Friday, August 26, 2011

வீடு திரும்பினோம்


ஒரு வழியாக வீட்டிற்குப் பத்திரமாகத் திரும்பினேன். என்னைப் போல் ஒரு ஆமையாக இருந்தால் தான் என் துன்பங்கள் உங்களுக்குப் புரியும்! கடலில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நீந்தி வந்தால் களைப்பாக இருக்காதா? அது மட்டுமல்ல! வரும் வழியில் நானும் என் நண்பர்களும் எத்தனை ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருந்தது தெரியுமா? பெரிய மீன் பிடிக்கும் கப்பல்கள் விரித்திருக்கும் வலையில் சிக்காமல் வருவதே பெரிய விஷயம்! தவிர, வரும் வழியில் பெரிய பெரிய திமிங்கலங்களை வேறு எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அவை பொதுவாக எங்களைத் தின்ன முயற்சிப்பதில்லை.
வீடு என்று நான் சொல்வது இந்த அழகான கடற்கரையிலுள்ள என் வீட்டைத் தான்! இந்த வீட்டை விட்டு வெளியேறி 25-30 ஆண்டுகள் ஆகியிருக்கும். என்னுடன் பத்து அல்லது பன்னிரெண்டு சகோதரர்களும், சகோதரிகளும் பிறந்தனர். பிறந்ததிலிருந்தே எங்களுக்கு சற்றுத் தொலைவில் தெரிந்த செல்ல மிகவும் ஆசையாக இருந்தது.
நானும், என் உடன் பிறந்தவர்களும் ஒரு நாள் எங்கள் வீட்டை விட்டு வெளியேறினோம். எங்கள் வீடு எப்படியிருக்கும் தெரியுமா? கடற்கரை மணலில் ஆழமாகத் தோண்டப்பட்ட குழிதான் என் வீடு! இந்தக் குழியைத் தோண்டியது என் தாய்! அதில் தன்னுடைய முட்டைகளைப் போட்டு விட்டுக் குழியை மூடி விட்டாள். நான் பிறந்தது முதல் என் தாயைப் பார்த்ததேயில்லை. எனக்கு அத்தை ஒருத்தி இருக்கிறாள். அவள் தான் எனக்கு எல்லா விஷயமும் சொன்னாள். தாய்மார்கள் முட்டைகளைக் குழி தோண்டி உள்ளே வைத்து விட்டு, மீண்டும் கடலுக்குள் சென்று விடுவார்களாம்!
என் அத்தை எனக்கு வாயிலே நுழையாத ‘உல்ரிட்' என்ற பெயரைச் சூட்டினாள். என் அத்தை எனக்குக் கூறியுள்ள பல விஷயங்களை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.


நான் பிறந்த போது மிக மிகக் குட்டியாக இருந்தேனாம்! ஆனால் இப்போது என்னைப் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. மூன்றடி அளவு வளர்ந்த என்னுடைய எடை இப்போது 60 கிலோ!
எங்களைக் காப்பாற்ற முனைந்த சில நல்ல மனிதர்களைப் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நான் பிறந்தது கோவா கடற்கரையில் என்று என் அத்தை சொன்னாள். நான் பிறப்பதற்குமுன், பல தீயவர்கள் எங்களைப் பிடித்துக் கொன்று இறைச்சியையும், முட்டையையும் விற்பனை செய்து வந்தார்கள். (எங்களைத் தின்றால் நன்றாகவா இருக்கும்?) ஆனால் நான் முன்னமே சொன்னது போல், மனிதர்களில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் கடற்கரை மணலில் முட்டைகள் உள்ள இடங்களைத் தேடியலைந்து கண்டு பிடித்து, அவற்றை ஜாக்கிரதையாக வெளியில் எடுத்துக் கொண்டு போய், தங்கள் வீட்டருகே மணலில் புதைத்து பாதுகாத்து வைத்துக் கொண்டனர். முட்டைகள் இருக்குமிடத்தைச் சுற்றி வேலியும் போடப்பட்டது. அப்படிப் பாதுகாத்த முட்டைகள் ஒன்றில்தான் நானும் இருந்தேன். அவ்வாறு அவர்கள் என்னைப் பத்திரப்படுத்தவில்லையெனில், இந்நேரம் ஏதாவது ஒரு உணவு விடுதியில் என் கதை முடிந்திருக்கும்.
பல ஆண்டுகள் கழித்து நான் இப்போது என் பிறந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். பிறந்து கடலில் இறங்கியது முதல் இந்நேரம் வரை எனக்குக் கடற்பயணம் தான்!
இங்கு வந்து பார்த்தால், எனக்கு முன்னமே பலர் இங்கு வந்திருந்தனர். அவர்கள் என்னை வரவேற்று எனக்கு பெரு மகிழ்ச்சி ஊட்டும் செய்தியையும் கூறினர். கோவா கடற்கரை முழுவதும் எங்களைப் போன்ற "ஆலிவ் ரிட்லி" ஆமைகளுக்கான பாதுகாப்பான இடமாக அரசாங்கம் அறிவித்து இருக்கிறது என்ற செய்திதான் அது! அதாவது, இனிமேல் அந்தக் கடற்கரையில் யாராவது எங்களுக்கு தீங்கிழைத்தால் அவர்கள் சட்டப் படி தண்டிக்கப்படுவார்கள். குற்றம் நடக்காமல் தடுக்க காவலும் போடப்பட்டிருக்கிறது.

அந்த செய்தியைக் கேட்டு நான் மகிழ்ச்சியுற்றாலும், பயணத்தின் போது நடந்த ஒரு துயர நிகழ்ச்சி அடிக்கடி என் மனக்கண் முன் தோன்றி என்னை வாட்டியது. பயணத்தில் என்னுடன் வந்த என் தோழி உல்வியா பாதி வழியில் ஒரு மீன் பிடிக்கும் படகு விரித்த வலையில் சிக்கிக் கொண்டாள். நாங்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் பதறினோம்! எங்களால் அவளை வலையிலிருந்து மீட்க முடியவில்லை.
அவள் பரிதாபமாக எங்கள் கண் முன்னே இறந்து போனாள். இறக்கும் முன் அவள் எங்களைப் பார்த்த பார்வை என் நேஞ்சில் இன்னும் ஈட்டியால் குத்துகிறது. "என்னால் முடியவில்லை! நீங்களாவது நலமாக இருங்கள்!" என்று எங்களுக்கு அவளுடைய கண்கள் மௌன மொழியில் கூறின.
நாங்கள் வந்த வேலையை இங்கு முடிக்க வேண்டும்! என்னுடைய வயிறு மிகவும் கனமாக இருக்கிறது. நான் கடற்கரையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து குழி தோண்ட வேண்டும் எதற்கென்று தெரியவில்லையா? நான் இடப்போகும் முட்டைகளை பத்திரமாக வைப்பதற்குத்தான்! ஏற்கெனவே இங்குள்ள நல்ல மனிதர்களுடன் சேர்ந்து நீங்களும் என் முட்டைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! -ஆஷிஷ் கோத்தாரி


No comments: