Tuesday, May 31, 2011

சர்வதேச விண்வெளி மையம்

12 ஆண்டுகளாக நடந்த சர்வதேச விண்வெளி மைய கட்டுமான பணி முடிந்தது!



ஹுஸ்டன் : கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த சர்வதே விண்வெளி மையத்தின் கட்டுமான பணி நேற்று இறுதி கட்டத்தை எட்டியது. விண்வெளி ஆய்வுக்காக பூமிக்கு மேலே 355 கி.மீ. தொலைவில் சர்வதே விண்வெளி மையம் கட்டும் முயற்சியில் 16 நாடுகள் ஈடுபட்டன. அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்கலங்களில் மாறி மாறி, பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இந்த பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வந்தது. இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரம் கிலோ எடையுள்ள ஹார்டுவேர் பொருட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இறுதி கட்டமாக 15 மீட்டர் நீளமுள்ள ரோபோ கிரேன் பொருத்தும் பணியை எண்டவர் விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் பின்கி மற்றும் சேமிடோப் ஆகியோர் நேற்று முடித்தனர். இத்துடன் விண்வெளி மையத்தின் மொத்த கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டன.

இத்தகவலை விண்வெளி மையத்திலிருந்து எண்டவர் விண்கல கமாண்டர் கெல்லி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சர்வதேச விண்வெளி மையத்தின் உள்கட்டமைப்பு தற்போது ஒரு போயிங் 747 ரக விமானம் அளவுக்கு பெரிதாக உள்ளது. மின்உற்பத்திக்காக வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் கால்பந்து மைதானம் அளவுக்கு பெரிதாக உள்ளது.

விண்வெளிமையத்தில் பணிகள் முடிந்து விட்டதால் எண்டவர் விண்கலம் நாளை பூமிக்கு புறப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில், வரும் புதன்கிழமை எண்டவர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி பயணத்தை முடிக்கும் எண்டவர் விண்கலம் மியூசியத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

அதன்பின் அட்லான்டிஸ் விண்கலம் ஜூலை 8ம் தேதி தனது கடைசி விண்வெளி பயணத்தை தொடங்குகிறது. நாசாவின் அணைத்து விண்கலங்களும் இந்தாண்டு மியூசியத்துக்கு செல்கின்றன. புதிய மாடல் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் நாசா தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த புதிய விண்கலம் விண்வெளி மையத்தின் சுற்றுவட்ட பாதையை தாண்டி வெகு தொலைவில் செல்லும் அளவுக்கு திறன்பெற்றதாக இருக்கும். அதுவரை ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம், நாசா வீரர்கள் விண்வெளி மையத்துக்கு சென்று வருவர்.

No comments: