Showing posts with label அம்புலிமாமா. Show all posts
Showing posts with label அம்புலிமாமா. Show all posts

Friday, August 26, 2011

நகைகளைத் தின்ற எலி

பல ஆண்டுகளுக்குமுன், லூனி எனும் நதிக்கரையில் அமைந்திருந்த தானி எனும் கிராமத்தில் லட்சுமணன், மனோகர் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வந்தனர். லட்சுமணனுடைய மனைவி காமினி, மனோகரின் மனைவி பாய் ஆகிய இருவரும் திருமணத்திற்குப் பின் நெருங்கிய தோழிகளாயினர். லட்சுமணனும், அவன் மனைவியும் நேர்மையானவர்கள். ஆனால் மனோகர் தம்பதிக்குப் பேராசை அதிகம் இருந்தது.

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யாததால், கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டது. லட்சுமணனுடைய தொழில் விவசாயத்தைச் சார்ந்ததாக இருந்ததால், அவனுடைய வருமானம் பாதிக்கப்பட்டது. அதனால் தன் மனைவியிடம் ஆலோசித்த பின், அவன் வேறொரு கிராமத்திற்குச் சென்று தொழில் செய்யத் தீர்மானித்தான்.

கிராமத்தை விட்டுச் செல்வதற்குமுன் தங்களிடமுள்ள நகைகளை தன் நண்பன் மனோகரிடம் கொடுத்து வைக்க லட்சுமணன் எண்ணினான். இதை தன் மனைவி காமினியிடம் கூறியதும், அவளும் அதற்கு சம்மதித்தாள். அவள் தன் நகைகளை மூட்டையாகக் கட்டி, மனோகரின் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். கூடவே, லட்சுமணனும் சென்றான். அப்போது மனோகர் வீட்டில் இல்லை. தங்களை வரவேற்ற அவன் மனைவி பாயிடம், "நாங்கள் மலர்தேஷ் கிராமத்திற்குச் சென்று வசிக்கத் தீர்மானம் செய்திருக்கிறோம். இங்கு பஞ்சம் நீங்கியபிறகு திரும்பி வருவோம். அதுவரை என்னுடைய தங்க நகைகளை உங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்ல விரும்புகிறேன்" என்றாள்.

அதற்குள் வெளியூர் சென்றிருந்த மனோகர் திரும்பி வந்துவிட, விஷயம் கேட்டபின் அவன் லட்சுமணனிடம் "நண்பா! தாராளமாக உன் நகைகளை எங்களிடம் விட்டுச் செல்லலாம். நீ வரும் வரை அதைப் பத்திரமாக வைத்துஇருப்போம்" என்று உறுதி கூறினான்.

பிறகு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்ட லட்சுமணனும், காமினியும் புதிய கிராமத்தை நோக்கிப் பயணம் தொடங்கினர். அதை அடைந்த பிறகு, லட்சுமணன் வியாபாரம் செய்யத் தீர்மானித்து ஒரு பெரிய வீட்டை வாங்கி, அதன் முன் புறத்தைக் கடையாகவும், பின்புறத்தைத் தன் இருப்பிடமாகவும் மாற்றிக் கொண்டான். வியாபாரத்த்தில்

லட்சுமணன் முதல் ஆண்டிலேயே வெற்றியும் கண்டான். தானியிலிருந்து வந்த சிலர் மூலமாகத் தங்கள் பழைய கிராமத்தில் பஞ்சம் நீங்கி விட்ட செய்தியைத் தெரிந்து கொண்ட லட்சுமணன் கணிசமான லாபம் கிடைத்தபிறகு ஊர் திரும்ப எண்ணினான். அவன் நினைத்தவாறே, இரண்டாவது ஆண்டில் அவனுடைய

வியாபாரம் மிகச் செழிப்பாக நடந்தது. அவன் எதிர்பார்த்த லாபமும் கிட்டியது. ஆகையால் லட்சுமணன் தன் கடையை விற்றுவிட்டு, தன் மனைவியுடன் தானி கிராமத்திற்குத் திரும்பினான்.

லட்சுமணன் திரும்பி வந்த செய்தி மனோகருக்குக் கவலையை அளித்தது. ஏனென்றால், தன்னிடம் லட்சுமணன் கொடுத்துச் சென்ற நகைகளைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள மனப்பால் குடித்த மனோகர், லட்சுமணன் திடீரென திரும்பியதால் ஏதாவது சாக்கு சொல்லி நகைகளைத் தன்னிடமே வைத்துக்கொள்ளத் திட்டமிட்டு அதை தன் மனைவியிடமும் விளக்கினான். லட்சுமணன் ஊர் திரும்பியதும், மனோகர் தம்பதி தங்கள் நண்பர்களை சந்திக்கச் செல்லவேயில்லை.

ஒருநாள் கழித்து, காமினியே மனோகர் வீட்டைத் தேடி வந்தாள். மனோகர் அப்போது வீட்டில் இல்லை. மனோகரின் மனைவியிடம், "பாய்! எனது தங்க நகைகளைத் திருப்பித் தருகிறாயா?" என்று கேட்டாள் காமினி.
உடனே, பாய் ‘கோ’வென்று கதறி, கண்ணீர் வடித்தாள்.

‘ஐயோ! நடந்ததை நான் எப்படிச் சொல்வேன், காமினி!" என்று புலம்பிய பாய், தொடர்ந்து, "அத்தனை நகைகளையும் எலி தின்று விட்டது. அதை உங்களிடம் எந்த முகத்தை வைத்துக் கொண்ட சொல்வது என்ற வமானத்தினால்தான், நாங்கள் இதுவரை உங்களை சந்திக்க வரவில்லை" என்று நாடகமாடினாள்.

காமினிக்கு ‘பகீர்’ என்றது. கணவனும், மனைவியும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது என்று புரிந்து கொண்ட காமினி பதிலேதும் சொல்லாமல் மௌனமாக வீடு திரும்பினாள். தன் கணவனிடம் மனோகர் தம்பதியின் நயவஞ்சகத்தைப் பற்றிக் கூறி அழுத காமினியை, லட்சுமணன் சமாதானம் செய்தான்.

ஒருநாள் லட்சுமணன் மனோகரைத் தேடிச் சென்றான். தங்களுடைய நகைகளைப் பற்றி வந்த நாள் முதல் லட்சுமணன் எதுவும் கேட்காததால், தாங்கள் கூறிய காரணத்தை அவன் நம்பிவிட்டான் என்று எண்ணிய மனோகர் அவனை உற்சாகமாக வரவேற்றான்.

"எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று லட்சுமணன் கேட்டதும், "சொல் நண்பா! என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்" என்றான் மனோகர்.

"காமினிக்கு உடல் நலம் சரியில்லை. எனக்கு வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது. அவளுக்குத் துணையாக உன் மகனை அனுப்பி வைக்க முடியுமா?" என்று லட்சுமணன் கேட்டான்.

உடனே எந்தவிதத் தயக்கமுமின்றி தன் பத்து வயது மகனை மனோகர் அனுப்பி வைக்க சம்மதித்தான். அவனை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்ற லட்சுமணன் தன் உறவினர் வீட்டிற்குச் சென்றான். அங்கேயே அந்த சிறுவனை விட்டுவிட்டு தான் மட்டும் ஊர் திரும்பினான். உறவினர் வீட்டில் தன் வயதையொட்ட பிள்ளைகள் இருந்ததால், மனோகரின் மகன் அவர்களுடன் உற்சாகமாக விளையாடத் தொடங்கினான்.

இரண்டு, மூன்று நாள்கள் சென்றும் தம்பதி லட்சுமணன் திருப்பிஅனுப்பாததால் கவலைகொண்ட மனோகர் தம்பதி லட்சுமணன் வீட்டிற்குச் சென்றனர். இப்போதுகாமினி அவர்களைக் கண்டதும் அழத் தொடங்கினாள்.

"நடந்ததை என் வாயினால் எப்படிச் சொல்வேன்? வரும் வழியில் உங்கள் பிள்ளையை ஒரு கழுகு தூக்கிச் சென்று விட்டது. ஆகையால் நாங்கள் இதுவரை உங்களைச் சந்திக்க வரவில்லை" என்று காமினி நாடகமாடினாள்.
பயங்கரக் கோபம் கொண்ட மனோகர் தம்பதி நேராக கிராமத் தலைவரிடம் சென்று புகார் செய்தனர். கிராமத் தலைவரும் விசாரணை செய்வதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு லட்சுமணன் வீட்டை அடைந்தார்.
"என்னப்பா லட்சுமணா? மனோகரின் பிள்ளையை கழுகு தூக்கிச் சென்று விட்டதாகக் கூறினாயாமே!" என்று கிராமத்தலைவர் கேட்டார்.

"ஐயா! தங்க நகைகளை எலி தின்றது என்பது உண்மையானால், பத்து வயது பிள்ளையை கழுகு தூக்கிச் சென்றது என்பது மட்டும் ஏன் உண்மையாக இருக்கக்கூடாது?" என்று லட்சுமணன் எதிர்க்கேள்வி கேட்டான். "நகைகளை எலி தின்றதா? என்னப்பா சொல்கிறாய்?" என்று தலைவர் வியப்புடன் கேட்க, நடந்த விஷயத்தை லட்சுமணன் அவரிடம் விளக்கினான்.

உடனே பாய், "ஐயா! நாங்கள் சொன்னது பொய்தான்! அவர்களுடைய நகைகள் எங்களிடம் பத்திரமாக உள்ளன. அவற்றை இப்போதே திருப்பித் தந்து விடுகிறேன். தயவு செய்து என் மகனைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள்" என்று கெஞ்சினாள்.

"அவர்களுடைய மகன் என் உறவினர் வீட்டில் பத்திரமாக இருக்கிறான். என்னுடைய நகைகள் கிடைத்ததும், நானும் அவனைத் திருப்பி அனுப்புகிறேன்" என்ற லட்சுமணன் மனோகரை நோக்கி "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்ற பழமொழியின் பொருளை இப்போதாவது புரிந்து கொள் நண்பா!" என்று கூறினான்.


வீடு திரும்பினோம்


ஒரு வழியாக வீட்டிற்குப் பத்திரமாகத் திரும்பினேன். என்னைப் போல் ஒரு ஆமையாக இருந்தால் தான் என் துன்பங்கள் உங்களுக்குப் புரியும்! கடலில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நீந்தி வந்தால் களைப்பாக இருக்காதா? அது மட்டுமல்ல! வரும் வழியில் நானும் என் நண்பர்களும் எத்தனை ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருந்தது தெரியுமா? பெரிய மீன் பிடிக்கும் கப்பல்கள் விரித்திருக்கும் வலையில் சிக்காமல் வருவதே பெரிய விஷயம்! தவிர, வரும் வழியில் பெரிய பெரிய திமிங்கலங்களை வேறு எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அவை பொதுவாக எங்களைத் தின்ன முயற்சிப்பதில்லை.
வீடு என்று நான் சொல்வது இந்த அழகான கடற்கரையிலுள்ள என் வீட்டைத் தான்! இந்த வீட்டை விட்டு வெளியேறி 25-30 ஆண்டுகள் ஆகியிருக்கும். என்னுடன் பத்து அல்லது பன்னிரெண்டு சகோதரர்களும், சகோதரிகளும் பிறந்தனர். பிறந்ததிலிருந்தே எங்களுக்கு சற்றுத் தொலைவில் தெரிந்த செல்ல மிகவும் ஆசையாக இருந்தது.
நானும், என் உடன் பிறந்தவர்களும் ஒரு நாள் எங்கள் வீட்டை விட்டு வெளியேறினோம். எங்கள் வீடு எப்படியிருக்கும் தெரியுமா? கடற்கரை மணலில் ஆழமாகத் தோண்டப்பட்ட குழிதான் என் வீடு! இந்தக் குழியைத் தோண்டியது என் தாய்! அதில் தன்னுடைய முட்டைகளைப் போட்டு விட்டுக் குழியை மூடி விட்டாள். நான் பிறந்தது முதல் என் தாயைப் பார்த்ததேயில்லை. எனக்கு அத்தை ஒருத்தி இருக்கிறாள். அவள் தான் எனக்கு எல்லா விஷயமும் சொன்னாள். தாய்மார்கள் முட்டைகளைக் குழி தோண்டி உள்ளே வைத்து விட்டு, மீண்டும் கடலுக்குள் சென்று விடுவார்களாம்!
என் அத்தை எனக்கு வாயிலே நுழையாத ‘உல்ரிட்' என்ற பெயரைச் சூட்டினாள். என் அத்தை எனக்குக் கூறியுள்ள பல விஷயங்களை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.


நான் பிறந்த போது மிக மிகக் குட்டியாக இருந்தேனாம்! ஆனால் இப்போது என்னைப் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. மூன்றடி அளவு வளர்ந்த என்னுடைய எடை இப்போது 60 கிலோ!
எங்களைக் காப்பாற்ற முனைந்த சில நல்ல மனிதர்களைப் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நான் பிறந்தது கோவா கடற்கரையில் என்று என் அத்தை சொன்னாள். நான் பிறப்பதற்குமுன், பல தீயவர்கள் எங்களைப் பிடித்துக் கொன்று இறைச்சியையும், முட்டையையும் விற்பனை செய்து வந்தார்கள். (எங்களைத் தின்றால் நன்றாகவா இருக்கும்?) ஆனால் நான் முன்னமே சொன்னது போல், மனிதர்களில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் கடற்கரை மணலில் முட்டைகள் உள்ள இடங்களைத் தேடியலைந்து கண்டு பிடித்து, அவற்றை ஜாக்கிரதையாக வெளியில் எடுத்துக் கொண்டு போய், தங்கள் வீட்டருகே மணலில் புதைத்து பாதுகாத்து வைத்துக் கொண்டனர். முட்டைகள் இருக்குமிடத்தைச் சுற்றி வேலியும் போடப்பட்டது. அப்படிப் பாதுகாத்த முட்டைகள் ஒன்றில்தான் நானும் இருந்தேன். அவ்வாறு அவர்கள் என்னைப் பத்திரப்படுத்தவில்லையெனில், இந்நேரம் ஏதாவது ஒரு உணவு விடுதியில் என் கதை முடிந்திருக்கும்.
பல ஆண்டுகள் கழித்து நான் இப்போது என் பிறந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். பிறந்து கடலில் இறங்கியது முதல் இந்நேரம் வரை எனக்குக் கடற்பயணம் தான்!
இங்கு வந்து பார்த்தால், எனக்கு முன்னமே பலர் இங்கு வந்திருந்தனர். அவர்கள் என்னை வரவேற்று எனக்கு பெரு மகிழ்ச்சி ஊட்டும் செய்தியையும் கூறினர். கோவா கடற்கரை முழுவதும் எங்களைப் போன்ற "ஆலிவ் ரிட்லி" ஆமைகளுக்கான பாதுகாப்பான இடமாக அரசாங்கம் அறிவித்து இருக்கிறது என்ற செய்திதான் அது! அதாவது, இனிமேல் அந்தக் கடற்கரையில் யாராவது எங்களுக்கு தீங்கிழைத்தால் அவர்கள் சட்டப் படி தண்டிக்கப்படுவார்கள். குற்றம் நடக்காமல் தடுக்க காவலும் போடப்பட்டிருக்கிறது.

அந்த செய்தியைக் கேட்டு நான் மகிழ்ச்சியுற்றாலும், பயணத்தின் போது நடந்த ஒரு துயர நிகழ்ச்சி அடிக்கடி என் மனக்கண் முன் தோன்றி என்னை வாட்டியது. பயணத்தில் என்னுடன் வந்த என் தோழி உல்வியா பாதி வழியில் ஒரு மீன் பிடிக்கும் படகு விரித்த வலையில் சிக்கிக் கொண்டாள். நாங்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் பதறினோம்! எங்களால் அவளை வலையிலிருந்து மீட்க முடியவில்லை.
அவள் பரிதாபமாக எங்கள் கண் முன்னே இறந்து போனாள். இறக்கும் முன் அவள் எங்களைப் பார்த்த பார்வை என் நேஞ்சில் இன்னும் ஈட்டியால் குத்துகிறது. "என்னால் முடியவில்லை! நீங்களாவது நலமாக இருங்கள்!" என்று எங்களுக்கு அவளுடைய கண்கள் மௌன மொழியில் கூறின.
நாங்கள் வந்த வேலையை இங்கு முடிக்க வேண்டும்! என்னுடைய வயிறு மிகவும் கனமாக இருக்கிறது. நான் கடற்கரையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து குழி தோண்ட வேண்டும் எதற்கென்று தெரியவில்லையா? நான் இடப்போகும் முட்டைகளை பத்திரமாக வைப்பதற்குத்தான்! ஏற்கெனவே இங்குள்ள நல்ல மனிதர்களுடன் சேர்ந்து நீங்களும் என் முட்டைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! -ஆஷிஷ் கோத்தாரி


கெட்டிக்கார மருமகள்


ராமநாதபுரத்தில் வசித்து வந்த ஒரு பணக்கார வியாபாரிக்கு பாக்கியநாதன் என்று ஒரு மகன் இருந்தான். சிறு வயது முதலே அவனுக்கு சாமர்த்தியம் என்பது சிறிதுமில்லை.
"இவனை நினைத்தால் எனக்குக் கவலையாக இருக்கிறது. இவன் எதிர்காலத்தில் எப்படி காலந்தள்ளுவான்?" என்று வியாபாரி தன் மனைவியிடம் குறைப்பட்டுக் கொண்டார்.
அவருடைய மனைவி, "நீங்கள் ஆரம்பத்திலிருந்தே உங்களுடைய வியாபாரத்தில் அவனை ஈடுபடுத்திஇருந்தால், இப்படி ஆகியிருக்குமா? எல்லாம் உங்கள் தவறு" என்று அவரையே குறை கூறினாள். உடனே அவரும் பாக்கியநாதனை அழைத்து, "மகனே நாளை முதல் நீ என்னுடன் கடைக்கு வந்து வியாபாரத்தை கவனி" என்று உத்தரவிட்டார்.
மறுநாள் பாக்கியா தன் தந்தையுடன் கடைக்குச் சென்றான். ஆனால் அங்கு வியாபாரத்தை கவனிக்காமல் மற்ற பணியாளர்களுடன் வீணாக அரட்டை அடிப்பதில் ஈடுபட்டான். ஒரு நாள் கடையை விட்டு வெளியே ஊர் சுற்றப் போனவன் மீண்டும் கடைக்கே வரவில்லை.
மீண்டும் கவலையில் ஆழ்ந்த வியாபாரியைப் பார்த்து, பாக்கியாவின் தாய், "பேசாமல் அவனுக்கு ஒரு கால்கட்டு போடுங்கள். பொறுப்பு தானாக வந்து விடும்" என்றாள்.
"அதுவும் நல்ல யோசனைதான்" என்ற வியாபாரி, "ஆனால் அவனுடைய திருமணத்தைப் பற்றி யோசிக்குமுன், அவனுடைய புத்திசாலித்தனத்தை இன்னொரு முறை சோதிக்க விரும்புகிறேன்" என்றார். பிறகு தன்னிடமிருந்து மூன்று ரூபாய் நாணயங்களை எடுத்து அவளிடம் கொடுத்து "இந்தா இந்த நாணயங்களை பாக்கியாவுக்குக் கொடு.


ஒரு ரூபாய்க்கு அவன் விரும்பியதை வாங்கி சாப்பிடட்டும். ஒரு ரூபாயை ஆற்று நீரில் எறியச் சொல். மீதி ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு அதில் தான் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் ஏதாவது குடித்து விட்டு, மிஞ்சியதை தோட்டத்தில் நட்டு வைக்கவும், பசு மாட்டுக்குக் கொடுக்கவும் சொல். அதிலிருந்து அவன் எவ்வளவு புத்திசாலி என்று தெரிந்து கொள்வோம்" என்றார்.
மறுநாள் தன் தாய் கொடுத்த மூன்று ரூபாய்களை வாங்கிக் கொண்டு பாக்கியா வீட்டை விட்டுக் கிளம்பினான். கடைக்குச் சென்று ஒரு ரூபாய்க்கு பக்கோடா வாங்கி சாப்பிட்டான். அடுத்து ஆற்றங்கரைக்குப் போனான். தன் தந்தை சொல்லியபடி ஒரு ரூபாய் நாணயத்தை ஆற்று நீரில் எறிய வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்ய அவனுக்கு மனம் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் கோயில் அர்ச்சகரின் பெண்ணான பாகீரதி அருகில் வந்து "அப்படி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டடாள். அதற்கு அவன் "ஒன்றுமில்லை பாகீரதி! இந்த ஒரு ரூபாய் நாணயத்தை ஆற்றில் எறியும்படியாக என் தந்தை சொல்லி இருக்கிறார். அப்படி அவர் ஏன் சொன்னார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். "அட அசடே!" என்று சிரித்த பாகீரதி ஒரு ரூபாயை நீ பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள்" என்றாள்.
"சரிதான்! அப்படியோர் உள்ளர்த்தமா? மீதி ஒரு ரூபாய்க்குள் நான் நான்கு அல்லது ஐந்து பொருட்களை வாங்க வேண்டும். அது எப்படி முடியும்? அதற்கும் நீயே ஏதாவது யோசனை சொல்லேன்" என்றான். பிறகு அவன் தாய் மூலமாக தந்தையிட்ட கட்டளையை விளக்கிக் கூறினான்.
"அது ஒன்றும் சிரமமில்லையே! நீ பேசாமல் ஒரு முலாம்பழத்தை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கு. அதில் உனக்கு சாப்பிடவும் குடிக்க சாறும் கிடைக்கும். அதன் விதைகளை தோட்டத்தில் நட்டுவை. தோலை பசு மாட்டுக்குக் கொடுத்து விடு" என்றாள்.


"ஆகா! என்ன அற்புதமான யோசனை!" என்று மகிழ்ந்த பாக்கியா அவள் சொன்னபடியே செய்துவிட்டு, தன் தாயிடம் சென்றான். மிக சாமர்த்தியமாக ஒரு ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டு, தான் வாங்கி வந்து முலாம் பழத்தையும் காட்டியவுடன், அவனுடைய புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்த அவன் தாய் பாக்கியாவின் தந்தையிடம் நடந்ததைக் கூறினாள்.
ஆனால் பாக்கியாவின் தந்தை "இது நமது பிள்ளை சுயமாக செய்ததில்லை" என்று அறிந்து அவனைக் கூப்பிட்டு "பாக்கியா! உனக்கு இந்த யோசனை யார் சொல்லிக் கொடுத்தது?" என்று கேட்டார்.
பாக்கியாவும் உண்மையை மறைக்காமல் "அர்ச்சகர் மகள் பாகீரதி" என்றான். "ஆகா! அந்த பாகீரதி மிக புத்திசாலிப் பெண் என்று தோன்றுகிறது" என்று கூறிய அவர், தன் மனைவியிடம் "நமக்குத் தகுந்த மருமகள் பாகீரதிதான்" என்றார்.
இருவரும் அர்ச்சகரைக் கலந்து ஆலோசித்து அவரின் மகளுடன் பாக்கியாவின் திருமணம் செய்வதற்கு முடிவு செய்தனர். திருமணம் முடிந்து சில நாட்கள் ஆயின. ஒருநாள் பாகீரதி தன் தாய் வீட்டுக்குச் செல்ல விரும்பியதால் பாக்கியா அவளை பிறந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு, வீடு திரும்பினான்.
மறுநாள் அவன் தந்தை, அவனையும் வேலைக்காரனையும் பக்கத்திலுள்ள நகரத்திற்கு விற்பனைப் பொருட்கள் வாங்கி வர அனுப்பினார். பொருட்கள் வாங்கத் தேவையான பணம் எடுத்துக் கொண்டு நகரத்தை அடையும் போது இரவு ஆகிவிட்டதால், பாக்கியாவும் வேலைக்காரனும் ஒரு விடுதியில் தங்கினர். அந்த விடுதியின் சொந்தக்காரியான ஓர் இளவயதுப் பெண்மணி, பாக்கியாவிடம் நிறையப் பணம் இருப்பதை அறிந்து கொண்டு, அவனை ஏமாற்றிப் பணம் பறிக்க திட்டமிட்டாள்.
இரவு உணவருந்தியபிறகு, அவள் பொழுது போக்க பாக்கியாவை சீட்டாட அழைத்தாள். அவள் சொல்லை மறுக்க முடியாத பாக்கியா சீட்டாட அமர்ந்தான். ஒரே ஒரு காடா விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்த அறையில் இருவரும் சீட்டாட அமர்ந்தனர். "


"உங்களைப் போன்ற பணக்கார வியாபாரிகள் சும்மா சீட்டாடினால் எப்படி? பணம் வைத்து ஆடினால்தான் உங்களுக்கு கௌரவம்" என்று பணம் வைத்து சீட்டாட வற்புறுத்தினாள். பாக்கியாவும் அதற்கு சம்மதித்தான்.
தான் வெற்றி பெறுவோம் என்று பாக்கியா நினைக்கும் சமயம் பார்த்து, அவளுடைய பூனை திடீரென குறுக்கே பாய்ந்து விளக்கின் மீது விழ, எங்கும் இருள் சூழ்ந்தது. மீண்டும் விளக்கை ஏற்றியவுடன், சீட்டுகள் முழுதும் நிலை மாறியிருந்தன. அந்த இளம் பெண் வெற்றி பெற்று பாக்கியாவிடமிருந்து கணிசமான பணத்தைப் பெற்றாள். இதுபோல் பலமுறை நடக்க, தான் கொண்டு வந்த பணம் அனைத்தையும் இழந்த பாக்கியா மேலும் ஏராளமான பணம் அவளுக்குக் கொடுக்க வேண்டி வந்தது.
இவ்வாறு அவனை நாடகமாடி ஏமாற்றி விட்டாள். மறுநாள் பொழுது விடிந்ததும் அவள் பாக்கியாவிடம், "நீ பணம் தர வேண்டிஇருப்பதால், உன்னை வெளியே செல்ல விடமாட்டேன். உன் வேலைக்காரனை ஊருக்கு அனுப்பி பணம் எடுத்து வரச் சொல். அதுவரை நீ இங்கேயே இரு" என்று கூறி விட்டாள்.
பாக்கியா திரும்பி வராததால் அவன் பெற்றோர்கள் கவலை அடைந்தனர். இதற்குள் பாக்கியா தன்னை அழைக்க வராமல் போகவே, பாகீரதி தானாகவே புருஷன் வீட்டுக்கு வந்தாள். உண்மையை அறிந்து அவளும் பதற்றம் அடைந்தாள். இதற்குள் பாக்கியாவின் வேலைக்காரன் அங்கு வந்து அனைத்தையும் கூறினான். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பாகீரதி மட்டும் சமாளித்துக் கொண்டு தான் சென்று பாக்கியாவை மீட்டு வரக் கிளம்பினாள். பாக்கியா எவ்வாறு சூதாட்டத்தில் ஏமாற்றப் பட்டான் என்பதை அந்த வேலைக்காரன் மூலம் தெரிந்து கொண்டாள். பாகீரதி தன்னுடன் ஒரு சுண்டெலியையும் ரகசியமாக எடுத்துச் சென்றாள். வேலையாளை விடுதிக்கு வெளியிலே நிறுத்தி விட்டு, தானும் ஒரு ஆண் போல் வேடம் தரித்து பாகீரதி பாக்கியா தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்தாள்.

பாக்கியாவிற்கு தன் மனைவியை சிறிதும் அடையாளம் தெரியவில்லை. விடுதி சொந்தக்காரியை சந்தித்து தனக்கு தங்க இடம் வேண்டும் என்று கூறி அங்கே தங்க ஏற்பாடு செய்தபிறகு, அவளிடம் தனக்கு சூதாட்டத்தில் விருப்பம் உண்டு என்பதைத் தெரிவித்தாள். அவளும் அன்றிரவு மகிழ்ச்சியுடன் சூதாட அமர்ந்து கொண்டாள்.
பாகீரதி வெற்றிபெறும் தருணத்தில், வழக்கப்படி விடுதி சொந்தக்காரி தன் பூனைக்கு சைகை செய்ய, அது விளக்கை அணைக்க ஓடி வந்தது. அதை எதிர்பார்த்திருந்த பாகீரதி தான் மறைத்து வைத்த சுண்டெலியை வெளியே விட்டாள். சுண்டெலியைத் துரத்திக் கொண்டே பூனை வெளியே ஓடி விட்டது.
மீண்டும் அது திரும்பவில்லை. தொடர்ந்து சூதாட்டத்தில் பாகீரதி வெற்றிபெற, பாக்கியா இழந்த அத்தனை பணத்தையும் அதற்கு மேல் பல மடங்குகளும் அவளுக்குக் கிடைத்தது. அடுத்த நாள் காலை பாகீரதி அந்தப் பணத்தை வெளியே இருந்த வேலைக்காரனிடம் கொடுத்து அதை சொந்தக்காரிக்கு அளித்துத் தன் கணவனை மீட்டு வரச் சொன்னாள்.
அதன்படியே பணம் கிடைத்ததும் அந்தப் பெண்மணி பாக்கியாவை விட்டுவிட்டாள். வெளியே நின்றிருந்த வண்டியில் தன் மனைவியைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினான். பிறகு மூவரும் நகரத்துக் கடைகளில் தேவையான விற்பனைப் பொருட்களை வாங்கிக் கொண்டு தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர்.
நடந்த விஷயங்களை பாகீரதி விளக்கியதும் பாக்கியாவின் தந்தை தனது கருத்தை வெளியிட்டார். "பாக்கியா மாறமாட்டான். அவன் ஏமாளியாகவே இருப்பான். ஆனால் அவனை கவனித்துக் கொள்ள மகா சாமர்த்தியசாலியான நம் மருமகள் அவன் கூடவே இருக்கும் வரையில், நாம் அவனைப் பற்றி ஒருபொழுதும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை."




அதிசயமான நோய்



சாரங்கபுரியில், அண்ணாமலையின் நகைக்கடை மிகப் பிரபலமானதாக இருந்தது. அவர் பரம்பரை வியாபாரி அல்ல! சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்த அண்ணாமலை ஒரு நகைக் கடையில் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார். தனது கடின உழைப்பினாலும், ஆர்வத்தினாலும் அவர் நகை வியாபாரத்தின் சகல நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் வேலையை விட்டுவிட்டு, சாரங்கபுரிக்கு வந்து ஒரு நகைக்கடையைத் தொடங்கினார். அந்த நகரிலிருந்த சில கை தேர்ந்த தொழிலாளிகளை வலை வீசிக் கண்டு பிடித்துத் தன்னிடம் வேலைக்கு அமர்த்திக் கொண்டார். விரைவிலேயே, அவருடைய கடை மிகவும் உகந்ததாகக் கருதப்பட வியாபாரம் பிரமாதமாக நடந்தது.
அவருடைய திறமையைக் கண்டு வியந்த நகரத்தின் செல்வர் ஒருவர் தன் புதல்வி நாகேஸ்வரியை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். திருமணத்தின் மூலம் அவருக்கு ஏராளமான சீர் கிடைத்தது. ஆனால், இயல்பாகவே பொருளில் ஆசை கொண்டிருந்த நாகேஸ்வரிக்கு ஏற்கெனவே இருந்த செல்வம் போதவில்லை. அதனால், அவள் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்க முயன்றாள்.
தன் கணவர் தன்னுடன் இருப்பதைவிட, முழுநேரமும் கடையிலே தங்கி வியாபாரம் செய்து வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று விரும்பினாள். அவருக்கு வேண்டிய உணவு, தேநீர் ஆகிய அனைத்தையும் கடைக்கு அனுப்பி விடுவாள். தவிர, அவள் கணவர் பணியாளர்களை நம்பி வேலையை ஒப்படைப்பதை அறவே விரும்பவில்லை.


ஆகையால் அது குறித்து அடிக்கடி அறிவுரை கூறுவாள். முதலில், தன்னிடமும், வியாபாரத்தின் மீதும் உள்ள அக்கறையினால்தான் அவள் இவ்வாறு கூறுகிறாள் என்று அண்ணாமலை கருதினார். ஆனால் காலப்போக்கில் அவள் பணம், பணம் என்று பேயாய் அலைவதையும், யாரையும் நம்பாமல் தூற்றுவதையும் கண்டு அவருக்கு சலிப்பு ஏற்பட்டது. ஆனால் அவளைக் கண்டித்து பேச அவருக்கு மனம் இல்லை. நாளடைவில் அண்ணாமலைக்கு மன உளைச்சலில் உடலிலும் தளர்ச்சி ஏற்பட்டது. அதைப்பற்றி அவர் நாகேஸ்வரியிடம் குறிப்பிட்டபோது, அவள், அதைப் பொருட்படுத்தவில்லை.
இவ்வாறு அண்ணாமலை அவதிப்படும் போது, சாரங்கபுரிக்கு ஒரு யோகி விஜயம் செய்தார். அண்ணாமலை அவரை தனிமையில் சந்தித்து, "சுவாமி! என் மனத்தில் நிம்மதி இல்லை. அதனால் என் உடலும் தளர்ந்து விட்டது. நான் என் வாழ்வில் இழந்த நிம்மதியை திரும்பப் பெறுவது எவ்வாறு?" என்று வினவினார்.
"மகனே! இளவயதில் உன் மனத்தில் வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. அதை நீ எட்டிப் பிடித்து விட்டாய். அதனால், இப்போது உன்னிடம் குறிக்கோள் என்று ஒன்றும்இல்லாததால் வாழ்க்கை சூனியமாகக் காட்சிஅளிக்கிறது. இனி, மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் ஆனந்தம் காண முயற்சிப்பாய்!" என்றார்.
"சுவாமி! மற்றவர்களுக்கு உதவி செய்வது என்றுமே எனக்குப் பிடித்த விஷயம்! ஆனால் அதைச் செய்யவிடாமல் என் மனைவி என்னைத் தடுக்கிறாள். மேலும் மேலும் செல்வம் திரட்டச் சொல்லி அவள் நச்சரிப்பதால்தான் என் வாழ்வின் நிம்மதி பறி போய்விட்டது!" என்று அண்ணாமலை புலம்பினார்.
அதைக் கேட்ட யோகி புன்னகைத்துக் கொண்டே, "செல்வம் ஒன்றுதான் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் என்று உன் மனைவி தவறான கருத்து கொண்டிருக்கிறாள். நன்கு யோசனை செய்தால், அவள் மனத்தை மாற்ற ஏதாவது வழி பிறக்கும். அவளுடைய மனத்தை மாற்றினால், நீ இழந்த நிம்மதி உன்னை மீண்டும் தானே தேடி வரும்!" என்றார்.


"அப்படியே முயற்சிக்கிறேன்!" என்று சொல்லி அண்ணாமலை வீடு திரும்பினார். அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் அண்ணாமலை தீவிரமாக யோசித்துக் கொண்டேயிருந்தார். மறுநாள் அவர் படுக்கையிலிருந்து எழுந்து இருக்கவில்லை. தன் மனைவியை அழைத்து, தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், எழுந்திருக்கவே முடியவில்லைஎன்றும் கூறினார்.
கலவரமடைந்த நாகேஸ்வரி உடனே மருத்துவரை வரவழைத்தாள். அண்ணாமலையை சோதித்த மருத்துவர் அவரை ஏதோ ஒரு நோய் பற்றிஇருக்கிறதென்றும், ஆனால் அது என்ன நோய் என்று தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். எந்த ஒரு மருத்துவராலும் அவரைப் பீடித்துள்ள நோய் என்னவென்றே கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறினர். அண்ணாமலை கடைக்குச் செல்வதையே நிறுத்தி விட்டு, எந்தநேரமும் படுக்கையிலேயே கிடந்தார்.
சில மாதங்கள் கழித்து வீட்டிற்கு வருகை தந்த நாகேஸ்வரியின் உறவினர் ஒருவர் அவர்கள் இருவரையும் தம்பதி சமேதராக தல யாத்திரை செல்லும்படி அறிவுரை வழங்கினார். உடல் சரிஇல்லாத கணவரால் எப்படி பயணம் மேற்கொள்ள முடியும் என்று நாகேஸ்வரி கவலையில் ஆழ்ந்தாள்.
ஆனால் அண்ணாமலை அவளுக்கு தைரியம் கூறினார். ஆகையால் ஒரு வேலைக்காரனைத் துணைக்குஅழைத்துக் கொண்டு இருவரும் புனிதப் பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு செல்வதற்குமுன் அண்ணா மலையின் யோசனைப்படி வியாபாரப் பொறுப்பை நரசிம்மன் என்னும் பணியாளரிடம் ஒப்படைத்தாள்.

மூன்று மாதங்களாக, பல தலங்களையும் தன் கணவருடன் சேர்ந்து தரிசித்த நாகேஸ்வரியின் மனத்தில் மாற்றம் உண்டாகியது. அவள் மனத்தை முழுமையாக ஆக்கிரமத்திருந்த பண ஆசையை அகற்றி சக்தியை உண்டாக்கியது. தனது கணவரின் உடல்நிலையும் படிப்படியாகத் தேறுவதைக் கண்டு, தனது செல்வத்தால் அடைய முடியாதது இறைவன்அருளினால் கைகூடுவதைக் கண்டு செல்வத்தை விடச் சிறந்தது இறையருளே என்று உணர்ந்தாள்.
பயணம் முடிந்து வீடு திரும்பிய பின், தங்களுடைய வியாபாரம் முன்போலவே சிறப்பாக நடை பெறுவதைக் கண்டு வியந்தாள். பணியாளர்களை திருடர்கள் என்றும், அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது என்றும் தான் முன்பு கணவனிடம் கூறியது நினைத்து வெட்கினாள். "நான் இதுவரை செல்வம்தான் வாழ்வில் மிக முக்கியம் என்று நினைத்தது தவறு! வாழ்க்கையின் உண்மையான ஆனந்தம் இறைவன் வழிபாட்டிலும், மற்றவர்களுக்கு செய்யும் பரோபகாரத்திலும் தான் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்!" என்று தன்னிடம் கூறிய நாகேஸ்வரியின் சொற்களைக் கேட்டு அண்ணாமலை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கினார்.
தொடர்ந்து நாகேஸ்வரி அவரிடம், "ஏதோ ஒரு அதிசய நோய் உங்களை மட்டும் பீடித்திருக்கிறது என்று நான் இன்று வரை தவறாக எண்ணிஇருந்தேன். ஆனால், உண்மையில் என்னையும் பண ஆசை என்ற நோய் இத்தனை நாள் வாட்டி வதைத்தது. தலயாத்திரை சென்று வந்த பின் என்னுடைய நோயும் அகன்று விட்டது!" என்றாள்.
மனைவியின் மன மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார் அண்ணாமலை. தான் நோயாளி போல் நடித்ததை அவளிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்.




முதற் பக்கம்கதைகள்சிறுகதைகள்நாட்டுப்புறக் கதைகள்


சிறுதாவூர் என்ற கிராமத்தில் ராமன் என்ற அதி புத்திசாலி வாழ்ந்து வந்தார். வணிகம், நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதிலும், வழக்குகளில் சரியான தீர்ப்புகள் கூறுவதிலும் வல்லவர், கோடைக்காலத்தில் ஒருநாள், ராமனும் அவரது மனைவியும் தங்கள் வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு திருடர்கள் மெதுவாக தோடத்துக்குள் நுழைந்து செடிகளுக்குப் பின் மறைவதை ராமன் பார்த்து விட்டார்.

சுதாரித்துக்கொண்ட அவர் தன் மனைவியிடம் மெதுவாக, "நம் வீட்டில் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் வந்துள்ளனர்." என்று கூறவே, "ஐயோ திருடர்களா.. இப்போது என்ன செய்வது?" என்று அவர் மனைவி பதறினார்.
உடனே, "கத்தாதே..திருடர்களை எளிதாக பிடித்து விடலாம். நான் சொல்வதை மட்டும் செய்." என்று கூறினார்.
என்ன செய்ய வேண்டும் என்று தன் மனைவிக்கு கூறிய பின், திருடர்கள் பதுங்கியிருக்கும் இடத்துக்கு அருகில் சென்றார் ராமன்.

பின் சத்தமாக தன் மனைவியிடம், "தெரியுமா சேதி...அடுத்த தெருவில் கந்தசாமி வீட்டில் திருடு போய்விட்டதாம். நாம் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனே நகைகள், பொற்காசுகள் அனைத்தையும் கொண்டு வா." என உத்தரவிட்டார். இதைக் கேட்ட திருடர்கள் குழம்பினர். ராமன் என்ன செய்யப் போகிறார் என உன்னிப்பாக கவனித்தனர். ராமனும் அவரது மனைவியும் சேர்ந்து பெரிய பெட்டியைக் கொண்டு வந்தனர். அதை தங்கள் கிணற்றில் வீசினர். பின்னர், "அப்பாடா, இனி கவலையில்லை, திருடர்கள் வந்தால் வீட்டில் பொருட்களைத் தேடிப் பார்த்து விட்டு ஏமாந்து திரும்புவார்கள். நாம் நிம்மதியாக தூங்கலாம் வா!" என தன் மனைவியிடம் சத்தமாக கூறி அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் ராமன்.

இந்தக் காட்சியைக் கண்ட திருடர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அவர்களில் ஒருவன், "சத்தம் போடாமல் இங்கேயே இருப்போம். இரவு அவர்கள் தூங்கியவுடன் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி விட்டு பொருட்களை எடுத்துச் சென்று விடுவோம்," என்று மகிழ்ச்சியாக கூறினான்.

இரவு நேரமானதும், இரண்டு பேரும் கிணற்றுக்கு அருகில் சென்று ஓசைப்படாமல் குடத்தில் கயிறு கட்டி தண்ணீரை வெளியேற்றி தோட்டத்தில் ஊற்றினர், நீண்ட நேரம் தண்ணீரை வெளியேற்றிய போதும், கிணற்றில் தண்ணீரின் அளவு குறையாததால் வெறுப்படைந்தனர். ஆனாலும் தங்கள் முயற்சியை அவர்கள் கைவிடவில்லை.

பொழுதும் விடிந்து விட்டது. இரவெல்லாம் தண்ணீர் இறைத்ததால் எழுந்து நிற்கக் கூட சக்தியின்றி இருவரும் அப்படியே விழுந்து கிடந்தனர்.


அவர்களிடம் சென்ற ராமன், "நண்பர்களே, வெறும் கற்கள் நிரம்பிய பெட்டிக்காக இரவெல்லாம் கண் விழித்து என் தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றியுள்ளீர்கள். உங்களுக்கு நான் எவ்வளவு கூலி தர வேண்டும்?" என சிரித்துக் கொண்டே கேட்டார்.

உடனே அவர் கால்களில் விழுந்த இருவரும், "ஐயா, தெரியாமல் உங்கள் வீட்டில் திருட வந்து விட்டோம். இரவு முழுவதும் தண்ணீர் இறைத்ததால் உழைப்பின் அருமையை இப்போது உணர்ந்தோம். இனி திருட மாட்டோம். எங்களை மன்னித்து விட்டு விடுங்கள்." என கெஞ்சினர். அவர்களுக்கு அறிவுரை வழங்கி, தண்ணீர் இறைத்ததற்காக கூலி கொடுத்து அனுப்பி வைத்தார் ராமன்


மாப்பிள்ளை கேட்ட மணப்பெண்



ஒரு கிராமத்தில் ஒரு பணக்கார ஜமீன்தார் இருந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்து விட்டாள். தன்னுடைய மகளுக்கு மல்லிகா என்று பெயரிட்டு அவளைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார். சில ஆண்டுகளில் மல்லிகா பெரியவளாகி மணப் பருவம் எய்தினாள். அவளது தோழிகள் அவளுடைய அழகைப் புகழ்ந்தார்கள். இதனால் மல்லிகா தன் அழகால் கர்வம் கொண்டிருந்தாள்.

அந்தக் காலத்தில் கிராமத்து நாவிதனுக்கு கிராமத்திலுள்ள இளைஞர்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. ஜமீன்தார் ஒரு நாள் நாவிதனை அழைத்து தன் மகளுக்குப் பொருத்தமான வரனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். இருவரின் பேச்சுவார்த்தையைக் கவனித்த மல்லிகா, "அப்பா, பலசாலியான ஒருவனைத் தான் நான் மணம் புரிவேனே தவிர சாதாரண மனிதனை அல்ல" என்று பளிச் என சொன்னாள்.

அவளுடைய அதிரடி வார்த்தைகளைக் கேட்ட ஜமீன்தாருக்கும், நாவிதனுக்கும் தூக்கி வாரிப் போட்டது. தனது திருமண விஷயத்தைப் பற்றி ஒரு இளம்பெண் இவ்வளவு பகிரங்கமாகப் பேசுவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஜமீன்தார் மல்லிகாவை நோக்கி, "மகளே, உன்னுடைய திருமணத்தைப் பற்றி நீயே பேசுவது சரியில்லை. உனக்குத் தகுந்த மாப்பிள்ளையை நான்தான் தேர்வு செய்ய வேண்டும்" என்றார். ஆனால் மல்லிகா பிடிவாதமாக, "அப்பா, நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளையை நான் மணம் புரிய முடியாது. என்னுடைய எதிர்பார்ப்புகளைப் பற்றி நாவிதனுக்கு என்ன தெரியும்?" என்று கூறி விம்மிக் கொண்டே சென்றாள்.

தன்னுடைய அருமை மகள் விம்முவதைக் கண்டதும் அதற்குமேல் அவளைக் கடிந்து கொள்ள மனமில்லாமல் ஜமீன்தார் மவுனமானார். ஆனால் மல்லிகாவோ தனக்கு விருப்பமான நபரை வீட்டை விட்டு வெளியேறித் தானேத் தேடிக் கொள்ள முடிவு செய்தாள்.

மறுநாள் காலை ஜமீன்தார் எழுவதற்கு முன்பே மல்லிகா வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். நடந்து கொண்டே சென்றவள் பிரதான சாலையில் ஓர் ஊர்வலம் செல்வதைக் கண்டு சற்றே ஒதுங்கி நின்றாள். ஊர்வலம் அருகே நேருங்கியதும் குதிரை மீது பணக்கார மனிதன் சவாரி செய்து கொண்டு செல்வதையும் குதிரைக்கு முன்னும் பின்னும் அவனுடைய ஆட்கள் அணி வகுத்து செல்வதையும் பார்த்தாள். சாலையில் கூடியிருந்த மக்கள் அவரை வாழ்த்துவதையும் கண்டாள்.

ஒருவேளை இவர்தான் இந்த நாட்டு மன்னரோ என்று மல்லிகா அதிசயித்தாள். இதற்கு முன் மன்னரை அவள் பார்த்ததேயில்லை. ஆனால் இவர் மன்னராயிருந்தால், கண்டிப்பாக பலசாலியாகத் தான் இருப்பார் என்றும் மணம் புரிந்தால் இவரையே மணம் புரிய வேண்டும் என்றும் எண்ணினாள். இந்த எண்ணத்துடன் அந்த ஊர்வலத்திற்குப் பின்னால் தானும் சென்றாள்.

ஒரு குளத்தருகே செல்லும்போது ஊர்வலம் நின்றது. அரச மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு யோகியை அந்த நபர் பார்த்ததே இதற்குக் காரணம். குதிரையிலிருந்து இறங்கிய அந்த பணக்காரர் நேராக அந்த யோகியிடம் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அவருடன் வந்த ஆட்கள் மலர்களையும், பழங்களையும் யோகியின் காலடியில் சமர்ப்பிக்க யோகி அனைவரையும் ஆசீர்வாதம் செய்தார்.

குதிரையில் வந்த பணக்காரர்தான் மிகுந்த பலசாலி என்று நினைத்திருந்த மல்லிகாவுக்கு அவரது இந்த செய்கை ஆச்சரியத்தை அளித்தது. அப்படிப் பட்டவர் யோகியை விழுந்து வணங்கினாரெனில் யோகிதான் அவரை விட பலசாலியா! அப்படியானால், யோகியைத் தான் மணக்க வேண்டும். ஆனால் யோகி தன்னை மணப்பாரா? இப்படிப்பட்ட சிந்தனைகள் அவளுக்குத் தோன்றின. ஊர்வலத்தை மறந்து விட்டு யோகியின் அருகில் மல்லிகா அமர்ந்தாள்.


சிறிது நேரத்தில் பழங்கள், பூக்களுடன் யோகி எங்கோ கிளம்பிச் செல்ல, அவரை மல்லிகாவும் பின் தொடர்ந்தாள். அந்த யோகி ஒரு சிறிய கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த இறைவனை வணங்கினார். அதன்பிறகு யோகி வெளியில் சென்று விட்டார். கோயிலிலுள்ள இறைவன் தான் யோகியைவிட பலசாலி என இப்போது மல்லிகா நினைத்தாள். இறைவனையே மணந்து கொண்டு அந்தக் கோயிலிலேயே தங்கிவிட மல்லிகா தீர்மானித்தாள். "இறைவா, இப்படி சிலையாக இல்லாமல் உயிருள்ள வடிவம் எடுத்துவா. உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன்" என்று கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள்.

அப்போது கோயிலுக்குள் ஒரு நாய் நுழைந்து விட்டது. இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை, அந்த நாய் உண்ணத் தொடங்கியது. திடீரெனக் கண் விழித்துப் பார்த்த மல்லிகா, அந்த நாயைக் கண்டதும் இறைவனே தன் பிரார்த்தனைக்கிணங்கி நாய் உருவத்தில் வந்து விட்டார் என நினைத்தாள், இதற்குள் அந்த நாய் கோயிலை விட்டு வெளியே ஓடியதும், மல்லிகா நாயைப் பின் தொடர்ந்தாள்.

நாய் நேராக ஒரு வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த ஒரு மனிதனிடம் கொஞ்சி விளையாடி அவன் முன் படுத்துக் கொண்டு குழைந்தது. நாயின் எசமான் அவன் என்று தெரிந்து கொண்ட மல்லிகா, நாய் வடிவத்திலிருந்த கடவுளை விட அவன் பலசாலி என்று எண்ணினாள். அந்த ஆள் ஒரு விவசாயி. அவன் சற்று நேரத்திற்குப் பின் தனது ஏரை எடுத்துக் கொண்டு தன் வயலில் இறங்கி உழ ஆரம்பித்தான்.

இறுகிய நிலத்தையே ஆழமாக உழுபவன்தான் மிகுந்த பலசாலி என்று மல்லிகா இப்போது உறுதியாக நம்பினாள். அடுத்த கணம் அவன் கால்களில் வீழ்ந்து வணங்கி, "இந்த ஊரில் நீங்கள்தான் மிகுந்த பலசாலி என்று தெரிந்து கொண்டேன். என்னை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சினாள். அவளது கதையை முதலிலிருந்து கேட்டுவிட்டு அவளது அழகிய முகத்தைப் பார்த்து, "மல்லிகா, உன்னைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்" என்றான்.


Friday, July 29, 2011

மந்திரத்தால் ஏற்பட்ட பேரிழப்பு!



பிரம்மதத்தன் காசியை ஆண்டகாலத்தில், ஒரு கிராமத்தில் பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் வேதபம் என்றொரு மந்திரத்தைக் கற்றிருந்தார். எல்லாக் கிரகங்களும் ஒன்றுகூடும் நாளில் அந்த மந்திரத்தை உச்சரித்தால் ஆகாயத்திலிருந்து தங்கம், வெள்ளி, முத்து, பவளம், ரத்தினம், மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த பொருள்கள் மழைபோலக் கொட்டும்.
அந்த அதிசய மந்திரத்தைக் கற்ற பிராமணர் தன் சக்தியால் கர்வம் கொண்டிருந்தார். கிரகங்கள் எல்லாம் ஒன்று கூடும் நாளன்று மந்திரத்தை உச்சரித்து நவரத்தின மழை பெய்யச் செய்து, அவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு விட்டால் உலகில் தன்னை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது என எண்ணி, தலைகால் புரியாமல் துள்ளிக் கொண்டிருந்தார்.
இந்த மந்திர சக்திவாய்ந்த பிராமணரிடம் போதிசத்வர் சீடராக இருந்து வந்தார். குருவிற்கும் அந்த சீடனை மிகவும் பிடித்துப் போயிற்று. ஒருநாள் அவர் தம் சீடனோடு ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்றார்.
அந்தக் காட்டில் ஐந்நூறு திருடர்கள் இருந்தனர். அவர்கள் குருவான பிராமணரையும் சீடரான போதிசத்வரையும் வழி மறித்தனர். அந்தத் திருடர்கள் வழிப்போக்கர்களிடம் பணம் இருந்தால் பறித்துக் கொண்டு விட்டு விடுவார்கள். அப்படி இல்லாவிட்டால் ஒருவனை ஊருக்கு அனுப்பி பணம் கொண்டு வரச்சொல்வார்கள். அவர்கள் பணம் கொண்டு வந்தபின் தான் மற்றவர்களை விடுவிப்பார்கள். அந்த குருவிடமும் சீடனிடமும் பணம் இல்லாததால் அவர்கள் குருவை நிறுத்தி வைத்துக் கொண்டு சீடனான போதிசத்வரைப் பணம் கொண்டு வரச் சொன்னார்கள்.

போதிசத்வர் போகும்முன் தம் குருவிடம் "குருவே! இன்றிரவு பன்னிரெண்டு மணிக்கு எல்லா கிரகங்களும் கூடும் வேளை வருகிறது. நீங்கள் உங்கள் வேதப மந்திரத்தை உச்சரிக்காதீர்கள். அதனால் உங்களுக்கும் கெடுதல். இந்தத் திருடர்களுக்கும் கெடுதல்" எனக்கூறி எச்சரித்துவிட்டுப் போனார். இரவானது.
திருடர்கள் அந்தப் பிராமணனைக் கட்டிப் போட்டார்கள். அன்று பௌர்ணமி. நிலா பால் போலக் காய்ந்து கொண்டிருந்தது. பிராமணர் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார். எல்லா கிரகங்களும் ஒன்று சேரும் வேளை வரலாயிற்று.
அப்போது அவர் மனத்தில் வேதப மந்திரத்தைச் சொல்லி விலை மதிப்பற்ற பொருள்களை வரவழைத்து திருடர்களுக்கு அவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டுத் தாம் விடுதலை பெறலாம் என நினைத்தார். ஆகையால் அவர் அங்கே கூடி இருந்தத் திருடர்களிடம், "என்னைப் பணத்திற்காகத் தானே கட்டி வைத்திருக்கிறீர்கள்? நான் ஒரு நோடியில் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருள்களை மழை போலப் பொழியச் செய்கிறேன். நீங்கள் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்ய நான் குளித்து விட்டு ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எனவே என் கட்டை அவிழ்த்துவிட்டால் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகப் பணமே கிடைக்கும்" என்றார்.
அதைக் கேட்ட திருடர்கள் சிரித்தார்கள். பிறகு அவர்கள் "இப்படி எல்லாம் சொல்லி எங்களிடமிருந்து தப்பி ஓடிவிடலாம் என்று நினைக்கிறாயா? அதெல்லாம் முடியாது" என்றனர். பிராமணரோ "நான் தப்பிப்போக முயலமாட்டேன்.


நான் இப்போது உங்களிடம் சொன்னது உண்மை. நான் கற்ற மந்திரத்தைப் பயன்படுத்தியாக வேண்டும். அதனால் உங்களுக்குத்தான் அதிக நன்மை. நீங்கள் என் சீடனைக் கொண்டு வரச் சொன்ன பணத்தைவிடப் பன்மடங்கு உங்களுக்குக் கிடைக்கும்" என்றார்.
அவர்களும் அந்த அதிசயத்தைப் பார்க்கலாம் என நினைத்து பிராமணரின் கட்டுகளை அவிழ்த்தார்கள். அவரும் குளித்துவிட்டு ஓரிடத்தில் அமர்ந்து வேதப மந்திரத்தை உச்சரித்தார். ஆகாயத்திலிருந்து பொன்னும் வெள்ளியும் ரத்தினங்களுமாக மழைபோலப் பெய்து குவிந்தன. திருடர்கள் எல்லாவற்றையும் எடுத்து மூட்டைகளாக கட்டி எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். அவர்களுக்குச் சற்றுப் பின்னாலேயே பிராமணரும் நடந்தார்.
சிறிது தூரம் போனதும் மற்றொரு திருடர் கூட்டம் அத்திருடர்களை மடக்கி நிறுத்தியது. அப்போது அத்திருடர்கள் புதிய திருடர் கூட்டத்திடம் "பணம் வேண்டுமானால் இதோ எங்கள் பின்னால் வரும் பிராமணனைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன் தெரிந்து வைத்துள்ள மந்திரத்தை உச்சரித்தால் தங்கம், வைரம், ரத்தினம் என்று ஆகாயத்திலிருந்து கொட்டுகிறது. இதெல்லாம் அவன் எங்களுக்கு அவ்வாறு வரவழைத்துக் கொடுத்ததுதான்" எனக் கூறித் தாம் எடுத்துச் செல்லும் விலையுயர்ந்த பொருள்களை அவர்களிடம் காட்டிவிட்டுப் போனார்கள்.
உடனே அந்தத் திருடர் கூட்டம் பிராமணனைப் பிடித்துக் கொண்டு "எங்களுக்கும் அத்திருடர்களுக்குக் கொடுத்ததுபோல வரவழைத்துக் கொடு" என்றார்கள்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிராமணர் "அந்தப் பணத்தை நான் மந்திர சக்தியால் வரவழைத்துக் கொடுத்தது உண்மையே. ஆனால் எல்லாக்கிரகங்களும் ஒன்று கூடும் வேளையில் அந்த மந்திரத்தை உச்சரித்தால்தான் அவ்வாறு கிடைக்கும். அந்த மாதிரி எல்லா கிரகங்களும் வருடத்திற்கு ஒருமுறை தான் கூடும்" என்றார். அத்திருடர்கள் அவ்வாறு அந்த பிராமணர் கூறியதை நம்பவில்லை.


தங்களுக்குப் பணம் வரவழைத்துக் கொடுக்காமல் அவர் ஏமாற்ற முயல்கிறார் என எண்ணிவிட்டார்கள். அதனால் அவர்கள் "அதெல்லாம் தெரியாது. எங்களுக்கு இப்போதே அவர்களுக்குக் கிடைத்தது போல நவரத்தினங்கள் கிடைத்தாக வேண்டும் என்றார்கள்.
ஆனால் பிராமணரோ "இன்று முடியாதே. இன்று கிரகங்கள் கூடியபோது மந்திரத்தை உச்சரித்து விலையுயர்ந்த பொருள்களை மழை போலப் பெய்யச் செய்யச் செய்து அவர்களுக்கு நவரத்தினங்கள் கிடைக்கச் செய்துவிட்டேன். இனி அடுத்த வருடம் கிரகங்கள் ஒன்று கூடும் நாளன்று தான் இவ்வாறு செய்ய முடியும்" என்றார்.
திருடர்கள் அவர் சொல்வதை நம்பவில்லை. அவர்கள் அந்தப் பிராமணரை இரு துண்டுகளாக வெட்டி ஒரு மரத்தில் தொங்கப் போட்டனர். பிறகு தம்மிடமிருந்து தப்பிச் சென்ற திருடர்களைப் பிடித்துத் தாக்கினார்கள். அவர்களை எல்லாம் கொன்று அவர்கள் தூக்கிவந்த பணத்தையும் வைர ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டனர்.
பணம் நிறைய வந்தாலே பல சிக்கல்களும் அபாயங்களும் கூடவே வரத்தானே செய்யும். திருடர்கள் ஏராளமான பணம் பெற்றதும் அவர்களிடையேயும் ஆசையும் சுயநலமும் அதிகரித்துவிட்டது. அதனால் அந்தக் கூட்டத்திலும் இரு பிரிவுகள் ஏற்பட்டு தமக்குள் சண்டை போட்டுக் கொண்டனர். சண்டை மிகவும் முற்றிப்போய் அவர்கள் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்தவே முடிவில் இருவரே மிஞ்சினார்கள். அவர்கள் அந்தப் பணத்தையும் இரத்தினங்களையும் காட்டில் ஓரிடத்தில் புதைத்து வைத்தனர். ஒருவன் அதற்குக் காவலாக நிற்க மற்றவன் ஊருக்குள் போய் சாப்பிட ஏதாவது வாங்கி வருவதாகக் கூறிச் சென்றான்.
நகருக்குச் சென்றவன் கிடைத்த பொருளைத் தான் ஒருவனே அடைய வேண்டும் என நினைத்து, மற்றவனுக்குத் தான் வாங்கி வந்த உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு வந்தான்.

இதுபோல பணத்தைக் காவல் காத்தவன் தானே எல்லாவற்றையும் அடைய எண்ணி, மற்றவன் வந்ததும் அவன் மீது திடீரெனப் பாய்ந்து தன் கத்தியால் குத்திக் கொன்றான். அதன்பிறகு அவன் கொண்டு வந்த உணவைச் சாப்பிட்டான். சாப்பிட்டவுடன் விஷம் தலைக்கு ஏறி அவன் மறு நிமிடமே இறந்து விழுந்தான்.
இப்படியாக இரு திருடர் கூட்டத்தில் உள்ள அனைவரும், பிராமணரும் இறந்து போயினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு போதிசத்வர் திருடர்கள் கேட்ட பணத்தை எடுத்துக் கொண்டு தம் குருவை விடுவித்து அழைத்துப் போக வந்தார்.
அங்கு ஒரு மரத்தில் தம் குருவின் உடல் வெட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கண்டு "குருவே! நான் சொன்னதை கேட்காமல் மந்திரத்தை உச்சரித்து இப்படி உயிர் இழந்தீர்களே" எனக்கூறிக் கண்ணீர் வடித்தார். பின்னர் தனது குருவின் உடலை முறைப்படி எரித்து ஈமச்சடங்குகளைச் செய்தார். அதன்பிறகு காட்டு மலர்களைச் சேகரித்து அவரது உடலை எரித்த இடத்தில் தூவினார்.
அப்போது அவர் �நான் கூறியபடி மட்டும் என் குரு நடந்து மந்திரத்தை உச்சரிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு உயிர்சேதம் ஏற்பட்டுஇருக்காது. நான் சொன்னதை ஏற்காததால் அவரும் தம் உயிரை இழக்க வேண்டியதாயிற்று. முன்பின் யோசியாமலும் பிறர் சொல்லும் அறிவுரைகளை ஏற்காமலும் நடப்பவர்கள் தமக்கும் கெடுதலை விளைவித்துக் கொண்டு பிறருக்கும் தீங்கை விளைவிப்பார்கள். என் குருவின் மந்திரத்தால் யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. இது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினை� என எண்ணி அதனையே மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி அறிவுரைகளை உபதேசித்து வரலானார்.




போலி சன்னியாசியின் திட்டம்!


வெகு காலத்திற்கு முன் பாஞ்சால நாட்டை ரேணுகன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் சாது சன்னியாசிகளை மிகவும் மதித்து கௌரவிப்பான். ஒரு முறை இமயமலையிலிருந்து மகாரட்சிதர் என்ற முனிவர் தம் பல சீடர்களுடன் பாஞ்சால நாட்டிற்கு வந்தார். அவரை ரேணுகன் வரவேற்று உபசரித்து எல்லாரும் தங்க வசதிகளைச் செய்து கொடுத்தான்.

மழை ஆரம்பமாகி விட்டது மகாரட்சிதரும் தன் சாதுர்மாச விரதத்தை அங்கேயே மேற்கொண்டு நான்கு மாதங்கள் சீடர்களுடன் தங்கி விட்டார். பாஞ்சால மன்னனும் அவர்கள் எல்லாருக்கும் எவ்விதக் குறையும் இல்லாது பார்த்துக் கொண்டான். மழைக்காலம் முடிந்து சாதுர்மாச விரதமும் முடியவே, மகாரட்சிதர் ரேணுகனிடம் விடைபெற்றுக் கொண்டு தம் சீடர்களுடன் இமயமலைக்கு கிளம்பினார். அன்று மதியம் மகாரட்சிதரும் அவரது சீடர்களும் வழியில் ஓரிடத்தில் தங்கி இளைப்பாறினார்கள்.

அப்போது யாவரும் பாஞ்சால மன்னனின் நல்ல குணத்தைப் பாராட்டிப் பேசினர். சீடர்களில் சோதிடம் தெரிந்த ஒருவன் “பாஞ்சால மன்னனுக்கு இப்போது குழந்தையே பிறக்கவில்லை. ஆயினும் அடுத்த ஆண்டிற்குள் ஒரு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது அது தெய்வாம்சத்தோடு கூடி எல்லாராலும் மதிக்கப்பட்டு வரும்” என்றான்.

இதைக் கேட்ட யாவரும் மகிழ்ந்தனர். அந்தச் சீடர்களில் ஒரு போலி சன்னியாசி இருந்தான். அவன் மனதில் பாஞ்சால மன்னனிடம் இந்த நற்செய்தியைக் கூறி நிறையப் பரிசு பெற வேண்டுமென்ற ஆசை பிறந்தது. எனவே அவன் ஏதோ சாக்குச் சொல்லி அந்தக் கூட்டத்தோடு போகாமல் பின் தங்கினான். பிறகு பாஞ்சால மன்னனின் தலைநகருக்குப் போய் மன்னனைக் கண்டு “அரசே உமக்கு அடுத்த ஆண்டிற்குள் அழகிய ஆண் குழந்தை பிறக்கும். இதை என் ஞான திருஷ்டியால் அறிந்தேன்” என்றான்.


அது கேட்டு மன்னன் மகிழ்ந்து “மிக்க மகிழ்ச்சி, யோகீஸ்வரரே! நீங்கள் இங்கேயே இருந்து எமக்கும் என் குழந்தைகளுக்கும் நற்போதனைகளை அளித்து வாரும்” எனக் கூறி அரண்மனை ஓரத்தில் ஒரு தோட்டத்தை அமைத்து வசதியான வீட்டையும் கட்டிக் கொடுத்தான். அந்தப் போலி சன்னியாசி அத்தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிட்டு அவற்றை விற்றுப் பணம் சேர்க்கலானான். அவனிடம் நிறைய பணம் சேரலாயிற்று. ஓராண்டு கழிந்தது. அம்மன்னனின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். போதிசத்வரே அப்படி பிறந்தவர். அவருக்கு சுமனன் என்ற பெயர் வைத்து வளர்த்தார்கள். அவனும் வளர்ந்து பெரியவனானான்.

அப்போது அந்தப் போலி சன்னியாசி அரண்மனைத் தோட்டத்திலேயே இருந்தான். அரசனுக்கோ அவன் சொல்வதுதான் வேத வாக்காக இருந்தது. அவனது கபடத்தன்மையை ரேணுகன் அறியவில்லை. சுமனனோ அறிந்து கொண்டு விட்டான். அவன் அந்த சன்னியாசியின் உண்மை குணத்தை வெளிபடுத்த தீர்மானித்துக் கொண்டான். ஒருநாள் போலி சன்னியாசி காய்கறி தோட்டத்தில் பாத்தி கட்டிக் கொண்டிருந்த போது சுமனன் “ஏய் தோட்டக்காரா!” என்று உரக்கக் கத்திக் கூப்பிட்டான்.

இது போலி சன்னியாசிக்கு எரிச்சலை மூட்டியது. சுமனன் தன்னைப் பற்றித் தெரிந்து கொண்டு விட்டான் என அவன் கண்டு அவனைப் பழி வாங்க எண்ணினான். அதற்கான வழியும் அவனுக்கு தெரிந்தது. அதன்படி ஒருநாள் அரசன் வரும் வேளை தன் வீட்டிலிருந்த பொருள்களை எல்லாம் வாரி மூலைக்கு ஒன்றாகப் போட்டு விட்டு, தன் உடலில் எண்ணெய் தடவிக் கொண்டு போலி சன்னியாசி படுத்து முனகலானான்.

ரேணுகன் தான் மதிக்கும் யோகியின் நிலை கண்டு “சுவாமி! என்ன இது? யார் இப்படிச் செய்தது?” எனக் கேட்டான். அந்த சன்னியாசியும் “எல்லாம் உன் மகன் சுமனன்தான். என்னையும் அடித்து என் பொருள்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்து விட்டான்” என்றான். உடனே ரேணுகன் தன் வீரர்களிடம் “இப்படி அக்கிரமம் செய்த சுமனனின் தலையை வெட்டி எறியுங்கள்” என்று கட்டளையிட்டான்.


கட்டளையை நிறைவேற்றத் தலையாரி சுமனனைக் காணச் சென்றான். அப்போது அவன் தன் தாயுடன் இருந்தான். தந்தையின் கட்டளையைக் கேட்டு அவன் ரேணுகனைக் கண்டு “தந்தையே, நீங்கள் மகாத்மா என்று போற்றும் பேர்வழி போலி சன்னியாசி. பேராசை பிடித்தவன். அரண்மனையில் காய்கறி பயிரிட்டு காவல் வீரர்களை விற்று வரச் சொல்லி பணம் சேர்த்து வைத்திருப்பவன். உண்மையை விசாரியுங்கள்” என்றான்.

ரேணுகனும் தன் அரண்மனைக் காவலாளிகளை விசாரித்து சுமனன் கூறியது உண்மையே எனத் தெரிந்து கொண்டான். போலி சன்னியாசியின் வீட்டைச் சோதனை போட்டதில் அவன் மறைத்து வைத்திருந்த ஏராளமான பணமும் அகப்பட்டது.


உடனே ரேணுகன் போலி சன்னியாசியை மிரட்டவே, அவன் உண்மையை ஒப்புக் கொண்டான். சுமனன் அவனை ஒன்றுமே செய்யவில்லை என்பதும் வெளியாயிற்று. பொய்க் குற்றச்சாட்டுகளுக்காக சன்னியாசிக்கு மன்னன் மரண தண்டனை விதித்தான். தான் தவறு செய்ததாக கூறி ரேணுகன் சுமனனை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் படிக் கூறினான். அவனோ “வேண்டாம். நான் இமயமலைக்குப் போய் தவம் செய்கிறேன்” எனக் கூறிக் கிளம்பி விட்டான்.

ரேணுகனுக்கு அப்போது முதல் சன்னியாசிகள் என்றாலே எரிச்சல். எந்த சன்னியாசி அவனைக் காண வந்தாலும் அவரை அவன் மதிக்கவில்லை. ஒரு போலி சன்னியாசியின் செய்கையால் நல்ல சன்னியாசிகளுக்கும் மதிப்பு போயிற்று.

பொருந்திய ஜாதகங்கள்



கலிங்கப் பகுதியில் பல சிறு நாடுகள் இருந்தன. அவற்றில் தந்தபுரத்து மன்னன் காளிங்கன். அவனுடைய இரு புதல்வர் அரவிந்தனும் கோவிந்தனும் ஆவர். சிறுவர்களாக இருந்த போது அவர்களது ஜாதகங்களைப் பார்த்த சோதிடர்கள், "மூத்த மகன் அரவிந்தன் மன்னனாவான். ஆனால் அவனுக்குக் குழந்தையே பிறக்காது. இளையவன் சன்னியாசியாவான். ஆனால் அவனுக்குப் பிறக்கும் மகனுக்கு இராஜயோகம் உள்ளது" என்றார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பின் காளிங்கன் இறக்க அவன் மகன் அரவிந்தன் மன்னன் ஆனான். இளையவனான கோவிந்தன் பொது நிர்வாகத்தைக் கவனிக்கலானான். எப்படியும் தனக்குப் பிறக்கப் போகும் மகன்தானே அரவிந்தனுக்குப் பின் மன்னனாகப் போகிறான் என எண்ணி, கோவிந்தன் தலை கால் தெரியாமல் துள்ளினான். தன் மனம் போன போக்கில் அதிகாரம் செலுத்தினான். இதனால் சகோதரர்களிடையே மனக் கசப்பு அதிகரித்தது. அரவிந்தன் ஒருமுறை மிகவும் கோபம் கொண்டு கோவிந்தனைக் கைது செய்யும்படிக் கட்டளை இட்டான்.

அப்போது அமைச்சராக போதிசத்வர் அரவிந்தனிடம் இருந்தார். அவர் இரகசியமாக கோவிந்தனைத் தன் மாளிகைக்கு வரவழைத்து அரவிந்தன் பிறப்பித்துள்ள கட்டளையைக் கூறி இரவோடு இரவாக தப்பி எங்காவது ஓடிப் போய் விடுமாறு அவனுக்கு யோசனை கூறினார். கோவிந்தனும் "அப்படியே போய் விடுகிறேன். என்றாவது யாராவது எனது இந்த மோதிரத்தையும் என் சால்வையையும் என் வாளையும் எடுத்து வந்து தங்களிடம் காட்டினால் அவனே என் மகன் என அடையாளம் கண்டு கொண்டு அவனுக்கு உதவ வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான்.


அவரும் அவ்வாறே செய்வதாக வாக்குறுதி அளிக்கவே கோவிந்தனும் யாருக்கும் தெரியாமல் காட்டிற்குள் போய் விட்டான். அதே சமயம் மகத நாட்டை ஆண்ட மன்னனுக்கும் ஒரே புதல்வி இருந்தாள். சோதிடர்கள் "இவள் சன்னியாசி போல வாழ்வாள். ஆனால் இவளுக்குப் பிறக்கும் மகன் அரசன் ஆவான்" எனக் கூறினர்.

இதை அறிந்த சிற்றரசர்கள் எல்லாருமே தாம் அரசகுமாரியை மணக்க விரும்புவதாக மகத மன்னனுக்குச் செய்தி அனுப்பினார்கள். அது ஒரு பெரும் பிரச்னையாக மகத மன்னனுக்கு ஆயிற்று. அவர்களில் யாராவது ஒருவனுக்குத் தன் மகளைக் கல்யாணம் செய்து வைத்தாலும் மற்றவர்கள் ஒன்றுகூடி அவனைக் கொன்று விடுவார்கள் என்றும் அதனால் தன் மகளின் வாழ்க்கையே பாழாகிவிடும் என்றும் பயந்தான். அந்தச் சிக்கலிலிருந்து விடுபட அவன் தன் மனைவியோடும் மகளோடும் சன்னியாசி வேடத்தில் நாட்டிலிருந்து தப்பி காட்டிற்கு வந்து கோவிந்தன் இருந்த இடத்திற்கு அருகில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் மகத மன்னன் தன் மனைவியுடன் காய்கனி கிழங்குகள் கொண்டு வரக் கிளம்பிச் சென்றான். அப்போது அவன் மகள் குடிலில் தனியாக இருந்தாள். அப்போது அவள் பல மலர்களைத் தொடுத்து மாலை கட்டினாள். ஆசிரமத்திற்கு அருகே ஒரு நதி ஓடிக் கொண்டுஇருந்தது. அதன் கரையிலிருந்த மாமரத்தின் மீது ஏறி ராஜகுமாரி தான் கட்டிய மாலையைச் சுழற்றி எறிந்தாள்.

அந்த மாலை சற்று தூரத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கோவிந்தனின் கழுத்தில் போய் விழுந்தது. அவன் அதனை எடுத்துப் பார்த்து ‘ஆகா! எவ்வளவு அழகான மாலை! இந்தக் காட்டில் இப்படி அழகான மாலை கட்டும் பெண் யார் இருக்கிறாள்? தேடிப் பார்க்கிறேன்’ எனத் தீர்மானித்துக் கொண்டான்.

குளித்து விட்டுக் கரையேறி அவன் தன் குடிலை நோக்கிச் செல்லும் போது எங்கிருந்தோ இனிய கானம் கேட்க, பிறகு அவன் அக்குரல் வந்த திசையில் சென்று மாமரத்தை அடைந்து அதில் மகதநாட்டு அரசகுமாரி இருப்பதைக் கண்டான்.
அவளைக் கண்டு அவன் மகிழ்ச்சி அடைந்து அவளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டு முடிவில் "நீ என்னை மணந்து கொள்கிறாயா?" என்று கேட்டான். அவளும் "நீங்களோ ரிஷி. நாங்களோ ஷத்திரியர்கள்" என்றாள்.


அப்போது கோவிந்தன் "நானும் க்ஷத்திரியனே" எனக் கூறித் தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் அவளிடம் சொன்னான். பிறகு இருவரும் ஆசிரமத்திற்குப் போனார்கள். அப்போது மகத மன்னனும் அவன் மனைவியும் திரும்பி வந்திருந்தார்கள்.

கோவிந்தன் அவர்களிடம் தன்னைப் பற்றி விவரமாகக் கூறித் தான் அவர்களது மகளை மணக்க விரும்புவதாகக் கூறினான். மகத மன்னனும் அவனே தன் மகளுக்கு ஏற்ற வரன் என எண்ணி உடனே சம்மதித்தான். கோவிந்தனுக்கும் மகத இளவரசிக்கும் விரைவிலேயே விவாகமும் நடைபெற்றது.

சிறிது காலத்திற்குப் பின் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு விஜயன் எனப் பெயரிட்டு நன்கு வளர்த்து வந்தார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பின் கோவிந்தன் சோதிடர்கள் கூறிய படி கணக்குப் போட்டுப் பார்த்து தன் அண்ணனின் ஆயுட்காலம் முடிவடைந்து போயிற்று எனக் கண்டான். கோவிந்தன் தன் மகன் விஜயனை அழைத்து அவனிடம் தன் மோதிரத்தையும் சால்வையையும் வாளையும் கொடுத்து "நீ இவற்றை எடுத்துப் போய் கிழ மந்திரியாரிடம் காட்டு. அவர் உனக்கு உதவுவார்" எனக் கூறி அனுப்பினான்.

விஜயனும் அந்தபுரத்திற்கு வந்து போதிசத்வரான கிழமந்திரியாரைக் கண்டான். அப்போது அரசனை இழந்த அந்நாடு குழப்பத்தில் இருந்தது. கிழ அமைச்சர் அரச சபையை உடனே கூட்டினார். அவர்களிடம் விஜயன் தான் சிம்மாசனத்திற்கு உரியவன் என்றும் அவன் கோவிந்தனின் மகன் என்றும் விவரமாக எடுத்துக் கூறினார். அதை எல்லாரும் கேட்டு ஆச்சரியப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். விஜயனை தம் மன்னனாக ஏற்றார்கள்.
விஜயனும் கிழ மந்திரியாரான போதிசத்வரின் அறிவுரைகளைக் கேட்டு அதன் படி நடந்து தன் வம்சத்தின் பெயரை நிலை நாட்டினான்.

Saturday, June 25, 2011

உழைத்துக் கொடு

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மன்னன் கொடை வள்ளல் என்ற பெயர் பெற்றிருந்தான். அவனிடம் யார் போய் எதைக் கேட்டாலும் அவன் அதைக் கொடுத்து வரவே அவன் புகழ் எங்கும் பரவி இருந்தது. பண்டிதர்கள் பாமரர்கள் என்று பாரபட்சம் காட்டாமல் பணம், பண்டம், நவரத்தினம், தானியம், என்று அவன் கொடுத்து வந்தது அவனை யாவர் பார்வையிலும் மிகவும் உயர்த்தி விட்டது.

ஒருமுறை மன்னன் தன் பிறந்தநாளின் போது மக்களுக்குப் பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பரிசு பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசுகளை வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டம் குறைந்து கொண்டே போயிற்று. கடைசியில் ஒரே ஒரு அந்தணர் மட்டும் பொறுமையாக வெகு நேரமாக நின்று கொண்டிருப்பதை மன்னன் கவனித்தான். அவன் அவரிடம் "பண்டிதரே! ஏன் அசையாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேளுங்கள். அதைக் கொடுக்கிறேன்" என்றான்.

அந்த அந்தணரும் "அரசே! எனக்குப் பொன்னும் வேண்டாம். மணியோ முத்தோ மானியமோ எதுவும் வேண்டாம். ஆனால் நீங்களாக நேற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதித்து வாங்கிய பொருள் ஏதாவது உங்களிடம் இருந்தால் அதைக் கொடுங்கள். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.

அதைக் கேட்ட மன்னன் திகைத்துப் போனான். அந்தணர் கூறியது அவன் மனதில் சுருக்கென்று தைத்தது. ஆம். அவன் தன் பொருள் என்று எதை எல்லாம் எண்ணினானோ அவை தான் உழைத்துச் சம்பாதித்தவை அல்ல என்பதை அறிந்து கொண்டான். ஆம் அவை யாவும் மக்கள் கொடுத்தவரிப் பணத்தில் வாங்கப் பட்ட பொருள்களே! இதை உணர்ந்த அவன் அந்த அந்தணரிடம் "பண்டிதரே! நானாக உழைத்துச் சம்பாதித்தது என்று எதுவும் இப்போது என்னிடம் இல்லை.


என்னிடம் இப்போது உள்ளவற்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள். கொடுக்கிறேன்" என்று சற்று நாணிக் குறுகிக் கூறினான்.

அந்தணரே "அரசே! இப்போது உங்களிடம் உள்ள எதையும் நான் கேட்க மாட்டேன். எனவே நீங்கள் உழைத்து சம்பாதித்தது எதுவானாலும் ஏற்றுக் கொள்வேன். மற்றவை எவ்வளவு விலை உயர்ந்தனவாக இருந்தாலும் அவை எனக்கு வேண்டவே வேண்டாமே" என்று உறுதி படக் கூறினார். அப்போது மன்னன் "பண்டிதரே! நீங்கள் தயவு செய்து நாளைக்கு வந்தால் நீங்கள் கேட்டபடியே பொருளைக் கொடுக்கிறேன்" என்றான். அந்தணரும் மன்னனை வணங்கி விட்டு சிரித்தவாறே சென்றார்.

மன்னனுக்கு அந்தணர் கூறியதன் பொருள் விளங்கி விட்டது. மன்னனுக்கு மக்களிடமிருந்து கிடைப்பதெல்லாம் அவர்கள் உழைத்துச் சம்பாதித்துக் கொடுத்த பணமே என்றும் அவன் அதைத் தன் பணமாகக் கருதி செலவு செய்வது சரஇல்ல என்றும் உணர்ந்தான். அதனால் அவர் கூறியபடி அந்தணருக்கு ஒன்றை கொடுக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டான்.

மன்னன் தன் பட்டாடைகளைக் களைந்து விட்டு சாதாரணக் கூலியாள் போல ஆடைகளை அணிந்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியே நடந்து சென்றான். அவன் தான் செய்யக் கூடிய வேலை ஏதாவது கிடைக்குமா என்று அலைந்து பார்த்தான். ஆனால் ஒரு வேலை கூடக்கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு மீனவர் குப்பத்திற்குப் போய் பல மீனவர்களிடம் தனக்கு வேலை கொடுக்கும்படிக் கேட்டான். அநேகமாக எல்லோருமே வேலை இல்லை என்றே சொல்லி விட்டார்கள். ஆனால் ஒருவன் மட்டும் அவனது நிலையைக் கண்டு பரிதாபப் பட்டு "நான் உனக்கு வேலை கொடுக்கிறேன். நீ வலை வீசி மீன் பிடித்துக் கொண்டு வரவேண்டும். நீ கொண்டு வருவனவற்றில் பெரிய மீன்களாக இருந்தால் ஒரு மீனிற்கு ஒரு செப்புக் காசு வீதம் கொடுப்பேன். சிறிய மீனாக இருந்தால் ஒரு மீனிற்கு ஒரு சோழி வீதம் தான் கொடுப்பேன்" என்று கூறி மீன் பிடிக்கும் வலையை அவனிடம் கொடுத்தான்.


அவனும் வலையை வாங்கிக் கொண்டு கடலுக்குப் போய் வலையை விரித்துப் போட்டான். அதில் ஒரு பெரிய மீனும் ஒரு சிறிய மீனும் சிக்கின. அவனும் கிடைத்தது போதும் என்று திருப்தி அடைந்து அந்த மீன்களைக் கொண்டு போய் மீனவனிடம் கொடுக்கவே, மீனவனும் ஒரு செப்புக்காசையும் ஒரு சோழியையும் கொடுத்தான். அவனும் அதை வாங்கிக் கொண்டு அரண்மனைக்குச் சென்றான்.

மறுநாள் மன்னன் தர்பாருக்கு வந்தபோது அங்கே அந்தணர் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவரைத் தன்னருகே அழைத்து "பண்டிதரே! நேற்றிரவு நான் வேலை செய்து ஒரு செப்புக்காசும் ஒரு சோழியும் சம்பாதித்தேன். அவற்றை உங்களுக்கு தானமாகக் கொடுக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.

அந்தணரும் மகிழ்ச்சியுடன் அவற்றை வாங்கிக் கொண்டு "இவை போன்ற பொருள்களைத் தான் விரும்புவது" எனக்கூறி மன்னனை வணங்கிவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரது மனைவி மன்னனைக் காணச் சென்ற தன் கணவன் விலையுயர்ந்த பொருள்களை சன்மானமாகப் பெற்று எடுத்துக் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தாள். அவர் வந்ததும் ஆவலுடன் அவள் "சன்மானம் கிடைத்ததா? அவை என்ன? யாராவது அவற்றைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்களா?" என்று ஆவலுடன் கேட்டாள்.

அவரும் "மன்னர் விலையே மதிக்க முடியாத பொருள்களை சன்மானமாகக் கொடுத்திருக்கிறார்" என்று சிரித்துக் கொண்டே கூறி தாம் பெற்ற ஒரு செப்புக் காசையும் ஒரு சோழியையும் அவளிடம் கொடுத்தார். அவற்றை வாங்கிப் பார்த்த அவள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்து "பூ இவ்வளவு தானா உங்களுக்குக் கிடைத்த சன்மானம்? இவற்றைப் பெற்றுக் கொள்ளத்தான் இரண்டு நாட்களாக அரண்மனைக்குப் போய் மன்னரைப் பார்த்தீர்களா?" என்று அழாத குறையாகக் கேட்டாள்.


அந்தணரோ! "இவை மன்னரே உழைத்துச் சம்பாதித்தவை. இவற்றை எனக்குக் கொடுத்தது மிகமிக விலையுயர்ந்த பொருள்களைக் கொடுத்ததற்குச் சமம். இவை வேறு யாருக்குமே கிடைக்காதே" என்றார். அதைக் கேட்ட அவரது மனைவிக்குக் கோபமே வந்து விட்டது. அவற்றைத் தூக்கித் தன் வீட்டு வாசலில் எறிந்து அவள் "ஒரு செப்புக் காசும் ஒரு சோழியும் விலையுயர்ந்த பொருள்களா? யாருக்கு வேண்டும் அவை?" என்று கூவினாள். அந்தணர் வீண் சண்டை எதற்கு என்று எதுவும் பேசவில்லை.

அன்றைய வேலைகளை இருவரும் செய்து விட்டு இரவானதும் படுத்துத் தூங்கினார்கள். மறுநாள் காலையில் அவர்கள் எழுந்து வாசலைப் பார்த்த போது அங்கு இரண்டு மரங்கள் முளைத்து உயர்ந்து நிற்பதைக் கண்டார்கள். ஒரு மரத்தில் தங்கக் காசுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன. மற்ற மரத்தில் வெள்ளிச் சோழிகளாக இருந்தன. அவற்றைக் கண்டு இருவரும் ஆச்சரியப்பட்டு தங்க நாணயங்களையும் வெள்ளிச் சோழிகளையும் பறித்து எடுத்தார்கள். அந்தணர் தம் மனைவியிடம் "பார்த்தாயா! நான் சொன்னது சரிதானே! செப்புக்காசும் சோழியும் மரங்களாக முளைத்தன தங்கக் காசுகளையும் வெள்ளிச்சோழிகளையும் கொடுத்திருக்கின்றன. அவை விலையுயர்ந்த பொருள்கள் தாமே?" என்று கேட்டாள்.

அவரது மனைவியும் "ஆம். விலையுயர்ந்தவையே. அப்போது அவற்றின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை தான் எதையும் உழைத்துச் சம்பாதித்தாலே அதற்கு மதிப்பே அதிகம் தான்" என்றாள். அந்தணர் அவற்றை விற்றுப் பணமாக்கி சுகமாக வாழ்ந்து வந்தார்.

Friday, June 17, 2011

ஆடு சிரித்தது!



பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் ஒரு மலை மீது உயரமான தேவதாரு மரமாக இருந்து அப்பகுதியிலுள்ள மக்களின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தார். அந்த மலை அடிவாரத்தில் ஒரு பண்டிதர் ஒரு குருகுலத்தை அமைத்துக் கொண்டு அங்கு வந்த பல சீடர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.
ஒருமுறை அந்தப் பண்டிதர் தாம் செய்த ஒரு பாவத்திற்குப் பரிகாரம் தேட ஒரு விரதத்தை மேற்கொண்டார். அந்த விரதத்தின் முடிவில் ஒரு ஆட்டை பலி கொடுத்தாக வேண்டும் என்ற ஒரு மூடநம்பிக்கை இருந்து வந்தது. அவரும் அவ்வாறு பலியிட நினைத்தார்.
அவர் ஒரு பணக்காரரிடம் போய் ஒரு ஆட்டை யாசகம் கேட்டார். அந்தப் பணக்காரரும் அவருக்கு இல்லையென்று சொல்லாமல் கொழுத்த ஆடு ஒன்றை அவருக்கு தானமாகக் கொடுத்தார். பண்டிதர் தம் குருகுலத்திற்கு அதனை ஓட்டிப் போய் தன் இரு சீடர்களிடம் ஒப்படைத்து "இதனை நதியில் நீராட்டி இதன் கழுத்தில் ஒரு மலர் மாலையைப் போட்டுக் கொண்டு வாருங்கள். அதற்குப் பின் இதனை பலியிடலாம்" எனக் கூறி அனுப்பினார்.
சீடர்களும் அந்த ஆட்டை நதிக்குக் கொண்டு சென்றனர். அப்போது ஆகாயத்தில் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. சீடர்களில் ஒருவன் ஆட்டை நதியில் குளிப்பாட்டினான். மற்றவன் மலர்களைப் பறித்து ஒரு மாலை கட்டலானான்.
மாலை தயாரானதும் அவர்கள் அதன் கழுத்தில் அதனைப் போட்ட போது அந்த ஆடு பலமாகச் சிரித்தது. ஆடு சிரிப்பதைக் கண்டு அந்த இரு சீடர்களும் பயந்து போனார்கள்.


அங்கிருந்து அவர்கள் ஓட நினைத்த போது அந்த ஆடு கண்ணீர் வடிப்பதைக் கண்டார்கள். அது கண்டு பயம் தெளிந்தவர்களாய் அவர்கள் அதனைப் பிடித்துக் கொண்டு போய் தம் குருவின் முன் நிறுத்தினார்கள்.
அவர்கள் தம் குருவிடம் இரகசியமாக "இந்த ஆட்டை ஏதோ பேயோ பிசாசோ பூதமோ பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆற்றில் குளிக்கும் போது இது மனிதனைப் போலச் சிரித்தது. பிறகு அழுதது அதனால் இதனைப் பலி கொடுப்பதால் பலன் கிடைக்குமா என யோசியுங்கள். அதன் பிறகு ஒரு முடிவெடுங்கள்" என்றனர்.
குருவும் ஏதோ சொல்ல நினைத்த போது அந்த ஆடே"என்னை தாராளமாக பலியிடலாம், அதற்குப் பலன் கிட்டும். உங்களுக்கு அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்றது. அது கேட்டு குருவும் சீடர்களும் பயப்படவே அந்த ஆடும் "பயப்படாதீர்கள். உங்களுக்கு எவ்விதக் கெடுதலும் நேராது" என்றது.
குருவும் சற்று பயம் தெளிந்தவராய் "ஒரு ஆடு மனிதனைப் போல பேசுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே" என்றார்.
அந்த ஆடோ "இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? நானும் ஒரு காலத்தில் மெத்தப்படித்த பிராம்மணன் தான்" என்றது.
அது கேட்டு குரு "அப்படியானால் நீ ஏன் இந்தப் பிறப்பை அடைந்தாய்? மனிதன் என்ற உயர் பிறப்பிலிருந்து ஆடு என்கிற மிருகமாகி தாழ் பிறப்பிற்கு வந்து விட்டாயே" எனக் கேட்டார்.
அதற்கு அந்த ஆடும் ஈனக் குரலில் "நானும் பல பாவகாரியங்களைச் செய்தேன். அவற்றிற்குப் பரிகாரமாக உங்களைப் போல ஒரு விரதம் மேற்கொண்டேன். பிரதமுடிவில் நீங்கள் இப்போது செய்ய இருப்பது போல ஒரு ஆட்டை பலி கொடுத்தேன். அதன் பலனாக நான் ஐநூறு பிறப்புகளில் ஆடாகப் பிறக்க வேண்டியதாயிற்று" என்றது.
குருவும் ஆச்சரியப்பட்டு "ஐந்நூறு பிறப்புகளும் ஆடாகவா?" என்று கேட்டார். அதுவும் "ஆமாம். இதுவரை நானூற்றுத் தொண்ணூற்று ஒன்பது பிறப்புகள் எடுத்தாகி விட்டது.


ஒவ்வொரு பிறப்பிலும் யாராவது ஒருவர் என்னைப் பலி கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார். இன்று நான் பலியாகப் போவது ஐந்நூறாவது தடவை. இந்தத் தடவை நான் பலியானதும் எனக்கு விடுதலை கிடைத்து விடும். நதியில் நான் நீராடியதும் எனக்கு என் முன் பிறப்பைப் பற்றித் தெரிந்தது. அதற்காகத் தான் சிரித்தேன்" என்றது.
"அது சரி. பிறகு ஏன் அழுதாய்?" என்று குரு கேட்டார். அதற்கு அந்த ஆடு "ஐந்நூறு பிறப்புகளுக்கு முன் நான் செய்த பாவத்தையே நீங்களும் செய்து விட்டு என்னை பலி கொடுக்கப் போகிறீர்கள். எனவே நீங்களும் என்னைப் போல ஐந்நூறு பிறப்புகள் ஆடாகப் பிறந்து ஐந்நூறு தடவைகள் பலியாக வேண்டுமே என்று நினைத்துத் தான் நான் கண்ணீர் விட்டேன்" என்றது.
அது கேட்டு குரு ஆழ்ந்த யோசனை செய்தார். அவரது சீடர்களும் சற்று தூரத்தில் நின்றவாறே ஆடு கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆடின் நிலைமையைக் கேட்டு இருவரின் கண்களிலிருந்தும் தாரைதாரையாக கண்ணீர் வந்தது. அது மட்டும்
இல்லாமல் அந்த ஆட்டைப் பலி கொடுத்தால் தம் குருவிற்கு என்ன கதி நேரும் என்றும் மிகவும் வருந்தினார்கள்.
குருவும் அந்த ஆட்டையும் சீடர்களையும் மாறி மாறிப் பார்த்தார். தம் பாவத்தைப் போக்க ஒரு ஆட்டை பலி கொடுப்பது அறியாமையே ஆகும் என அவர் உணர்ந்தார். அது மட்டுமல்ல, அப்போது ஒரு ஆட்டை பலியிட்ட அந்தப் பாவத்தையும் ஏற்க வேண்டுமே எனவும் நினைத்தார்.


சற்று நேரம் யோசித்த பிறகு அவர் அந்த ஆட்டிடம் "பயப்படாதே. நான் உன்னை பலியிடப் போவதில்லை" என்றார். ஆடோ "நான் மரணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அது எவ்வளவு விரைவில் எனக்கு வருகிறதோ அவ்வளவுக்கும் நல்லது" என்றது.
ஆனால் குருவோ "நீ என்ன சொன்னாலும் உன்னை நான் பலியிடப் போவதில்லை" என்றார். அந்த ஆடும் "இன்று நான் இறக்க வேண்டும் என்றிருக்கிறது, அதனால் நீங்கள் என்னைக் கொல்லாவிட்டாலும் இன்று வேறு யாராவது என்னைக் கொல்லத்தான் போகிறார்கள்" என்றது. ஆடின் வார்த்தையைக் கேட்ட குருவோ "அதெல்லாம் இல்லை. உன்னை நான் காப்பாற்றுவேன். யாரும் உன்னைக் கொல்லாதபடி பார்த்துக் கொள்வேன். அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்கிறேன்" என்றார்.
அவர் தம் சீடர்களிடம் அந்த ஆட்டை விட்டு விடும்படிக் கூறினார். ஆடும் அங்கிருந்து ஓடி ஒரு பழத்தோட்டத்தில் சற்று நேரம் திரிந்தது. பிறகு அது நதிக்கரை ஒரமாக நடந்தது. குருவும் சீடர்களும் அதனைப் பின் தொடர்ந்து சென்றனர். ஆடு மலை மீது செல்ல அவர்களும் அதன் பின் போய்க் கொண்டே இருந்தார்கள்.
மலை மீது மேகங்கள் சூழ்ந்தன. ஆடு மலை உச்சியை அடைந்தது குருவும் சீடர்களும் அதனைப் பார்த்தவாறே நின்றனர். அப்போது திடீரென இடி இடித்து மின்னல் வெட்டியது. அது அந்த ஆட்டின் மீது விழுந்தது. அது கண்டு குருவும் சீடர்களும் பெருமூச்சு விட்டவாறே தம் குடிலுக்குத் திரும்பினார்கள்.
அவர்களைக் கண்டு தேவதாருமரமாக நின்ற போதிசத்வர் மிக்க மகிழ்ச்சியுற்றார். தாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக விரதங்கள் இருந்து ஜீவராசிகளை பலி கொடுப்பது வீண் என்ற உண்மையை மனிதர்கள் அப்போது முதலாவது உணரத் தலைப்பட்டார்களே என்பதே அவரது மகிழ்ச்சிக்குக் காரணமாம்.



அதிசயத் திருடன்



பணக்காரர்களைக் கொள்ளைஅடித்து ஏழைகளுக்கு உதவி புரிந்த ராபின்ஹுட் என்ற கதாநாயகனைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். கேரள மாநிலத்தில் அதே போன்ற ஓர் அதிசயத் திருடன் நிஜமாகவே இருந்ததுண்டு. கொச்சுண்ணி என்ற பெயர் கொண்ட அந்தத் திருடன் ஏழைகளை வஞ்சித்து பணம் பறிக்கும் செல்வந்தர்களைக் கொள்ளையடித்து வந்தான். ஆனால் இவ்வாறு திருடிய பணத்தை தனக்குஎன்று பயன்படுத்தாமல் அதைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி வந்தான். இதனால் ஏழைகள் அவனிடம் நட்புரிமை பாராட்டிய போதிலும் அவன் பெயரான ‘காயம் குளம் கொச்சுண்ணி’ என்பதைக் கேட்டவுடனேயே பண்காரர்களுக்கு குலைநடுக்கம் ஏற்பட்டது.

காயங்குளம் என்ற ஊரில் ஏழைகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஒரு ஜமீன்தார் இருந்தார். தங்க நகை முதலிய ஆபரணங்களை அடமானமாகப் பெற்றுக் கொண்டு மிக அதிக வட்டிக்குப் பணம் கடன் கொடுப்பது அவர் வழக்கமாகஇருந்தது. பெரும்பாலானவர்கள் அசலை குறித்த தவணையில் செலுத்த முடியாது தவிக்கையில், அவர்களது அடமானப் பொருட்களை ஜமீன்தார் தன்னுடையதாக்கிக் கொள்வார். இவ்வாறு சேர்த்த செல்வத்தினால் அவர் பெரிய மாளிகையே கட்டி விட்டார்.

அந்த மாளிகையில் இரட்டைச் சுவர்களை அமைத்து தன் இருப்பிடத்தை உறுதியாகவும் பத்திரமானதாகவும் ரகசிய அறைகள் அடங்கிய தாகவும் ஏற்படுத்திக் கொண்டார்.


இவ்வளவு பந்தோபஸ்து எதற்கு என்று நண்பர்கள் யாராவது கேட்டால் "கொச்சுண்ணி திருட முயற்சித்தால் என்னிடமுள்ள அடமானப் பொருட்களை நான் எப்படி பத்திரமாக பாதுகாக்க முடியும்? ஆகவே தான் என் வீட்டை ஒரு மர்மக் கோட்டை ஆக்கிவிட்டேன். இப்போது பத்து கொச்சுண்ணிகள் வந்தாலும் திருட முடியாது" என்று பெருமை பேசினார்.

அவரது இந்த வாய் சவால் கொச்சுண்ணியின் செவிகளை எட்டியது. ஜமீன்தாருக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்த கொச்சுண்ணி ஒருநாள் நேராக ஜமீன்தாரை சந்தித்து பணம் கடன் கேட்டான். அவர் தராவிட்டால் அவரது வீட்டில் புகுந்து திருடலாம் என்று எண்ணினான். ஆனால் ஜமீன்தார் உடனே கடன் கொடுத்து விட்டார். கொச்சுண்ணியால் தன் வீட்டில் திருட முடியாது என்று சவால் விட்ட ஜமீன்தாரை, இப்போது வேறு வழியில் கொச்சுண்ணி மடக்க எண்ணினான்.

கிருஷ்ணன் நாயர் என்பவன் தனது நகைகளை ஒரு முறை ஜமீன்தாரிடம் அடகு வைத்து ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினான். இதை அறிந்த கொச்சுண்ணி ஒரு நாள் இரவு ஜமீன்தாரின் வீட்டை அடைந்தான். ஜமீன்தாரின் தினசரி நடவடிக்கைகளை நன்கு அறிந்திருந்த கொச்சுண்ணிக்கு முன் இரவு நேரத்தில் ஜமீன்தார் என்ன செய்வார் என்பது தெரிந்திருந்தது.

ஜமீன்தார் உடலில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, தன் வீட்டிலுள்ள சிறிய குளத்தில் குளிப்பதற்குத் தயாராக இருந்தார். இதுதான் சமயம் என்று வீட்டிலுள்ள கொச்சுண்ணி வீட்டின் முன்புறம் மறைவாக நின்று கொண்டு, ஜமீன்தாரது மனைவியை அழைத்து, "கிருஷ்ணன் நாயர் வந்திருக்கிறான். அவனிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அவன் அடகு வைத்திருந்த நகைகளை திருப்பிக் கொடு" என்று ஜமீன்தாருடைய குரலில் பேசினான். தன் கணவர் தான் தோட்டத்திலிருந்தபடியே பேசுகிறார் என்று நம்பிவிட்ட ஜமீன்தார் மனைவி அடகு நகைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.


அங்கு நின்றிருந்த கொச்சுண்ணியின் கையிலிருந்து பணப்பையைப் பெற்றுக் கொண்டு நகைகளைக் கொடுத்து விட்டாள். கொச்சுண்ணியும் நகைகளுடன் சென்று விட்டான். இது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஜமீன்தாருக்குத் தெரியாது.

சில நாள்கள் கழித்து கிருஷ்ணன் நாயர் ஜமீன்தாரிடம் வந்து தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்து அடகு வைத்த நகைகளைக் கேட்டான். பணத்தைப் பெற்றுக் கொண்டு உள்ளே நகைகளைத் தேடிய ஜமீன்தாருக்கு அவற்றைக் காணாததால் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே தன் மனைவியைக் கூப்பிட்டு விசாரித்தார். அவள், "உங்களுக்கு மறந்து விட்டதா? நீங்கள் தானே சில நாள்களுக்கு முன் கிருஷ்ணன் நாயர் வந்திருந்த போது அவருடைய பணத்தைப் பெற்றுக் கொண்டு நகைகளைத் திருப்பிக் கொடுக்கச் சொன்னீர்கள்!" என்றாள்.

"அப்படியா, அந்தப் பணம் எங்கே?" என்று ஜமீன்தார் கேட்டார். அவளும் கொச்சுண்ணி தந்த சிவப்பு நிற பணப்பையைக் கொண்டு வந்தாள். அதைத் திறந்து பார்த்தால் உள்ளே பணமே இல்லை.

பெருத்த அதிர்ச்சியுற்ற ஜமீன்தார் கிருஷ்ணன் நாயரிடம் நிலைமையை விளக்கித் தன்னை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். நகைகளுக்கு பதிலாக அதற்குச் சமமான மதிப்புஉள்ள பணம் கொடுத்து அவனை அனுப்பினார்.
ஜமீன்தாரும் அவரது மனைவியும் தாங்கள் ஏமாற்றப் பட்டு விட்டதை உணர்ந்தனர். ஜமீன்தார் தன் மனைவியிடம் "அன்று வந்த ஆள் எப்படி இருந்தான்?" என்று கேட்க "நான் உன்னிப்பாக கவனிக்கவில்லை. நீங்களே கொடுக்கச் சொன்னதால் தான் வந்திருப்பது கிருஷ்ணன் நாயர் என்று நினைத்தேன்" என்றாள்.

"ஆகா! இது கொச்சுண்ணியின் வேலையா!" என்ற எண்ணம் தோன்றவே ஜமீன்தாருக்கு அதிர்ச்சியுடன் பயமும் ஏற்பட்டது. தன்னுடைய குரலில் பேசி தன் மனைவியை ஏமாற்றி விட்டானே, இன்னும் என்னவெல்லாம் செய்வானோ என்ற பயம் வந்தது.

இப்படி சோகக் கடலில் மூழ்கிஇருந்த இருவரையும் நோக்கி சில மணிநேரங்களில் கொச்சுண்ணியே வந்தான் என்றால் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? செய்வதையும் செய்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல், "ஏன் இப்படி இருவரும் கவலையாக இருக்கிறீர்கள்?" என்றான் கொச்சுண்ணி. ஜமீன்தாரால் பேசவே முடியவில்லை. அவர் மனைவி நடந்ததை சொன்னாள்.


அவள் சொன்னதைக் கேட்டு கடகடவென சிரித்த கொச்சுண்ணி ஒரு பையை நீட்டி "இதோ அந்த நகைகள். சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்" என்றானே பார்க்கலாம். பிறகு தொடர்ந்து "கிருஷ்ணன் நாயரைக் கூப்பிட்டு அவனுக்கு நகைகளைக் கொடுத்துவிட்டு உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். என்னமோ, பத்து கொச்சுண்ணிகள் வந்தாலும் உங்கள் வீட்டில் திருட முடியாது என்று சவடால் அடித்தீர்களல்லவா? அதற்காகத்தான் இப்படிச் செய்தேன்" என்று கொச்சுண்ணி பதில் கூறினான்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் ஜமீன்தார் நல்லவராக திருந்தி விட்டார் என்று கொச்சுண்ணி கேள்விப்பட்டிருந்தான். ஆகவே அதன் பிறகு கொச்சுண்ணி ஜமீன்தாருக்கு இடைஞ்சல் எதுவும் செய்யவில்லை.

அந்த ஊரில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஒரு கொப்பரை வியாபாரி இருந்தான். அவன் வியாபாரம் சரிவர நடைபெறவில்லை. அடிக்கடி அதிக வட்டிக்குப் பணம் வாங்கி ஏகப்பட்ட சிக்கலில் மூழ்கி இருந்தான். இவ்வாறு வியாபாரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போதும், என்றாவது நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் அவன் நாள்களை ஓட்டி வந்தான்.

ஒருநாள் அவன் கொப்பரை தேங்காய்களை ஆலப்புழைக்குச் சென்று விற்றுவிட்டு, எதிர்பார்த்த விலையில் விற்பனை ஆகவில்லை என்பதனால் வருத்தத்துடன் தனது ஊர் நோக்கிச் செல்லும் படகில் அமர்ந்து இருந்தான். திடீரென அவர்கள் பின் பக்கத்திலிருந்து ஒரு விசைப்படகு வேகமாக வந்தது. அதிலிருந்து ஒருவன், வியாபாரி சென்று கொண்டிருந்த படகுக்குத் தாவியேறினான். அது கொச்சுண்ணி என்று அறிந்தவுடன் வியாபாரி பயந்து நடுங்கினான்.
கொச்சுண்ணி வியாபாரியை யாரென்று கேட்டான். வியாபாரி, "நான் கொப்பரை தேங்காய் விற்பவன். ஆலப்புழையிலிருந்து திரும்பி வருகிறேன்" என்றான்.


"தேங்காய் வியாபாரியா நீ? அப்படியானால் உன்னிடம் அதிகப் பணம் இருக்கும். அதை இப்போதே என்னிடம் கொடுத்து விடு" என்று கொச்சுண்ணி கட்டளையிட்டான்.

"ஐயா, நான் ஓர் ஏழை வியாபாரி. என்னை விட்டு விடுங்கள்" என்று வியாபாரி கெஞ்சினான். "நான் யார் தெரியுமா? நான்தான் கொச்சுண்ணி. நான் சொல்கிறபடி செய்," என்று கொச்சுண்ணி அதிகாரம் செய்தான். வேறு வழியின்றி தன்னிடமுள்ள பணம் இருநூற்று ஐம்பது ரூபாயை வியாபாரி கொச்சுண்ணியிடம் தந்து விட்டான். கொச்சுண்ணி மீண்டும் தன் படகில் ஏறிச் சென்று விட்டான்.

வீட்டுக்கு வந்ததும் வியாபாரி நடந்ததைத் தன் மனைவியிடம் சொல்ல, அவள் மனமுடைந்து அழுதாள். "இப்போது பணத்துக்கு என்ன செய்வது? நமது வீட்டை விற்று விடலாம். அதில் கிடைக்கும் பணத்தில் மீண்டும் வியாபாரம் செய்யலாமா?" என்று மனைவி கேட்க, வியாபாரிக்கும் அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

ஆனால் வீட்டை விற்க முயற்சித்த வியாபாரிக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அவன் எதிர்பார்த்த விலைக்கு வீடு விற்பனையாகவில்லை. இவ்வாறு பலவிதமான சோதனைகளுக்கும் ஆளான வியாபாரியின் வீடுதேடி ஒருநாள் கொச்சுண்ணியே வந்து விட்டான். "வியாபாரியே, பயப்படாதே! உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன். உன்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவே நான் வந்துள்ளேன். உன்னிடமிருந்து பணத்தைக் கைப்பற்றிய அன்றே நீ ஓர் ஏழை வியாபாரிதான் என்று தெரிந்து விட்டது. அன்று எனக்குப் பணம் தேவையாயிருந்ததால் உன்னிடம்இருந்து பலவந்தமாகப் பணத்தை எடுத்துக் கொண்டேன். அதற்காக வருந்துகிறேன். எடுத்துக் கொள் உன் பணத்தை" என்று சொல்லிவிட்டு கொச்சுண்ணி சென்று விட்டான்.

அந்த பணப்பையில் அன்று கொச்சுண்ணி எடுத்துக் கொண்டதைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகப் பணம் இருந்தது. கொச்சுண்ணியின் இரக்க குணத்தை அறிந்து உணர்ச்சி வசப்பட்ட வியாபாரி, "கடவுளே கொச்சுண்ணியின் நல்ல மனதிற்காக அவனை நீண்ட காலம் வாழச் செய்யுங்கள்" என்று பிரார்த்தனை செய்தான்.

Friday, May 20, 2011

அசுரனைத் துரத்திய அதிமேதாவிகள்

ஒரு கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களுள் மோயித்திரா என்பவன் பிறவியிலிருந்தே குருடன். மற்றவனான புக்கான் பிறவியில்இருந்து நோண்டி. அவர்கள் அடிக்கடி கிராமத்து ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கதை பேசுவதுண்டு.

ஒரு சமயம் அந்த கிராமத்தில் பிஹு பண்டிகை கொண்டாடப்பட்டது. கிராமம் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் அமர்க்களப் பட்டது. ஆனால் நண்பர்கள் புக்காலும் மோயித்திராவும் அந்த நிகழ்ச்சிகளை ரசிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். அப்போது அவர்கள் நிகழ்ச்சிகளை ரசிக்க ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி குருடனான மோயித்திரா தன் தோளில் நோண்டியான புக்கானைத் தூக்கிக் கொண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்குச் சென்றான். தான் கண்ணால் காண்பதையெல்லாம் புக்கான் மோயித்திராவுக்கு எடுத்துரைக்க இவ்வாறு அவர்களாலும் நிகழ்ச்சிகளை ரசிக்க முடிந்தது.

பண்டிகை முடிந்த பிறகும் கூட, அவர்கள் இந்த வழக்கத்தைத் தொடர்ந்தனர். இதனால் தங்களுடைய உடல் குறைபாடுகளை ஓரளவு மறந்து விட்டனர் என்றே சொல்லலாம. ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் மோயித்திரா புக்கானை நோக்கி, "நாம் எவ்வளவு நாட்கள்தான் இவ்வாறு வீணே காலத்தை கழிப்பது? நாம் இந்த கிராமத்தை விட்டு எங்காவது போய் வேலை செய்து பிழைத்துக் கொள்வோம்" என்றான். "மோயித்திரா இந்த கிராமத்திற்குள் சுற்றி வருவது சுலபம். ஆனால் இங்கிருந்து பக்கத்து நகரத்திற்கெல்லாம் என்னைத் தூக்கிக் கொண்டு செல்ல உன்னால் முடியுமா?" என்று புக்கான் கேட்டான்.

அதற்கு மோயித்திரா," பரவாயில்லை நடக்க முடியும் வரை உன்னை சுமப்பேன். நடுநடுவில் ஓய்வு எடுத்துக் கொள்வேன். ஆகவே நாம் நகரத்திற்குச் செல்வோம் வா" என்று கூறினான்.


இவ்வாறு தீர்மானித்தபின், மறுநாள் இருவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கிவிட்டு கிராமத்தை விட்டுக் கிளம்பினர். மோயித்திரா புக்கானைத் தோளில் சுமந்து கொள்ள புக்கான் செல்லும் வழியில் தான் காணும் காட்சிகளை எல்லாம் தன் நண்பனுக்கு விவரித்துக் கொண்டே சென்றான். அவ்வாறு செல்லுகையில் வழியில் ஓரிடத்தில் சாலையோரம் ஒரு மத்தளம் தென்பட்டது. அதைப்பார்த்த புக்கான், அதை எடுத்துத் தன்னுடன் வைத்துக் கொண்டான்.

வழியில் ஒரு கிணற்றில் நீர் எடுத்துப் பருகி இருவரும் இளைப்பாறினார்கள். அங்கு கிணற்றடியில் ஒரு கயிறு தென்பட்டது. இதுவும் நமக்குப் பயன்படும் என்று கருதிய நண்பர்கள் அதையும் எடுத்துக் கொண்டனர். கொஞ்சதூரம் சென்றவுடன் ஒரு குளம் தென்பட்டது. குளக்கரையில் அமர்ந்து இருவரும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அவர்களை நோக்கி ஓர் ஆமை ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த புக்கான் "நண்பா, ஓர் ஆமை நம்மை நோக்கி வருகிறது. அதையும் எடுத்துக் கொள்வோமா?" என்று கேட்டுவிட்டு, அந்த ஆமையையும் அவன் எடுத்துக் கொண்டான்.

இப்படி நாள் முழுதும் சென்று கொண்டிருந்த நண்பர்கள் இறுதியில் மாலை நேரம் வந்ததும், இரவு தங்குவதற்குத் தகுந்த இடத்தைத் தேடினார்கள். மோயித்திராவின் தோளில் அமர்ந்திருந்த புக்கான் கண்களில் ஒரு வீடு சற்றுத் தொலைவில் தென்பட்டது. இரவு அங்கு தங்கி விடலாம் என எண்ணி, இருவரும் அந்த வீட்டுக்குச் சென்றனர்.
அந்த வீட்டுக்குள் நுழைந்த நண்பர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டிலிருந்த ஓர் அறையில் கோரமான உருவத்துடன் ஓர் அசுரன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டு நடுங்கிய இருவரும் சுற்றுமுற்றும் வேறு ஏதாவது வீடு தென்படுகிறதா என்று பார்த்தனர். எங்கும் எதுவும் தென்படாததால், அந்த அசுரன் உள்ள வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போயிற்று.


முன்னெச்சரிக்கையாக அசுரன் படுத்துறங்கிய அறையின் கதவை வெளிப்புறம் தாழிட்டு விட்டு, நண்பர்கள் மற்றோர் அறையின் உள்ளே சென்று அதை உட்புறம் தாழிட்டுக் கொண்டனர். அந்த அறையில் ஏராளமான உணவுப் பண்டங்களைக் கண்ட நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியுடள் வயிறார அவற்றை உண்டனர். அசுரன் விழித்தெழுந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி ஒரு திட்டமும் தயார் செய்தனர்.

அவர்கள் கொண்டு வந்திருந்த மத்தளம் தற்செயலாகத் தரையில் உருண்டு விழ, அந்த சத்தத்தில் அசுரன் விழித்துக் கொண்டான். தான் வெளியில் செல்ல முடியாமல் தன் அறைக்கதவு வெளியில் தாளிடப் பட்டுள்ளதை அறிந்தவுடன், அசுரன் கொதித்தெழுந்தான். "யாரடா என் அறைக் கதவை தாளிட்டது? கதவைத் திற" என்று பெரிய குரலில் கத்தினான்.

நண்பர்கள் முன்னமே திட்டமிட்டபடி மத்தளத்தை பலமாகக் கொட்டினார்கள். அந்த ஒலியைக் கேட்டுத் துணுக்குற்ற அசுரன் "யார் நீ?" என்று கத்தினான். உடனே மோயித்திரா கட்டைக் குரலில் "நீ யாரென்று முதலில் சொல்" என்று உரக்கக் கத்தினான். "நான் அசுரன். ஆமாம் நீ யார்?" என்று அசுரன் கேட்க. "நான் அசுரர்களின் தலைவன்" என்று மோயித்திரா பதிலுக்குக் கத்தினான். அதைக் கேட்டு திடுக்கிட்ட அசுரன் "இல்லை, நீ பொய் சொல்கிறாய். வெளியில் வா" என்றான்.

"நீ தான் பொய் சொல்கிறாய். நீ அசுரன் என்பதற்கு என்ன அத்தாட்சி?" என்று மோயித்திரா பயப்படாமல் கேட்க, அசுரன் தன் தலைமுடி ஒன்றைப் பிய்த்து ஜன்னல் வழியே வீசினான். "பார் என் முடியை எவ்வளவு பருமனாகஇருக்கிறது என்று! இப்போது சொல்" என்றான் அசுரன்.

உடனே மோயித்திரா தாங்கள் கொண்டு வந்த கயிற்றை அசுரன் பக்கம் வீசி எறிந்து "என்னுடைய முடியைப் பார்" என்று சவால் விட்டான். அதைக் கயிறு என்று அறியாத அசுரன் உண்மையாகவே பயந்து போனான். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, தன் தலை முடியிலிருந்து ஒரு பேனை எடுத்துத் தூக்கி எறிந்தான். "தவளை அளவு பெரிதான என் தலைப் பேனைப்பார்" என்று அசுரன் வால் விட்டான். "ஹாஹ்ஹா" என்று சிரித்த மோயித்திரா" இதுதான் உன் பேனா! என்னுடைய தலையிலுள்ள பேனைப்பார்" என்று ஆமையைத் தூக்கி அசுரனிடம் எறிந்தான். ஆமையைப் பார்த்த அசுரன் கதி கலங்கி விட்டான்.


உண்மையிலேயே வெளியில் உள்ளவன் பெரிய அசுரன் என்ற தப்புக் கணக்குப் போட்ட அசுரன் "ஐயா, நீங்கள் பெரிய அசுரன் என்று ஒப்புக் கொள்கிறேன். கதவைத் திறவுங்கள். நாம் இருவரும் நண்பர்கள் ஆகலாம்" என்று சமாதானமாகப் பேசினான்.

"தாராளமாகக் கதவைத் திறக்கிறேன். வெளியில் வா. எனக்கு ஒரே பசி. நீ வெளியில் வந்ததும் உன்னை கடித்துக் குதறித் தின்னப் போகிறேன்" என்று மோயித்திரா சொன்னதும் அசுரன் பெருத்த அதிர்ச்சி அடைந்தான். மோயித்திரா புக்கானின் உதவியுடன் சத்தமின்றி அசுரன் அறைக் கதவுத் தாழ்ப்பாளை நீக்கி விட, இருவரும் ஒளிந்து கொண்டனர். இதற்குள் அசுரன் தன் அறைக் கதவை இலேசாகத் திறக்க முயற்சி செய்ய கதவு உடனே திறந்து கொண்டது. மெதுவாக வெளியில் எட்டிப்பார்த்த அசுரன் கண்களில் யாரும் தென் படாததால் தப்பித்தேன் பிழைத்தேன் என்று அந்த வீட்டை விட்டு ஒரே ஓட்டம் பிடித்து விட்டான்.

பிறகு இரு நண்பர்களும் தைரியமாக வெளியே வந்து, அசுரனுடைய உடமைகளை ஆராய்ச்சி செய்தனர். அவனிடம் இருந்த ஏராளமான பணம், காசு ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். அசுரன் வைத்திருந்த தைலங்களில் ஒன்றை தன் கண்களில் தடவ, மோயித்திராவுக்குக் கண் பார்வை திரும்பி விட்டது. மற்றொரு தைலத்தைத் தன் கால்களில் தடவ, புக்கானுக்குக் கால்கள் சரியாகி விட்டன. இருவரும் அசுரனிடம்இருந்த பணம், காசு, உணவுப் பொருட்கள், தைலங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தங்கள் கிராமத்திற்கேத் திரும்பி விட்டனர். அதன்பிறகு தாங்கள் கொண்டு வந்தப் பணத்தைக் கொண்டு சுக வாழ்வு வாழத் தொடங்கினர்.