Wednesday, March 16, 2011

Life is Beautiful


யுத்தம்! ஒரு மனிதனின் வாழ்க்கையில், குடும்பங்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, உறவுகளைச் சிதைக்கிறது என்பதைக் கூறும் திரைப்படம். இரண்டாம் உலகப் போரின்போது நடைபெறும் கதை.

இது போல் எத்தனை கதைகள்...! எமது நாட்டிலும் இன்னும் எங்கெல்லாமோ..!


மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்ட கிய்டோ நகரத்தில் புத்தகக் கடை ஒன்றை வைப்பதற்காக தனது மாமா வீட்டிற்கு வருகிறான். வரும்வழியில், ஒருபண்ணை வீட்டில் தன்னை இளவரசர் என்று ஒரு சிறுமியிடம் அறிமுகப்படுத்தி தண்ணீர் குடிக்கும்போது, மேலே இருந்து வைக்கோல் போரில் விழும் தோராவைத் தாங்கிப் பிடிக்க இருவரிடையே ஒரு இனிய அறிமுகம்!

தோராவுக்கு திருமண ஏற்பாடுகள், கிய்டோ வேலை செய்யும் ஹோட்டலிலேயே நடைபெற, அது எதுவும் தெரியாமல் கிய்டோ வேலை செய்ய, புத்திசாலித்தனமாக மேசைக்குக் கீழே அவனைச் சந்தித்து தோரா விஷயத்தைச் சொல்ல இருவரும் அங்கிருந்து தப்பி ஓடுகிறார்கள்.


1939 ம் ஆண்டு. இரண்டாம் உலகப் போரின் கடைசி. இப்போது கிய்டோ தான் விரும்பியவாறு புத்தகக்கடை, தோரா, ஐந்து வயது மகன் ஜோஸ்வாவுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஜெர்மன் படைகள் வருகின்றன. கடைகளில் 'நாய்களுக்கும் யூதர்களுக்கும் அனுமதியில்லை' வாசகங்கள்.

ஜோஸ்வாவின் பிறந்தநாள். யூதர்களைக் கைது செய்து தனியிடத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். யூத இனத்தவனான கிய்டோ, மாமா, ஜோஸ்வாவையும் அழைத்துச்செல்ல, யூத இனத்தைச்சாராத தோரா இராணுவ அதிகாரிகளிடம் பேசிப் பார்த்து, பலனின்றி, தன்னையும் அழைத்துச் செல்லக்கோருகிறாள்.

எங்கு போகிறோம் என்றே தெரியாமல் எல்லோரும் இறுகிப் போய் இருக்க, ஜோஸ்வா கேள்வி கேட்டுக் கொண்டே வருகிறான். கிய்டோ வழக்கம் போல் நகைச்சுவையாக உனது பிறந்த நாள் என்பதால் ஜாலியாக சுற்றுகிறோம் எனக்கூற, ஜோஸ்வா நம்புகிறான். கிய்டோவும், மகனும் ஒரே இடத்தில். தோரா தனியாக பெண்கள் சிறையில்.


சிறிய அறைகளில் ஏராளமானோர் நெருக்கமாக, அடுக்கடுக்காக அலுமாரி போன்ற படுக்கைகள். ஜோஸ்வா இது பிடிக்காமல், வீட்டுக்குப் போகலாம் என்கிறான்.

அவனைச் சமாளிக்க கிய்டோ ' இது ஒரு விளையாட்டு, 1000 points எடுப்பவர்களுக்கு ஒரு கவச வாகனம் (tank ) பரிசு என்கிறான். விளையாட்டின் நிபந்தனைகளாக,

-'அம்மாவைப் பார்க்க வேண்டுமென்று கேட்கக்கூடாது.
-பிஸ்கட்,ஸ்நாக்ஸ் கேட்கக் கூடாது.
-வீட்டுக்குப் போகவேண்டுமென்று கேட்கக்கூடாது' என்கிறான்.

ஜோஸ்வா அதை நம்புகிறான்.


ஒருநாள் 'குளிக்க' அழைக்கும்போது போகாமல் அறையினுள் ஒளிந்து கொள்கிறான் ஜோஸ்வா. 'குளிக்க' என்று , விஷவாயுவால் கொல்வதைக் கூறுகிறார்கள். வீட்டிலும் விளையாட்டாக அப்படி அடிக்கடி தன்னை மறைத்துக் கொள்ளும் ஜோஸ்வா, இயல்பாகவே ஒளிந்து தப்பித்துக் கொள்கிறான்.


போர் முடிவுக்கு வரும் காலப்பகுதி. முகாமில் எல்லோரையும் கொன்று இப்போது சொற்பமானவர்களே எஞ்சியிருகிறார்கள். நேச நாட்டுப் படையினர் அருகில் வந்து விட்டார்கள். பின்வாங்கிச் செல்ல ஆயத்தமாகும் ஹிட்லரின் படைகள் அவசரமாக எஞ்சியிருப்பவர்களைக் கூட்டிச்சென்று கொல்கிறார்கள்.

இறுதியில் தோராவையும் அழைத்துச்செல்ல, இப்போது அவளைக்காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தப்பிக்க முயற்சி செய்யும் கிய்டோ தாங்கள் தங்கியுள்ள கட்டடத்துக்கு வெளியே வந்து அங்குள்ள ஒரு உறுதியான பெட்டியைக் காட்டி, அதனுள் ஜோஸ்வாவை ஒளிந்து கொள்ளச்சொல்லி, இன்னும் 60 points தான் தேவை என்றும், யார் கண்ணிலும் படாமல், பொறுமையாக எந்த நடமாட்டமும் இல்லாதவரை திறக்காமல் இருந்தால், கவச வாகனம் கிடைக்கும் எனக் கூற ஜோஸ்வாவும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறான்.

கிய்டோ அங்கிருந்து தோரா தங்கியுள்ள முகாமிற்கு செல்கிறான். அவள் காப்பாற்றப் பட்டாளா ?


படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நகைச்சுவையாகவே நகர்கிறது..சோகம் கூட.

-கிய்டோ, தோராவின் காதல் காட்சிகள்,

-வதைமுகாமில் கைதிகளுக்கான ஒழுங்கு விதிகளைக் கூற வரும் ஜெர்மன் அதிகாரிகள் மொழி பெயர்த்துச் சொல்ல ஒருவரை அழைக்க, கிய்டோ ஓடிவந்து, அவர்கள் சொல்வதை அப்படியே மாற்றி தனது மகனுக்குச் சொன்ன விளையாட்டின் விதிமுறைகளாகக் கூறுகிறான். அதிகாரிகள் போனபின் மற்றவர்கள் குழம்ப, தன்னை ஒன்றும் கேட்க வேண்டாமென்று கூறி விடுகிறான்.

-குளிக்க அழைக்க, அது நச்சு வாயுக் குளியல் என்பதை அறியாத கிய்டோவின் மாமா தனது மேற்சட்டையைக் கழற்றிவிட்டு வருகிறார். குளியலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வரும் பெண் அதிகாரி, தடுக்கி விழப்பார்க்க, அவர் தாங்கி, ' பார்த்து ' எனக்கூறும் நெகிழ்வான காட்சி.

-இறுதியில் நேச நாட்டுப் படை வீரன் ஒருவன் சிறுவனைத் தன்னுடன் கவச வாகனத்தில் தூக்கி வைத்துக்கொள்ள, அது விளையாட்டில் தான் வென்றதற்கு கிடைத்த பரிசாகவே எண்ணி மகிழ்ந்து கொள்ளும் ஜோஸ்வா.

-விசாரணைகளுக்காக அழைத்துச்செல்லப்படும் போதெல்லாம் ஜோஸ்வா பார்ப்பதால் அவன் முன்னிலையில் கைகளை வீசி நகைச்சுவையாக நடந்து செல்லும் கிய்டோ, இறுதியில் தன்னைக் கொல்ல அழைத்துச்செல்லும் போதும், ஜோஸ்வா பெட்டிக்குள், மறைந்திருந்து பார்ப்பதைக் கவனித்ததும், அவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு அதேபோல் கைகளை வீசி நடக்கும் நெகிழ்வான காட்சி.

இப்படி ஏராளமான, மனதை வருடும் காட்சிகள், பின்னணி இசையுடன் 1997 இல் வெளிவந்தது.

இயக்கம் - Roberto Benigni அவரே கிய்டோவாக நடிக்க, மனைவி தோராவாக.
மொழி - Italian, German

விருதுகள்-
Academy Award for Best Foreign Language Film 1998 - Best actor
best dramatic score Grand Prix, Cannes 1998
European Film Award For Best European Film 1998

Friday, March 11, 2011

மதத்தின் ரகசியம்


* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித குலத்திற்கு
ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.
* உடலையும் புலன்களையும் வழிநடத்தும் போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* சிறு சிறு ஆசைகளை அனுபவித்துத்தீர்க்க வேண்டும். பெரிய ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டுவிட வேண்டும்.
* இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள்.
* மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.
* ஒருவன் தன்னை வெறுக்கத் துவங்கிவிட்டால், அவன் கீழ்நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள்.
* எந்த வேலையாக இருந்தாலும், அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி. எந்த வேலையும் அற்பமானதல்ல.

-விவேகானந்தர்

The Song of Sparrows


அத்தியாவசிய பொருட்கள் எல்லாமே ஆடம்பர பொருட்களின் விலையாகிவிட்ட பிறகு, விரும்பும் பொருளை வாங்க எப்படியாவது பணம் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நேர்மை, மனித நேயம் விட்டு அதிக விலை சொல்லி விற்றால் தான் தங்களுக்கு தேவையான பொருளை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்த ’எப்படியாவது’ என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கும் மனிதனை விலைவாசி கொலை செய்வதை பார்த்துக் கொண்டுயிருக்கிறோம். வாழ்நாள் தேவை எப்படி ஒரு மனிதனை மாற்றுகிறது. அவனை மீண்டும் பழைய பாதை எப்படி திரும்பிகிறான் என்று சொல்லும் கதை தான் ’The Song of Sparrows’.



ஆஸ்ட்ரிட்ச் பறவைகளை பராமரிக்கும் வேலை செய்கிறான் கரீம். ஒவ்வொரு ஆஸ்ட்ரிட்ச் பறவையும் தன் குழந்தையை போல் பார்த்துக் கொள்கிறான். வேலை செய்யும் போது கரீமின் நண்பன் அவனை மனைவி அழைத்ததாக கூறுகிறான். வீட்டுக்கு சென்ற கரீம் தன் மகள் கேளாத கருவி நீரில் விழுந்ததை மகனும், அவனது நண்பர்களும் தேடுவதை பார்க்கிறான். அதை பார்த்ததும் கரீமும் தேடுகிறான். அப்போது கரீமின் மகன் இங்கு மீன் வளர்க்கலாம் என்று யோசனை சொல்கிறான். கழிவு நீர் செல்ல அடைக்கப்பட்டதாகவும், அதை சுத்தம் செய்ய அதிக செலவாகும் என்று சொல்லி கரீம் மறுக்கிறான். தன் மகளின் காது கேளாத கருவி அவளுக்கு பொருத்துகிறான். ஆனால், அது உடைந்ததால் அவளுக்கு காது கேட்டவில்லை.

அந்த கருவி சரி செய்ய முடியாது, புது கருவி தான் வாங்க வேண்டும் என்று உள்ளூர் விற்பனையாளர் சொல்கிறான். இந்த சமயத்தில் அவன் பாதுகாப்பில் இருக்கும் ஆஸ்ட்ரிட்ச் பறவை ஒன்று தப்பி ஓட, கரீமின் வேலை பரிபோகிறது.

அடுத்த மாதம் தேர்வு தொடங்க போகும் மகளுக்கு காது கேளாத கருவி வாங்க நகரத்துக்கு போகிறான். அதை சோதித்தவரும் புதிதாக வாங்க வேண்டும் என்கிறார். அதற்காக பதிவு செய்த்தால் மூன்று, நான்கு மாதம் காத்திருக்க வேண்டும். வெளி சந்தையில் வாங்கினால் 3,50,000 தோமன் செலவாகும் என்கிறார்.

என்ன செய்யலாம் என்று விழி பிதுங்க தவிக்கும் போது ஒருவர் திடீர் என்று அவன் இரு சக்கிர வாகனத்தின் பின் அமர்ந்து ஒரு இடத்திற்கு போக சொல்கிறான். கரீமும் அவனை விடுகிறான். அந்த மனிதன் விட்டதற்கு கரீமுக்கு பணம் தருகிறான். அன்றில் இருந்து ‘பைக் டாக்ஸி’ தொழில் நடத்துகிறார் கரீம். ஒருவர் மட்டுமே ஏற்றி சென்று அவர்கள் சொல்லும் இடத்தில் விட வேண்டும். சில சமயம் பொருட்களை சுமந்து செல்ல வேண்டும். அதில் வரும் வருமானத்தில் வீட்டுக்கு உணவு பொருட்களை வாங்கி செல்கிறான். நகரத்தில் தேவையில்லை என்று வீசப்பட்ட டி.வி ஆண்டனாவை தன் வீட்டு உபயோகத்திற்காக எடுத்து வருகிறான். கிராமத்தில் தன் வீட்டில் மட்டும் ஆண்டனா டி.வி இருப்பதை பெருமையாக நினைக்கிறான்.


பொருட் தேவை, பணம் சம்பாதிக்கும் ஆசை அவனிடம் இருக்கும் நேர்மையும், பிறருக்கு உதவும் குணம் மாறுகிறது. நகரத்தில் இருந்து தேவையில்லாத வீசப்பட்ட பொருட்களை தன் வீட்டுக்கு எடுத்து வருகிறான். அப்படி கரீம் எடுத்து வந்த ஒரு கதவை கரீம்மின் மனைவி பக்கத்து வீட்டில் உதவியாக கொடுக்க, அதை கரீம் மீண்டும் எடுத்து வருகிறான். தன் வண்டியில் வந்தவர் தவறுதலாக 10,000 தோமன் அதிகமாக கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமல் தயங்கியப்படி தன்னுடன் வைத்துக் கொள்கிறான். ஃபிரிட்ஜ் டெலிவரி கொடுக்க சொன்னவரை பின் தொடர தவறவிட்டதும், அதை விற்க முயற்சிக்கிறான்.

தன் மகனும், அவனது நண்பர்களும் வீட்டு அருகில் நீர் தேக்கத்தை சுத்தம் செய்வதை பார்த்து அவர்களை அதட்டி விரட்டுகிறான். ஆனால், அந்த சிறுவர்கள் நீர் தேக்கத்தை சுத்தம் செய்து, மீன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். அதற்கு தங்கள் தோட்டத்தில் வளர்த்த பூக்களை விற்பனை செய்து பணம் சேர்க்கிறார்கள். தன் மகள் உட்பட சாலையில் பூ விற்பதை பார்த்த கரீம் கோபப்படுகிறான். தன் மகன் மீது இருக்கும் கோபத்தில் நீர் தேக்கத்தை சுற்றி இருக்கும் சுவர்களை உடைக்க செல்கிறான்.

கழிவு நீ தேங்கியிருந்த இடத்தில் சுத்தமான நீர் இருக்கிறது. பாம்புகள் தங்கியிருந்த இடத்தில் குருவிகள் கூடு கட்டி முட்டை போட்டிருந்தது. அதை பார்த்ததும் உடைக்காமல் கரீம் மௌனமாகிறான்.

அவன் நகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருட்களை சுத்தம் செய்யும் போது எல்லா பொருளும் அவன் மீது விழுந்து, பலத்த காயம் ஏற்ப்படுகிறது. அவனால் நடக்கக் கூட முடியாத நிலைமையில் தள்ளப்படுகிறான். வேலைக்கு செல்ல முடியாத அவனுக்கு அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் உதவுகிறார்கள்.

நகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருளை விற்பனை செய்ய உறவினர் ஒருவர் உதவி செய்து, அந்த பணத்தை கரீம் குடும்பத்திற்கு கொடுக்கிறார். தேடி தேடிக் கொண்டு வந்த எல்லா பொருளும் ஒரே நாளில் அவனை விட்டு பிரிந்தது. அதே சமயம் அவனுக்கு உதவி செய்யும் மனிதர்கள் இருப்பதை பார்க்கிறான்.

கரீமின் மகனும், அவன் நண்பர்களும் பூக்கள் விற்ற பணத்தை பக்கெட் முழுக்க மீன்களை வாங்கிறார்கள். கரீமும், அவனது உறவினர் ஒருவரும் பூ தொட்டியோடு, மீன் பக்கெட்டையும் ஏற்றி ஊருக்கு வந்துக் கொண்டு இருக்கும் போது, பக்கெட் உடைந்து தண்ணீர் கீழே சிந்துவதை சிறுவர்கள் பார்க்கிறார்கள். மீன்களை காப்பாற்ற பக்கெட் மேல் இருக்கும் பூ தொட்டிகளை தூக்கி வெளியே ஏறிந்து, பக்கெட்டை வெளியே எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் முயற்சி தோல்வியில் முடிகிறது. வண்டியில் ஊருக்கு திரும்பும் போது ஒரு மீனோடு வருகிறார்கள். மீன்களை காப்பாற்றும் போது அடிப்பட்ட தன் மகன் கைக்கு கட்டு போடுகிறான். அவர்களை மகிழ்விக்க கரீம் பாட்டு பாடுகிறான். வாங்கி வந்த மீன்னை கரீமின் மகன் ஆசையாய் நீர்தொட்டியில் விடுகிறான்.


அடிப்பட்ட தன் காலில் இருக்கும் மாவு கட்டில், படம் வரைய கரீமின் மகன், மகள் சண்டைப்போடும் போது அவர்களுக்கு தன் காலில் இரண்டு இடம் கொடுத்து வரைய சொல்கிறான். விழிக்கும் போது ஒரு குருவி அவன் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் தவிக்கிறது. அந்த குருவிக்கு உதவ உட்கார்ந்தபடி நகர்ந்து கதவை திறக்கிறான். குருவி பறந்து செல்கிறது. இதுவரை அடைப்பட்ட அவன் மனமும் திறக்கப்படுகிறது. அப்போது கரீமின் நண்பன் ஓடிப்போன ஆஸ்ட்ரீட்ச் பறவை திரும்பி வந்துவிட்டதாக சொல்கிறான். கரீம் இழந்த வேலை திரும்பி கிடைக்கிறது. மீண்டும் பழைய கரீம் சிரித்தப்படி இயற்கையை ரசித்துக் கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டு செல்வது போல் படம் முடிகிறது.

உழைக்காமல் கிடைக்கும் பணம் வேறு வழியில் நம்மை விட்டு பிரிந்துவிடும் என்பதை இந்த படம் அழமாக உணர்த்துகிறது.

வயதான பிறகு வாழ்க்கைக்காக போராடும் சமயத்தில் உலகத்தில் இருந்து கற்பதை விட சிறுவர்களிடம் நாம் கற்பது அதிகமாக உள்ளது. நாம் வாழ்க்கையில் எவ்வளவு இழந்து இருக்கிறோம் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்துபவர்கள் அவர்கள் தான். நாம் கடந்து வந்த நினைவு சின்னங்களை நூலாக தொகுப்பவர்கள் சிறுவர்கள். இந்த படத்தில் பணம், பொருள்களை விட அன்பு முக்கியம் என்று கரீம் தன் மகனிடம் இருந்து கற்றுக் கொள்கிறான்.


எத்தனையோ வீட்டில் சிறுவர்கள் மறைமுகமாக பெரியவர்களுக்கு கற்றுக் கொடுகிறார்கள். சிலரது ஈகோ அவர்களை கற்றுக் கொள்ள தடுக்கிறது. ஈகோ பார்க்காதவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.


எழுத்து -குகன் பக்கங்கள்

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 105:
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
கலைஞர் உரை:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
மு.வ உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
கலைஞர் உரை:
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.
மு.வ உரை:
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
சாலமன் பாப்பையா உரை:
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
கலைஞர் உரை:
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
மு.வ உரை:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
கலைஞர் உரை:
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
மு.வ உரை:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.