Showing posts with label பீர்பால் கதைகள். Show all posts
Showing posts with label பீர்பால் கதைகள். Show all posts

Saturday, June 25, 2011

ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது. அது வசந்த காலம் என்பதால் மரங்களும், செடிகளும் வண்ண மலர்களுடன் பூத்துக் குலுங்க, அவற்றிலிருந்து வீசிய நிறுமணம் மனத்தைக் கிறங்கச் செய்தது. இளங்காலையில் வீசிய தென்றல் அவர் உடலை இதமாக வருடிச் செல்ல, அவர் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தார்.

இவ்வாறு தன்னை மறந்த நலையில் உலவிக் கொண்டிருந்த அக்பர், நந்தவனத்தில் நடந்து செல்லும் வழியில் கல் ஒன்று இருப்பதை கவனிக்கத் தவறி விட்டார். அதில் கால் இடறி இடித்துக் கொள்ள, கால் கட்டை விரலிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அதுவரை அவர் மனத்தில் பொங்கிய உற்சாகம் கணத்தில் மறைந்து போக, கோபமும், எரிச்சலும் குடி கொள்ள, அவர் "தோட்டக்காரன் எங்கே? எங்கே இருந்தாலும் வா!'' என்று கத்தினார். தோட்டக்காரன் மண்வெட்டியை எடுக்கக் குடிசைக்குள் சென்று இருந்ததால், அக்பரின் கூக்குரல் அவன் காதில் விழவில்லை. கூப்பிட்ட குரலுக்கு தோட்டக்காரன் வராததால், அக்பரின் கோபம் தலைக்கு ஏறியது. அரண்மனையை அடைந்தவுடன் காவல் அதிகாரியை அழைத்தவர், நடந்தவற்றைக் கூறி தோட்டக்காரனை தூக்கிலுடும் படி உத்தரவிட்டார்.

காவல் அதிகாரிக்கு அதைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டது. ஒரு சாதாரணத் தவறுக்கு மரண தண்டனையா என்று அதிர்ந்து போனார். ஆனால் சக்கரவர்த்தி மிகவும் கோபமாக இருந்ததால், அவரிடம் எதுவும் கேட்கத் துணிச்சலின்றி, அவர் பின் வாங்கினார். பின்னர் தன்னுடைய இரு காவலர்களை அழைத்துக் கொண்டு, தோட்டக்காரனை நோக்கிச் சென்றார். காலை நேரத்தில் காவல் அதிகாரி தன் ஆட்களுடன் தன்னைத் தேடி வருவது கண்டு தோட்டக்காரன் திடுக்கிட்டான். "என்ன விஷயம் ஐயா?'' என்று நடுங்கும் குரலில் கேட்க, "தோட்டத்தில் சக்கரவர்த்தி உலவும் போது ஒரு கல்லில் அவர் காலை இடித்துக் கொண்டார். அது உன்னுடைய தவறு என்பதால் உனக்கு நாளைக் காலை தூக்கு தண்டனை!'' என்றார் அதிகாரி.

இதைக் கேட்டதும் தோட்டக்காரன் துடித்தான். அவன் மனைவியோ அதைக் கேட்டு அலறி அழுதாள். "கால் இடித்துக் கொண்டதற்கு தூக்கு தண்டனையா? இது என்ன அநியாயம்? நீங்கள் சக்கரவர்த்தியிடம் எடுத்துச் சொல்லக் கூடாதா?'' என்றாள். "எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உன் கணவன் தோட்டத்தில் விட்டு வைத்த கல் இப்போது அவன் தலையிலேயே விழப் போகிறது'' என்ற அதிகாரி சற்று யோசித்தபின், "தூக்குதண்டனை நாளைக்குத்தான், இன்னும் ஒருநாள் சமயம் உள்ளது. நீ பீர்பாலிடம் போய் உன் கணவனைப் பற்றிக் கூறி விடுவிக்க முயற்சி செய்'' என்று சொல்லிவிட்டு, தோட்டக்காரனின் கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றனர்.

உடனே, தோட்டக்காரனின் மனைவி தலைவிரி கோலமாக பீர்பல் வீட்டிற்கு ஓடிப்போய் அவரை சந்தித்துத் தன் கணவனை எப்படியாவது விடுவிக்குமாறு மன்றாடினாள். அவள் மீது இரக்கம் கொண்ட பீர்பால் "கவலைப்படாதே, உன் கணவனை விடுதலை செய்ய முயற்சிக்கிறேன்'' என்று சிறைச்சாலையை நோக்கிச் சென்றார்.

சிறை அதிகாரியிடம் தோட்டக்காரன் எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறான் என்ற விவரத்தை அறிந்தபின், அவனைச் சந்திக்க அனுமதி கேட்டார். பீர்பால் சக்கரவர்த்திக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால், தோட்டக்காரனை சந்திக்க உடனே அனுமதி கிடைத்தது. அவனுக்கு தைரிமூட்டிய பீர்பால் அவனிடம் ரகசியமாக ஏதோ கூறினார். அதைக் கேட்ட தோட்டக்காரன் "ஐயோ, உயிர் பிழைக்க வழி சொல்வீர்கள் என்று பார்த்தால் உயிர் போக வழி சொல்கிறீர்களே'' என்று அலற, "நான் சொல்வது போல் செய், ஒன்றும் ஆகாது'' என்று கூறிவிட்டு பீர்பால் சிறைச்சாலையை விட்டு அகன்றார்.

மறுநாள் காலை தர்பார் கூடியது. அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது காவலர்கள் உள்ளே நுழைந்து, தோட்டக்காரன் தூக்கிலிடுமுன் அவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். அக்பரும் அதற்கு சம்மதிக்க, கை விலங்குடன் உள்ளே நுழைந்த தோட்டக்காரன் அக்பருக்கு சலாம் செய்துவிட்டு, பின்னர் திடீரென சபையில் காறி உமிழ்ந்தான்.

அதைக் கண்ட அக்பருக்கு பயங்கர கோபம் உண்டாகியது. உடனே, தோட்டக்காரன் பணிவுடன், "மன்னிக்கவும் பிரபு, என்னுடைய சாதாரணத் தவறுக்காக நீங்கள் தூக்கு தண்டனை விதித்திருப்பது நியாயம் அல்ல என்று மக்கள் உங்களை எதிர்காலத்தில் அவதூறாகப் பேசலாம். அப்படி உங்களைக் குறை கூறக் கூடாது என்பதற்காகத்தான் தர்பாரில் காறி உமிழ்ந்தேன். இனி உங்களை யாரும் குறை கூற மாட்டார்கள். நான் நிம்மதியாக சாகலாம்'' என்றான்.
உடனே அக்பருக்கு அவன் தன் நியாயமற்ற தண்டனையை குத்திக்காட்டுகிறான் என்று விளங்கிவிட்டது. அதேசமயம், இந்த யோசனையை அவனுடையதல்ல வேறு யாரோ அவனுக்கு சொல்லிக் கொடுத்துஇருக்கிறார்கள் என்றும் புரிந்தது.

"இந்த யோசனையை உனக்கு யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்?'' என்று அக்பர் கேட்க, தோட்டக்காரன் பீர்பால் பக்கம் நோக்கினான். உடனே அக்பருக்கு புரிந்து விட்டது. "பீர்பால், ஏதோ கோபத்தில் தெரியாமல் அவனுக்கு தூக்குதண்டனை விதித்து விட்டேன். அந்தத் தவறு நிகழாமல் தடுத்ததற்கு உனக்கு நன்றி'' என்றார் அக்பர். அத்துடன் தோட்டக்காரனை விடுதலை செய்வதாக அறிவித்தார்.


சிறிய தவறும் பெரிய தண்டனையும்!


அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, "பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கலை! என்னுடைய எட்டாவது வயது முதல் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டு இருக்கிறேன். சக்கரவர்த்தியான உங்களுக்கு நான் பீடா தயாரித்து கொடுப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்" என்றான்.

அக்பர் அன்றுமுதல் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் சௌகத் அலியையும் உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன!
ஒருநாள் அலி பீடாவில் கை தவறி சிறிது அதிகமாக சுண்ணாம்பினைக் கலந்து விட்டான். அதைத் தின்ற அக்பரின் நாக்கு வெந்து விட்டது. உடனே பீடாவைத் துப்பியவாறே, "முட்டாள்! உன்னுடைய பீடாவைத் தின்று என் நாக்கு வெந்து விட்டது. பீடா தயாரிப்பதில் தலை சிறந்தவன் என்று ஓயாமல் பெருமையடித்துக் கொண்டாயே! இதுவா நீ தயாரிக்கும் லட்சணம்?" என்று சீறினார்.
அலி பயத்தினால் மிகவும் நடுங்க ஆரம்பித்து விட்டான். மிகக் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தவாறே, "உடனே சென்று ஒரு பை நிறைய சுண்ணாம்பு கொண்டு வா!" என்று கட்டளையிட்டார். அலி கடைக்குப் போய் ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கினான். அப்போது அங்கே வந்த மகேஷ்தாஸ் "அலி! என்ன விஷயம்? எதற்கு இத்தனை சுண்ணாம்பு?" என்று கேட்டான்.


"இதை சக்கரவர்த்தி வாங்கி வரச் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!" என்றான் அலி. "தெரியவில்லையா? எந்த சந்தர்ப்பத்தில் இதை வாங்கச் சொன்னார்?" என்று மகேஷ் கேட்க, அலியும் நடந்ததைக் கூறினான்.
சக்கரவர்த்தி எதற்காக ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கச் சொன்னார் என்று மகேஷுக்குப் புரிந்து விட்டது. உடனே அவன் அலியிடம், "வயிறு நிறைய நெய் குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் செல்!" என்றான்.
"என்னப்பா! ஏற்கெனவே நான் யானைக் குட்டி போல் பருமனாக இருக்கிறேன். இந்த லட்சணத்தில் நான் வயிறு நிறைய நெய் தின்றால் பூதம் போல் ஆகிவிடுவேன்!" என்றான் அலி!
"இன்று ஒருநாள் மட்டும் செய்" என்று சொல்லிவிட்டு மகேஷ் சென்று விட்டான்.
மகேஷ் சொன்னால் அதில் ஏதோ காரணம் இருக்கும் என்று நம்பிய அலி, வீட்டிற்குச் சென்று ஒரு செம்பு நிறைய நெய் எடுத்து வயிறு முட்ட குடித்த பிறகு அவன் அக்பரை நாடிப் போனான்.
சபையில் அமர்ந்திருந்த அக்பர் அலியைப் பார்த்து, "ஒரு பை சுண்ணாம்பு வாங்க இத்தனை நேரமா?" என்று கடிந்து கொண்ட பிறகு, ஒரு காவலனை நோக்கி "இவனை சபைக்கு வெளியே அழைத்துச் சென்று பையிலுள்ள சுண்ணாம்பு முழுவதையும் அவன் வாய்க்குள் போட்டு அடைத்து விடு!" என்றார். அப்போதுதான் அக்பர் தனக்குத் தந்த தண்டனையின் கொடூரம் அலிக்குப் புரிந்தது.
கதறக் கதற அலியை வெளியே இழுத்துப் போன காவலன், அலியின் பையிலிருந்து சுண்ணாம்பை எடுத்து அலியின் வாயில் போட்டு விழுங்கச் செய்தான். ஒரு கவளம் சுண்ணாம்பு தின்ற உடனேயே, வாய், தொண்டை, வயிறு வெந்து போக அலி சுருண்டு விழுந்தான். தண்டனைக்குள்ளான அலி என்ன ஆனான் என்று பார்க்க அங்கு வந்த அக்பர், அலி தரையில் விழுந்திருந்தும் சுயநினைவுடன் இருப்பதைப் பார்த்து, "நீ இன்னும் சாகவில்லையா?" என்று கேட்டார்.

"இல்லை, பிரபு!" என்ற அலி சிரமப்பட்டு எழுந்து நின்று, "வயிறு நிறைய நெய் சாப்பிட்டதாலோ என்னவோ, நான் உயிருடன் இருக்கிறேன்!" என்றான். "உன்னை யார் நெய் உண்ணச் சொன்னார்கள்?" என்று அக்பர் கேட்க, அலி மகேஷின் பெயரைக் கூறினான். உடனே மகேஷ் அங்கு அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்ததும், "பீர்பல்! உன் வேலைதானா இது? அவனை ஏன் நெய் சாப்பிடச் சொன்னாய்?" என்று அக்பர் கேட்டார்.
"பிரபு! அலியிடம் நடந்தைக் கேட்ட பிறகு நீங்கள் அவனை சுண்ணாம்பை விழுங்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். நெய் தின்ற பிறகு சுண்ணாம்பை விழுங்கினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது என்று எனக்குத் தெரியும்! அதனால்தான் அவ்வாறு அவனை செய்யச் சொன்னேன்" என்றான் பீர்பல்.
"அவன் மீது உனக்கு என்ன அவ்வளவு அக்கறை?" என்று அக்பர் கேட்க, "அக்கறை அவன் மீதில்லை, உங்கள் மீதுதான் பிரபு. அவன் தயாரிக்கும் பீடாவை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏதோ தெரியாமல் அவன் ஒருநாள் செய்த தவறுக்காக அத்தனை பெரிய தண்டனையை அவன் பெறப் போவதைத் தவிர்க்க விரும்பினேன். நீங்கள் அவன் செய்த சிறிய தவறை மன்னித்து விட வேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்பதை நிரூபிக்க இதை விட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?" என்று கேட்டான் பீர்பல்.
அவனுடைய சாமர்த்தியமான பேச்சினால் கவரப்பட்ட அக்பர், "நீ சொல்வது சரிதான். மூன்று ஆண்டுகளாக அருமையாக பீடா தயாரித்தவன் ஒருநாள் தெரியாமல் செய்த தவறுக்காக தண்டனை பெறுவது சரியல்ல. அவனை நான் மன்னித்து விடுகிறேன்" என்றவர் அலியைப் பார்த்து, "பிழைத்துப் போ" என்றார்.


Monday, May 16, 2011

கிணற்றுக்குள் வைர மோதிரம்


அந்த ஆண்டுக் கோடைக்காலம் மிகக் கடுமையாக இருந்தது. ஆறு, குளங்கள், கிணறுகள் வற்றிப் போயின. செடி, கொடிகள் வாடி வதங்கின. நண்பகலில் தெருக்கள் வெறிச்சோடிப் போயின. வெயிலுக்கு பயந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார். அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், "தலைநகரில்உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

"இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை" என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், "பிரபு! தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே! தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்," என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் அடியில் சென்று விழுந்த ஒலியைக் கேட்டதுமே, கிணறு முற்றிலும் வற்றியுள்ளது என்று தெரிந்தது.

"பீர்பால்! கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட, சுற்றியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.

"பிரபு! வைரமோதிரத்தை ஏன் போட்டீர்கள்?" என்று பீர்பால் கேட்க, "வைரமும் ஒரு கல்தானே! அதனால்தான் போட்டேன்" என்றார் அக்பர். "ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா? நீங்கள் செய்தது சரியா?" என்று பீர்பால் கேட்டார்.

"அதனால் என்ன, பீர்பால்! யாரையாவது கிணற்றில் இறங்கச் சொல்லி மோதிரத்தை எடுத்து
விட்டால் போகிறது!" என்ற அக்பர் தொடர்ந்து, "கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம். ஆனால் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா?" என்று கேட்டார்.

"முடியவே முடியாது, பிரபு!" என்றார் கூட இருந்த பிரமுகர் ஒருவர். "முடியாதது என்று ஒரு காரியமும் இல்லை. முயன்று பாருங்களேன்" என்று அக்பர் சொல்ல, "பிரபு! அது யாராலும் செய்ய முடியாத காரியம்" என்றார் அதே பிரமுகர். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

"பீர்பால்! நீ என்ன நினைக்கிறாய்?" என்று அக்பர் கேட்க, "அதைப் பற்றித்தான் நானும் யோசிக்கிறேன்" என்ற பீர்பால், தன் தலைப்பாகையை அவிழ்த்துவிட்டுத் தனது தலையைச் சொறிந்தார்."தலையைச் சொறிந்தால் மட்டும் யோசனை தோன்றிவிடுமா?" என்று மிட்டாலால் என்ற அதிகாரி பீர்பலை நோக்கி ஏளனத்துடன் கேட்டார். "தலையைச் சொறிந்தால் எனக்கு நல்ல யோசனை தோன்றும்.

ஆனால் உங்களுக்குத் தோன்றாது!" என்று பீர்பால் லாலை நோக்கிக் கூறினார். "எனக்குத் தோன்றாது, ஆனால் உனக்குத் தோன்றுமோ? அது எப்படி?" என்று மிட்டாலால் கேலியாகக் கேட்க, "எனக்கு மூளைஇருக்கிறது. அதனால் தலையைச் சொறிந்ததால் மூளை வேலை செய்யும். ஆனால் உங்களுக்கு என்ன செய்தாலும் யோசனை தோன்றாது" என்று பீர்பால் அவனுக்கு பதிலடி கொடுத்தார். "பிரபு! எனக்கு யோசனை தோன்றிவிட்டது!" என்று பீர்பால் உற்சாகத்துடன் கூற, "அப்படியா? நீ எப்படி மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய்?" என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.

நூலின் மறுமுனையை திணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார். பிறகு, வைரக்கல்லைக் குறிபார்த்து ஏற்கெனவே கிணற்றின் உள்ளேஇருந்த சாணத்தின் மீது வீசியெறிந்தார். கல் சரியாக சாணத்தின் மீது விழுந்தது.

தன்னுடைய வேலைக்குத் தானே ஒரு சபாஷ் போட்டுக் கொண்டு, அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார். வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார். பிறகு மாலையில் எழுந்து கிணற்றை நோக்கிச் சென்றார். காலையில் அவர் வீசியெறிந்த சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது. பிறகு பீர்பால் மிகவும் நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள்இருந்து மேலே வந்துவிட்டது. கல்லில் ஒட்டிய சாணமும் உலர்ந்து போய் அதனுடன் சேர்ந்து பத்திரமாக இருந்தது. அதிலிருந்து மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின், பீர்பால் அரண்மனை தர்பாருக்குச் சென்றார்.

அந்த நேரத்தில் அக்பர் தர்பாரில் தன் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். அவரை வணங்கிய பீர்பால், "பிரபு! நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன்" என்றதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"கிணற்றுள் இறங்காமலேயே மோதிரத்தை எடுக்க உன்னால் எப்படி முடிந்தது?" என்று அக்பர் ஆவலுடன் கேட்க "மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்" என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார். "பலே! சபாஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை!" என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.

குட்டு வெளிப்பட்டது



மறுநாள் சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செதி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள்.


மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள். வாயிற்காவலர்கள் அவளைத் தடுத்தி நிறுத்தி என்ன வேண்டும் என்று வினவியபோது, தான் சக்கரவர்த்தியை நேரில் சந்திக்க விரும்புவதாக அவள் கூறினாள். உடனே, ஒரு காவலன் அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தர்பாருக்குள் நுழைந்தான்.


சிம்மாசனத்தில் வீற்றிருந்த அக்பரைக் கண்டு தரையைத் தொட்டு சலாம்செய அவள் முயன்றபோது, அவளை கவனித்த அக்பர் அவளுடைய முதிர்ந்த வயதை மனத்தில்கொண்டு அவளை சிரமப்படாமல்இருக்க சைகை செய்தார்.


பிறகு, "அம்மா! உனக்கு என்ன வேண்டும்?" என்றார். அதற்கு அவள் அக்பரை நோக்கி, "பிரபு! நான் சுந்தரி பாய்! மிக ஏழையானவள்! என்றாள்.


அதற்கு அக்பர், "ஏழையாயினும், பணக்காரராயினும் என் முன் சமநீதி கிடைக்கும். உன் குறையென்ன சொல். தாயே!" என்றார்.


"பிரபு! ஓராண்டு முன் நான் பத்ரிநாத் யாத்திரை செல்ல விரும்பினேன். என்னிடமுள்ள பணத்தையெல்லாம் அதுவரை யாரிடமாவது பத்திரமாக விட்டுச் செல்ல வேண்டுமே என்று திட்டமிட்டு, என்னுடைய உடைமைகளைப் பொற்காசுகளாக மாற்றி ஒரு பையில் போட்டு, வாயை இறுகக் கயிற்றினால் கட்டி விட்டேன். பிறகு, கயிற்றின் முடிச்சின் மேல் மெழுகை உருக்கி ஊற்றினேன். புறாச்சின்னம் உள்ள என் மோதிரத்தை உருகிய மெழுகில் அழுத்தி, முடிச்சை சீல் செய்தேன். சீலில் என் மோதிரத்தின் புறாச்சின்னம் தெளிவாகக் காணப்பட்டது" என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே போனவளை அக்பர், "அம்மா! நீ மிகவும் முன்எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு இருக்கிறாயே! சபாஷ்!" என்று பாராட்டினார்.


"என்ன பயன், பிரபு? அந்தப் பையை மிக கௌரவமான மனிதர் என்று கருதப்படும் குல்ஷாவிடம் நேரில் சென்று கொடுத்து நான் பத்ரிநாத் சென்று வரும் வரை பத்திரமாகப் பாதுகாக்கும்படி வேண்டினேன். அந்தசமயம் கூட யாருமில்லை. என்உடைய பையை அவர் தன் கையினால் தொடக்கூட இல்லை. என்னை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றவர், அங்கு ஒரு குழியைத் தோண்டி, அதனுள் அந்தப் பையைப் போடும்படி சொன்னார். நானும் அப்படியே செய்ய, பிறகு அதை மண்ணைப் போட்டு மூடி விட்டார். பிறகு என்னிடம் பிரயாணம் முடிந்து வந்த பிறகு நானே குழியைத் தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்றார்.


"மிக உத்தமமான மனிதர் என்று மனத்தில் அவளுக்கு மரியாதை செலுத்திவிட்டு, நேரில் அவருக்கு நன்றி கூறித் திரும்பினேன். பிறகு பத்ரிநாத் யாத்திரை முடிந்தபின், நான் அவரிடம் செல்ல அதே இடத்திற்கு அவர் என்னை அழைத்துச் செல்ல, நான் குழியைத் தோண்டி, புதைத்து வைத்திருந்த என் பையை எடுத்துக் கொண்டேன். குலுக்கினால் உள்ளே நாணயங்கள் குலுங்கும் ஒலிகேட்டு திருப்தி அடைந்து வீட்டுக்குத் திரும்பினேன். பையின் கயிற்றின் முடிச்சும், அதில் நான் வைத்திருந்த சீலும் அப்படியே இருந்தது.


"ஆனால், என்னவென்று சொல்வது! வீட்டுக்கு வந்து, பையைத் திறந்து பார்த்தால் உள்ளே தங்க நாணயங்களுக்கு பதிலாக செப்பு நாணயங்கள் இருந்தன. குல்ஷா போன்ற கௌரவமான மனிதர் இப்படி ஓர் ஏழைக்கிழவியை மோசம் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கண்ணீர் வடித்தாள்.


பையிலுள்ள கயிற்றின் முடிச்சை அவிழ்க்காமல் உள்ளிருக்கும் பொற்காசுகளை எப்படி வெளியே எடுத்து செப்புக்காசுகளை நிரப்ப முடிந்தது என்று அக்பருக்குப் புரியவில்லை. அதேசமயம் கிழவி பொய் சொல்கிறாளோ என்று சந்தேகமும் எழ, அக்பர் பதில் சொல்ல முடியாமல் குழம்பிப் போய் பீர்பலை நோக்க, பீர்பல் "பிரபு! இதை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றார்.


அக்பர் நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டார். அடுத்து பீர்பல், "பிரபு! பொற்காசுகள் இருந்ததாகக் கூறப்படும் அந்தப் பையினை நான் பார்க்க விரும்புகிறேன்!" என்று கூறி, அதைக் கிழவிஇடமிருந்து வாங்கிக் கொண்டார்.


அதை மேலுங் கீழுமாகப் புரட்டி உற்று கவனித்த பீர்பலின் புருவங்கள் நெரிந்தன. அதில் ஏதோ மர்மம் இருப்பதாகப் புரிந்தது. உடனே கிழவியை நோக்கி, "அம்மா! உன் பை என் இடமே இருக்கட்டும். நீ சொல்வது உண்மையானால் உன் பொற்காசுகள் உனக்குத் திரும்பக் கிடைக்கும்" என்றார்.


"அந்தக் கடவுள் சத்தியமாக நான் சொன்னது உண்மை!" என்று ஆணித்தரமாகக் கிழவி கூற, "அம்மா! நாளை மறுநாள் வா! அதற்குள் உண்மை புலனாகும்" என்றார் அக்பர். கிழவியும் சலாம் செதுவிட்டுச் சென்றாள்.


அதன்பிறகு தர்பார் கலைய, அனைவரும் எழுந்து செல்ல, பீர்பல் பையைக் கையில் ஏந்திக் கொண்டு தீவிரமாக யோசித்தவாறே சென்றார். பீர்பல் மீது பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் பீர்பல் தோல்வியடைவார் என்றும், அதன்பிறகு அவர் தலை நிமிர்ந்து நடக்க முடியாதென்றும் பீர்பலை கேலி செய்தவாறு சென்றனர். அவர்கள் தன்னை ஏளனம் செய்வதைப் பொருட்படுத்தாமல் பீர்பல் வீட்டுக்குச் சென்றார்.


கிழவி கூறியது உண்மை என்று அவருடைய உள்ளுணர்வு கூறினாலும், பையில் இருந்து குல்ஷா எப்படி பொற்காசுகளைத் திருடியிருக்க முடியும் என்பதை மட்டும் ஊகிக்கவே முடியவில்லை. தன் மனைவி தன்னை புன்னகையுடன் வரவேற்றதைக் கூட அவர் கவனிக்கவில்லை. மௌனமாக சாப்பிட உட்கார்ந்தார். கைகள் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாலும், மனம் அந்த வழக்கைப் பற்றி யோசிப்பதிலேயே தீவிரமாக ஆழ்ந்து இருந்தது.


திடீரென பீர்பலுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று. உடனே தன் படுக்கை அறைக்குச் சென்ற அவர், விலையுர்ந்த படுக்கை விரிப்பு ஒன்றை எடுத்து, அதைக் கத்திரிக்கோலால் சரசரவெனக் கிழித்தார். அதைப்பார்த்த அவர் மனைவி ஓடி வந்து "ஐயோ, உங்களுக்குப் பைத்தியாமா? என்ன காரியம் செய்கிறீர்கள்?" என்று கூச்சலிட, "உஷ்" என்று அவளை அடக்கிவிட்டுத் தன் வேலையாளை அழைத்த பீர்பல், "இந்த படுக்கைவிரிப்பு கிழிந்ததே தெரியாமல் அருமையாகத் தைக்க வேண்டும். அப்படிப்பட்ட திறமையான தையற்காரர் யாராவது தெரியுமா?" என்று கேட்க அவன், "ஐயா! மன்சூர் அலி எனும் தையற்காரன் ஒரு மேதாவி! அவனிடம் கொடுத்தால், கிழிந்ததே தெரியாமல் தைத்து விடுவான்" என்றான்.

உடனே அவனிடம் பீர்பல் அதைக் கொடுத்தனுப்பினார். மறுநாள் மாலை, வேலைக்காரன் கொடுத்த வேலையைக் கச்சிதமாக முடித்து விட்டுத் திரும்பினான். படுக்கைவிரிப்பைப் புரட்டிப் பார்த்ததும் அது முன்பு கிழிந்திருந்த இடத்தையே பீர்பலினால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவ்வளவு நன்றாக மன்சூர் அலி தைத்திருந்தான்.
"ஆகா! மிகப் பிரமாதமாகத் தைத்து இருக்கிறானே! இந்த மன்சூர் அலியை நேரில் சந்தித்துப் பாராட்ட விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, பீர்பல் தன் வேலைக்காரனுடன் மன்சூர் அலியின் கடைக்குச் சென்றார்.


"அடடா! பிரபு! நீங்களா! சொல்லிஇருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே!" என்று மன்சூர் அலி ஓடி வந்தான். "மன்சூர்! உன் கடைக்கு வந்து உன்னை நேரிலே பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் நானே இங்கு வந்து விட்டேன்" என்றார் பீர்பல்.


"ஆகா ! உங்கள் பாதம் என் கடையில்பட நான் என்ன பாக்கியம் செய்து இருக்கிறேன்!" என்று மன்சூர் உணர்ச்சிவசப்பட்டான்.


"இந்தா! நீ செய்த அருமையான வேலைக்குக் கூலி!" என்று பீர்பல் ஒரு தங்கக் காசைக் கொடுத்தார். "இருங்கள்! மீதிப்பணத்தைத் தருகிறேன்" என்று மன்சூர் தன் சட்டைப் பையைத் துழாவ, உடனே பீர்பல் அவனைத் தடுத்தப்படி "அவசியமில்லை நீயே வைத்துக் கொள் என்று அடுத்துக் கிழவியின் பையைக் காட்டினார்.


"மன்சூர்! இந்தப் பையை சமீபத்தில் நீ தையல் போட்டாயா?" என்று பீர்பல் கேட்டதும், அவன் அதை அடையாளம் கண்டு கொண்டான்.


"ஆம், பிரபு!" என்ற மன்சூர், பையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, "இந்த இடம் கிழிந்திருந்தது. இதைத் தையல் போட்டு சரி செய்தேன். ஒரு மாதம் முன்பாக குல்ஷா என்னிடம் இந்த வேலையைச் செய்யச் சொன்னார்" என்றான்.
பீர்பலுக்குத் தேவையான தகவல் கிடைத்துவிட, அவர் மன்சூரிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறுநாள் தர்பார் கூடியது. பீர்பல் ஏற்பாடு செய்திருந்தபடி, கிழவியும், குல்ஷாவும் தர்பாருக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.


அக்பர் பீர்பலை நோக்கி, "இந்தக் கிழவி கூறியது உண்மைதானா இல்லை வீணாக குல்ஷா மீது பழி சுமத்துகிறாளா?" என்று கேட்டார்.

"கிழவி கூறியதுதான் உண்மை" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறிய பீர்பல் தான் உண்மையைக் கண்டறிந்த விதத்தை விளக்கினார்.

அதைக் கேட்ட குல்ஷாவின் முகம் பீதியினால் வெளுத்துக் கை, கால்கள் நடுங்கின. கோபமடைந்த அக்பர், "குல்ஷா! பீர்பல் கூறுவது உண்மைதானா மோசடி செதது நீதானா? பொய் சொன்னால் உன்னை இங்கேயே கொன்று விடுவேன்" என்று சீற, குல்ஷா, "பிரபு! பீர்பல் கூறுவது உண்மையே! பேராசை என் கண்களை மறைத்துவிட்டது" என்று அழுதான். கிழவிக்கு அவள் பொற்காசுகள் திரும்பக் கிடைத்தன. பாவம், குல்ஷாவுக்குச் சிறையில் கம்பி எண்ண நேரிட்டது.

Tuesday, February 8, 2011

திருடனைக் கண்டுபிடிப்பது எப்படி?


பீர்பால் கதைகள்

அக்பர் ஒரு நாள் பீர்பாலுடன் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருந்தார். திடீரென அக்பர் தன் வலது கைமணிக்கட்டை இடது கையால் அழுத்தித் தேய்க்க ஆரம்பித்தார். அவருடைய மணிக்கட்டு வீங்கியிருந்தது. அதைப் பார்த்த பீர்பால் சிரித்தார்.

“நான் வலியால் துடிக்கையில் உனக்கு சிரிக்கத் தோன்றுகிறதா?” என்று அக்பர்.
“மன்னிக்கவும் பிரபு! நான் ஏன் சிரித்தேன் என்று சொல்கிறேன்” என்ற பீர்பால் தோட்டத்திலிருந்த எலுமிச்சைச் செடிகளிலிருந்து ஒரு பழம் பறித்து வந்து அதை வெட்டி, அதன் சாறை வீக்கத்தில் தடவித் தேய்த்தார். வலி சற்றுக் குறைந்தாற்போல் போல் தோன்ற, அக்பர் “எலுமிச்சைச் சாறை குளவிக் கொட்டின இடத்தில் தடவினால் வலி குறையும் என்பது இன்றுதான் புரிந்தது” என்றார்.

“உங்களுக்கு அந்த உண்மை இன்று புரிந்தது. எனக்கு இன்று மற்றொரு உண்மை புரிந்தது. அதனால்தான் சிரித்தேன்” என்றார் பீர்பால். “அது என்ன?” என்று அக்பர் கேட்டார்.

“பிரபு! உங்களைக் கண்டு நாங்கள் அனைவரும் பய, பக்தியுடன் மரியாதை செய்கிறோம். ஆனால் ஒரு அற்பக் குளவி தைரியமாக உங்களிடம் பறந்து வந்து உங்களைக் கொட்டிவிட்டு சென்று விட்டதே! அதை நினைத்துத் தான் சிரித்தேன்” என்றார் பீர்பால்.

“நீ சொல்வது உண்மைதான்! என்னுடைய அதிகாரம் மனிதர்களிடம்தான் செல்லும். குளவி, வண்டு, எறும்பு ஆகிய சிறிய ஜீவராசிகள் கூட என்னைக் கண்டு பயப்படுவதில்லை. ஏனெனில் அவை தங்களுக்கு ஏதாவது ஆபத்து என்று தோன்றினால் மட்டுமே தங்கள் தற்காப்புக்காக சண்டையிடுகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே ஆசை, பொறாமை, கோபம் ஆகிய உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு, மற்றவர்களைத் துன்புறுத்துகிறான். அவ்வாறு குற்றமிழைப்பர்களை தண்டிப்பதுதான் என் கடமை?” என்றார்.

அவ்வாறு உரையாடிக் கொண்டே தோட்டத்தின் சிறிய கதவருகே வந்தனர். பிறகு கதவைத் திறந்து கொண்டு அரண்மனைக்குச் செல்ல நினைக்கையில் கதவருகே ஒரு பொற்கொல்லன் நின்று கொண்டு இருந்தான். அக்பரைக் கண்டதும் பணிவுடன் வணங்கினான்.

“யார் நீ?” என்றார் அக்பர்.

“நான் பொற்கொல்லன் பஜ்ரிதாஸ்!” என்றான் அவன்.

“உனக்கு என்ன வேண்டும்?” என்று அக்பர் கேட்டார்.

“ஐயா, என் வேலைக்குத் தேவையான அனைத்துத் தங்கத்தையும் ஓர் இரும்பு அலமாரியில் பத்திரமாக வைத்திருப்பது என் வழக்கம்! பூட்டியிருக்கும் அந்த அலமாரியின் சாவி என்னிடம்தான் இருக்கும். நான் வேலையில் மும்முரமாக இருந்தால், என் பணியாளர்கள் நால்வரில் ஒருவனை அனுப்பி, அலமாரிப் பூட்டைத் திறந்துத் தங்கத்தை எடுத்து வரச் சொல்வேன். என்னுடைய நான்கு பணியாளர்களும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்” என்றான்.

“சரிதான்! அப்படியிருந்தும் உன்னுடைய அலமாரியிலிருந்து தங்கம் திருட்டுப் போய்விட்டதாக்கும்! உன் பணியாளர்களில் ஒருவன்தான் அதைத் திருடியிருக்க வேண்டும். அப்படித்தானே?” என்றார் அக்பர்.
“ஆம் பிரபு!” என்றான் பஜ்ரிதாஸ்.

“திருட்டுப் போனத் தங்கத்தின் மதிப்பு என்ன?” என்று அக்பர் கேட்டார்.
“பத்து தங்கக் கட்டிகள்! அவற்றின் விலை ஒரு லட்சத்திற்கும் மேல்!” என்றான் பஜ்ரிதாஸ்.
“கவலைப்படாதே! மூன்றே நாளில் உன் தங்கம் உனக்குத் திரும்பிக் கிடைத்து விடும்” என்று சொல்லிவிட்டு அக்பர் நகர்ந்தார். “பிரபு? குற்றவாளியைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை யாரிடம் தரப் போகிறீர்கள்?” என்று பீர்பால் கேட்டார்.

“ஏன்? நகரக்காவல் தலைவர் இருக்கிறாரே.. அவரிடம்தான!” என்றார் அக்பர்.

திருடனைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை அக்பரிடமிருந்து ஏற்றுக்கொண்ட நகரக்காவல் தலைவர், உடனடியாக பஜ்ரிதாசின் நான்கு பணியாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார். அவர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு சவுக்கால் அடித்து உடலை நாறாகக் கிழித்து விடுவதாக பயமுறுத்தி, உண்மையைக் கூறச் சொல்லி வற்புறுத்தினார்.

ஆனால் இரண்டு நாள்களாக அவர்களை அடித்து, உதைத்தும் அவர்கள் தாங்கள் நிரபராதி என்றே சாதித்தனர். இரண்டு நாட்களாகியும் தன்னால் உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடித்து, தங்கத்தை மீட்க முடியாமற் போனதை நினைத்து காவல்தலைவருக்கு பயம் உண்டாயிற்று. தன் தோல்வியை ஒப்புக்கொண்டால் சக்கரவர்த்தியின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் அவர் கலங்கிப் பரிதவித்தார்.

திடீரென பீர்பாலின் ஞாபகம் வந்தது. “அட! இது முன்னமே ஏன் எனக்குத் தோன்றவில்லை? இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடியவர் பீர்பால் ஒருவரே!” என்று சொல்லிக் கொண்டே, பொழுது விடிந்ததும் அவசரமாக பீர்பாலைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை பீர்பாலுக்கு விளக்கத் தொடங்கியவுடன், “இதைப்பற்றி எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்றார் பீர்பால்.

“நீங்கள்தான் எப்படியாவது குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்!” என்று காவல் தலைவர் கெஞ்ச, பீர்பால் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு, காவல் தலைவரை நோக்கி, “எனக்கு மூன்று அடி நீளமுள்ள குச்சிகள் நான்கு தேவைப்படுகிறது. அவற்றை நீங்கள் ஏற்பாடு செய்து சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லுங்கள். நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே வந்து அந்த நால்வரையும் சந்திக்கிறேன்” என்றார்.

பிறகு பீர்பால் சிறைச்சாலையை அடைந்த போது, காவல்தலைவர் குச்சிகளைக் கொடுத்து, அந்த நான்கு கைதிகளையும் அழைத்து வந்தார். வாடி, வதங்கிப் போய் அவர்கள் பீர்பால் முன் நின்றனர். அவர்களை நோக்கிய பீர்பால், “உங்கள் எசமானர் பஜ்ரிதாசின் அலமாரியிலிருந்து பத்துத் தங்கக் கட்டிகள் காணமற் போய்விட்டன. உங்களில் ஒருவர் தான் திருடியிருக்க வேண்டும்என அவர் புகார் செய்து இருக்கிறார்” என்றார்.


உடனே, அவர்களில் ஒருவன், “அவர் உப்பைத் தின்று வளர்ந்தவன் நான்! ஒருபோதும் அவருக்கு துரோகம் நினைக்க மாட்டேன்” என்றான். இரண்டாமவன், “நேர்மையை உயிராக மதிப்பவன் நான்! இத்தகைய ஈனச்செயலை கனவில் கூட என்னால் நினைக்க முடியாது” என்றான். “நான் இருபது ஆண்டுகளாக அவரிடம் வேலை செய்கிறேன். பணத்துக்கு ஆசைப்படுபவன் நானில்லை” என்றான் மூன்றாமவன். “நாயை விட நன்றி விசுவாசமானவன் நான்!” என்றான் நான்காமவன்.

“நீங்கள் சொல்வதை நம்புகிறேன். உங்களுக்காக இந்த மந்திரம் ஜெபித்த குச்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று ஆளுக்கொன்றாகக் கொடுத்த பீர்பால், “யார் திருடினவனோ, அவன் கையிலுள்ள குச்சி இரவில் அவன் உறங்கும்போது மூன்று அங்குலம் வளர்ந்து விடும். உங்களை நாளைக்காலை சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பீர்பால் விடைபெற்றார்.

மறுநாள் பீர்பால் சிறைச்சாலைக்கு வந்ததும், அந்த நால்வரும் தங்களுடைய குச்சிகளுடன் வந்தனர். முதலில் ஒருவனுடைய குச்சியை வாங்கிக் கொண்ட பீர்பால் அதன் நீளத்தை சோதித்தார். பிறகு வரிசையாக அனைவரது குச்சியையும் பரிசோதித்தார். பரிசோதனை முடிந்ததும் மூன்றாவதாகக் குச்சியைத் தந்த ஆளை நோக்கி, “நீதான் தங்கத்தைத் திருடியவன்” என்றார் பீர்பால். அவன் உடனே அதை பலமாக மறுத்தான். ஆனால் திருப்பித் திருப்பிக் கேட்டபின் தான் திருடியதாக ஒப்புக் கொண்டான்.

“நீதான் திருடினாய் என்று எனக்குத் தெரிந்து விட்டது. ஏனெனில், உண்மையிலேயே நீ திருடியிருந்ததால், உனக்குக் கொடுத்த மந்திரக்குச்சி மூன்று அங்குலம் அதிகமாக வளர்ந்து விடும் என்று நம்பிக்கொண்டு, நேற்றிரவு சிறையில் மூன்று அங்குல நீளத்துக்கு உன் குச்சியை வெட்டி விட்டாய். ஆனால் குச்சியில மத்திரமும் இல்லை, மாயமும் இல்லை?

இதோ பார்! உன்னுடையது மற்ற குச்சிகளை விடக் குட்டையாக இருக்கிறது” என்று குச்சியைக் காண்பித்தார்.
காவலர்கள் அவனிடமிருந்து பிறகு தங்கத்தை மீட்டு பஜ்ரிதாசிடம் கொடுத்தனர். திருடியவன் சிறைக்கு அனுப்பப்பட்டான். பிறகு, காவல் தலைவர் தர்பாருக்கு வந்த அக்பரிடம் உண்மையான திருடனைக் கண்டுபிடிப்பதற்கு பீர்பால்தான் அவருக்கு உதவினார் என்பதைக் கூறினார்.“அட! பீர்பாால்! உனக்கு துப்பறியும் வேலை கூடத் தெரியும் என்று எனக்கு இதுநாள்வரை தெரியாதே!” என்று பாராட்டிய அக்பர், தன் கையிலிருந்த தங்க வளையம் ஒன்றைக் கழற்றி பீர்பாலுக்குப் பரிசாகத் தந்தார்

Friday, February 4, 2011

காவல்காரர்கள் பெற்ற பரிசு

பீர்பால் கதைகள்

அக்பரின் சபையிலிருந்த பீர்பால் தன்னுடைய அறிவு, சாமர்த்தியம், நகைச்சுவை ஆகியவற்றுக்காக மிகப்பிரபலமானவர். எந்த ஒரு பிரச்சினையையும், தன் மதியூகத்தால் ஆராய்ந்து அதற்குரிய தீர்வை நகைச்சுவை ததும்ப வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகரில்லை. இந்த இதழிலிருந்து பீர்பாலைப் பற்றிய நகைச்சுவை ததும்பும் கதைகளைப் படித்து மகிழுங்கள்.

ஒருநாள், சக்கரவர்த்தி அக்பர் தன் சபையில் அமர்ந்திருக்கையில், அவரை நாடி ஓர் இளைஞன் அங்கு வந்தான். அவன் அக்பரை பணிவுடன் வணங்கியபோது, அக்பர் அவனை நோக்கி, "நீ யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

"பிரபு! என் பெயர் மகேஷ்தாஸ்! நான் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறேன். வேலை தேடி உங்களிடம் வந்தேன்!" என்றான் அவன்.

"உனக்கு யார் சொன்னார்கள் இங்கே உனக்கு வேலை கிடைக்குமென்று?" என்று அக்பர் கேட்டார்.

"என் ஆசிரியர் சொன்னார், பிரபு! என்னுடைய அறிவைக் கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய வேலை உங்களிடம் தான் கிடைக்கும் என்றார். அவருடைய வார்த்தையை நம்பி என் கிராமத்திலிருந்து வெகு தூரம் காலால் நடந்துத் தங்களைத் தேடி வந்துஇருக்கிறேன்" என்றான் மகேஷ்.

"எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள். உண்மையிலேயே நீ புத்தி சாதுரியம் உடையவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும்!" என்றார் அக்பர்.

"பிரபு! நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு தகுதியுடையவன் நான்!" என்று மகேஷ் பெருமையுடன் கூறினான்.

"அப்படியானால், அதை நிரூபித்துக் காட்டு!" என்றார் அக்பர்.

"பிரபு! அதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா?" என்று மகேஷ் கேட்டான்.

"முதலில் உன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டு! பிறகு பரிசைப் பற்றிப் பேசு!" என்றார் அக்பர்.

"நான் கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது!" என்றான் மகேஷ்.

"அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு?" என்றார் அக்பர்.

"முப்பது சவுக்கடி கொடுங்கள்!" என்றான் மகேஷ். அவனுடைய அந்த விபரீதமான வேண்டுகோளைக் கேட்டு அக்பர் உட்பட சபையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.

"உனக்கென்ன பைத்தியமா?" என்று அக்பர் கோபத்துடன் கேட்டார்.

"அதைப் பற்றி பின்னால் தெரிந்து கொள்வீர்கள்! தயவு செய்து நான் வேண்டியதைக் கொடுங்கள்!" என்றான் மகேஷ்.
உடனே, அக்பர் ஒரு காவலனைச் சாட்டையெடுத்து வரச் சொன்னார். பின்னர் அவன் செவிகளில் "அவனை அடித்து விடாதே! அடிப்பது போல் பாவனை செய்!" என்றார்.

மகேஷ் தன் முதுகைக் காட்டியவாறே அவனை "நீ அடிக்கத் தொடங்கு!" என்றான். அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாகவே அடித்தான். பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும், மகேஷ் "நிறுத்து!" என்று கூவினான். பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி, "பிரபு! பரிசில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டது. மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள்!" என்றான்.
அவன் சொல்வதன் பொருள் புரியாத அக்பர், "என்ன உளறுகிறாய்?" என்று கோபத்துடன் கேட்டார்.

அவர்களையே் கூப்பிட்டுக் கேளுங்கள்" என்றான். உடனே, அக்பர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் வந்ததும், மகேஷ் அவர்களை நோக்கி, "தோழர்களே! சக்கரவர்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவா? என்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டு விட்டேன். இனி, நீங்கள் பெறுங்கள்" என்றான்.

இரு காவல்காரர்களும் மகிழ்ச்சியுடன் பரிசை எதிர்பார்க்க, இருவர் முதுகிலும் பலமாக பத்து சாட்டைஅடி விழுந்தது. வலி பொறுக்க முடியாமல் இருவரும் கதற, அக்பர் அவர்களை நோக்கி, "இந்த நிமிடமே, உங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்!" என்று உத்தரவிட்ட பிறகு, மகேஷிடம், "நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து விட்டாய்! இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்ற பெயர் சூட்டி, உன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நியமிக்கிறேன்" என்றார்.