்த ரெண்டு ஹீரோயினும் டார்ச்சர் சார். படத்தோட ஹீரோ நானே தள்ளுவண்டிக் கடையில சாப்பிட்டேன். அதுங்க ரெண்டும் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு வேணும்னு படுத்தி எடுத்துட்டுதுங்க. க்ளைமாக்ஸ்ல ரெண்டு பேரையும் கொலை பண்ற மாதிரி ஸீன் வைக்கலாமானுகூட யோசிச்சேன். ஒரு பியூட்டிஃபுல் லவ் ஸ்டோரியை பெர்சனல் கோபத்துக்காகக்கெடுத்துடக் கூடாதுல்ல. அதான் சாஃப்ட்டா முடிச்சுட்டேன்!''

''படம் ரிலீஸ் ஆனதும் கோடம்பாக்கத்துல இருந்து அழைப்பு வந்ததா?''

''அது என்ன எழவுன்னு தெரியலை. யாருமே கண்டுக்கலை. எங்கே வாய்ப்பு கிடைத்தாலும், யார் வாய்ப்பு கொடுத் தாலும், சும்மா பூந்து விளையாட ரெடியா இருக்கேன் சார்!''

''இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?''

''சதர்ன் கூரியர்ஸ்னு லோக்கல் கூரியர் கம்பெனி நடத்திட்டு இருக்கேன். என்கிட்ட அஞ்சு பேர் வேலை பார்க்குறாங்க. சினிமாவுக்கு வந்ததால கூரியர் கம்பெனி நஷ்டம் ஆகிருச்சு. ஆனாலும், அந்த அஞ்சு பேருக்காக கம்பெனியை விடாம நடத்திட்டு இருக்கேன். நான் சினிமாவில் ஜெயிச்சதும் அந்த அஞ்சு பேருக்கும் கூரியர் துறை யிலேயே வாழ்க்கை அமைச்சுக் கொடுப்பேன்!''

''சினிமா எடுத்ததுக்கு உங்க குடும்பத்துல யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலையா?''

''ஒரு வகையில நானும் இளைய தளபதி விஜய்யும் ஒண்ணு சார். ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன். நான் மனுஷங்களை எப்பவும் நம்புறதே இல்லை. எல்லா மனுஷங்களும் ஃப்ராடு சார். நான் இயேசுநாதரை மட்டும்தான் நம்புவேன். அவர்கிட்ட தினமும் பேசிட்டே இருக்குறேன். அவர் ஓ.கே. சொன்ன பின்னாடிதான் படம் எடுத்தேன். ஒரு விஷயம் தெரியுமா? அவர் அடுத்த படத்துக்கு அனுமதி கொடுத்துட்டார்!''

''இயேசப்பா! என்னது... அடுத்த படமா?''

''அதுக்கான கதையைத்தான் ராத்திரியும் பகலுமா எழுதிட்டு இருக்குறேன். இந்த முறை கே.எஸ்.ரவிக்குமார் ஸ்டைல்ல படம் எடுக்கப் போறேன். ஹீரோ நான்தான். படம் 'படையப்பா பார்ட் -2’ மாதிரி இருக்கும். எனக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருக்கு சார்!''

''சாருக்குக் கல்யாணம் ஆகிருச்சா?''

(முகம் சுருங்குகிறது) ''சார், நான் யூத்து... என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? என்னைப் பார்த்தா அங்கிள் மாதிரியா தெரியுது? என்னை மாதிரியே ஹாலிவுட்ல ஒரு இயக்குநர் கம் நடிகர் இருக்கார்னு கேள்விப்பட்டு இருக்கேன். அவர் பேர் தெரியலை. அவர் மாதிரி சாதிச்ச பின்னாடிதான் கல்யாணம் பண்ணிப்பேன். இது சத்தியம் சார்!''

No comments: