Tuesday, December 6, 2011

கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!

`சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை’ என்பது கிராமத்துப் பழமொழி. இதற்கு மாறாக சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்கனம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு பலரது வாழ்க்கை நிலை உள்ளது.

கையில் கிரிடிட் கார்டு இருந்தால் போதும்… கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறார்கள். அதில் பாதிக்குமேல் தேவையே இருக்காது. சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்து விட்டு, மாதக்கடைசியில் அவசர செலவுக்கு கையில் காசில்லாமல் திண்டாடிக் கொண்டி ருப்பார்கள்.

சிக்னமாக வாழ்வதற்கு என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம்?

* ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். உங்களால் வீட்டில் உள்ள துணிகளைத் துவைத்து விட முடியும் என்றால், வாஷிங்மெஷின் தேவையில்லைதான். பக்கத்து வீட்டில் வாங்கி விட்டார்களே அதனால் நாமும் வாங்கி விடுவோம் என்ற வீண் பகட்டுக்காக ஒருபோதும் வாங்காதீர்கள். அதுபோல கையினால் துவைத்து விடக்கூடிய ஒன்றிரெண்டு துணிகளுக்காக வாஷிங் மிஷினை பயன் படுத்தாதீர்கள். மின்சார செலவு எக்கச்சக்கமாகிவிடும். உங்கள் உடல் உழைப்பும் குறைந்து போகும்.

* கூடுமானவரை ஒன்றிரெண்டு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடும் `யூஸ் அண்ட் த்ரோ’ பொருட்களை வாங்கப் பழகிக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, முகச்சவரம் செய்யக் கூடிய ரேசர், எழுத உதவும் பால் பாயிண்ட் பேனா வகைகள். இவை விலை குறைவு. அதிக விலை கொடுத்து ஒரு பொருளை வாங்கி அதை பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஏன்?

* நீங்கள் வாங்கும் புத்தகங்களை உங்கள் நண்பர்களுக்கு படிக்கக் கொடுங்கள். அதுபோல் அவர்கள் வாங்கியிருப்பவற்றை நீங்கள் படியுங்கள். இதனால் ஒரே நேரத்தில் எல்லாப் புத்தகங்ளையும் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை.

* உங்கள் குழந்தைகள் உபயோகப்படுத்திய நோட்டுப்புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குவோரிடம் தூக்கிப்போட்டு விடாதீர்கள். அதில் எழுதாத சில பக்கங்கள் நிச்சயம் இருக்கக்கூடும். அந்த தாள்களை சேகரித்து தினசரி குறிப்புகள் எழுதுவதற்கான குறிப் பேடு தயாரியுங்கள். பால், லாண்டரி போன்ற அன்றாட செலவின கணக்குகளை எழுதி வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

* உங்களுக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்கள் மீது சுற்றி வைக்கப்பட்டிருக்கும் வண்ணக் காகிதங்களை பத்திரப்படுத்தி வையுங்கள். வேறு யாருக்காவது நீங்கள் பரிசு கொடுக்க நேரும்போது பரிசுப்பொருள் மீது அந்த வண்ணக்காகிதத்தை சுற்றி கொடுக்கலாம்.

* கடையில் ஒருசில பொருட்களே வாங்க வேண்டியிருந்தால், அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய பிளாஸ்டிக் கூடையை தூக்காதீர்கள். கூடையில் நிறைய இடம் இருக்கிறதே என்று தேவையில்லாத பொருட்களை வாங்கி கூடையை நிரப்பிக் கொண்டிருப்பீர்கள்.

* ரீ-சார்ஜபிள் பேட்டரியோடு, அதை ரீ-சார்ஜ் செய்யும் கருவியையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி பேட்டரி வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

* மின்சாரத்தை சேமிப்பது குறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தேவையில்லாமல் லைட் எரிவது கூடுதல் யூனிட்டுகளை உங்கள் கணக்கில் சேர்த்து விடும். மின் சிக்கனம் குறித்து அச்சடிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கரை வீட்டின் சுவிட்ச் போர்டில் ஒட்டி வையுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். உங்கள் வீடும் அதிக சூடு இல்லாமல் இருக்கும்.

* உங்கள் வீட்டின் ஜன்னல் மேற்குப்புறமாக இருந்தால் ஏராளமான செடிகொடிகளை வளருங்கள். இது கோடைகால வெப்பத்தை குறைக்கும். வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றுங்கள். பகல் நேரத்தில் ஊற்றினால் விரைவில் சூரிய ஒளியில் தண்ணீர் ஆவியாகி விடும். வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு, சமையல் செய்யும்போது கிடைக்கும் மிச்சம் மீதி தண்ணீரை ஊற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

* மாதம் ஒருமுறையாவது ஏர்கண்டிஷன் கருவியில் வைக்கப்பட்டிருக்கும் பில்டர், எலெக்ட்ரானிக் குக்கர், மிக்சி, பிரிஜ் போன்றவற்றை சுத்தமாக துடைத்து வையுங்கள்.

* நண்பர்களுக்கு பரிசுகள் வழங்குவதாக இருந்தால் சூரிய வெப்பத்தில் இயங்கக்கூடிய பேட்டரி சார்ஜர், லைட் போன்றவற்றை வழங்குங்கள். அதை பயன்படுத்தவும் சொல்லிக் கொடுங்கள்.

நன்றி-தினத்தந்தி

No comments: