Wednesday, April 6, 2011

கடுங்காப்பி-பிளாக் டீ

Picture
புதினா டீ

வழக்கமாக 5 பேருக்கு டீ போடுவது போல் போட்டு, டீ நன்கு கொதித்து, அதை இறக்கப் போகும் போது, அதில் சுத்தம் செய்து நன்கு கழுவிய புதினா இலை ஒரு கைப்பிடி, சிறிய கோலி அளவு நசுக்கிய இஞ்சி போட்டு, ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி மூடி வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டி

குடித்தால் களைப்பெல்லாம் பறந்து, புத்துணர்வு வரும். ஒருவருக்கு மட்டும் என்றால், ஆறேழு புதினா இலைகள், கொட்டைப்பாக்களவு இஞ்சி போடவும். புதினா எப்போதும் புதியதாக கிடைக்காது என்றால், நிறைய கிடைக்கும் போது வாங்கி சுத்தம் செய்து கழுவி, காயவைக்கவும். நன்கு காய்ந்தபின் பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு இறுக மூடி வைக்கவும். ஒருவருக்கான டீ போடுவது என்றால் கால் தேக்கரண்டி அளவும், 5 பேருக்கு என்றால், ஒரு தேக்கரண்டி அளவும் புதினா பொடி போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.

கிரீன் டீ

கிரீன் டீ உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது. கான்சர், ஆர்த்தரைடீஸ், இரத்தக் கொதிப்பு போன்றவற்றிற்கும் மருந்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது. உடல் எடை குறைய உதவுகிறது. தினமும் காலையில் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீயை ரொம்ப சூடாகவோ, ரொம்ப ஆறியோ குடிக்கக் கூடாது. 56 - 62 சென்டிகிரேட் வெப்பத்தில் குடிப்பது நல்லது. எந்த ஒரு பொருளுக்கும் பிளஸ்ஸும் உண்டு, மைனஸும் உண்டு. கிட்னி ப்ராப்ளம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கவும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். ஒரு நாளைக்கு 6 கப் டீக்கு மேல் குடிக்கக் கூடாது. ஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கக் கூடாது. அல்சர் தொந்திரவு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும். உணவின் இடையிலும் குடிக்கக் கூடாது.

கிரீன் டீ சாதாரண டீ போடுவது போல் போடக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது இறக்கி, ஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால், குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும். வடிகட்டி ஓரிரு சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது ரொம்ப நல்லது. குடிக்க கஷ்டமாக இருந்தால், தேன் கலந்தோ, சிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம். ரொம்ப துவர்ப்பது போல் இருந்தால், தூளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

பிளாக் டீ

சாதாரண டீத்தூளை மட்டும் கொதிக்க வைத்து, பால் சேர்க்காமல் வைப்பது தான் பிளாக் டீ. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு (சுமாராக 5 நிமிடம்) இறக்கி வடிகட்டினால் பிளாக் டீ ரெடி. இதனுடன் கால் மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு கட்டுப்படும். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் துவர்ப்பாக இருப்பது நல்லது. குடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தால், சிறிதளவு தேன் அல்லது சர்க்கரை சேர்க்கலாம். சீனாக்காரர்கள், ஜப்பானியர்கள் பிளாக் டீயைத்தான் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள்.

கொத்தமல்லி காஃபி

ஒரு டம்ளர் காஃபிக்கு ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு மேசைக்கரண்டி அளவு கொத்தமல்லி (தனியா) எடுத்து ஒன்றிரண்டாக நசுக்கி கொதிக்கும் தண்ணீரில் போடவும். கால் தேக்கரண்டி அளவு காஃபித்தூள் சேர்க்கவும். கொத்தமல்லி காஃபிக்கு வெல்லம் தான் நன்றாக இருக்கும். ஒரு எலுமிச்சை அளவு வெல்லத்தை தட்டிப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டினால், கொத்தமல்லி காஃபி ரெடி.

விரும்பினால் சிறிதளவு இஞ்சியோ, சுக்கோ தட்டிப் போடலாம். தலைவலிக்கு, பித்தத்திற்கு இந்தக் காஃபி நல்லது. இந்தக் காஃபி குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும். பால் சேர்க்கத் தேவையில்லை. பால் வேண்டும் என நினைப்பவர்கள் சிறிதளவு சேர்க்கலாம். அதிகம் பால் தேவையில்லை.
Picture
கடுங்காப்பி

கிராமத்துப் பக்கம் கடுங்காப்பி என்பார்கள். புதியதாக ஒன்றும் இல்லை. பால் சேர்க்காத கருப்பு காஃபி தான் கடுங்காப்பி!

ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து, ஒரு தேக்கரண்டி சாதாரண காஃபித்தூளைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். ஒரு எலுமிச்சை அளவு வெல்லம் சேர்த்து கரைந்ததும் இறக்கி, வடிகட்டினால் கடுங்காப்பி தயார்.

வெல்லம் சேர்த்தால் தான் சுவை அதிகம். சர்க்கரையும் சேர்க்கலாம். காஃபித்தூள் குறைவாகப் போட்டால் தான் காஃபி நன்றாக இருக்கும். இதுவும் தலைவலிக்கு நல்ல மருந்து தான். போதுமா காஃபி, டீ வகைகள்? அடுத்த கட்டத்திற்கு போகலாமா? அவசரம் வேண்டாம்.

No comments: