Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
Thursday, May 26, 2011
Friday, May 20, 2011
உயிர் காத்த சத்தியம்
இந்தப் புதிய தலைப்பிற்கான முதல் கதையை நமது பெரு மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பெற்றுள்ளோம். 1931ஆம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் ஓர் எளிய குடும்பத்தில் தோன்றிய திரு கலாம் இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசகராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவருடைய அரும்பெரும் சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு `பாரத ரத்னா' பட்டம் தந்து சிறப்பித்தது. 2002ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 24ஆம் தேதியன்று, அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி, சத்தியத்தின் மதிப்பைப் பற்றி நமக்கு ஓர் கதையை அனுப்பியுள்ள திரு அப்துல் கலாம் அவர்களுக்கு சந்தமாமா மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகான் அப்துல் காதர் அல்கிலானியின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்ச்சி இது! அவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது, ஒருநாள், அவர் புல்வெளியில் இளைப்பாறிக் கொண்டிருக்கையில், அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று அவரை நோக்கி, "நாங்கள் மேயும் இடத்தில் உனக்கு என்ன வேலை? இப்படி சோம்பேறியாக உட்கார்ந்து பொழுதுபோக்க உன்னைப் படைக்கவில்லை!" என்று கூறியதைக் கேட்டதும், பயந்துபோன அவர் தன் வீட்டிற்கு ஓடிச் சென்று தன் வீட்டின் மாடிக்குச் சென்றார். அங்கிருந்து கீழ் பார்க்கும்போது, ஹஜ் பயணம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த ஏராளமான பயணிகளைக் கண்டார்.
அதைக்கண்ட அப்துல் கீழே வந்து, தன் தாயிடம் ஹஜ் பயணத்தைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டு விவரங்களைத் தெரிந்து கொண்டார். உடனே, தானும் ஹஜ் செல்ல விரும்புவதாகத் தாயிடம் கூறி அனுமதியும் பெற்றுக் கொண்டார். அப்துலின் தந்தை அவருக்காக விட்டுச் சென்ற நாற்பது பொற்காசுகளை பயணத்தின் பொருட்டுக் கொடுக்க நினைத்த அப்துலின் தாய், அவற்றை அவனுடைய சட்டையின் உட்புறம் ஒரு பையில் வைத்து சட்டையோடு சேர்த்து ஊசி, நூல் கொண்டு பத்திரமாகத் தைத்து விட்டார். பிறகு, அப்துலுக்கு விடை கொடுத்த அவர் தாய், "மகனே! புனிதப் பயணம் சென்று வா! அல்லாவின் பொருட்டு, உன்னை இப்போது என்னிடமிருந்து பிரிந்து செல்ல அனுமதிக்கிறேன். இனி உன்னை எப்போது காண்பேன் என்று தெரியாது. உனக்கு இப்போது நான் கூறும் அறிவுரையை எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்! எப்போதும் சத்தியத்தையே பேசு! சத்திய வழியிலேயே நட! உன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் சத்தியத்தைக் கை விடாதே!" என்றாள். தன் தாயிடம் விடைப்பெற்றுக் கொண்ட அப்துல் காதர், ஏற்கெனவே ஹஜ் பயணம் சென்று கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து கொண்டார். துர்பாக்கியவசமாக, பயணிகளை கொள்ளைக்காரர்கள் வழிமறித்து கொள்ளையடிக்கத் தொடங்கினர்.
அவருடைய சொற்களைக் கேட்டு கொள்ளையர் தலைவன், "நீ உன்னுடைய தாயின் சொல்லை வேத வாக்காக எடுத்துக் கொண்டு சத்திய வழியில் நடந்தாய்! ஆனால் நாங்களோ எங்கள் பெற்றோரின் நம்பிக்கையை சிதைத்து, அவர்களுக்கும், அல்லாவிற்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறோம்.
அப்துல் காதரை நோக்கி அவர்களில் ஒருவன், "உன்னைப் பார்த்தால் பரம ஏழையாகத் தோன்றுகிறது. உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்க, அப்துல், "என் தாய் கொடுத்த நாற்பது பொற்காசுகள் என் சட்டையின் உட்புறப் பையில் உள்ளன!" என்று உண்மையைக் கூறினார்.
பரம ஏழையாகத் தோன்றிய அப்துல் பொய் சொல்கிறார் என்று அந்தக் கொள்ளைக்காரன் அவரை ஒன்றும் செய்யாமல் செல்ல, மற்றொருக் கொள்ளைக்காரன் அவரை அணுக, அவனிடமும் அப்துல் உண்மையையே கூறினார். அந்தக் கொள்ளைக்காரனும் அவர் சொல்வதை நம்பவில்லை. இறுதியில், கொள்ளைக்காரர்கள் அப்துலைத் தங்கள் தலைவன் முன் நிறுத்தி, "இவன் பரம ஏழையாகத் தோன்றுகிறான். ஆனால் தன்னிடம் நாற்பது பொற்காசுகள் இருப்பதாகச் சொல்கிறான். மற்ற எல்லாரையும் கொள்ளையடித்து விட்டோம். இவன் சொல்வது பொய் என்று தோன்றுவதால், இவனை விட்டுவிட்டோம்!" என்றனர்.
தலைவன் அவரிடம் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, அவர் மீண்டும் அதே பதிலையேக் கூறினார். தலைவன் அவரைச் சோதனையிட, நாற்பது பொற்காசுகள் அகப்பட்டன. ஆச்சரியமடைந்த தலைவன் அவரிடம் உண்மையைக் கூறியதன் காரணத்தை வினவ, அதற்கு அப்துல், "உயிர் போனாலும் சத்தியத்திலிருந்து தவறக் கூடாது என்ற என் தாயின் வேண்டுகோளுக்கிணங்கி நான் உண்மையையேக் கூறினேன். கேவலம் நாற்பது பொற்காசுகளுக்காக நான் அவளுக்குக் கொடுத்த வாக்கிலிருந்து தவற விரும்பவில்லை!" என்றான்.
இனிமேல், நீதான் எங்கள் குருவாக இருந்து, எங்களை சத்திய வழியில் நடத்திச் செல்ல வேண்டும்!" என்று கூறினான். அதற்குபின் அவர்கள் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு நேர் வழியில் நடக்கத் தொடங்கினர்.
அந்த நிகழ்ச்சிதான் ஷேக் அப்துல் காதர் அல்கிலானி என்ற மகான் தோன்ற வித்திட்டது.
Monday, May 16, 2011
Wednesday, February 2, 2011
குருக்கள் ஆத்துப் பையன்
குருக்கள் ஆத்துப் பையன் (1973)
எழுத்து - ஜெயகாந்தன்
எழுத்து - ஜெயகாந்தன்
ஒட்டுத் திண்ணையின் சாய்ப்பில் சாய்ந்து தலைக்கு மேல் இரண்டு கைகளையும் பிடரியில் சேர்த்துக் கொண்டு அம்மாவின் புலம்பலை எல்லாம் கண்ணை மூடியவாறு கேட்டுக் கொண்டிருப்பான் பையன். சில சமயங்களில் பெருமூச்செறிவான். பேசிக்கொண்டே, புலம்பிக் கொண்டே அம்மா தூங்கி விடுவாள். அதன் பிறகு அவனும் பெரிய திண்ணையில் ஏறிப் படுத்துக் கொள்வான்...
அம்மாவை நினைக்கையில் அவனுக்குப் பாவமாக இருக்கும். சில சமயம் தாங்க முடியாத வயிற்றுவலியால் துடிப்பாள். அவன் இரவெல்லாம் கண் விழித்துக் கொண்டு அவளுக்கு வெந்நீர் வைத்து ஒத்தடத்துக்குத் தருவான். அவள், கை பொறுக்காத சூட்டுடன் அந்த வெந்நீர்ச் செம்பை வயிற்றில் வைத்து உருட்டிக் கொண்டே, 'என்னை அழைச்சிண்டு போயிடுங்கோளேன்.." என்று அப்பாவை நினைத்துக் கொண்டு அழுவாள்.
எப்போதுமா அப்படி? இதே திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நிலாவில் அவள் சொல்லிய திவ்யமான கதைகள் எத்தனை! எவ்வளவு அழகாக அம்மா பாடுவாள்! தெளிவாக அபிராமி அந்தாதி நூறு பாடலையும் ஒரே மூச்சில் அம்மா பாடுவாளே!
அம்மா தூங்கி விட்டாள் என்று தெரிந்த பிறகு அவன் நிம்மதியாகத் தூங்குவான். அவள் எழுந்திருக்கும் முன் எழுந்து, குளித்து, வெண்கலப் பானையில் சோற்றுடன் ஓடிப் பிள்ளையார் கோயிலைத் திறந்து, அவருக்கு இரண்டு குடம் கிணற்று நீரை அபிஷேகம் செய்து - பக்கத்தில் தாமரைக் குளம் இருக்கிறது - கிணற்று நீர்தான் விசேஷம் என்று அவன் அப்பா சொல்லி இருக்கிறார் - நைவேத்யம் செய்து பூஜை முடித்த பின் வெண்கலப் பானையில் உள்ள பிரசாதத்துடன் வீட்டுக்கு வந்து - அதற்குள் அம்மா ஒருவாறு சமாளித்து எழுந்து நடமாடிக் கொண்டிருப்பாள் - அவள் கையால் தானும் அவளும் அந்தப் பிரசாதத்தைப் பகிர்ந்து கொண்டு ... இதுவரைக்கும் இப்படித்தான் நடந்திருக்கிறது. நாளைக்கு?
"அம்மா, நேக்கு ஒரு யோசனை தோண்றதே, நான் பட்டணத்துக்குப் போயி..." - அவள் தூங்கி விட்டாள். இல்லாவிட்டால் இந்நேரம் மறுபடியும் புலம்பத் தொடங்கி இருப்பாள். 'பட்டணத்துக்குப் போயி? பட்டணம் எப்படி இருக்குமோ? பட்டணத்துக்கெல்லாம் போக வேண்டாம்; மாயவரம், சீர்காழி, சிதம்பரம் ... எங்காவது போயி ஏதாவது!' - அந்த ஏதாவதுக்கு மேல் அவனால் எதையும் தொடர முடியவில்லை. 'என்னவானாலும் சரி, இனி ஒரு நாள் இந்த அன்னவயலிலே இருக்கப்படாது' என்ற தீர்மானத்துடன், பிடரியில் கோத்த கைகளின் மேல் அவிழ்ந்து கிடந்த குடுமியை உதறி முடிந்து கொண்டு எழுந்தான். மேல் துண்டால் உடம்பைப் போர்த்திக் கொண்டு நிலா வெளிச்சத்தில் சற்று உலாவினான். 'கோயில் பக்கம் போய் வரலாமே' என்று தெருவில் இறங்கி நடந்தான் ...
அக்ரஹாரத்திலிருந்து திரும்பியதும் தாமரைக் குளமும், பிள்ளையார் கோயிலும், ஆலமரத்தடியும் தெரிகிறது. அந்த ஆலமரத்தடியில் பகலில் சிறு கும்பல் இருக்கும். சிறுவர்கள் கோலி விளையாடுவதற்காகப் பறித்த குழிகளும், கிழித்த கோடுகளும், நிரந்தரமாய் இருப்பதை, அவன் நடந்து வந்தபோது வெறும் பாதங்களால் உணர்ந்தான். அவன்கூட எப்போதாவது சில பெரியவர்களுடன் அங்கு 'ஆடு புலி' விளையாடுவான்.
பிள்ளைமார் தெருவிலிருந்து பெரியவர்களும், லீவுக்கு வந்திருக்கிற வாலிபர்களும், ஆலமரத்தடியில்தான் வந்து பொழுது கழிப்பார்கள். சிலர் ரகசியமாகச் சீட்டு விளையாடுவார்கள். பத்திரிகை படிப்பார்கள். அரசியல், சினிமா பற்றியெல்லாம் அவரவர்க்குத் தெரிந்ததை வைத்துக்கொண்டு மிகுந்த சத்தத்துடன் விவாதிப்பார்கள். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிற இந்தப் பையனுக்கு அதனால் ஏற்பட்ட 'கேள்வி ஞானம்' நிறைய உண்டு. அவர்கள் இவனையும் சில சமயங்களில் வம்புக்கிழுப்பார்கள். இவனது குடுமியையும், ஜாதியையும், பிள்ளையாரையும் கூட அந்தப் பையன்கள் பரிகாசம் செய்வார்கள். எல்லாவற்றுக்கும் எப்போதும்போல் அவன் சிரித்துக் கொண்டே இருப்பான்.
அவனை விசுவநாதன் என்று யாரும் பெயரை நினைப்பதே இல்லை. பன்னிரண்டு வயதில் அந்தப் பிள்ளையார் கோயிலுக்குக் குருக்களாக மாறியிருந்தும் கூட - இப்போது அவனுக்கு இருபத்தைந்து வயதாகியும் - இன்னும் அவனைக் குருக்களாத்துப் பையன் என்றே அந்தக் கிராமம் அழைக்கிறது.
அப்பா இருந்தபோது அவருக்கு ரொம்ப மரியாதை. கோயிலும் அதனைச் சார்ந்து வாழ்கிற வாழ்க்கையும் அர்த்தமுடையது என்று அவர் தன்னளவில் நம்பி இருந்தார். இந்தப் பிள்ளையார் கோயிலுக்கு குருக்கள் பாத்தியதை உடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் சாமிநாத ஐயர் என்பவர். அப்பாவுக்கு ஒன்றுவிட்ட தம்பி அவர்; அவர் பட்டணத்துக்கு உத்தியோகம் பார்க்கப் போய்விட்டார். ஆனாலும் அந்தப் பாத்தியதைப் பெருமையை விட மனமில்லாமல், கோயில் மானிய வீட்டை அவரே வைத்துக் கொண்டு எப்போதாகிலும் வந்து பூட்டித் திறந்து கொண்டு போகிறார். கிராமத்திற்கு வந்து தங்கியிருக்கிற நாட்களில் கோயிலுக்கு வந்து அதிகாரம் செய்வார். அப்பாதான் எப்போதும் குருக்கள் வேலை பார்த்து வந்தார்.
அப்பா திடீரென ஒருநாள் மத்தியானம் இறந்துவிட்ட போது, இவன் ஆலமரத்தடியில் மாட்டுக்காரப் பையன்களோடு கோலி விளையாடிக் கொண்டிருந்தான். அதன் பிறகு இவன் கோலி விளையாடியதே இல்லை. 'குருக்களானப்புறம் அதெல்லாம் படாது' என்று அம்மா சொல்லியிருந்தாள்.
நிராதரவாகிவிட்ட இவனையும், நோயாளித் தாயாரையும் ஆதரிப்பதற்காக ஊர் கூடி இவனைக் குருக்களாக நியமிப்பது என்று தீர்மானம் செய்தார்கள். சாமிநாத ஐயர்தான் அதற்கு முன் நின்றார். நல்ல வேளையாகப் பையனுக்கு ஏற்கனவே பூணூல் போட்டிருந்தார்கள்.
அப்போது உத்திராபதிப் பிள்ளை - இப்போது இருக்கிறானே நாகபூஷணம் இவன் தகப்பனார் - தர்மகர்த்தாவாக இருந்தார். அவர் நல்ல சிவ பக்தர். அவருடைய தகப்பனார் காலத்தில் ஏற்பட்ட பிள்ளையார் கோயிலைப் பரிபாலிப்பதில் பிதுர்க்கடன் செய்த நிறைவை அனுபவித்தார் உத்திராபதிப்பிள்ளை.
அவர்தான் விசுவநாதனைக் கேட்டார். "என்ன ஐயரே, உங்கப்பாரு கூட இருந்து எல்லாம் பாத்திருப்பீரே... ஒழுங்கா செய்வீரா, இல்லையா?" என்று கேட்டபோது அப்பாவை நினைத்துக் கண்கலங்கத் தலையாட்டினான் பையன். அப்போது ஊருக்கு வந்திருந்த சாமிநாத ஐயர் இவனிடம் தமிழில் எழுதிய சில ஸமஸ்கிருத ஸ்லோகப் புத்தகங்களைக் கொடுத்து இரண்டு மூன்று நாட்கள் அதை மனப்பாடம் செய்யச் சொல்லி இவனை 'வதையாய் வதைத்து' விட்டுப் போனபின், இவன் குருக்கள் பணியை மேற்கொண்டான்.
வருஷத்துக்கு இவ்வளவு நெல், இவ்வளவு தேங்காய், இவ்வளவு எண்ணெய், இவ்வளவு ரூபாய் என்று ஏதோ ஒரு காலத்து நிலைமைக்கேற்ப எழுதி வைத்தபடி, ஒரு கடமைக்காகக் 'கடவுள் நம்பிக்கை தனக்கில்லை' யென்று சொல்லிக் கொண்டே தருகிறான் நாகபூஷணம். சிறு வயதிலிருந்தே ஆலமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இவனைக் கேலி செய்து பழகியவன் அவன்.
அவன் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று ஜெயித்தபோது அவன் மனைவியும் குழந்தைகளும் பிள்ளையார் கோயிலுக்கு வந்து அபிஷேகம் நடத்தினார்கள். அவன் மனைவி நூற்றியெட்டுத் தேங்காய்களை இந்தக் குருக்கள் பையன் மூலமே உடைக்க வைத்தாள். இவனும் மிக உற்சாகமாகத் தேங்காய்களை உடைத்தான். 'பிள்ளையாரையே உடைக்க வேண்டும்' என்கிற நாகபூஷணம் அங்கு வந்து தேங்காய் உடைக்கிற குருக்களைப் பார்த்து பரிகாசம் செய்துதான் தனது பகுத்தறிவுக் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. குருக்கள் பையன் இதையெல்லாம் ரசித்துச் சிரிக்காமல் வேறு என்ன செய்வான்? - இப்படி எதையெதையோ நினைத்துக் கொண்டு நிலா வெளிச்சத்தில், ஆலமரத்தடியில் கிடந்த - உடைந்து போய்ப் பாதி மண்ணில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தின் மீது வந்து உட்கார்ந்தான் குருக்கள் பையன். என்னதான் குருக்களாத்துப் பையனாக இருந்தாலும் ஒருவன் எப்போதும் சிவலிங்கத்தையே நினைத்துக் கொண்டிருக்கவா முடியும்? அந்த சிவலிங்கம் உடைந்து போயிருந்தாலும் ஒரு பக்கம் மண்ணில் சாய்ந்து புதையுண்டிருந்தாலும், 'அது சிவலிங்கம்' என்கிற விஷயத்தையே எல்லாரும் மறந்திருந்தார்கள். அதன் மீது உட்காருவது ஓர் அபசாரமாக எவருக்குமே பட்டதில்லை. ஆனால், இவனுக்குப் படும். இவன் அதன்மீது உட்கார்ந்ததே இல்லை. இப்போதுள்ள மனக்குழப்பத்தில் ... "அம்மா ரொம்பப் பாவம்... எட்டு வயசிலே கலியாணம் செய்து கொண்டவள். முப்பது வயதிலே ஒரு பிள்ளை பெற்று அதிலேயிருந்து தீராத நோயாளி..." அவளுக்கு என்ன வியாதி என்று யாரும் சொல்ல முடியாது. வயிற்றில் கட்டி என்று வைத்தியர் சொன்னார். ஆப்ரேஷனுக்கோ, ஆஸ்பத்திரிக்கோ அவளைச் சம்மதிக்க வைக்க முடியாது.
இந்த அன்னவயல் கிராமத்தை எட்டு வயதில் வந்து மிதித்தாளாம். அதன் பிறகு இந்த ஊரின் எல்லையை அவள் தாண்டியதேயில்லையாம்; அது இந்த ஜென்மத்தில் கிடையாதாம். அவளது புலம்பலுக்கிடையே இப்படிப் பட்ட வைராக்கிய வாசகங்கள் நிறைய வரும். பையன் அதையும் ரசிப்பான்.
இந்த ஊரைத் தாண்டிப் போய்விடுவது நிச்சயமாக அவளுக்குச் சாத்தியமில்லை. பஸ்ஸைப் பிடிப்பது என்றாலே வண்டி இருப்பவர்கள் ஐந்து மைல் வண்டிப் பாதையிலும், நடந்து போகிறவர்கள் மூன்று மைல் ஒற்றையடிப் பாதையிலும் பயணம் போகவேண்டும். ரயிலடி என்பதோ இருபது மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு செய்தி என்றே அவர்களுக்குத் தெரியும். அவள் ரயில் சத்தத்தைக்கூடக் கேட்டதில்லை.
ஒரு காலத்தில் இந்த அக்ரஹாரம் களையோடும், பொலிவோடும் இருந்தது. ஆனால், இப்போது பெரும்பான்மையான வீடுகள் நமது புராதன வாழ்க்கைப் பெருமைகள் போலவே இடிபாடுகளாகிவிட்டன. நிராதரவான சில விதவைக் கிழவிகளும், பிள்ளைகளை யெல்லாம் எங்கோ பறிகொடுத்து விட்டது மாதிரிப் பிரிந்து வாழ்கிற இரண்டு வயதான தம்பதிகளும், பிள்ளை இல்லாத ஒரு குடும்பமும், குருக்களாத்து அம்மாவும், பையனும் ... இவ்வளவுதான். குழியில் தேங்கிய வெள்ளத்து நீர் மாதிரி இப்போது அங்கே தங்கியிருந்தார்கள்.
அக்ரஹாரத்தைச் சேர்ந்த இவனுடைய விளையாட்டுத் தோழர்கள் குறைய ஆரம்பித்த பிறகுதான் இவன் மாட்டுக்காரச் சிறுவர்களுடன் கோலி விளையாடத் தொடங்கினான். அந்த அக்ரஹாரத்துப் பையன்களெல்லாம் இப்போது எங்கெங்கோ இருக்கிறார்கள். எப்போதாவது சிலர் நேரிலும் பலர் நினைவிலும் வருகிறார்கள். அவர்களில் யாரும் இவனோடு தோழமை கொண்டாடுவதில்லை. அவனும் அதற்காகவெல்லாம் ஏங்கியதும் இல்லை. இந்த வாழ்க்கை - காலையிலும் மாலையிலும் குளித்து ஜெபம் செய்வதும், பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து விளக்கேற்றுவதும், தெரிந்த பாடல்களைச் சுதந்திரமாகப் பாடி மலர்களை அர்ச்சிப்பதும், கோயிலுக்கு வந்தவர்களின் முன் கற்பூரத் தட்டை ஏந்தி விபூதி கொடுப்பதும் - ஒரு தொழில் என்று போனவாரம் வரை அவனுக்குத் தோன்றியதே இல்லை.
ஆரம்பத்தில் சாமிநாத ஐயர் கொடுத்த அந்தப் புத்தகங்களைப் படிக்குமாறு அம்மா அவனை நச்சரிப்பாள். அப்போதே ஒருநாள் அவளிடம் அவன் சொல்லி விட்டான்: "அம்மா, நான் அங்கே என்ன சொல்றேன்னு யாருமே கவனிக்கறதில்லை; நேக்குத் தெரிஞ்சதையெல்லாம் நான் எந்தப் பாஷையில் பிள்ளையார்கிட்ட முணுமுணுத்தா யாருக்கு என்ன? நீ பாடிண்டிருக்கியே அதையெல்லாம் கேட்டு நான் பாடறேன்; அதைவிட என்ன மந்திரம் வேணும்? நான் பிள்ளையாரை ஒவ்வொரு தடவையும் மனப்பூர்வமா நமஸ்காரம் பண்றேன். அர்ச்சனைத் தட்டத்தை என் கையிலே தரச்சே என் மனசு நடுங்கறது. தீபாராதனை காட்டறச்சே நான் என்ன பிரார்த்தனை பண்றேன் தெரியுமோ; "விக்னேஸ்வரா, இவாள்ளாம் இந்தக் குழந்தையை குருக்கள்னு நம்பறா; நான் உன்னை நம்பறேன்.
இவா நன்னா இருந்தா நேக்கு ஒரு கொறையும் வராது. எல்லாரும் நன்னா இருக்கணும்... 'ஸர்வேஜனா, ஸீகினோ பவந்து' ன்னு நெனச்சுக்கறேன். அதுக்கு மேலே எந்த ஸ்லோகமும் நேக்கு முழுக்க வரலே? உடனே 'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்' சொல்லிடுவேன். போறாதா?"
- எல்லாரிடமும் சாதுவாக இருந்துகொண்டு தன்னிடம் மட்டும் இப்படி விதண்டாவாதம் செய்கிறானே என்று அம்மா நினைத்துக் கொள்வாள்.
இப்போது கொஞ்ச காலமாய் அம்மாவின் கவலை அதிகமாகி விட்டது. பையனுக்குக் கல்யாணம் செய்து வைத்து பார்க்க முடியவில்லையாம். அதைச் சீக்கிரமாகச் செய்து பார்த்துவிட்டுத் தானும் சீக்கிரமாகக் கண்ணை மூடிவிட வேண்டுமாம். ரெண்டுத்துக்கும் நேரம் வரவில்லையாம். இந்தக் குக்கிராமத்தில் குருக்களாக இருக்கிற பையனுக்குப் பெண் கிடைக்க மாட்டேன் என்கிறதாம். இப்போதே இவனுக்கு வயதாகி விட்டதாம்... இப்படிப்பட்ட மன உளைச்சலினால் சில சமயங்களில் 'இந்த வெண்கலப் பானைச் சாதத்துக்காக என் பிள்ளையின் வாழ்க்கையை நான்தான் பாழ்படுத்திட்டேனா?' என்று சொல்லி அப்படி நினைத்த அபசாரத்துக்காகக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகிறாள் அம்மா.
"அம்மா அம்மா, பகவானை நம்பறவா இப்படியெல்லாம் அஞ்ஞானமா அவஸ்தைப்படலாமோ? இதே கோயில்லே குருக்களாயிருந்த அப்பாவுக்கு நீ வரலியா?"
"ஆமா, நான் வந்து வாழ்ந்தேனே! அவர் என்ன பாவம் பண்ணினாரோ! அவர் பிள்ளைக்கும் அப்படி ஆக வேண்டாம். நேக்கு லட்சுமி மாதிரி ஒருத்தி வருவா, பாரேன்" என்று அந்தக் கற்பனையிலே மகிழ்ந்து போவாள்.
"வரலேன்னாதான் என்னவாம்; பிள்ளையார் ஒரு ஒண்டிக்கட்டை; நானும் ஒரு ஒண்டிக்கட்டை; அவருக்கு அபிஷேகம் பண்ணிண்டு ஆனந்தமா இருப்பேன். வெண்கலப்பானை சாதம்னு அவ்வளவு அலட்சியமா சொல்லிட்டா ஆச்சா? அந்த சாதத்துக்காகத்தான் பட்டணத்திலே ஏகக்கலவரமாம்; பேப்பர்லே கூடப் போட்டிருக்கான்" என்று தன்னைப் பார்த்துச் சிரிக்கிற இந்த உலகத்தையே அம்மாவின் முன்னால் மட்டும் பரிகசித்துச் சிரிப்பான். வெளியே இது மாதிரியெல்லாம் அவன் பேசுவானா என்ன?
'ஐயோ! இதென்ன, சிவலிங்கத்தின் மீது உட்கார்ந்திருக்கிறோம்' என்று பதறி எழுந்தான். அதைத் தொட்டு வணங்கிவிட்டு இன்னும் கொஞ்சம் நடந்து ஆலமரத்து நிழலுக்கு வெளியே நிலா வெளிச்சத்திலிருந்த சுமை தாங்கிக் கல்லுக்குப் போய் உட்கார்ந்தான். மேல் துண்டையெடுத்துத் தலைப்பாகையாகக் கட்டினான். ஆலமரத்தையும் தாமரைக் குளத்தையும் பார்த்து 'அன்னவயல் அழகாய்த்தான் இருக்கிறது' என்று நினைத்துக் கொண்டான்.
தற்கால வாழ்க்கை சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்னைகளையும் ஒரு வேடிக்கையாகவே பார்த்துக் கொண்டு வாழ்ந்திருந்த இந்தக் குருக்களாத்துப் பையனுக்கு இந்த வாழ்க்கைக்கும் ஒரு பிரச்னை உண்டு என்று போனவாரம் தெரிந்தது. சாமிநாத ஐயர் எழுதிய கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நாகபூஷணம் இவனிடம் ஒருநாள் சொன்னான்:
"உங்க சித்தப்பா ரிடையர் ஆகிட்டாராம்... சம்சாரம் போனத்துக்கப்புறம் பையனோட இருக்கப் பிடிக்கலையாம். கடைசிக் காலத்தில் இங்கே வந்து கோயில் திருப்பணி செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டாராம். 'விசுவநாதன்தான் பெரிய பையனா வளர்ந்துட்டானே, இனிமேலாவது வேற ஏதாவது வேலை செய்து தாயாரை காப்பாத்த வேணாமா' ன்னு அவர் கேக்கறார்... சரிதானே?" என்று நாகபூஷணம் இவனிடம் கேட்டபோது, 'சரிதான்' என்று தலையாட்டினான்: "அதுக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லுங்கோ."
"உங்க சித்தப்பா வந்த உடனே கோயிலை அவர் கையில் ஒப்படைக்கணும்..."
"ஓ, பேஷா!" என்று சொல்லிவிட்டு வந்தான்.
"நீ என்னடா சொன்னே?" என்று வாசற்படியில் தலைசாய்த்துப் படுத்திருந்த அம்மா, இருட்டில்
எழுந்து உட்கார்ந்து கேட்டாள்.
ஒட்டுத்திண்ணையில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த
விசு சொன்னான்: "சரி, அப்படியே ஆகட்டும்னேன்."
'அசடே அசடே' என்று அம்மா முனகிக் கொண்டாள். "வேறே என்ன செய்யறதா யோசனை? நீ
என்னடா கொழந்தை செய்வே?" என்று இருட்டில் இரண்டு உள்ளங்கைகளையும் ஏந்தியவாறே கேட்டாள் அம்மா. அவன் அவளைத் திரும்பிப் பார்த்தபொழுது இருட்டில் கவிழ்த்து வைத்திருந்த வெண்கலப் பானை பளபளத்தது.
"என்ன செய்யறது? மொதல்லே அதோ இருக்கே அந்த வெண்கலப் பானையையும், இரும்புச் சாவியையும் கொண்டு பொயி அவாகிட்ட குடுத்திட வேண்டியதுதான்."
"அப்புறம்? நோக்குப் படிப்பும் கிடையாது; விதரணையும் கிடையாது; நோக்கு வேற ஒண்ணும் தெரியாதேடா?"
அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்: "என்னத்தைத் தெரிஞ்சுண்டு அம்மா நாம இவ்வளவு காலம் வாழ்ந்தோம்? கடவுள் காப்பாத்துவார்" என்று சொல்லிவிட்டு யோசித்தான்: "என்னடா இவன் வேதாந்தம் பேசறானேன்னு நோக்குத் தோண்றதா? இந்தக் காலத்திலே இப்படி வாழ்ந்திண்டிருக்கிற நாமதாம்மா வேதாந்தத்தைப் பேசவாவது முடியும்."
"நோக்கு என்னடா கொழந்தை. நீ ரெக்கை முளைச்ச பறவை; என் கனத்தையும் கழுத்திலே கட்டிண்டு உன்னலே பறக்க முடியுமோ? என்னை இப்படி ஒரு ஜென்மமா பகவான் இன்னம் வெச்சிண்டிருக்க வேண்டாம். நேக்கு உடம்பு மண்ணாகவும் உசிரு கல்லாகவும் ஆயிடுத்து. பெத்தவளை இப்படி விட்டுடுப் போனா அந்தப் பாவம் உன்னை விடுமோன்னு நீ தவிக்கறே! பொழுது விடியறதுக்குள்ளே நேக்கு உயிர் போயி என்னை இழுத்துப் போட்டுட்டு நீ போகணும்னு நான் தவிக்கறேன். அதுக்கும் ஆகாம அனாதைப் பொணமாப் போயிடுவேனோ?..."
"அப்படியெல்லாம் பேசாதே அம்மா. எங்கே இருந்தாலும் ஆதிசங்கரர் வந்தமாதிரி நான் வந்துட மாட்டேனா?" என்று அவளை உற்சாகப்படுத்துவதற்காகச் சிரித்தான். அவன் வார்த்தை அவளுக்கும் இதமாக இருந்தது... அந்த இதத்தில் சற்று அமைதி அடைந்து நம்பிக்கையுடன் சொன்னாள்: "கொழந்தை! ஒரு காரியம் செய்யறயா? நாகபூஷணம் நல்ல பையன். நீ அவன்ட்ட போயி நல்லதனமா சொல்லு. எங்கம்மா இப்படி இருக்கா... அவளை விட்டுட்டு நான் ஓரெடத்துக்கும் போறத்துக்கில்லே... அது மகா பாவம்... அவ இன்னும் ரொம்ப நாளைக்கு உசிரோடு இருக்க மாட்டா... அவ உடம்பிலே உசிர் இருக்கிறவரையும் நானே கோயிலைப் பார்த்துண்டிருக்கேன்னு கேட்டுக்கோ... அவனையே விட்டு அந்தப் பிராமணனுக்கு ஒரு கடுதாசி எழுதிப் போட்டுடச் சொல்லு..."
விசுவநாதனுக்கு இந்த யோசனை சரியெனப்பட்டது. ஆனாலும், அவளது சாவை ஒரு கெடுவாக வைத்துக் கொண்டு இதை ஒரு வேலையாகக் கேட்பது அவனது மனத்திற்கு மிகுந்த வெட்கத்தைத் தந்தது. ஏதேதோ நினைத்துக் கொண்டு நாகபூஷணத்தின் எதிரே ஒருவாறு போய் நின்றான். நாகபூஷணத்திற்கு இவனைப் பார்த்தாலே ஒரு கேலி உணர்ச்சி வந்துவிடும். இப்போதும் 'கடவுள் உண்டா இல்லையா?' என்பது மாதிரி விளையாட்டாக ஏதோ பேச ஆரம்பித்தான்.
"இதோ பாரும். கடவுள் உண்டா, இல்லையான்னெல்லாம் நேக்கு வாதம் பண்ணத் தெரியாது; நேக்கும் எங்கம்மாவுக்கும் சுவாசம் விடற மாதிரி அது ஒரு அவசியம்; உமக்கு எவ்வளவோ ஐசுவரியம் இருக்கு; எவ்வளவோ தொல்லையும் இருக்கு. நேக்கு ஒரு தொல்லையும் கிடையாது... ஐசுவரியம்னாலே ஈஸ்வர அனுக்ரகம்னு பேரு... ஈசுவர என்கிற வார்த்தையிலிருந்துதான் ஐசுவரியம்னு வரது... இதெல்லாம் பெரியவா சொன்னது... நீ கல்லுன்னு நெனைக்கறதை இத்தனை வயசு வரையும் பிள்ளையார்னு நம்பிண்டு புஷ்பம் போட்டுண்டு விச்ராந்தியா நான் இருக்கேன்... நோக்குப் புரியற மாதிரி சொல்றேன். ஒரு வெண்கலப் பானை சோத்தை நம்பிண்டு அந்தப் பிள்ளையாருக்குச் சாட்சியா என் தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செய்திண்டிருக்கேன்... உங்க தாத்தா காலத்திலே ஆரம்பிச்ச இந்தப் புண்ணியத்திலே - நீர் நம்பினாலும் நம்பலேன்னாலும் - உமக்கும் ஒரு பங்கு உண்டுன்னு அம்மா உம்மகிட்ட சொல்லச் சொன்னா... 'அன்ன தாதா சுகீபவ'ன்னு பெரியவா சொல்லியிருக்கா... அம்மா உயிர் இருக்கற வரைக்கும் நானே கோயிலைப் பாத்துக்கறதுக்கு நீர்தான் பெரிய மனசு பண்ணனும்..."
"என்னப்பா இது தர்மசங்கடமாப் போச்சு... அப்பவே நீ சொல்லியிருந்தா நான் அவருக்கு எழுதியிருப்பேன் இல்லே? நீ சரின்னதுனாலே நானும் அவரை வரச்சொல்லி எழுதிட்டேனே" என்று யோசித்தான் நாகபூஷணம்.
இன்று காலை சாமிநாத ஐயரே அன்னவயலுக்கு வந்துவிட்டார். வயது காரணமாகவோ, இவ்வளவு நாள் பட்டணத்தில் வாழ்ந்த காரணத்தினாலோ சாமிநாத ஐயர், நாகபூஷணம் தெரிவித்த தகவலைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்.
நாகபூஷணம் கூப்பிட்டனுப்பியதாக குருக்களாத்துக்கு ஆள்வந்து சொன்னான்.
பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் ஆலமரத்தடியில் ஆட்கள் நாற்காலிகள் கொண்டு வந்து போட, சித்தப்பாவும் நாகபூஷணமும் வந்து உட்கார்ந்தார்கள்.
"நீ என்ன ரொம்ப பெரியவாளா ஆயிட்டதாக நினைப்போ?" என்று பையனை மிரட்டினார் சித்தப்பா.
"சிவசிவா; பெரியவா என்னை மன்னிக்கணும்... அம்மா சொன்னா; அதை அவர்கிட்ட சொல்லிண்டிருந்தேன்" என்று வாய் மீது கைபொத்திச் சொன்னான் பையன். "அம்மா சொன்னா, ஆட்டுக்குட்டி சொன்னா! நோக்கு வயசாகலே? உடம்பை வளைச்சு வேலை செய்யச் சோம்பலா? நான்தான் பார்த்திண்டிருக்கேனே, நீ அர்ச்சனை பண்ற லட்சணத்தை!" என்று அவர் எப்போதும்போல் அவனைக் கண்டித்தார். நாகபூஷணம் அந்தச் சமயத்தில் சிரித்தது அனாவசியம்.
"சித்தப்பா, நீங்க ரொம்பப் பெரியவர்... அதுக்காக நான் ஆண்டவனுக்குச் செய்யறதைக் குறைச்சுச் சொல்றது உங்களுக்கே நன்னாயில்லை... நான் எப்படி அர்ச்சனை பண்றேன்னு அந்த விக்னேஸ்வரருக்குத் தெரியும். நீங்க என்னை இவ்வளவு அவமதிப்பா பேசறதனாலே உங்களுக்கு ஒண்ணு சொல்றேன்... அறுபது வயசுக்கப்புறம்தான் உங்களுக்கு இந்தப் பிள்ளையார் மகிமை தெரிஞ்சிருக்கு... நேக்கு இருபது வயசுக்குள்ளே தெரிஞ்சுடுத்து... அதனால்தான் அவர்கிட்ட நான் அப்படி சொன்னேன்... வேண்டாம்னா போயிடறேன்." - மேல் துண்டையும் பூணூலையும் சேர்த்து அவன் மார்போடு கைகளை இறுகக் கட்டியிருந்தான்.
சாமிநாத ஐயர் சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.
"இவனுக்கோ, இவன் அப்பனுக்கோ கூட இதிலே ஒண்ணும் பாத்தியதை இல்லையாம். இவன் சோம்பேறியாம். துப்புக் கெட்டவனாம். இந்த வேலையைக் கூட இவன் சரியா செய்யறதில்லையாம். இவர் எவ்வளவோ தலைப்பாடா அடிச்சிண்டும் இவன் அர்ச்சனை மந்திரம் கூடச் சரியாய்ச் சொல்றதில்லையாம்..."
'இவர் ஏன் நாகபூஷணத்தையும் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார்' என்று குழம்பினான் விசுவநாதன்.
நாகபூஷணம் மிகவும் இளக்காரத்துடன் இவனுக்கு ஆறுதல் சொன்னான்: "உமக்குத் தகுந்த மாதிரி ஏதாவது வேலைப் பார்த்து வைக்கலாம்... எதுக்கு அரையும் குறையுமா இந்த வேலையைக் கட்டிக்கிட்டு அழறீர்? விடும்" என்று சொல்லிச் சிரித்து மறுபடியும் சொன்னான்: "நீர் எப்பவாவது வந்து சூறைத் தேங்காய் ஒடையும்... இத்தனை காலமா மந்திரம் தெரியாமலா நீ அர்ச்சனை பண்றே! மந்திரம் தெரியாம பூசை பண்றதைவிட ..." என்று அவன் சொல்ல வந்ததை முடிக்குமுன் ஒரு நம்பிக்கையின் ஆவேசமாய்ச் சீறினான் குருக்கள் பையன்: "நாகபூஷணம் பிள்ளை, நாக்கை அடக்கிப் பேசும்..." அதைச் சொன்ன பிறகு மேலே வார்த்தைகள் வராமல் அவன் உதடுகள் துடித்தன. உடனே தனது கோபத்துக்காக வருந்துகிறவன் மாதிரி குரல் இறங்கிப் பேசினான்: "அவர் என்னைக் கண்டிக்கலாம். நீங்க அப்படியெல்லாம் பேசப்படாது பிள்ளை. உங்க அப்பா ரொம்பப் பெரிய மனுஷர். அவர்தான் எனக்கு இந்தப் பிள்ளையார்கிட்ட கைகாட்டி விட்டார். உம்மையுந்தான் படிக்க வெச்சார்... உமக்குப் படிப்பு ஏறலே... அதுக்காக உம்மை என்ன வேணும்னாலும் செய்யச் சொல்லலாமோ? நமக்கு அது மட்டும் சுத்தமா செய்யத் தெரியுமாக்கும்... அப்படியெல்லாம் எந்தத் தொழிலையும் கேவலமாப் பேசப்படாது பிள்ளை..." என்றெல்லாம் தனது கோபத்தினால் தானே பயந்து நாகபூஷணத்திற்குப் புத்திமதியும் சமாதானமும் கூறினான்.
"நான் தெரியாத்தனமா ஏதாவது செஞ்சிருந்தா பெரியவா மன்னிச்சுக்கணும். இதோ இப்போ எல்லாத்தையும் கொண்டு வந்து ஒப்படைச்சுடறேன்" என்று சித்தப்பாவிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் வெண்கலப் பானையையும் கோயில் சாவியையும் கொண்டு வந்தான். வீட்டிற்குப் போனபோது, "என்னடா கொழந்தை சொன்னா" என்று அம்மா விசாரித்ததை அவன் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
சாவியைச் சித்தப்பாவின் கையிலும், பானையை அவர் அருகிலும் வைத்துவிட்டு, அவரை அவன் நமஸ்காரம் செய்து கொண்ட போதுதான், 'இந்த அன்னவயலில் இனி ஒரு நாள் இருக்கப்படாது' என்று மனத்துள் முனகியவாறு எழுந்தான்.
அம்மா இன்று கொஞ்சம் அதிகமாகவே புலம்பினாள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு இத்தனை நாள் தூங்குவது மாதிரி இன்றைக்கு அவனால் தூங்க முடியவில்லை. தூங்கினால் ஒரு நாள் ஆகிவிடுமே.
அவளிடம் சொல்லாமலே போய் விடுவதுதான் உசிதம் என்ற முடிவுடன் சுமைதாங்கியிலிருந்து இறங்கி வீட்டிற்குத் திரும்பினான்.
'ஆத்திலே அரிசி இருக்கு; அம்மாவுக்கு மட்டும்தானே? ஒரு மாசத்துக்கு தாராளமா வரும்; பக்கத்திலே உதவிக்கு அவளை மாதிரியே மனுஷா இருக்கா. பட்டணத்துக்கெல்லாம் ரொம்ப தூரம் போகாம மாயவரம், சீயாழி எங்கேயாவது போயி ஏதாவது' என்று அவன் எண்ணம் தேய்ந்தபோது, 'ஏதாவதென்ன? ஒரு காபி கிளப்பிலே போயி, மாவாட்டிப் பிழைக்கிறது" என்று தெம்புடன் நினைத்துக் கொண்டான்.
வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த அம்மாவின் பாதங்களைத் தொடாமல் நமஸ்காரம் செய்து கொண்டபோது, 'எங்கே இருந்தாலும் ஆதிசங்கரர் மாதிரி வந்துட மாட்டேனா?' என்று சற்றுமுன் அவளிடம் வேடிக்கை மாதிரி சொன்னதை மனப்பூர்வமாகச் சொல்லிக் கொண்டான். சாமிநாத ஐயர், பிள்ளையாருக்கு நைவேத்தியம் முடித்து வெண்கலப்பானை மீது ஈரத்துணி போட்டு எடுத்துக் கொண்டு வருகையில் அக்ரஹாரத்துக் கிழவியொருத்தி சொன்னாள்: "இந்த குருக்களாத்துப் பையன் எங்கேயோ போயிட்டான் போல இருக்கு... அவன் அம்மா அழறா... பாவமா இருக்கு." சாமிநாத ஐயருக்கு மனம் சங்கடப்பட்டது. நேற்று அவன் சொன்ன வார்த்தைகள் - "உங்களுக்கு அறுபது வயசில் தெரியற மகிமை எனக்கு இருபது வயசுலே..." என்று சொன்னானே அந்த வார்த்தைகள்... அவருக்கு நன்றாகத் தைத்திருந்தது. அதற்கும் மேலே அந்த நாகபூஷணப் பயல் கொஞ்சம் மரியாதை தவறிப் பேசியபோது அவனை நம்பாத்துப் பையன் சரியாகக் கொடுத்து அடக்கினானே என்று ஒரு பாராட்டுணர்வும் இருந்தது.
விசுவநாதன் வீட்டு வாசற்படியில் வந்து நின்று உள்ளே தலை நீட்டி, "மன்னி மன்னி" என்று அழைத்தார். படுத்துக் கிடந்த அம்மா, முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, "ஆரது?" என்று எழுந்தாள்.
"நான்தான்" என்று சொல்லிக் கொண்டு அந்த திண்ணையில் உட்கார்ந்தார் ஐயர்.
"இந்தக் கொழந்தை எங்கே போயி நிக்கும்? அவனுக்கு லோகமே தெரியாதே" என்று புலம்பிக்கொண்டே எழுந்து வந்தாள் அம்மா.
"நீங்க ஒண்ணும் கவலைப்படாதேங்கோ... நானும் அவனை அப்படித்தான் நெனைச்சேன். ஆனா அவன் மகா சமர்த்து. அவன் குழந்தையாயிருக்கிறது ஒண்ணும் குத்தமில்லே... வாக்கும் மனமும் சுத்தமா இருக்கே. போறாதோ? நீங்க வேணுமானா பாருங்கோ, அவன் செளக்கியமா சீக்கிரமா வருவான். சித்தமின்ன அவனை நெனைச்சுண்டே நான் பிள்ளையாருக்கு அபிஷேகம் பண்ணினேன். எப்படி அவனை நெனைக்காமலிருக்க முடியும்? பத்து வயசிலேருந்து தன் பிஞ்சு விரலால் அவரைத் தொட்டு அபிஷேகம் பண்ணிண்டிருந்திருக்கானே, அது மாதிரி - என்னென்னவோ செய்துட்டு கடைசிக் காலத்திலே என் பாவத்தைப் பிள்ளையார் தலையிலே கழுவ வந்திருக்கிற - என் கையாலே பண்ற அபிஷேகம் விநாயகருக்கு உகக்குமோ? அந்தக் கையாகுமா என் கை?" என்று அவனைப் புகழ்ந்து பேசிக் கொண்டே பேச்சுவாக்கில், "இந்தாருங்கோ மன்னி, பிரசாதத்தை உள்ளே எடுத்து வைங்கோ!" என்று மறக்காமல் சொன்னார் சாமிநாத ஐயர்.
(எழுதப்பட்ட காலம்: 1973)
நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் (1968)
எழுத்து - ஜெயகாந்தன்
எழுத்து - ஜெயகாந்தன்
ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்... அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?... அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்... அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு என்ன நஷ்டம்? பெரீசா எப்போ பார்த்தாலும் இதையே ஒரு வழக்காப் பேசிண்டு இருக்கேளே... 'ஜன்னலண்டையே உக்காந்துண்டிருக்கா... உக்காந்துண்டிருக்கா'ன்னு. ஜன்னலண்டை உட்காரப்படாதோ? ஜன்னலண்டையே போகப் படாதோ? அப்படீன்னா வீட்டுக்கு ஜன்னல்னு ஒண்ணு எதுக்காக வெக்கணும்கறேன்! ஒண்ணா? இந்த வீட்டுக்கு ரெண்டு ஜன்னல் இருக்கு; பார்த்துக்கோங்கோ. தெருவிலே நின்னு பார்த்தா இந்த வீடு ரொம்ப லட்சணமா இருக்கோ இல்லியோ? அந்த லட்சணமே இந்த ஜன்னல் ரெண்டினாலேதான். ஜன்னல் இல்லேன்னா பார்க்கச் சகிக்குமோ? இந்த வீடு ரொம்பப் பழசுதான். பழசுன்னாலும் பழசு, அறதெப் பழசு... பழசானால் என்ன? அழகாகத்தானே இருக்கு! தாத்தாவோட தாத்தாவெல்லாம் இங்கேதான் பொறந்தாளாம். இப்போ இந்த வீட்டுக்கு ரெண்டு பக்கத்திலேயும் பெரிசு பெரிசா மாடி வீடு வந்துட்டுது. ரெண்டு பெரியவா கையைப் பிடிச்சுண்டு ஒரு சின்னக் கொழந்தை நிக்கற மாதிரி இந்த வீடுதான் குள்ளமா நடுவிலே நின்னுண்டு இருக்கு... சின்ன வீடு, ஓட்டு வீடு; வீட்டுக்கு முன்னே ரெண்டு பக்கமும் திண்ணை; நடுவிலே வாசற்படி; ரெண்டு திண்ணைக்கு நேராவும் ரெண்டு ஜன்னல்; இந்த வீடு ரெண்டு கண்ணையும் தெறந்துண்டு தெருவைப் பார்க்கற மாதிரி இருக்கும். இந்த ரெண்டு ஜன்னலும் இந்த வீட்டுக்கு ரெண்டு கண் மாதிரி. ஜன்னல் வீட்டுக்குக் கண்தானே? யார் சொன்னா அப்படி?... யாரும் சொல்லலே. எனக்கே அப்படித் தோன்றது... நான்தான் சொல்றேன்.
வீட்டுக்கு ஜன்னல் எதுக்கு வெச்சாளாம்? காத்து வரதுக்கு; வீடு தெருவைப் பாக்கறதுக்கு; வீட்டில இருக்கிறவா மூச்சு விடறதுக்கு. வீட்டிலெ இருக்கிறவா தெருவிலே நடக்கிறதையெல்லாம் பாக்கறதுக்கு...
ஏன் பார்க்கணும்னா கேக்கறேள்? நன்னா கேட்டேள்! ஏன் பார்க்கப்படாதுன்னு நான் கேக்கறேன். அதுக்குப் பதில் சொல்லுங்கோ. ஏன் மூச்சு விடணும்? ஏன் காத்து வரணும்னு கூடக் கேப்பேளா? இதெல்லாம் என்ன கேள்வி? ஜன்னலே இல்லாமெக் கட்டினா அதுக்கு வீடுன்னா பேரு? அது சமாதிடீ அம்மா, சமாதி!
காலமெல்லாம் இது ஒரு பேச்சா? 'ஜன்னலண்டே உக்காந்துண்டிருக்கா... ஜன்னலண்டே உக்காந்துண்டிருக்கா'ன்னு கரிக்கறேளே...
எனக்கு ஜன்னலண்டேதான் சித்தே மூச்சு விட முடியறது. இந்த வீட்டிலே வேறே எங்கே போனாலும் மூச்சு முட்டறது; புழுங்கறது; உடம்பு தகிக்கிறது. இந்த வீட்டிலேயே... ஏன்? இந்த லோகத்திலேயே இதைவிட சொகமான இடம் கிடையாது. அடீ அம்மா! இங்கேதான் என்னமா ஜிலுஜிலுன்னு காத்து வரது! நான் உக்காந்துண்டிருக்கேனே, இந்த ஜன்னல் கட்டைதான் என்னமா வழவழன்னு இருக்கு! சேப்புக் கலர் சிமிட்டி பூசி இருக்கா... என்னதான் வெய்யல் நாளா இருந்தாலும் இது மட்டும் தொட்டா ஜில்லுனு இருக்கும்! ஜன்னலுக்கு நேரா தெரியறதே ஒரு அரச மரம்... எப்பப் பார்த்தாலும் அது 'சலசல'ன்னு என்னமோ பேசிண்டே இருக்கு. இந்த ஜன்னல் கட்டையிலே ஏறி 'ஜம்'னு உக்காந்துண்டு இந்த அரச மரத்தைப் பார்த்துண்டே இருந்தா நேரம் போறதே, காலம் போறதே தெரியறதில்லே - அப்படித்தான் நான் உக்காந்துண்டிருக்கேன்! இன்னிக்கி நேத்திக்கா உக்காந்திண்டிருக்கேன்? இதிலே உக்காந்துண்டா எனக்கு அது ஒரு பாந்தமாத்தான் இருக்கு. ஜன்னலுக்கு ரெண்டு பக்கமும் இருக்கற சுவத்திலே ஒரு பக்கம் முதுகைச் சாச்சுண்டு இன்னொரு பக்கம் ரெண்டு பாதத்தையும் பதிய வச்சு உதைச்சுண்டா 'விண்'ணுனு எனக்கு ரொம்பக் கச்சிதமா இருக்கு. இதெ எனக்காகவே கட்டி வெச்சிருக்கா. இது என்னோட ஜன்னல். நான் இந்த ஜன்னலோட நான்! எனக்காக இதைக் கட்டி வச்சு, இதுக்காக என்னைக் கட்டி வச்சுட்டா. யாரும் வெக்கல்லே; நானே வச்சுண்டேன்! எப்படிச் சொன்னாத்தான் என்னவாம், இப்போ?
இந்த மாதிரி ஒரு பக்கம் சாஞ்சுண்டு இன்னொரு பக்கம் காலை உதைச்சுண்டு உக்காரணும்னு எவ்வளவு காலம் பிரயாசைப் பட்டிருக்கேன் தெரியுமா, நான்? அப்போவெல்லாம் எனக்குக் காலே எட்டாது. கால் எட்டினா முதுகைச் சாச்சிக்க முடியாது! அப்பல்லாம் ஜன்னல் கட்டையிலே ஏறி நின்னுண்டா எனக்கு உசரம் சரியா இருக்கும்!
எப்படி நிக்கணும் தெரியுமா? ரெண்டு கம்பிக்கு நடுவே ஒரு காலை வச்சுக்கணும். வலது காலை வச்சுண்டா வலது கையாலே கம்பியை இழுத்துப் பிடிச்சுண்டுடணும்... அப்புறம் இந்தப் பக்கமா இடது கையையும் இடது காலையும் நீளமா வீசி வீசி அரை வட்டமா சுத்திச் சுத்தி ஆடணும்... ரயில் போறதாம்!... வேக வேகமா போறதாம்; தந்திக் கம்பியெல்லாம் ஓடறதாம்! அப்பறம் கும்மாணம் வரதாம்... தஞ்சாவூர்லே நிக்கறதாம்; மறுபடியும் போறதாம்; திரும்பி இங்கேயே வந்துடறதாம்...
அடீ அம்மா! இந்த ஜன்னல் கட்டையிலே உக்காந்துண்டே நான் எத்தனை பிரயாணம் பண்ணி இருக்கேன்!...
காலையும் கையையும் வீசி வீசிச் செஞ்ச பிரயாணம்; கண்ணையும் மனசையும் வெரட்டி வெரட்டிச் செஞ்ச பிரயாணம்; ஆடாமல் அசங்காமல் செஞ்ச பிரயாணம்; அழுதுண்டு செஞ்ச பிரயாணம்; சிரிச்சுண்டு செஞ்ச பிரயாணம்; ஆனந்தமான பிரயாணம்; பிரயாணத்தின் அலுப்பே இல்லாமல் செஞ்ச பிரயாணம்...
ஜன்னலுக்குப் பொருத்தமாகப் பொருந்தி உக்காந்துண்டு நான் எவ்வளவு பிரயாணம் போயிருக்கேன்! பிரயாணம் போனவாளையும் பார்த்திருக்கேன். எவ்வளவோ பேர் போறா... சும்மா போறவா, சொமந்துண்டு போறவா, தனியாப் போறவா, கூட்டமாப் போறவா, ஜோடியாய் போறவா...
இந்த ஜன்னல் வழியாக மொதல்லே யார் பார்த்திருப்பா? மொதல்லே என்னத்தைப் பார்த்திருப்பா?... யாரோ பார்த்திருப்பா... எதையோ பார்த்திருப்பா... நான் மொதல்லே என்ன பார்த்தேன்? எனக்கு ஞாபகமிருக்கிற மொதல் நெனைவே இந்த ஜன்னல் வழியாப் பார்த்ததுதான்... என்னைப் பெத்தவளை நான் பார்த்த ஞாபகமே இலை... உயிரோடு பார்த்த ஞாபகமில்லை. எனக்கு ஞாபகமிருக்கிற மொதல் விஷயமே அதுதான்.
அம்மாவைத் தூக்கிண்டு போனாளே அதுதான்!... யார் யாரோ அழுதுண்டு வாசல் வரைக்கும் ஓடி வந்தாளே... அவா அழ அழ அவசர அவசரமா அம்மாவைத் தூக்கிண்டு நாலு பேர் ஓடினாளே... நான் இந்த ஜன்னல் மேலே நின்னுண்டு, ஜன்னல் வழியாப் பார்த்துண்டிருந்தேனே!...
அதுக்கப்பறம் அந்த மாதிரி எத்தனையோ பார்த்திருக்கேன். சந்தடியில்லாமத் தூக்கிண்டு திடுதிடுன்னு ஓடுவா... சில பேர் தாரை, தப்பட்டை, சங்கு எல்லாம் வச்சுத் தெருவையே அமக்களப்படுத்திண்டு போவா. சில சமயத்திலே அவா போனப்புறம் கூடத் தெருவெல்லாம் ரொம்ப நாழி ஊதுவத்தி மணக்கும்...
அதே மாதிரி, கல்யாண ஊர்கோலமும் பார்த்திருக்கேன்! அது ரொம்ப நன்னா இருக்கும். அதென்னமோ யாருக்குக் கல்யாணம் நடந்தாலும் நமக்குச் சந்தோஷமா இருக்கு. ஊர்கோலம் ஜன்னல் கிட்டே வர்றதுக்கு முன்னே ரொம்ப நாழிக்கி முன்னயே - திடும் திடும்னு மேளம் கொட்டற சத்தம் தூரத்திலே கேக்க ஆரம்பிச்சுடும். அதுவும் கல்யாண மேளச் சத்தம்னா அது மட்டும் தனியாத் தெரியறது. அது வந்து போறவரைக்கும் நான் ஜன்னலை விட்டு நகரவே மாட்டேன்...
அந்த ஜன்னல் வழியாத் தெரியற தெரு, அதோ... அந்த அரச மரத்தடி பிள்ளையார் தெரியறதே அங்கே ஆரம்பிச்சு இந்தப் பக்கம் சிவானந்தம் வீடு வரைக்கும் தான் தெரியும். அதுவும் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் தலையை நன்னா சாச்சுச் சாச்சுப் பார்த்தால்தான் இந்த அளவுக்குத் தெரியும். கல்யாண ஊர்கோலம் வரச்சே, அந்த லைட்டுத் தூக்கிண்டு வர ஒருத்தன் மொதல்லே அரச மரத்தடிக்கு வருவான். சில பேர் லைட்டை அங்கேயே எறக்கியும் வச்சுடுவான். ஆயிரந்தான் எலக்டிரிக் லைட் இருக்கட்டுமே, கல்யாணம்னா இந்த லைட்தான் வேண்டியிருக்கு. 'ஓ'ன்னு பாயிலர் எரியறமாதிரி... நாதசுர சப்தம் பக்கத்திலே கேக்கும். அதென்னமோ கல்யாண நாதசுரத்தைக் கேட்டா மட்டும் வயத்துக்குள்ளே என்னமோ குளு குளுங்கும். அப்புறம் நெறைய பெட்ரோமாக்ஸ் லைட்... வரிசையா வந்துடும்... உடம்பெல்லாம் வேர்த்து நனைய நனைய அந்தத் தவுல்காரனும் நாதசுரக்காரனும் போட்டி போட்டுண்டு வாசிப்பா. எனக்கு ஒத்து ஊதறவனைப் பார்த்தாச் சிரிப்பு சிரிப்பா வரும். பல் வலிக்காரன் மாதிரி அவன் வாயிலே துணியை வச்சுண்டு நிப்பான். அதுக்கப்புறம் கல்யாண ஊர்கோலத்துக்காகவே சேஞ்சு வச்ச மாதிரி ஒரு கார்... அந்தக் காருக்கும் அன்னிக்கிக் கல்யாணம்! மாலையெல்லாம் போட்டிருக்கும். அந்தக் காரிலே யார் இருந்தாலும் இல்லாட்டாலும் வாண்டுப் படைகள் மட்டும் நிச்சயமா இருக்கும். சில சமயங்களிலே மாப்பிள்ளை மட்டும் தனியா, கொழந்தைகள் உண்டு; அதாவது பொண் இல்லாமல் வருவார். சில சமயத்திலே பெண்ணும் மாப்பிள்ளையும் ஜோடியா வருவா. பொண்ணு தலையைக் குனிஞ்சிண்டிருக்கும். ஆனா மனசுக்குள்ளே ஒரே சந்தோஷம்னு மொகத்திலேயே தெரியும்! எல்லாப் பொண்களும் தலையைக் குனிஞ்சிண்டுதான் இருக்கும். ஆனா என்னோட படிச்சாளே சுமதி அவளுக்கு என்ன தைரியம்! ஊர்வலம் ஜன்னலண்டை வரும்போது என்னைப் பார்த்து சிரிச்சுண்டே கையை ஆட்டினாளே! எனக்கு வெக்கமாப் போயிடுத்து... எல்லாரும் திரும்பி என்னை வேற பார்க்கறா. அப்போதான் நானும் பார்த்தேன். எல்லார் ஆத்து ஜன்னல்லேருந்தும் எல்லாருந்தான் பார்க்கறா. ஆமா; என்னை மட்டும் பெரீசா சொல்றாளே... கல்யாண ஊர்கோலம் வந்தா அவாளுந்தானே வேடிக்கை பார்க்கறா... அவாளுக்கு கல்யாண ஊர்கோலம் மட்டும்தான் வேடிக்கை; எனக்கு எல்லாமே வேடிக்கை. நான் பார்க்கத்தான் பார்ப்பேன். காலத்துக்கும் இது ஒரு வழக்கா; இது ஒரு பேச்சா?
இந்த வீட்டிலேயே எத்தனையோ கல்யாணம் நடந்திருக்கு. எவ்வளவோ ஊர்கோலம் பொறப்பட்டிருக்கு. நான் அதையெல்லாம் கூட இந்த ஜன்னல் வழியாத்தானே பார்த்திருக்கேன். எனக்குத் தெரிஞ்ச இந்த ஆத்திலே நடந்த மொதல் கல்யாணம் அப்பாவோட கல்யாணம். ஆனா அதுக்கு ஏனோ ஊர்கோலம் இல்லை. சித்தி அப்போ ரொம்ப அழகாயிருந்தா... அப்போல்லாம் எனக்கு அவளைக் கண்டா பயமே இல்லை. மொத மொதல்லே இந்த வாசல்லே ஜட்கா வண்டி வந்து நின்னு, அதிலேருந்து சித்தி எறங்கினாளே, அப்போ நான் இந்த ஜன்னல் மேலே ஏறி நின்னுண்டுதான் பார்த்தேன். சித்தி ரொம்ப நன்னாயிருந்தா... அப்பறந்தான் போகப் போக... பாவம், சித்தி! என்னமோ மாதிரி ஆயிட்டா. அவ அடிக்கடி அவ அம்மா ஆத்துக்குப் போயிடுவா. அவ ஊரு வைத்தீஸ்வரன் கோயில். சில சமயம் அப்பாவும் கூடப் போவார். ஆனா, அநேகமா சித்தி மட்டும் தனியாத்தான் போவா; தனியாத்தான் வருவா... தனியாவா? பிரசவத்துக்காகப் போய்ட்டு வரச்சே பொறந்த கொழந்தையையும் தூக்கிண்டு, துணைக்குப் பாட்டியையும் அழைச்சுண்டுதான் வருவா. பாபு பொறந்தப்பவும், நாணு பொறந்தப்பவும் அந்தப் பாட்டி வந்தா... அப்புறம் வரல்லை. ஒரு தடவை அவ செத்துப் போயிட்டான்னு அடிச்சுப் பொரண்டு அழுதுண்டு சித்திதான் போய்ட்டு வந்தா. அப்புறமெல்லாம் சித்தி மட்டும் தனியாப் போய்க் கொழந்தையைப் பெத்துண்டு வந்துடுவா. அப்பா, நான், மத்த கொழந்தைகள் எல்லாரும் இங்கேயேதான் இருப்போம். அப்பாதான் சமைப்பா... நான் கொழந்தைகளை யெல்லாம் ஜன்னல்லே உக்காத்தி வச்சுண்டு வெளையாடிண்டிருப்பேன். கொழந்தைகளுக்கெல்லாம் சாதம் ஊட்டுவேன். அப்பா எனக்குச் சாதம் போடுவா. கொஞ்ச நாளைக்கி அப்புறம் நானே சமைக்க ஆரம்பிச்சேன். நான் சமைச்சு, கொழந்தைகளுக்குப் போட்டு, அப்பாவுக்கும் போட்டு, எல்லாத்தையும் அழைச்சிண்டு ஸ்கூலுக்குப் போய்டுவேன். சித்திக்கு ஒண்ணுமே பண்ண முடியாது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போவா. வந்து கூடத்திலே தூளியைக் கட்டிண்டு படுத்துண்டுடுவா; கொஞ்சம் எழுந்து கூடமாட ஒத்தாசை சேஞ்சுண்டு வளைய வருவா. மறுபடியும் தலையைச் சுத்தறது, வாந்தி வரதுன்னு படுத்துண்டுடுவா. அதுக்கப்பறம்... வைத்தீஸ்வரன் கோயில்... ஜட்கா வண்டி... கூடத்தில் தூளியைக் கட்டிண்டு படுத்துண்டுடுவா.
நான் எட்டாங் கிளாஸ் படிச்சிண்டிருந்தப்போ என்னை ஸ்கூலை விட்டு நிறுத்திட்டா. சித்திதான் வேண்டாம்னுட்டா. அப்புறம் நாள் பூரா அடுக்களை வேலைதான். புகை, கரி, புழுக்கம்... அடி அம்மா! மொகத்தைத் துடைச்சுண்டு ஓடி வந்து சித்தெ இந்த ஜன்னலண்டை நின்னா, எவ்வளவு சொகமா இருக்கும்! ஸ்! அப்பாடீ...
அப்படி நிக்கறச்சேதான் ஒரு தடவை என்னோட படிச்சாளே சுமதி, அவ கல்யாண ஊர்கோலம் வந்தது. அவளுக்கு என்ன தைரியம்! ஜன்னலண்டை வரச்சே என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே கையை ஆட்டினாளே! எனக்கு வெக்கமா போய்டுத்து. நெஜமாகவே எனக்கு வெக்கமா இருந்தது, அவமானமா இருந்தது. நான் எட்டாவதோட நின்னுட்டேன்; அவ அதுக்குமேலே படிச்சா, பத்தாவது பாஸ் பண்ணினா, பாட்டு கத்துண்டா, வீணை கத்துண்டா, கல்யாணமும் பண்ணிண்டா; ஊர்கோலம் வரா; இப்ப என்னைப் பார்த்துக் கையை ஆட்டறா. எனக்கு வெக்கமா இருக்காதா? அவமானமா இருக்காதா? ம்... நான் என்ன பண்ணப் போறேன்?
பாத்திரம் தேய்க்க வேண்டியது; தெனம் ஒரு மூட்டை துணி தோய்க்க வேண்டியது. அடுப்படியிலே உக்காந்து நானும் வெந்துண்டே எதையாவது வேக வைக்க வேண்டியது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய்ட்டுச் சித்தி கொண்டு வந்து தந்திருக்காளே அரை டஜன் தம்பிகள் - அதையெல்லாம் வளர்க்க வேண்டியது. இதுக்கு இடையிலே ஏதாவது கொஞ்சம் அவகாசம் கெடச்சா ஜன்னலண்டை வந்து சித்தெ மூச்சுவிட வேண்டியது. வேற நான் என்ன செய்யப் போறேன்?
சுமதி கையை ஆட்டினாளே! அன்னிக்கிச் சித்தி வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிருந்தா. அப்பாவும் நானும் மாத்திரம் தனியாயிருந்தோம். பசங்களைக் கூடக் காணோம்.
'என்னம்மா கண்ணெல்லாம் செவந்திருக்கு'ன்னு அப்பா கேட்டார். வழக்கமா நான் அழும்போது யாராவது பார்த்துட்டா, 'அம்மாவை நெனச்சிண்டேன்'னு பொய் சொல்லுவேன். ஏன்னா எனக்குப் பேரே தாயில்லாப் பொண்ணுதானே! அதிலே எனக்கு ஒரு செளகரியம். ஆனா, அன்னிக்கி நான் அப்படிச் சொல்லலை. நம்ப அப்பாதானேன்னு கொஞ்சம் தைரியமா மனசை விட்டுக் கேட்டேன்: "அப்பா அப்பா... எனக்கு எப்போப்பா கல்யாணம் பண்ணப் போறேள்?"னு கேட்டேன். என்ன தப்பு அதிலே?...
எனக்கு இன்னிக்கும் இது ஒரு தப்புன்னு தோணவேயில்லை. ஆனா, நான் கேட்டேனோ இல்லியோ உடனே அப்பா மொகம் மாறிடுத்து. என்னத்தையோ அசிங்கத்தை பார்க்கறமாதிரி மொகத்தை சுளிச்சுண்டு என்னெ மொறைச்சுப் பார்த்தார். நான் பயந்து நடுங்கிட்டேன். அதுக்கப்புறம் நான் அப்பா மொகத்தைப் பார்த்ததே இல்லை; செத்துப் போனப்புறம் கூடப் பார்க்கலை.
நான் கேட்டேனே அதுக்குப் பதில் சொன்னாரோ மனுஷர்? கோவம் வந்துட்டாப் போறுமா? கோவம் இவருக்கு மட்டுந்தான் வருமோ? எனக்கு வராதோ? கேட்டதுக்குப் பதில் சொல்ல வக்கில்லே. பெரிசாப் பேசினா எல்லாரும். நான் அப்பிடிக் கேட்டிருக்கப் படாதாம், நான் மானங்கெட்டவளாம், எனக்குக் கல்யாணப் பித்தாம், ஆம்பளைப் பயித்தியமாம். என்னென்னமோ அசிங்கம் அசிங்கமாப் பேசினா. எல்லாரும் கூடிக் கூடிப் பேசினா. எல்லாத்துக்கும் இந்த அப்பாதான் காரணம். சித்தி வந்ததும் வராததுமா அவகிட்டெப் போய் இதெச் சொல்லி வச்சிருக்கார். எனக்கு வேணும். நன்னா வேணும். 'நம்ப அப்பாவாச்சே'ன்னு சொந்தமா நான் கேட்டேன் பாருங்கோ; அதுக்கு இதுவும் வேணும். இந்த மனுஷன் எனக்கா அப்பா? சித்திக்கின்னா ஆம்படையான்! அதுக்கப்புறம் இவர் கிட்டே எனக்கென்ன பேச்சு? இவர் மொகத்தை என்ன பார்க்க வேண்டியிருக்கு? செத்தப்புறமும் நான் பார்க்கல்லே. இப்ப நெனச்சுப் பார்த்தாக்கூட அவர் மொகம் ஞாபகம் வரமாட்டேங்கறதே!...
அப்படி என் மனசை வெறுக்கப் பண்ணிப்பிட்டா... ம்!... என்னைக் கொஞ்சமாவா படுத்தி வச்சிருக்கா... அடீ அம்மா! பொண்ணாப் பொறந்ததுக்கு எனக்கு ஒரு ஜன்மத்துக்கு இது போறுமே, போறுமே...
நான் ஜன்னலண்டை நின்னுண்டு யாரையோ பாக்கறேனாம். குளத்தங்கரை அரச மரத்தடி மேடையிலே யாரோ வந்து வந்து உக்காந்துக்கறானாம். அவனைப் பார்க்கறதுக்குத் தான் நான் போயிப் போயி நிக்கறேனாம். அங்கே யாரும் இல்லே. அரச மரத்தடியிலே தும்பிக்கையும் தொந்தியுமா ஒரு பிள்ளையார் தான் உக்காந்திருக்கார். பிள்ளையாரைப் பார்த்துண்டுதான் நானும் உக்கார்ந்துண்டிருக்கேன், பிள்ளையார் மாதிரி. அவர் தெய்வப் பிள்ளையார். நான் மனுஷப் பிள்ளையார். அவர் ஆம்பிள்ளைப் பிள்ளையார். நான் பொம்பிளைப் பிள்ளையார்.
அப்புறம் அங்கே சில சமயத்துலே நாய்கள் மேஞ்சுண்டு நிக்கும். சண்டை போட்டுண்டு நிக்கும். வெரட்டிண்டு திரியும். சரசமாடிண்டு வெளையாடும். குரைக்கும். அழும். மனுஷா மாதிரி படுத்துண்டு தூங்கும். முன்னே ஒரு நாய் அந்த அரசமரத்தடி மேடையிலே, அதோ ஒரு மூலை மாதிரி இருக்கே - அங்கே குட்டி போட்டு வச்சிருந்தது.
இதையெல்லாம் பாத்துண்டு நான் உக்கார்ந்திருக்கேன். நேக்கு இதெல்லாம் பிடிக்கறது. பார்க்கறேன். யாருக்கு என்னவாம்?
நான் ஜன்னலண்டை உக்காந்திருக்கறச்சே எனக்குத் தெரியாம பூனை மாதிரி அடி மேல் அடி வச்சு வந்து என் முதுகு மேலெ எக்கிண்டு பார்ப்பா சித்தி. தெருவிலே யாராவது போனா அவனுக்காகத்தான் நான் அங்கே வந்து நிக்கறேன்னு நெனைச்சுக்குவா. அரசமரத்தடியிலே எவனாவது ஒரு சோம்பேறி உக்காந்து பீடி குடிச்சிண்டிருப்பான். அவனைப் பார்த்துத்தான் நான் மயங்கிப் போறேன்னு இவ நெனச்சுக்குவா. யாராவது இருந்தா, அவனைப் பார்க்கறேனாம். யாருமே இல்லைன்னா யாருக்காகவோ காத்துண்டு இருக்கேனாம்! அப்படியெல்லாம் பேசிக்குவா. எனக்கென்ன போச்சு? யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் நெனச்சுண்டு போகட்டுமே! அவா அவா புத்தி; அவா அவா நெனப்பு; அவா அவா குணம்...
யாரோ என்னைப் பார்க்கறாளாம். பாக்கட்டுமே! பார்த்தா என்னவாம்? ஜன்னலும் பாக்கறதுக்குத்தான் இருக்கு. ஜன்னல்ங்கறது உள்ளே இருக்கிறவா வெளியே பார்க்கறதுக்குத்தான். வெளியே இருக்கிறவா உள்ளே பார்த்தா, அதுக்கு நான் என்ன செய்யறது? நெனைக்கறது சரியாயிருந்தா பாக்கறதிலே ஒண்ணும் தப்பேயில்லை.
போகப் போக எனக்கு மனசிலே பட்டது. யாரையோ நான் தேடிண்டுதான் இருக்கேனா? யார் அது? தேடினால் தப்பா? நான் தேடவே இல்லையே. சும்மா ஒரு பேச்சுக்குக் கேக்கறேன்... தேடினாக்க தப்பா? நான் யாரைத் தேடறேன்? நான் யாரைத் தேடறேனோ அவனே வந்துட்டா, ஜன்னல் வழியாவா நான் அவனோடு ஓடிப் போக முடியும்? இவாள்ளாம் நெனைக்கறாளேன்னு நானும் வெளையாட்டா ஒரு நாளைக்கித் தேடிப் பார்த்தேன். எனக்கு ஒருத்தருமே தென்படலே. பாவம்! ஒவ்வொருத்தரும் அவாவா பாட்டுக்கு என்னவோ போறா, வரா; நிக்கறா; பேசறா; என்னை ஒருத்தரும் பார்க்கலை. இவாதான் தெருவிலே போறவன் வரவன் எல்லாரையும் என்னோட முடிச்சுப் போட்டுக்கறா. சீ! எவ்வளவு அசிங்கமா நெனைக்கறா! இந்தச் சித்தி ஒரு நாள் என்னை என்னமோ அசிங்கமா கேட்டா... நேக்குக் கோபம் வந்துட்டுது.
"உனக்குப் புத்தி அப்படித்தான்... வருஷத்துக்கு ஒரு தடவை ஓடறியே வைத்தீஸ்வரன் கோயிலுக்கு"ன்னு என்னமோ நன்னாக் கேட்டுட்டேன்... பின்னே என்ன? இவமட்டும் என்னெக் கேக்கலாமோ?
நான்தான் நெஜத்தைச் சொல்றேனே, எனக்கு மத்த இடத்திலெல்லாம் மூச்சு முட்டறது. இங்கே வந்து நின்னாதான் சித்தெ மூச்சுவிட முடியறதுன்னு. நான்தான் வெளியிலேயே போக முடியாது. வெளியே போறவாளையாவது பாக்கப்படாதா?
ஐயோ! அதெ நெனைக்கவே எனக்குப் பயமாயிருக்கு! ஒரு நாள், என் கழுத்தைப் புடிச்சு அமுக்கின மாதிரி, ஒரு பானையிலே போட்டு என்னைத் திணிச்சு அடச்ச மாதிரி, என்னைப் படுக்க வச்சு என்மேல ஒரு பாறாங்கல்லை வச்சு அழுத்தின மாதிரி... இந்த ஜன்னலை மூடிட்டா!... நேக்குக் கண்ணே குருடாயிடுத்து. அதெவிட அவா என்னெக் கொன்னுருக்கலாம். அலறி, மோதி, அடிச்சுண்டு அழுதிருக்கேன் பாருங்கோ... இன்னும் கொஞ்ச நாழி ஜன்னலைத் தெறக்காம இருந்திருந்தா நான் நெஞ்சு வெடிச்சுச் செத்துப் போயிருப்பேன். அப்...பா, தெறந்துட்டா, அன்னிக்கி இந்த ஜன்னல் கட்டையிலே ஏறி உக்காந்தவதான்! நான் ஏன் எறங்கறேன்? நான் அந்தப் பக்கம் போனா இந்தப் பக்கம் மூடிடுவாளே!...
ஜன்னலைத் தெறந்து விட்டுட்டா... அத்தோட போச்சா? திண்ணை நெறய ஒரே வாண்டுப் படைகள்! எனக்கு ஒண்ணும் புரியலை. என்னை எதுக்கு எல்லாரும் இப்பிடி வேடிக்கை பார்க்கறா? நானும் பொறுத்துப் பொறுத்துப் பாத்து என்னால தாங்க முடியாம ஒரு நாள் வெரட்டினேன். அடிக்கலே; வையலே... 'என்ன ஏன்டா இப்பிடி எல்லாருமாப் படுத்தறேள்'னு அழுதேன். அதெப் பாத்து எல்லாரும் 'ஓ'ன்னு சிரிக்கறா...
அப்பா வந்தார். நான் அவர் மொகத்தைப் பார்க்கலே; ஆனா எங்கேயோ பாத்துண்டு 'அப்பா'ன்னு அழுதேன். அவரும் எங்கேயோ பாத்துண்டு பக்கத்திலே வந்து நிக்கறார்னு புரிஞ்சுது. "அப்பா! நான் தெரியாமக் கேட்டுட்டேன். நேக்கு கல்யாணமே வேண்டாம். இந்த ஜன்னலண்டையே நான் உக்காந்திண்டிருக்கேன். அது போறும்"னு சொன்னேன். "ஜன்னலை மட்டும் மூட வேண்டாம்னு சொல்லுங்கோ"ன்னு கெஞ்சினேன்.
"இனிமே நான் கல்யாணம் வேணும்னு கேக்கவே மாட்டேன்... ஏதோ எல்லார் மாதிரியும் இருக்கணும்கிற ஆசையிலே, எனக்குத்தான் அம்மா கெடையாதே, அப்பாகிட்டே கேட்டா தப்பில்லைன்னு கேட்டுட்டேன்... அதுக்காக என்னை இப்பிடிப் படுத்தி வெக்கறேளே... ஜன்னலை மூட வேண்டாம்னு சொல்லுங்கோ"ன்னு அழுதேன்.
"உனக்கு ஜன்னல்தானே வேணும்? ஜன்னலையே கட்டிண்டு அழு"ன்னு அப்பா சொன்னப்போ எனக்கு எவ்வளவு ஆறுதலா இருந்தது!
அப்புறம் ஒரு நாள்... "வாடீ என்னோட வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போயிட்டு வரலாம்"னு வாசல்லே வண்டியைக் கொண்டு வந்து வச்சுண்டு அப்பாவும் சித்தியும் என்னெ வேண்டி வேண்டி, உருகி உருகி அழைச்சா... நானா போவேன்? முடியாதுன்னுட்டேன். ஜன்னல் கம்பியை இறுக்கமாகப் புடிச்சுண்டு வரவே மாட்டேன்னுட்டேன்.
"நேக்கு வைத்தீஸ்வரன் கோவிலும் வேண்டாம்! இன்னொண்ணும் வேண்டாம். எனக்கு என்னோட ஜன்னல் போறும். இங்கேருந்தே நான் எல்லாத்தையும் பாத்துக்குவேன். என்னெ சித்தெ நிம்மதியா மூச்சுவிட விட்டுவிட்டு நீங்கள்ளாம் எங்கே வேணும்னாலும் போங்கோ"ன்னு இருந்துட்டேன்.
எனக்கு இந்த ஜன்னலே போறும்!
அப்புறம் திடீர்னு ஒரு நாள் என்னெச் சுத்தி ஒரே ஜன்னல்... பெரிய பெரிய ஜன்னல்.... சுவரே இல்லாம ஜன்னல்... ஐயையோ இது கூண்டுன்னா? தெய்வமே! நேக்கு கூண்டு வாண்டாமே! நான் என்ன புலியா? சிங்கமா? என்னெ எதுக்குக் கூண்டுலே போட்டேள்? எப்படிப் போட்டேள்? ஏன் போட்டேள்? எப்பப் போட்டு அடைச்சேள்?... நான் என்னடீ பண்ண?... அடீ அம்மா!...
வெறும் ஜன்னல் மட்டுந்தான் இருந்தது; அரச மரத்தைக் காணோம்; அதுக்குப் பின்னாலே இருக்கிற குளத்தைக் காணோம். சிவானந்தம் வீட்டைக் காணோம். கல்யாணமும் இல்லே, சாவும் இல்லே... வெறும் ஜன்னல். அதுவும் நம்பாத்து ஜன்னல் மாதிரி அழகா, சின்னதா இல்லே. ஜன்னல் கட்டை இல்லே... ஒரு பக்கம் சாஞ்சுண்டு இன்னொரு பக்கம் காலை உதைச்சுண்டு ம்ஹீம்... ஒண்ணும் முடியாது.
அப்பிடி ஒரு இடமா? அப்பிடிக்கூட ஒரு இடம் இருக்குமா? கூண்டு மாதிரி, குகை மாதிரி, ஜெயில் மாதிரி. ஒரு வேளை அது பொய்யோ, கனவு கண்டிருப்பேனோ?... நேக்கு ஒண்ணும் தெளிவா சொல்லத் தெரியலை... விடுங்கோ... இப்பத்தான் ஜன்னலண்டையே, மறுபடியும் இங்கேயே வந்துட்டேனே!...
ஒரு சமயம் உள்ளே ஜன்னல் வழியா ஒரு யானை வந்துட்டுது! ஸ்வாமி ஊர்வலம் போறச்சே அந்த யானையை நான் பார்த்திருக்கேன்... அதே யானை! அடீ அம்மா! எவ்வளவு பெரியா யானை! எவ்வளவு நைஸா மொதல்லே தும்பிக்கையை நீட்டி ஏந்தி என்னெக் கூப்படற மாதிரி வந்து நின்னுது. அசைஞ்சி அசைஞ்சி ரெண்டு கம்பிக்கும் நடுவிலே தும்பிக்கையை விட்டு என் கன்னத்துலே 'சில்'னுனு தொட்டப்போ நன்னாவும் இருந்தது; பயமாகவும் இருந்தது.
ஜன்னல் கட்டையிலே உக்கார்ந்திருந்த நான் எறங்கி வந்து அறை நடுவிலே நின்னுண்டேன். அந்த யானை நீளமா தும்பிக்கை முழுசையும் அறைக்குள்ளே நீட்டிண்டு என்னெப் பிடிக்கறதுக்கு துழாவறது... அப்புறம்...
அடீ அம்மா! இந்த அதிசயத்தைப் பாருங்கோளேன்... பார்க்கறவரைக்கும்தான் அதிசயம்.. இப்ப ரொம்ப சர்வ சாதாரனமா இருக்கு... அந்த யானையோட உடம்பு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா தட்டையாகி ஒரு கறுப்புத் துணி மாதிரி - யானை உருவத்துக்கு ஒரு படுதாவிலே கத்தரிச்சுப் பெரிசா தொங்க விட்டா எப்படி இருக்கும் - அந்த மாதிரி ஆடி ஆடி ஜன்னல் கம்பிக்கு நடுவே நொழஞ்சு முழுக்க உள்ளே வந்துட்டுதே! நடு அறையிலே கூரையிலே முதுகு இடிக்கிற மாதிரி மறுபடியும் முன்னே மாதிரியே யானையா நிக்கறதே... தும்பிக்கையாலே 'ஜில்'லுனு என்னெத் தொடறதே!
அடீ அம்மா! என்ன சொகமா இருக்கு!... எவ்வளவு சந்தோஷமா இருக்கு!.. பயமாவே இல்லே. கொஞ்சம் கூடப் பயமே இல்லே.
திடீர்னு சித்தி வந்துட்டாள்னா என்ன பண்றதுன்னு நெனச்சவுடனே தான் பயம் வந்துட்டுது.
"போ... போ"ன்னு நான் யானையை வெரட்டறேன். அது என் கழுத்தைத் தும்பிக்கையாலே வளைச்சுப் பிடிச்சுண்டு என்னையும் "வா வா"ன்னு இழுக்கறது.
ஐயையோ! எவனோடயோ ஓடிட்டாள்னு பழி வருமேன்னு நெனக்கறச்சே வயத்துலே 'பகீர்'ங்கறது!...
"சனியனே! ஏன் வந்தே?... என்னெ எங்கே இழுக்கறே?"ன்னு அந்த யானையோட நெத்தியிலே ரெண்டு கையாலேயும் குத்தறேன்... யானை என்னைத் தும்பிக்கையாலே வளைச்சுத் தூக்கிண்டு கொஞ்சம் கொஞ்சமா வந்த மாதிரியே பின்னம் பக்கத்திலே துணி மாதிரி அலை அலையா மெதந்துண்டு ஜன்னல் கம்பிக்குள்ளே நுழைஞ்சு போயிண்டே இருக்கு. நான் ஜன்னலண்டை வந்ததும் ஜன்னல் பக்கத்துலே நன்னா முதுகைச் சாச்சுண்டு, ரெண்டு பாதத்தையும் எதிர் சுவத்திலே உதைச்சுண்டு குறுக்கா நாதாங்கி போட்டா மாதிரி உக்காந்துண்டேண். யானை நொழைஞ்ச மாதிரி நான் நொழைய முடியுமா?...
பாவம்! அந்த யானை வெளியிலே நின்னுண்டு பரிதாபமாப் பார்த்தது. என்ன பண்றது? நானும்தான் அப்பிடிப் பார்த்துண்டிருக்கேன்... எவ்வளவோ பேர் அப்பிடித்தான் பார்க்கிறா. அதுக்கு நான்தான் என்ன பண்றது? அவாதான் என்ன பண்றது? பார்த்துண்டே இருக்க வேண்டியதுதான்...
அப்பிடியே என்னெப் பார்த்துண்டே அந்த யானை பின்னம் பக்கமாவே நடந்து போயி, அரச மரத்தடியிலே பிள்ளையாரா மாறிடுத்து...
அதிசயமாயிருக்கு இல்லே! எனக்கு இது சர்வ சாதாரணமா இருக்கு. ஏன்னா, இந்த மாதிரி அடிக்கடி நடக்கிறது. ஆனை மட்டும் தான் வரும். நான் போறதில்லே - முடியுமா என்ன?
இப்பல்லாம் எனக்கு ஜன்னலண்டையே சாப்பாடு வந்துடறது. எங்க பாபுவோட ஆம்படையாள் இருக்காளே குஞ்சு, தங்கம்னா தங்கம். எனக்கு அப்பிடி சிசுருஷை செய்யறா போங்கோ! நன்னா இருக்கணும்.
நாணுவும், அவன் பொண்டாட்டியும் நெய்வேலியிலே இருக்கா... பாபு எங்கே இருக்கானோ அங்கேதான் நானும் இருப்பேன். அவனும் என்னெ விடமாட்டான்.
இப்ப சித்தி இல்லை. அவ செத்துப் போயி ரொம்ப நாளாச்சு!
புதுசு புதுசாப் பொறக்கறாளே அந்த மாதிரி மனுஷா பழசு பழசா செத்தும் போறா.
நான் மாத்திரம் எப்பவும் ஜன்னலண்டையே உக்காந்திருப்பேன். உக்காந்துண்டே இருப்பேன். இந்த வீடெல்லாம் இடிஞ்சு போனாலும் இந்த ஜன்னல் மாத்திரம் இருக்கும். நான் இதிலே சாஞ்சுண்டு காலை உதைச்சுண்டு பார்த்துண்டே இருப்பேன். லோகத்தை ஜன்னலாலே பார்த்தா பிரயாணம் போற மாதிரி நன்னா இருக்கு.
இந்தப் பிரயாணம் நன்னா இருக்கு. இந்த வீடு ஒரு ரயில் மாதிரி ஓடிண்டே இருக்கு. ரயில் பெட்டி மாதிரி இந்த அறை ஜன்னல்லே உக்காந்துண்டு பார்த்துண்டே நான் பிரயாணம் போறேன்... எல்லாம் ஓடறது. மனுஷா, மரம், வீடு, பிள்ளையார், தெரு, நாய், சொந்தக்கார மனுஷா, அந்நிய மனுஷா, செத்தவா, பொறந்தவா எல்லாரும் ஓடறா.
ரயில்லே போகச்சே நாம ஓடிண்டிருக்கோம். ஆனாக்க தந்திக் கம்பியும் மரமும் ஓடற மாதிரி இருக்கோன்னோ? அதே மாதிரிதான் இங்கே நான் உக்காந்திண்டிருந்தாலும் ஜன்னலுக்கு வெளியே எல்லாரும் ஓடறதனாலே நானே ஓடிண்டிருக்கிற மாதிரி இருக்கு, யாராவது ஒருத்தர் ஓடினா சரிதான். நாமே ஓடினாத் தானா?
இப்ப யாரும் என்னைப் பாத்து சிரிக்கிறதில்லை; என்னெ வேடிக்கை பாக்கறதில்லை. ஆனாலும் எனக்குச் சில சமயத்திலே அவா சிரிக்கிற மாதிரி இருக்கு. என்னைப் பத்தி அவா 'ஜன்னலண்டை உக்காந்திருக்கா, உக்காந்திருக்கா'ன்னு சொல்லிண்டிருக்கிற மாதிரி இருக்கு. யாரு சொன்னா எனக்கு என்ன? எங்க குஞ்சு அப்பிடியெல்லாம் சொல்லவே மாட்டாள். அவ தங்கம்னா தங்கம்தான் குஞ்சு - அதான் பாபுவோட ஆம்படையாள். கொழந்தைகளைக் கொண்டு வந்து எங்கிட்டேதான் விட்டுட்டு அடுக்களைக் காரியங்களைப் பார்ப்பா.
இப்பல்லாம் நான் ஒரு வேலையும் செய்யறதில்லே. என்னெ வேலை செய்ய விடவே மாட்டா குஞ்சு.
நான் கொழந்தைகளை வெச்சிண்டு ஜன்னல் வழியா வேடிக்கை காட்டிண்டு இருக்கேன் - இல்லே, வேடிக்கை பாத்துண்டிருக்கேன்...
ஜன்னலுக்கு அன்னண்டை தெரியறதெல்லாமே வேடிக்கையாத்தான் இருக்கு!
"பாட்டி! ஜன்னலண்டை உக்காந்துண்டு என்ன பார்க்கறே?"
அடீ அம்மா! இதென்ன வேடிக்கை? பாட்டியாமே நான்? "யார் அது யாருடி நீ?"
"நான்தான் சரோவோட பொண்ணு - ஊர்லேருந்து நேத்து வந்தேனே"ன்னு என்ன வக்கணையாய்ப் பேசறது பாருங்கோ.
சரோவுக்குப் பொண்ணா? இவ்வளவு பெரியவளா? சரோ வந்து... பாபுவோட பொண்ணு... அப்போ நீ குஞ்சுவோட பேத்தியா?...
அடீ அம்மா! ஜன்னலுக்கு இந்தப் பக்கம் இவ்வளவு வேடிக்கையா நடந்திருக்கு? நான் கவனிக்கவே இல்லியே...
குஞ்சு! அடீ அம்மா! இங்கே வாயேன்! இந்த வேடிக்கையை சித்தெ வந்து பாரேன்... நான் பாட்டியாமே பாட்டீ.... உன் பேத்தி சொல்றாடி... குஞ்சு... குஞ்சு...!
(எழுதப்பட்ட காலம்: 1968)
Sunday, January 30, 2011
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது (1969)
எழுத்து - ஜெயகாந்தன்
எழுத்து - ஜெயகாந்தன்
வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய சுப்புக் கோனார்தான் முதலில் அவனைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்திலேயே கோனாருக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டது. அதே சமயம் அவன் மார்புக்குள் 'திக்'கென்று என்னமோ உடைந்து ஒரு பயமும் உண்டாயிற்று. அடையாளம் தெரிந்ததால் தனக்கு அந்த பயம் உண்டாயிற்றா அல்லது அவனைக் கண்ட மாத்திரத்திலேயே தன்னைக் கவ்விக் கொண்ட அந்தப் பயத்தினால்தான் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததா என்று நிச்சயிக்க முடியாத நிலையில் அவனை அடையாளம் கண்டதும் அச்சம் கொண்டதும் சுப்புக் கோனாருக்கு ஒரே சமயத்தில் நிகழ்ந்தன.
அது பனிக்காலம்தான். இன்னும் பனிமூட்டம் விலகாத மார்கழி மாதக் காலை நேரம்தான். அதற்காக உடம்பு திடீரென்று இப்படி உதறுமா என்ன? பாதத்தின் விரல்களை மட்டும் பூமியில் ஊன்றி, குத்திட்டு அமர்ந்திருந்த கோனாரின் இடது முழங்கால் ஏகமாய் நடுங்கிற்று. எழுந்து நின்று கொண்டான். உடம்பு நடுங்கினாலும் தலையில் கட்டியிருக்கும் 'மப்ள'ருக்குள்ளே திடீரென வேர்க்கிறதே!
முண்டாசை அவிழ்த்துத் தலையை நன்றாகச் சொறிந்து விட்டுக் கொண்டான் கோனார்.
காலனி காம்பவுண்டின் இரும்பாலான கதவுகளை ஓசையிடத் திறந்து பெரிய ஆகிருதியாய் உள்ளே வந்து கொண்டிருந்த அவன், தன்னையே குறி வைத்து முன்னேறி வருவது போலிருந்தது கோனாருக்கு.
அவன் கால் செருப்பு ரொம்ப அதிகமாகக் கிறீச்சிட்டது. அவன் கறுப்பு நிறத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தான். உள்ளே போட்டிருக்கும் பனியனும், இடுப்பிலணிந்த நான்கு விரற்கடை அகலமுள்ள தோல் பெல்ட்டும், அந்த பெல்ட்டிலே தொங்குகின்ற அடர்ந்த சாவிக் கொத்தின் வளையத்தை இணைத்து இடுப்பில் செருகி இருக்கும் பெரிய பேனாக் கத்தியும் தெரிய அணிந்த மஸ்லின் ஜிப்பா; அதைப் பார்க்கும்போது சாவிக் கொத்திலே இணைத்த ஒரு பேனாக் கத்தி மாதிரி தோன்றாமல் கத்தியின் பிடியிலே ஒரு சாவிக் கொத்தை இணைத்திருப்பது போல் தோன்றும் அளவுக்கு அந்தக் கத்தி பெரிதாக இருந்தது.
அவன் சுப்புக் கோனாரைச் சாதாரணமாகத்தான் பார்த்தான். தான் வருகிற வழியில் எதிரில் வருகிற எவரையும் பார்ப்பதுபோல்தான் பார்த்தான். போதாதா கோனாருக்கு? ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், பால் கறக்கவும் முடியாமல், பசுவின் காலை அவிழ்க்கவும் முடியாமல் தன்னைக் கடந்து செல்லும் அவனது முதுகைப் பார்த்தவாறு உறைந்து போய் நின்றிருக்கும் கோனாரைப் பார்த்து வேப்ப மரத்தில் கட்டிப்பட்டிருந்த அந்தக் கன்றுக்குட்டிக்கு என்ன மகிழ்ச்சியோ? ஒரு துள்ளூத் துள்ளிக் கட்டை அவிழ்த்துக் கொண்டு பசுவின் மடியில் வந்து முட்டியதைக் கூட அவன் பார்க்கவில்லை.
வழக்கம்போல் படுக்கையிலிருந்து எழுந்ததும் பசுவின் முகத்தில் விழிப்பதற்காக ஜன்னல் கதவைத் திறந்த முதல் வீட்டுக் குடித்தனக்காரரான குஞ்சுமணி இந்த மஸ்லின் ஜிப்பாக்காரனின் - காக்கை கூடு கட்டிய மாதிரி உள்ள கிராப்பையும், கிருதாவையும் பார்த்து முகம் சுளித்துக் கண்களை மூடிக் கொண்டார். கண்ணை மூடிக் கொண்ட பிறகுதான் மூடிய கண்களுக்குள்ளே அவனை அவருக்கு அடையாளம் தெரிந்தது. மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்தார். அவனேதான்!
அவனைத் துரத்திக் கொண்டு யாராவது ஓடி வருகிறார்களா என்று பார்ப்பதற்காகக் குஞ்சுமணி வெளியில் ஓடி வந்தார்.
அப்போது அவன் அவரையும் கடந்து மேலே போய்க் கொண்டிருந்தான். வெளியில் வந்து பார்த்த குஞ்சுமணி, பசுவின் காலைக் கட்டிப்போட்டு விட்டுத் தன் கால்களையும் பயத்தால் கட்டிப் போட்டுக் கொண்டு நிற்கும் சுப்புக் கோனாரைப் பார்த்தார். கோனாருக்குப் பின்னால் காம்பவுண்டு 'கேட்'டுக்கு வெளியே நின்றிருந்த அந்த ஜட்கா வண்டியிலிருந்துதான் இவன் இறங்கி வருகிறானா என்று குஞ்சுமணியால் தீர்மானிக்க முடியவில்லை.
ஏனெனில் - தெருவோடு போகிற வண்டி தானாகவே அதன் போக்கில் நின்றிருக்கலாமென்று தோன்றுகிற விதமாக அந்த ஜட்கா வண்டியின் குதிரை, பின்னங்கால்களை முழங்கால் வளையப் பூமியில் உந்தி விறைத்துக் கொண்டு புழுதி மண்ணில் நுரை கிளம்பச் சிறுநீர் கழித்த பின், கழுத்துச் சலங்கை அசைய அப்போதுதான் நகர ஆரம்பித்திருந்தது. காலையில் தனக்கு வரிசையாகக் காணக் கிடைக்கின்ற 'தரிசன'ங்களை எண்ணிக் காறித் துப்பினார் குஞ்சுமணி. துப்பிய பிறகுதான் 'அவன் திரும்பிப் பார்த்துவிடுவானோ' என்று அவர் பயந்தார். அந்தப் பயத்தினால், தான் துப்பியது அவனைப் பார்த்து இல்லை என்று அவனுக்கு உணர்த்துவதற்காக "தூ! தூ! வாயிலே கொசு பூந்துட்டது" என்று இரண்டு தடவை பொய்யாகத் துப்பினார் குஞ்சுமணி.
அவன் அந்தக் காலணியின் உள்ளே நுழைந்து இரண்டு பக்கமும் வரிசையாய் அமைந்த அந்தக் குடியிருப்பு வீடுகளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல், அவற்றின் உள்ளே மனிதர்கள் தான் வாழுகிறார்களா என்றூ அறியக் கூட சிரத்தையற்றவனாய், தனது இந்த வருகையைக் கண்டபின் இங்கே உள்ள அத்தனை பேருமே ஆச்சரியமும், அச்சமும், கவலையும், கலக்கமும் கொள்வார்கள் என்று தெரிந்தும், அவர்களின் அந்த உணர்ச்சிகளைத் தான் பொருட்படுத்தவில்லை என்று காட்டிக் கொள்ளுகிற ஓர் அகந்தை மாதிரி, 'இங்கே இருக்கும் எவனையும் போல் எனக்கும் இங்கு நடமாட உரிமை உண்டு' என்பதைத் தனது இந்தப் பிரசன்னத்தின் மூலம் ஒரு மெளனப் பிரகடனம் செய்கின்ற தோரணையில், பின்னங் கைகளைக் கட்டிக் கொண்டு, பின்புறம் கோத்த உள்ளங்கைகளைக் கோழிவால் மாதிரி ஆட்டிக் கொண்டு, 'சரக் சரக்' என்று நிதானமாய், மெதுவாய், யோசனையில் குனிந்த தலையோடு மேலே நடந்து கொண்டிருந்தான்.
அந்த அகந்தையும், அவனது மெளனமான இந்தப் பிரகடனத்தையும்தான் குஞ்சுமணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், தாங்கிக் கொள்ளாமல் வேறென்ன செய்வது? ஏற்கனவே ஒரு பக்கம் பயத்தால் படபடத்துக் கொண்டிருக்கும் அவர் மனத்துள், அவனது இந்த நடையைப் பார்த்ததும் கோபமும் துடிதுடிக்க ஆரம்பித்தது. ஆனால், அறிவு நிதானமாக வேலை செய்தது அவருக்கு.
"இவன் எதற்கு இங்கு வந்திருப்பான்! இவன் நடையைப் பார்த்தால் திருடுவதற்கு வந்தவன் மாதிரி இல்லை. எதையோ கணக்குத் தீர்க்க வந்து அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிற நிதானம் இவன் நடையில் இருக்கிறதே.... ஆள் அப்போ இருந்ததை விட இப்போ இன்னும் கொஞ்சம் சதை போட்டிருக்கான். அப்போ மட்டும் என்ன.... சுவரேறிக் குதிச்ச வேகத்திலே கீழே விழுந்து, முழங்காலை ஒடிச்சுக்காமல் இருந்திருந்தான்னா அத்தனை பேரையும் அப்படியே அள்ளித் தூக்கித் தூர எறிஞ்சுட்டு ஓடிப் போயிருப்பான்... அன்னிக்கு முழங்கால்லேருந்து கொட்டின ரத்தத்தையும், பட்டிருந்த அடியையும் பார்த்தப்போ, இவனுக்கு இன்னமே காலே விளங்காதுன்னு தோணித்து எனக்கு. இப்போ என்னடான்னா நடை போட்டுக் காட்டறான், நடை! அது சரி! இப்போ இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?... என்ன பண்ணினாப் போவான்?... இவன் வந்திருக்கறது நல்லதுக்கில்லைன்னு தோணறதே. இன்னிக்கு யார் மொகத்திலே முழிச்சேனோ? சித்தமின்னே இவன் மொகத்திலே தான் முழிச்சேனோ?..." என்ற கலவரமான சிந்தனையோடு சுப்புக் கோனாரைப் பரிதாபமாகப் பார்த்தார், குஞ்சுமணி. அந்தப் பார்வையில் சுப்புக் கோனாரின் உடம்பையும், அந்த 'அவனு'டைய உடம்பையும் ஒப்பிட்டு அளந்தார்.
'கோனாருக்கு நல்ல உடம்புதான்... தயிர், பால், வெண்ணெய், நெய்யில் வளர்ந்த உடம்பாச்சே! சரிதான்! ஆனால், அடி தாங்குமோ? அவனுக்கு அன்னிக்கு முழங்காலிலே அடி படாமல் இருந்திருந்தா, இந்த சுப்புக் கோனார், கீழே விழுந்திருந்த அவன் முதுகிலே அணைக்கயத்தாலே வீறு வீறுன்னு வீறி இருப்பானா! அந்தக் கயறே ரத்தத்திலே நனைஞ்சு போயிடுத்தே!... அடிபட்டு ரத்தம் கொட்டற அந்த முழங்காலிலே ஒண்ணு வச்சான். அவ்வளவுதான்! பயல் மூர்ச்சை ஆயிட்டான். அதுக்கப்புறம் பொணம் மாதிரின்னா அவனை இழுத்துண்டு வந்து, வேப்பமரத்தோட தூக்கி வச்சுக் கட்டினா... அப்புறம் அவன் முழிச்சுப் பார்த்தப்போன்னா உயிர் இருக்கறது தெரிஞ்சது... 'தண்ணி தண்ணி'ன்னு மொனகினான். நான்தான் பால் குவளையிலே தண்ணி கொண்டு போய்க் குடுத்தேன். குடுத்த பாவி அத்தோடே சும்மா இருக்கப் படாதோ! 'திருட்டுப் பயலே! உனக்குப் பரிதாபப் பட்டா பாவமாச்சே!'ன்னு பால் குவளையாலேயே கன்னத்திலே ஓங்கி இடிச்சேன்... தண்ணி குடிச்ச வாயிலேருந்து கொடகொடன்னு ரத்தம் கொட்டிடுத்து... அவன் கண்ணைத் திறந்து கறுப்பு முழியைச் சொருகிண்டு என்னைப் பார்த்தான். அதுக்கு அர்த்தம் இப்போன்னா புரியறது...'
'எலே பாப்பான், இருடா வந்து பாத்துக்கறேன்'ங்கற மாதிரி அன்னிக்கே தோணித்து. இப்போ வந்திருக்கான்... நான் தண்ணி குடுத்தேனே... அதை மறந்திருப்பானா என்ன? எனக்கென்ன - மத்தவா மாதிரி 'ஒருத்தன் வகையா மாட்டிண்டானே, கெடைச்சது சான்ஸ்'னு போட்டு அடிக்கற ஆசையா? 'இப்படித் திருடிட்டு, ஓடிவந்து, இவா கையிலே மாட்டிண்டு, அடி வாங்கி, தண்ணி தண்ணின்னு தவிக்கறயே... நோக்கென்னடா தலையெழுத்து?'ன்னு அடிச்சேன். இல்லேங்கல்லை... அடிச்சேன்... அவனுக்கு அடிச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கும். இப்போ திருப்பி அடிக்கத்தான் அவன் வந்திருக்கான். எனக்கு நன்னாத் தெரியறது. அவன் நடையே சொல்றதே! நன்னா, ஆறு மாசம் ஜெயில் சாப்பாட்லே உடம்பைத் தேத்திண்டு வந்திருக்கான். வஞ்சம் தீக்கறதுக்குத்தான் வந்திருக்கான்... பாவம்! இந்த சுப்புக் கோனாரைப் பார்க்கறச்சேதான் பாவமா இருக்கு.. அப்படியே சிலை மாதிரி நின்னுட்டானே? இவன் கணக்குத்தான் அதிகம். என்னமா அடிச்சான்! அடிக்கறச்சே மட்டும் நன்னா இருந்ததோ?... இப்போ திருப்பி தரப் போறான்... நேக்கும்தான்... என் கணக்கு ஒரு அடிதான்... ஆனால், அதை நான் தாங்கணுமே!.. இந்தக் காலனிலே இருக்கிறவாள் எல்லாருமே ஆளுக்கு ஒரு தர்ம அடி போட்டா... அப்படி இவன் என்ன மகா சூரன்? எல்லாரையுமா இவன் அடிச்சுடுவான்?" என்ற எண்ணத்தோடு மறுபடியும் சுப்புக் கோனாரின் உடம்பை அளந்து பார்த்தார் குஞ்சுமணி. அவன் உடம்போடு தன் உடம்பையும் - ஏதோ இலங்கைக்குப் பாலம் போடும்போது அணில் செய்த உதவி மாதிரி தன் பலத்தையும் கூட்டி அதன் பிறகு தானும் சுப்புக் கோனாரும் சேர்ந்து போடுகிற கூச்சலில் வந்து சேருவார்கள் என்று நம்புகிற கூட்டத்தின் பலத்தையும் சேர்த்துப் பெருக்கிக் கொண்ட தைரியத்தோடு குஞ்சுமணி பலமாக ஒருமுறை - இருமினார்! அவர் என்னமோ அவனை மிரட்டுகிற தோரணையில் கனைத்து ஒரு குரல் கொடுக்கத் தான் நினைத்தார். அப்படியெல்லாம் கனைத்துப் பழக்கமில்லாத காரணத்தினாலோ, அல்லது நாள் முழுவதும் அந்த நடராஜா விலாஸில் சரக்கு மாஸ்டராக அடுப்படிப் புகையில், கடலை எண்ணெயில் உருட்டிப் போட்ட புளி உருண்டை தீய்கிற கமறலில் இருமி இருமி நாள் கழிக்கிற பழக்கத்தினாலோ கனைப்பதாக நினைத்துக் கொண்டு அவரால் இருமத்தான் முடிந்தது.
அவன், அவரையோ, அவர் இருமலையோ கொஞ்சம்கூட லட்சியம் செய்யாமல் பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டு வாசற்படிகளில் ஏறினான்.
"நல்ல இடம்தான் பார்த்திருக்கான். திண்ணையிலே உக்காந்துக்கப் போறான். பக்கத்திலே இருக்கிற குழாயடிக்கு எப்படிப் பொம்மனாட்டிகள் வந்து தண்ணி பிடிப்பா?... இதோ! இன்னும் சித்த நாழியிலே எங்க அம்மா ரெண்டு குடத்தையும் கொண்டு வந்து திண்ணையிலே வச்சுட்டு, 'குஞ்சுமணிக் கண்ணா! என் கண்ணோல்லியோ? ரெண்டே ரெண்டு குடம் தண்ணி கொண்டு வந்து குடுத்துடுடா'ன்னு கெஞ்சப் போறாள். பாவம். அவளுக்கு உக்காந்த இடத்திலே சமைச்சுப் போடத்தான் முடியும். தண்ணிக் குடம் தூக்க முடியுமா என்ன? ரெண்டு குடத்தையும் எடுத்துண்டு நான் குழாயடிக்குப் போகப் போறேன். அப்படியே அலாக்கா என்னைத் திண்ணை மேலே தூக்கி... சொல்லிடணும்.... 'ஒரு அடி தாம்பா தாங்க முடியும். அதோட விட்டுடணும்... அவ்வளவுதான் என் கணக்கு'ன்னு சொல்லிடணும். நியாயப்படி பார்த்தா அவன் முதல்லே சுப்புக் கோனாரைத்தானே அடிக்கணும்? இந்தக் கோனாருக்கு அவனை அடையாளம் தெரியலியோ?..."
"ஏய், சுப்பு! பாத்துண்டு நிக்கறீயே... ஆளை உனக்கு அடையாளம் தெரியலையா?" என்று குரலைத் தாழ்த்திச் சுப்புக் கோனாரை விசாரித்தார், குஞ்சுமணி.
"அடையாளம் எனக்குத் தெரியுது சாமி. என்னையும் அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோன்னுதான் யோசிக்கிறேன்" என்று முணுமுணுத்தான் சுப்புக் கோனார்.
அந்த நேரம், கையில் பால் செம்புடன் வெளியில் வந்த குஞ்சுமணியின் தாயார் சீதம்மாள், சுப்புக் கோனார் பாலைக் கறக்காமல் தன் பிள்ளையாண்டானுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அதுவும் அவன் ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அதைத் தானும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், காதை மறைத்திருந்த முக்காட்டை எடுத்துச் செவி மடலில் செருகிக் கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள்.
சாதாரணமாகக் குஞ்சுமணி யாருடனும் பேசமாட்டார். காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியாகப் பசுவைத் தரிசனம் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொண்டு வெற்றிலை சீவல் போட ஆரம்பிப்பார். சீதம்மாள் பாலை வாங்கிக் கொண்டு போய், காப்பி கலந்து, அவரைக் கூப்பிடுவதற்கு முன் இரண்டு தடவையாவது வெற்றிலை போட்டு முடித்திருப்பார் குஞ்சுமணி. காப்பி குடித்த பிறகு இன்னொரு முறை போடுவார். வெற்றிலை, சீவல், புகையிலை அடைத்த வாயுடன் இரண்டு குடங்களையும் தூக்கிக் கொண்டு குழாயடிக்கு வருவார். அவர் அதிகமாகப் பேசுகின்ற பாஷையே 'உம்', 'ம்ஹீம்' என்ற ஹீங்காரங்களும் கையசைப்பும்தான். அப்படிப்பட்ட குஞ்சுமணி காலையில் எழுந்து வெற்றிலை கூடப் போடாமல் இந்தக் கோனாரிடம் போய் ஏதோ பேசுகிறார் என்றால், அது ஏதோ மிக அவசியமான, சுவாரசியமான விஷயமாய்த்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்த சீதம்மாள், மோப்பம் பிடிக்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு நாலு புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள். அவ்விதம் அவள் பார்க்கும்போது அந்தப் பூட்டிக் கிடக்கும் வீட்டின் முன்னால் நின்றிருக்கும் அவன், இவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தான்.
"இங்கேதான் பார்க்கறான்... அம்மா, நீ ஏன் அங்கே பார்க்கறே?" என்று பல்லைக் கடித்தார் குஞ்சுமணி.
"யார்ரா அவன்? பூட்டிக் கிடக்கற வீட்டண்ட என்ன வேலை? கேள்வி முறை கிடையாதா? யாரு நீ?" என்று அவனைப் பார்த்த மாத்திரத்தில் குரலை உயர்த்திச் சப்தமிட்டவாறே பால் செம்புடன் கையை நீட்டி நீட்டிக் கேட்டுக்கொண்டு, அவனை நோக்கி நடந்த சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார் குஞ்சுமணி.
"அவன் யாரு தெரியுமோ? முன்னே ஒரு நாள் காலையிலே எங்கேயோ திருடிட்டு, அவா துரத்தறச்சே ஓடி வந்து நம்ப காம்பவுண்டுச் சுவரிலே ஏறிக் குதிச்சுக் காலை ஒடிச்சிண்டு, இந்தக் கோனார் கையிலே மாட்டிண்டு அடிபட்டானே...."
"சொல்லு..."
"பத்து மணிக்குப் போலீஸ்காரன் வரவரைக்கும் வேப்பமரத்திலே கட்டி வச்சு, போறவா வரவா எல்லாரும் ஆளுக்கொரு தர்ம அடி போட்டாளே..."
"ஆமா..."
"நான் கூடப் பால் குவளையாலே கன்னத்திலே ஓங்கி இடிச்சேனே... அவன்தான் - அந்தத் திருடன்தான் வந்திருக்கான்... திருடறதுக்கு இல்லே. எல்லாருக்கும் திருப்பிக் குடிக்கறத்துக்கு..."
"குடுப்பான்... குடுப்பான். மத்தவா கை பூப்பறிச்சுண்டிருக்குமாக்கும்... திருடனைக் கட்டி வச்சு அடிக்காம கையைப் பிடிச்சு முத்தம் குடுப்பாளாக்கும்...? என்ன கோனாரே! இந்த அக்கிரமத்தைப் பாத்துண்டு நிக்கறீரே? மரியாதையா காம்பவுண்டை விட்டு வெளியே போகச் சொல்லும்... இல்லேன்னா போலீஸைக் கூப்பிடுவேன்னு சொல்லும்" என்றூ அந்தக் காலனியையே கூட்டுகிற மாதிரி 'ஓ' வென்று கத்தினாள் சீதம்மாள்.
அவளுடைய கூக்குரல் கிளம்புவதற்கு முன்னாலேயே அந்தக் காலனியில் ஓரிருவர் பால் வாங்குவதற்காகவும், குழாயடியில் முந்திக் கொள்வதற்காகப் பாத்திரம் வைக்கவும் அங்கொருவர், இங்கொருவராய்த் தென்படலாயினர்.
இப்போது சீதம்மாளின் குரல் கேட்ட பிறகு, எல்லாருமே அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணையின் மேல் வந்து உட்கார்ந்திருக்கும் அந்த அவனைப் பார்த்தனர்; பார்த்ததும் அடையாளமும் கண்டனர். சுப்புக் கோனார் மாதிரியும், குஞ்சுமணி மாதிரியும் அவனது பிரசன்னத்தைக் கண்டு அவர்களும் அஞ்சினர்.
கூட்டம் சேர்ந்த பிறகு கோனாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. 'என்ன இவன்?... பெரிய இவன்!... திருட்டுப் பயல்தானே? அன்னிக்கு வாங்கின அடி மறந்திருக்கும். என்ன உத்தேசத்தோட வந்திருப்பான்னுதான் யோசிச்சேன்...'
மப்ளரை உதறித் தோளில் போட்டுக் கொண்ட கோனார், பலமாக ஒரு கனைப்புக் கனைத்தான்.
'ம்...' என்று குஞ்சுமணி அந்தக் கனைப்பை மனசுக்குள் சிலாகித்துக் கொண்டார்.
கோனார், தைரியமாக, கொஞ்சம் மிரட்டுகிற தோரணையுடனேயே அவன் உட்கார்ந்திருந்த அந்தத் திண்ணையை நோக்கி நடந்தான். அவனுக்குத் துணையாக - ஏதாவது நடந்தால் விலக்கி விடவோ, அல்லது கூச்சலிடவோ ஒரு ஆள் வேண்டாமா? அதற்காக - குஞ்சுமணியும் கோனாரின் பின்னால் கம்பீரமாக நடந்து சென்றார்.
"எலே!... உன்னை யாருன்னு இங்கே எல்லாருக்கும் தெரியும்... இடம் தெரியாம வந்துட்டே போல இருக்கு. வேறே ஏதாவது தகராறு வரதுக்கு முன்னாடி இந்தக் காம்பவுண்டை விட்டு வெளியே போயிடு" என்று கோனார் சொல்லும் போது -
"ஆமாம்பா... தகராறு பண்ணாம போயிடு... நோக்கு இடமா கிடைக்காது?" என்று குஞ்சுமணியும் குரல் கொடுத்தார்.
அவன் மெளனமாக ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். பின்னர் சாவதானமாய் இடுப்பை எக்கி பெல்ட்டோ டு தைத்திருந்த ஒரு பையைத் திறந்து, நான்காய் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தைத் கோனாரிடம் கொடுத்துவிட்டு, அதிலிருந்து ஒரு சாவியைத் தேடி எடுத்து, அந்தப் பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்.
கோனார் அந்தக் காகிதத்தைக் குஞ்சுமணியிடம் கொடுத்தான். குஞ்சுமணி அதை வாங்கிப் பார்த்ததும் வாயைப் பிளந்தார்.
"என்னய்யா கோனாரே... முதலியார் கிட்டே இரண்டு மாச அட்வான்ஸ் ஐம்பது ரூபாய் கட்டி, ரசீது வாங்கிண்டு வந்திருக்கானய்யா..." என்று ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டார்.
"நன்னா இருக்கே, நாயம்! சம்சாரிகள் இருக்கற எடத்துலே திருட்டுப் பயலைக் கொண்டு வந்து குடி வெக்கறதாவது? இந்த முதலியாருக்கென்ன புத்தி கெட்டா போயிடுத்து? ஏண்டா குஞ்சுமணி! நானும் இந்த வீடு காலியான பதினைந்து நாளா சொல்லிண்டு இருக்கேனோன்னோ? நம்ப சுப்புணி பிள்ளை பட்டம்பி இங்கே ஏதோ 'கோப்பரேட்டி' பரீட்சை எழுத வரப் போறேன்னு கடிதாசி எழுதினப்பவே சொன்னேனே.... 'அந்த முதலியார் மூஞ்சியிலே அம்பது ரூபாக் காசை 'அடுமாசி'யா விட்டெறிஞ்சுட்டு இந்த இடத்தைப் பிடிடா'ன்னு சொன்னேனோன்னோ?... நேக்கு அப்பவே பயம்தான்... வயசுப் பொண்கள் இருக்கற எடத்துலே எவனாவது கண்ட கவாலிப் பயல் வந்துடப்படாதேன்னு... பாரேன்.... அவனும் அவன் தலையும்.... கட்டால போறவன்... பீடி வேறே பிடிச்சுண்டு... என்ன கிரகசாரமோ?" என்று முடிவற்று முழங்கிக் கொண்டிருந்த சீதம்மாளை வாயைப் பொத்தி அடக்குவதா, கழுத்தை நெரித்து அடக்குவதா என்று புரியாத படபடப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் முகத்துக்கு நேரே இரண்டு கையையும் நீட்டி -
"அவன் காதுலே விழப் போறது. வாயை மூடு.... அவன் கையால எனக்கு அடி வாங்கி வெக்கறதுன்னு கங்கணம் கட்டிண்டு நிக்கறயா? எவனும் எங்கேயும் வந்துட்டுப் போறான். நமக்கென்ன?" என்று கூறிச் சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தார் குஞ்சுமணி.
"நேக்கு என்னடா பயம்? நோக்கு பயமா இருந்தா, நீ ஆத்துக்குள்ளே இரு... புருஷாள்ளாம் வெளிலே போயிடுவேள்; நாங்க பொம்மனாட்டிகள்னா வயத்துலே நெருப்பைக் கட்டிண்டு இங்கே இருக்கணும்... இப்பவே குழாயடியிலிருந்த தவலையைக் காணோம்... கொடியிலே உலர்த்தியிருந்த துணியைக் காணோம்... போறாக்குறைக்கு திருடனையே கொண்டு வந்து குடி வச்சாச்சு... காதுலே மூக்கிலே ரெண்டு திருகாணி போட்டுண்டிருக்கற கொழந்தைகளை எப்படித் தைரியமா வெளிலே அனுப்பறது? ஓய்.... கோனாரே, பேசாம போய் போலிசுலே ஒரு 'கம்ப்ளேண்டு' குடும். இதே எடத்துலே இவனைப் பிடிச்சுக் குடுத்திருக்கோம்" என்று வழி நெடுக, வாயைப் பொத்துகிற மகனின் கையைத் தள்ளித் தள்ளிப் புலம்பியவாறு வீட்டுக்குள் சென்ற சீதம்மாள், உள்ளே இருந்தும் உரத்த குரலில் அந்தத் தெருவுக்கே அபாய அறிவிப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
இதற்கிடையில், சுப்புக் கோனார், வேப்ப மரத்தடியில் கட்டியிருந்த பசுவின் மடியில் பாலை ஊட்டிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியைப் பார்த்துவிட்டுக் கோபமாக வைது கொண்டு ஓடி வந்தான். பசுவின் மடியில் கொஞ்சங்கூட மிச்சம் வைக்காமல், உறிஞ்சிவிட்ட எக்களிப்பில், வாயெல்லாம் பால் நுரை வழியத் துள்ளிக் கொண்டிருந்தது கன்றுக் குட்டி. பசு, கோனாரைக் கள்ளத்தனமாகப் பார்த்தது. ஆத்திரமடைந்த கோனார் பசுவின் காலைக் கட்டியிருந்த அணைக் கயிற்றை அவிழ்த்துச் 'சுரீர்' என்று ஒன்று வைத்தான். அடுத்த அடி கன்றுக் குட்டிக்கு. பசுவும் கன்றும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு காம்பவுண்டு கேட்டைத் தாண்டி ஓடின.
கையில் பால் செம்புடன் வெளியில் வந்த சீதம்மாளைப் பார்த்துச் சுப்புக் கோனார் கத்தினான்: "பாலுமில்லை ஒண்ணுமில்லை, போங்கம்மா... கன்னுக்குட்டி ஊட்டிப்பிடுத்து... இந்தத் திருட்டுப் பய முகத்திலே முழிச்சதுதான்" என்று சொல்லிக் கொண்டே இது தான் சந்தர்ப்பமென்று அவனும் அங்கிருந்து நழுவினான்.
திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டிருந்த குஞ்சுமணி, "மத்தியானத்துக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துடு" என்று குரல் கொடுத்தார். 'அதற்குள்ளே இங்கு என்னென்ன நடக்கப் போகிறதோ?' என்று எண்ணிப் பயந்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்தக் காலனி முழுவதும், ஆறு மாதத்துக்கு முன் ஒரு நாள் விடியற்காலையில், எங்கோ திருடிவிட்டு, தப்பி ஓடிவந்து, சுவரேறிக் குதித்து, இங்கே சிக்குண்டு, எல்லோரிடமும் தர்ம அடி வாங்கி, போலீசில் ஒப்படைக்கப்பட்டு, ஆறு மாதம் சிறை தண்டனையும் பெற்ற ஒரு பழைய கேடி, இங்குள்ள, இத்தனை நாள் காலியாக இருந்த, இதற்கு முன் ஒரு கல்லூரி மாணவன் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அந்தக் கடைசிப் போர்ஷனில் குடி வந்திருக்கிறான் என்கிற செய்தி பரவிற்று.
திண்ணையில் உட்கார்ந்திருந்த குஞ்சுமணி, வெற்றிலையை மென்று கொண்டே, அந்தத் திருடனைப் பற்றிய பயங்கரக் கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலனியிலே திரிகின்ற ஒவ்வொரு மனிதரையும் அவர் அவனோடு சம்பந்தப்படுத்திப் பார்த்தார். ஆமாம். அவர்கள் எல்லோருக்குமே அவனுடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருந்திருக்கிறது. பால் குவளையால் அவன் கன்னத்தில் ஓங்கி இடித்ததன் மூலம் அவனோடு குறைந்த பட்சம் சம்பந்தம் கொண்டவர் தான் மட்டுமே என்பதில் அவருக்கு கொஞ்சம் ஆறுதல் இருந்தது. மற்றவர்களெல்லாம் அவனை எவ்வளவு ஆசை தீர, ஆத்திரம் தீர அடித்தனர் என்பதை அவர் தனது மனக் கண்ணால் கண்டு, அந்த அடிகள் எல்லாம் அவர்களூக்கு வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கப் போவதைக் கற்பனை செய்து அவர்களுக்காகப் பயந்து கொண்டிருந்தார்.
'அந்த பதினேழாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கானே, போஸ்டாபீஸிலே வேலை செய்யற நாயுடு - சைக்கிளிலே வந்தவன் - சைக்கிளிலே உக்காந்தபடியே, ஒரு காலைத் தரையில் ஊணிண்டு எட்டி வயத்துலே உதைச்சானே... அப்படியே எருமை முக்காரமிடற மாதிரி அஞ்சு நிமிஷம் மூச்சு அடைச்சு, வாயைப் பிளந்துண்டு அவன் கத்தினப்போ, இதோட பிழைக்க மாட்டான்னு நெனைச்சேன்... இப்போ திரும்பி வந்திருக்கான்! அவனை இவன் சும்மாவா விடுவான்? இவன் வெறும் திருடனாக மட்டுமா இருப்பான்? பெரிய கொலைகாரனாகவும் இருப்பான் போல இருக்கே...' என்ற அவரது எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வது மாதிரி, அவன் அந்தக் கடைசி வீட்டிலிருந்து கையில் கத்தியுடன் இறங்கி வந்தான். இப்போது மேலே அந்த மஸ்லின் ஜிப்பாகூட இல்லை. முண்டா பனியனுக்கு மேலே கழுத்து வரைக்கும் மார்பு ரோமம் 'பிலுபிலு'வென வளர்ந்திருக்கிறது. தோளூம் கழுத்தும் காண்டா மிருகம் மாதிரி மதர்த்திருக்கின்றன.
'ஐயையோ... கத்தியை வேற எடுத்துண்டு வரானே... நான் வெறும் பால் குவளையாலேதானே இடிச்சேன்... இங்கேதான் வரான்!' என்று எண்ணிய குஞ்சுமணி, திண்ணையிலிருந்து இறங்கி, ஏதோ காரியமாகப் போகிறவர் மாதிரி உள்ளே சென்று 'படா'ரென்று கதவைத் தாளிட்டு கொண்டார். அவர் மனம் அத்துடன் நிதானமடையவில்லை. அறைக்குள் ஓடி ஜன்னல் வழியாகப் பார்த்தார்.
அவன் வேப்ப மரத்துக்கு எதிரே வந்து நின்றிருந்தான். வேப்ப மரம் குஞ்சுமணியின் வீட்டுக்கு எதிரே இருந்தது. எனவே, அவன் குஞ்சுமணி வீட்டின் எதிரிலும் நின்றிருந்தான்.
'ஏண்டாப்பா... எவன் எவனோ போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி உன்னை அடிச்சான். அவனையெல்லாம் விட்டுட்டு என்னையே சுத்திச் சுத்தி வரயே?... இந்த அம்மா கடன்காரி வேற உன் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுட்டா... நேக்குப் புரியறது... மனுஷனுக்கு ரோஷம்னு வந்துட்டா பழிக்குப்பழி தீத்துக்காம அடங்காது. அதுவும் உன்னை மாதிரி மனுஷனுக்கு ஒண்ணுக்கு ஒன்பதாத் தீத்துக்கத் தோணும். நான் வேணும்னா இப்பவே ஓடிப் போயி, அந்தக் கோனார் கிட்டே பால் குவளையை வாங்கிண்டு வந்து உன் கையிலே குடுக்கறேன். வேணுமானா அதே மாதிரி என் கன்னத்திலே 'லேசா' ஒரு இடி இடிச்சுடு. அத்தோட விடு... என்னத்துக்குக் கையிலே கத்தியையும் கபடாவையும் தூக்கிண்டு அலையறே?' என்று மானசீகமாக அவனிடம் கெஞ்சினார் குஞ்சுமணி.
அந்தச் சமயம் பார்த்து, போஸ்ட் ஆபீசில் வேலை செய்கிற அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், சைக்கிளை எடுத்துக் கொண்டு வாசலில் இறங்குவதையும் பார்த்தார். 'அடப் போறாத காலமே! ஆத்துக்குள்ளே போயிடுடா. உன் காலை வெட்டப் போறான்!' என்று கத்த வேண்டும் போலிருந்தது குஞ்சுமணிக்கு.
'எந்த வீட்டுக்கு எவன் குடித்தனம் வந்தால் எனக்கென்ன?' என்கிற மாதிரி அசட்டையாய் சைக்கிளில் ஏறிய பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், வேப்ப மரத்தடியில் கையில் கத்தியோடு நிற்கும் இவனைப் பார்த்ததும் பெடலைப் பின்புறமாகச் சுற்றினான் - சைக்கிளின் வேகத்தை மட்டுப் படுத்தினான்; குஞ்சுமணியின் கண்கள் அவன் கைகளில் இருந்த கத்தியையே வெறித்தன. அவன் அந்தக் கத்தியில் எதையோ அழுத்த, 'படக்'கென்று அரை அடி நீளத்துக்கு 'பளபள'வென்று அதில் மடிந்திருந்த எஃகுக் கத்தி வெளியில் வந்து மின்னிற்று. நடக்கப்போகிற கொலையைப் பார்க்க வேண்டாமென்று கண்களை மூடிக் கொண்டார் குஞ்சுமணி. அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன் சைக்கிளைத் திருப்பி ஒரு அரைவட்டம் அடித்து வீட்டுக்கே திரும்பினான்.
குஞ்சுமணி மெள்ளக் கண்களைத் திறந்து, பதினேழாம் நம்பர் வீட்டுக்கார நாயுடு, சைக்கிளோடு வீட்டுக்குள் போவதைக் கண்டார்: 'நல்ல வேளை! தப்பிச்சே... ஆத்தை விட்டு வெளிலே வராதே... பலி போட்டுடுவான், பலி!'
அவன் வேப்பமரத்தடியில் நின்று கைகளால் ஒரு கிளையை இழுத்து வளைத்து ஒரு குச்சியை வெட்டினான். பின்னர் அதிலிருக்கும் இலையைக் கழித்து, குச்சியை நறுக்கி, கடைவாயில் மென்று, பல் துலக்கிக் கொண்டே திரும்பி நடந்தான். அவன் பார்வையிலிருந்து மறைந்ததும், குஞ்சுமணி தெருக் கதவைத் திறந்து கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போடத் தொடங்கினார்.
அவனும் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெகு நேரம் துலக்கினான். அவன் வேப்ப மரத்தடியில் நின்றிருந்த சமயம், சில பெண்கள் அவசர அவசரமாக அந்தக் கடைசி வீட்டருகே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். அவன் மறுபடியும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டதும் குழாயடியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் குடத்தை எடுக்கக் கூட யாரும் வராததைக் கண்டு அவனே எழுந்து உள்ளே போனான்.
அங்குள்ள அத்தனை குடித்தனக்காரர்களும் தண்ணீர் பிடித்துக் கொண்டு குழாயடியைக் காலி செய்கிற வரைக்கும் அவன் வெளியே தலை காட்டவே இல்லை.
அந்த நேரத்தில்தான் குஞ்சுமணி ஒவ்வொரு வீடாகச் சென்று எல்லோரையும் பேட்டி கண்டார். அவர்கள் எல்லோருமே, சிலர் தன்னைப் போலவும், சிலர் தன்னைவிட அதிகமாகவும், மற்றும் சிலர் கொஞ்சம் அசட்டுத் தனமான தைரியத்தோடும் பயந்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒவ்வொருவரையும், "வீட்டில் பெண்டு பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டு வெளியில் போக வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார் குஞ்சுமணி.
"ஆமாம் ஆமாம்" என்று அவர் கூறியதை அவர்கள் ஆமோதித்தார்கள். சிலர் தங்களுக்கு ஆபீசில் லீவு கிடைக்காது என்ற கொடுமைக்காக மேலதிகாரிகளை வைது விட்டு, போகும்போது வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிவிட்டுப் பயந்து கொண்டே ஆபீசுக்குப் போனார்கள்.
அப்படிப் போனவர்களில் ஒருவரான தாசில்தார் ஆபீஸ் தலைமைக் குமாஸ்தா தெய்வசகாயம் பிள்ளை, தமது நண்பரொருவர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருப்பது ஞாபகம் வரவே, ஆபீசுக்குப் போகிற வழியில் ஒரு புகாரும் கொடுத்துவிட்டுப் போனார்.
காலை பதினொரு மணி வரை அவன் வெளியிலே வரவில்லை. குழாயடி காலியாகி மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு, அவன் குளிப்பதற்காக வெளியிலே வந்தான்.
வீட்டைப் பூட்டாமலேயே திறந்து போட்டு விட்டு, அந்தக் காலனி காம்பவுண்டுச் சுவரோரமாக உள்ள பெட்டிக் கடைக்குப் போய்த் துணி சோப்பும், ஒரு கட்டு பீடியும் வாங்கிக் கொண்டு வந்தான்.
இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, லுங்கி, பனியன், ஜிப்பா எல்லாவற்றையும் குழாயடி முழுதும் சோப்பு நுரை பரப்பித் துவைத்தான். துவைத்த துணிகளை வேப்பமரக் கிளைகளில் கட்டிக் காயப்போட்டான்.
காலனியில் ஆளரவமே இல்லை. எல்லோரும் அவரவர் வீடுகளுக்குள்ளே அடைந்து கிடந்தனர். துணிகளைக் காயப் போட்டுவிட்டு வந்த அவன், குழாயடியில் அமர்ந்து 'தப தப'வென விழும் தண்ணீரில் நெடுநேரம் குளித்தான்.
திடீரென்று,
"மாமா... உங்க பனியன் மண்ணிலே விழுந்துடுத்து..." என்ற மழலைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கையில், நாலு வயதுப் பெண் குழந்தையொன்று அரையில் ஜட்டியோடு மண்ணில் கிடந்த அவனது பனியனைக் கையிலே ஏந்திக் கொண்டு நின்றிருந்தது.
அப்போதுதான் அவன் பயந்தான்.
தன்னோடு இவ்வளவு நெருக்கமாக உறவாடும் இந்தக் குழந்தையை யாராவது பார்த்து விட்டார்களோ? என்று சுற்று முற்றும் திருடன் மாதிரிப் பார்த்தான்.
"நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா?... உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா... அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா? திருடிண்டு வந்துடு... அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு..."
அவன் சிரித்தான். அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோ டு பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான்.
அவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து ரகசியமாகச் சொல்லிற்று, குழந்தை: "அம்மா பாத்தா அடிப்பா... சுருக்கப் போய் அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு ஓடி வந்துடு! நான் உங்காத்திலே ஒளிஞ்சிண்டிருக்கேன்..."
அவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டுக் கடைக்கு ஓடினான்.
ஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில் கட்டிக் கொண்டு அவன் வந்தான்.
திருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு! 'இது உன் வீடு' என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம் அவனுக்கு.
அந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். 'யாராவது வந்து அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ?' என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது.
"பாப்பா... பாப்பா" என்று ஏக்கத்தோடு இரண்டு முறை அழைத்தான்.
'உஸ்' என்று உதட்டின் மீது ஆள்காட்டி விரலைப் பதித்து ஓசை எழுப்பியவாறு கதவுக்குப் பின்னால் ஒளிந்து, காத்துக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்தது.
"இங்கேதான் இருக்கேன்... வேற யாரோ வந்துட்டாளாக்கும்னு நினைச்சு பயந்துட்டேன். உக்காச்சிக்கோ" என்று அவனை இழுத்து உட்கார வைத்துத் தானும் உட்கார்ந்து கொண்டது குழந்தை.
குழந்தையின் கை நிறைய வழிந்து, தரையெல்லாம் சிதறும்படி அவன் சாக்லெட்டை நிரப்பினான்.
"எல்லாம் எனக்கே எனக்கா?"
"ம்..."
இரண்டு மூன்று சாக்லெட்டுகளை ஒரே சமயத்தில் பிரித்து வாயில் திணித்துக் கொண்ட குழந்தையின் உதடுகளில் இனிப்பின் சாறு வழிந்தது.
"இந்தா! உனக்கும் ஒண்ணு" என்று ரொம்ப தாராளமாக ஒரு சாக்லெட்டை அவனுக்கும் தந்தபோது -
"ராஜி... ராஜி" என்ற குரல் கேட்டதும் குழந்தை உஷாராக எழுந்து நின்று கொண்டது.
"அம்மா தேடறா..." என்று அவனிடம் சொல்லி விட்டு "அம்மா! இங்கேதான் இருக்கேன்" என்று உரத்துக் கூவினாள் குழந்தை.
"எங்கேடி இருக்கே?"
"இங்கேதான்... திருட வந்திருக்காளே புது மாமா! அவாத்திலே இருக்கேன்."
அவனுக்குச் சிரிப்பு வந்தது. சாக்லெட்டை அள்ளிக் குழந்தை கையிலே கொடுத்து, "அம்மா அடிப்பாங்க. இப்போ போயிட்டு அப்புறமா வா" என்று கூறினான் அவன்.
"மிட்டாயெ எடுத்துண்டு போனாதான் அடிப்பா... இதோ! மாடத்திலே எல்லாத்தையும் எடுத்து வச்சுடு. நான் அப்புறமா வந்து எடுத்துக்கறேன். வேற யாருக்கும் குடுக்காதே. ரமேஷீக்குக் கூட..."
குழந்தை போன சற்று நேரத்துக்கெல்லாம் வேப்ப மரத்தில் கட்டி உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்து உடுத்திக் கொண்டு அவன் சாப்பிடுவதற்காக வெளியே போனான்.
மத்தியானம் இரண்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வந்த அவன் வாசற்கதவை விரியத் திறந்து வைத்துக் கொண்டு தலைமாட்டில் சாவிக் கொத்து, கத்தி, பீடிக் கட்டு, பணம் நிறைந்த தோல் வார்ப்பெல்ட்டு முதலியவற்றை வைத்து விட்டுச் சற்று நேரம் படுத்து உறங்கினான்.
நான்கு மணி சுமாருக்கு யாரோ தன்னை ஒரு குச்சியினால் தட்டி எழுப்புவதை உணர்ந்து, சிவந்த விழிகளை உயர்த்திப் பார்த்தான். எதிரே போலீஸ்காரன் நிற்பதைக் கண்டதும் எழுந்து நின்று வணங்கினான்.
குழாயடிக்கு நேரே குஞ்சுமணி, கோனார், சீதம்மாள் ஆகியவர்கள் தலைமையில் ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது.
போலீஸ்காரரை வணங்கிய பின் தன்னுடைய பெல்ட்டின் பர்ஸிலிருந்து ஒரு ரசீதை எடுத்து நீட்டினான் அவன்.
"தெரியும்டா... பொல்லாத ரசீது... ஐம்பது ரூபாக் காசைக் கொடுத்து அட்வான்ஸ் கட்டினால் போதுமா? உடனே யோக்கியனாயிடுவியா, நீ? மரியாதையா இன்னைக்கே இந்த இடத்தைக் காலி பண்ணனும். என்ன? நாளைக்கும் நீ இங்கே இருக்கறதா சேதி வந்ததோ, தொலைச்சுப்பிடுவேன், தொலைச்சு... என்னைக்கிடா நீ ரிலீஸானே?" என்று மிரட்டினான் போலீஸ்காரன்.
"முந்தா நாளுங்க, எஜமான்" என்று கையைக் கட்டிக் கொண்டு, பணிவாகப் பதில் சொன்ன அவனது கண்கள் கலங்கி இருந்தன.
அப்போது தெரு வழியே வண்டியில் போய்க் கொண்டிருந்த அந்தக் காலனியின் சொந்தக்காரர் சோமசுந்தரம் முதலியார், இங்கு கூடி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, வண்டியை நிறுத்தச் சொன்னார்.
முதலியாரைக் கண்டதும் குஞ்சுமணி ஓடோ டி வந்தார்.
"உங்களுக்கே நன்னா இருக்கா? நாலு குடித்தனம் இருக்கற எடத்துலே ஊரறிஞ்ச திருடனைக் கொண்டு வந்து குடி வைக்கலாமா?"
'வாக்கிங் ஸ்டிக்'கைத் தரையில் ஊன்றி, எங்கோ பார்த்தவாறு மீசையைத் தடவிக் கொண்டு நின்றார் முதலியார்.
"அட அசடே! அவனைப் பத்தி அவருக்கென்னடா தெரியும்? திருடன்னு தெரிஞ்சிருந்தா வீடு குடுப்பாரா? அதான் போலீஸ்காரன் வந்து இப்பவே காலி பண்ணனும்னு சொல்லிட்டானே, அதோட விடு... அவர் கிட்டே என்னத்துக்கு புகார் பண்ணிண்டிருக்கே?" என்று குஞ்சுமணியைச் சீதம்மாள் அடக்கினாள்.
முதலியாருக்குக் கண்கள் சிவந்தன. அந்தக் கடைசி வீட்டை நோக்கி அவர் வேகமாய் நடந்தார். அவர் வருவதைக் கண்ட போலீஸ்காரன் வாசற்படியிலேயே அவரை எதிர் கொண்டழைத்து சலாம் செய்தான்.
"இங்கே உனக்கு என்ன வேலை?" என்று போலீஸ்காரனைப் பார்த்து உறுமினார் முதலியார்.
"இவன் ஒரு கேடி, ஸார். ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்திருந்தாங்க. அதனாலே காலி பண்ணும்படியா சொல்லிட்டுப் போறேன்."
முதலியார் அவனையும் போலீஸ்காரனையும் மற்றவர்களையும் ஒரு முறை பார்த்தார்.
"என்னுடைய 'டெனன்டை' காலி பண்ணச் சொல்றதுக்கு நீ யார்? மொதல்லே 'யூ கெட் அவுட்'!"
முதலியாரின் கோபத்தைக் கண்டதும் போலீஸ்காரன் நடுநடுங்கிப் போனான்.
"எஸ், ஸார்" என்று இன்னொரு முறை சலாம் வைத்தான்.
"அதிகாரம் இருக்குன்னா அதை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. திருடினப்போ ஜெயிலுக்குப் போனான்; அப்புறம் ஏன் வெளியிலே விட்டாங்க? திருடாதப்போ அவன் எங்கே போறது? அவன் திருடினா அப்போ வந்து பிடிச்சிக்கிட்டுப் போ" என்று கூறிப் போலீஸ்காரனை முதலியார் வெளியே அனுப்பி வைத்தார்.
"ஓய், குஞ்சுமணி! இங்கே வாரும். உம்ம மாதிரிதான் இவனும் எனக்கு ஒரு குடித்தனக்காரன். எனக்கு வேண்டியது வாடகை. அதை நீர் திருடிக் குடுக்கிறீரா, சூதாடிக் குடுக்கறீராங்கறதைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை. அதே மாதிரிதான் அவனைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. நீர் ஜெயிலுக்குப் போன ஒரு திருடனைக் கண்டு பயப்படறீர். நான் ஜெயிலுக்குப் போகாத பல திருடன்களைப் பாத்துக்கிட்டிருக்கேன். அவன் அங்கேதான் இருப்பான். சும்மாக் கெடந்து அலட்டிக்காதீர்." என்று குஞ்சுமணியிடம் சொல்லிவிட்டுக் கோனாரின் பக்கம் திரும்பினார்.
"என்ன கோனாரே... நீயும் சேர்ந்துகிட்டு யோக்கியன் மாதிரிப் பேசிறியா?... நாலு வருஷத்துக்கு முன்னே பால்லே தண்ணி கலந்ததுக்கு நீ பைன் கட்டின ஆளுதானே?..." என்று கேட்டபோது கோனார் தலையைச் சொறிந்தான்.
கடைசியாகத் தனது புதுக் குடித்தனக்காரனிடத்தில் முதலியார் சொன்னார்:
"இந்தாப்பா... உன் கிட்டே நான் கை நீட்டி ரெண்டு மாச அட்வான்ஸ் வாங்கி இருக்கேன். கையெழுத்துப் போட்டு ரசீது கொடுத்திருக்கேன். யாராவது வந்து உன்னை மிரட்டினா எங்கிட்டே சொல்லு. நான் பாத்துக்கறேன்..." என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி நடந்தார் முதலியார்.
அன்று நள்ளிரவு வரை அவன் அங்கேயே இருந்தன். அவன் எப்போது வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே போனான் என்று எவருக்கும் தெரியாது.
காலையில் பால் கறக்க வந்த கோனார் அவன் உள்ளே இருக்கிறான் என்ற பயத்துடனேயே பால் கறந்தான்.
குஞ்சுமணி, இன்றைக்கும் அந்தத் திருட்டுப் பயலின் முகத்தில் விழித்துவிடக் கூடாதே என்ற அச்சத்தோடு ஜன்னலைத் திறந்து பசுவைத் தரிசனம் செய்தார்.
குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் மட்டும், அந்த வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டு தைரியமாக, அவனைப் பற்றியும் முதலியாரைப் பற்றியும் விமரிசனம் செய்து பேசிக் கொண்டார்கள். சீதம்மாளின் குரலே அதில் மிகவும் எடுப்பாகக் கேட்டது.
அந்த வீடு பூட்டிக் கிடக்கிறது என்பதை அறிந்த கோனாரும், குஞ்சுமணியும், நேற்று இரவு அடித்த கொள்ளையோடு அவன் திரும்பி வரும் கோலத்தைப் பார்க்கக் காத்திருந்தார்கள்.
மத்தியானமாயிற்று; மாலையாயிற்று. மறுநாளும் ஆயிற்று...
இரண்டு நாட்களாக அவன் வராததைக் கண்டு, கோனாரும் குஞ்சுமணியும், அவன் திருடப் போன இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கக் கூடுமென்று மிகுந்த சந்தோஷ ஆரவாரத்தோடு பேசிக் கொண்டார்கள்.
அந்த நான்கு வயதுக் குழந்தை மட்டும் ஒருநாள் மத்தியானம் அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணை மீது ஏறி, திறந்திருக்கும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தது.
மாடம் நிறைய இருந்த சாக்லெட்டுகளைக் கலங்குகிற கண்களோடு பார்த்தது.
"ஏ, மிட்டாய் மாமா! நீ வரவே மாட்டியா?" என்று கண்களைக் கசக்கிக் கொண்டு தனிமையில் அழுதது குழந்தை.
(எழுதப்பட்ட காலம்: 1969)
நிக்கி
நிக்கி (1970)
எழுத்து - ஜெயகாந்தன்
எழுத்து - ஜெயகாந்தன்
செம்படவக் குப்பம். இரண்டு நாளாக மழை வேறு. ஒரே சகதி. ஈரம்.
ஒரு தாழ்ந்த குடிசையின் பின்புறம். இரண்டு குடிசைகளின் நடுவேயுள்ள இடைவெளியில் அவ்விரு கூரைகளின் ஓலைகளும் அந்த இடத்தில் சேர்ந்து ஒரு கூரையாகி, ஒரு சிறு திட்டில் ஈரம் படாமல் காய்ந்த மிருதுவான புழுதி மண்ணைக் குவித்து நடுவில் குழி பரத்தியது போன்ற இடத்தில் இரண்டு நாட்கள்வரை ஐந்து நாய்க்குட்டிகளை பிரசவித்த ஒரு குப்பத்து நாய் மடியைத் தரையில் தேய்த்துக் கொண்டு தாய்மை பெருமிதத்துடன் 'பாரா' கொடுத்துத் தன் குட்டிகளைப் பாதுகாவல் செய்தவாறு கிடந்தும் திரிந்தும் அலைந்து கொண்டிருந்தது. காலையிலிருந்து காணோம்!
இனிமேல் அந்த நாய் வராது என்று செய்தியைக் குப்பத்துச்சிறுவன் ஒருவன் எல்லோருக்கும் அறிவித்தான்.
" ஐஸவுஸாண்டே பஸ்லே அடிபட்டு அந்த நாய் கூய் கூயாப் பூட்ச்சி."
இந்த அறிவிப்புக்குப் பிறகு குப்பத்துச் சிறுவர்கள் தைரியமாக இந்த குட்டிகளைத் தேடி வந்தனர். ஆளுக்கு ஒரு குட்டியை எடுத்துக் கொண்டபின் கடைசியாக ஒன்றைமட்டும் எல்லோரும் நிராதரவாக விட்டுப் போய்விட்டார்கள். அதன் நிறம் கறுப்பு, இரண்டு காதுகளிலும் வாலிலும் மட்டும் வெள்ளைத் திட்டுக்கள். "சீ! அது பொட்டடா!" என்று அதனை அவர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்வதுபோல் விட்டுச் சென்றனர்.
அந்தப் பெட்டை நாய்க்குட்டி ஒரு புழுமாதிரி நாளெல்லாம் சிணுங்கியவாறு புழுதியிலும் சகதியிலும் நெளிந்து ஊர்ந்து கொண்டிருந்தது. கண்ணைத் திறந்து முதல் முறையாக உலகைப் பார்த்தது. பசியால் சிணுங்கிச் சிணுங்கி அழுதது. தான் கவனிக்க யாருமில்லாத அநாதை நாய் என்று புரிந்து கொண்டுவிட்டது மாதிரி, நடக்கக்கூடப் பயிலாத அந்த நாய்க்குட்டி கால்களைத் தரையில் இழுத்து இழுத்து நடை பழகியபோதே தனது ஜீவித யாத்திரையை மேற்கொண்டது. அந்தத் தாழ்ந்த இரண்டு குடிசைகளின் நடுவே இருந்து வெளியே வந்து ஈரமும் சகதியுமான குப்பத்துத் தெருவில் அது புரண்டு புரண்டு நடந்த காட்சியைச் சிறுவர்கள் கூடி ரசித்தனர்.
அது தனக்கு ஓர் எஜமானனை அவர்கள் மத்தியில் யாசிப்பது மாதிரி அவலமாக அழுதது. அவர்களூம் அதற்குப் பரிதாபப்பட்டனர். ஒரு குடிசையின் திண்ணையில் அதற்குப் புகலிடம் தந்து கஞ்சித் தண்ணீர், சோறு, டீ என்று படிப்படியாகத் தங்களின் தரித்திரத்தை அதற்கும் அறிமுகம் காட்டினர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுவர்களுக்கு இந்த நாய் விளையாட்டுச் சலித்துப் போயிற்று. அந்தக் குடிசைக்குச் சொந்தக்காரி இந்த நாயைக் கண்டு, அதன் மீது பூசிக் கிடக்கும் சேறும் சகதியும் அதற்கே சொந்தம் போன்றும், அது அந்தத் திண்ணையின் மூலையை அசுத்தப்படுத்துகிறது என்றும் கோபித்து, விளக்குமாற்றால் குப்பையைக் கூட்ட வந்தவள் நாயையும் சேர்த்துக் கூட்டித் திண்ணையிலிருந்து தெருவுக்குத் தள்ளினாள். அது கத்தி அலறியவாறு தலைகீழாகப் புரண்டு திண்ணையிலிருந்து தெருவில் வீசி விழுந்தது.
விழுந்த வேகத்தில் வசமாக அடிபட்டது. நாய்க்குட்டி பெருங்குரலில் அழுதவாறு புரண்டு எழுந்து ஒரு காலை மட்டும் நொண்டி நொண்டி இழுத்தவாறு தனது பயணத்தைத் தொடர்ந்தது.
கொஞ்ச தூரம் நடந்ததும் கத்துவதை நிறுத்திக் கொண்டு, விதியை நொந்துகொண்டு போவது மாதிரி மெளனமாய் - காலை இழுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் சரியாகவே - நடக்க ஆரம்பித்தது. பயந்து பயந்து குடிசை மண் சுவரை ஆதாரமாகக் கொண்டு நடந்து குப்பத்தின் எல்லைக்கும் மெயின் ரோட்டுக்கும் குறுக்கே உள்ள நாற்றச் சாக்கடைப் பாலத்தருகே வந்து விட்டது. அதற்கு மேல் திசை புரியாமல் அரை நாள் யோசனையில் அங்கேயே கிடந்து உறங்கி விழித்துக் கத்திக் கத்திக் குரல் தேய்ந்த பிறகு தைரியமாகப் பாலத்தைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்தது.
பெரிய கட்டிடங்கள் நிறைந்த வீதி. ராட்சஸத்தனமாய்ப் பஸ்களும் லாரிகளூம் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஜன சந்தடி மிகுந்திருக்கிறது. அந்தச் சின்னப் பெட்டை நாய் தைரியமாக வீதியின் குறுக்கே நடந்தது. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் மனிதன் என்ன என்ன சாகசங்களை எவ்வளவு ஆர்வத்தோடு நடத்திக் காட்டுகிறான்! இந்த நாய் இந்தத் தெருவில் நடக்கக்கூட கூடாதா என்ன? நடந்தது.
ஒரு மாடி பஸ் வந்தது. அந்த டிரைவர் நல்ல மனுஷன். இந்தச் சிறிய நாய்க்காக அந்த பெரிய பஸ்ஸையே சில விநாடி நிறுத்தினான். அது குறுக்கே நடந்து போனபிறகு, ' எவ்வளவு சின்ன நாய்! அடிகிடிபட்டுச் சாகப்போகுது. நமக்கு ஏன் அந்தப் பாவம்!" என்று அதற்காக விசனம் கொண்டவன் மாதிரி அதைப்பார்த்துக் கொண்டே அந்தப் பெரிய பஸ்ஸைத் திருப்பினான.
நாய் ரோட்டைக் கடந்துவிட்டது. பிறகு எங்கே போவது? எங்காவது போகவேண்டியதுதானே? போயிற்று.
மெயின் ரோட்டைக் கடந்து குப்பம் மாதிரி இல்லாத ஆனால் குப்பத்துத் தெரு போன்றதேயான ஒரு குறுகிய தெருவில் நடக்கையில் அதன் எதிரே ஒரு இலை வந்து விழுந்தது. இலை விழுந்ததும் அதற்காகப் பாய்ந்தோடுவதற்கான அநுபவமோ அறிவோ அதற்கு இன்னும் வராததனால் 'பொத்' தென்ற சத்தத்துக்குப் பயந்து பின்னால் பதுங்கியது அது. பதுங்கியதோ, பிழைத்ததோ!
ஒரு பெரிய நாய் அந்த இலையை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. இந்தக் குட்டிக்கு அது தன் இனத்தைச் சேர்ந்தது என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அது பெரிதாகவும் மூர்க்கமாகவும் இருந்ததனால் இது பதுங்கிக்கொண்டு அதை அச்சத்தோடு பார்த்தது. அந்த இலையில் இருப்பது சாப்பிடத் தகுந்தது என்பதைச் சுவரோரமாகப் பதுங்கிக்கொண்டு பார்த்ததனால் இந்தக் குட்டி புரிந்துகொண்டது.
ஆனாலும் இந்தக் குட்டிக்குப் பசி வந்தபோது எதிரே இலை விழுந்தும், இலை விழுந்தபோதெல்லாம் போட்டிக்கு மூர்க்கமாக மோதிச் சாடிக்கொண்டு பெரிய நாய்கள் வந்ததனால், இலையில் இருப்பதைச் சாப்பிடலாம் என்று அறிவு வந்தும் அதை அநுபவமாக்கிக் கொள்ள வாய்ப்பு வரவில்லை.
ஆனால் பசி மட்டும் வந்துகொண்டே இருந்தது.
மழையிலும் குளிரிலும் முனகி அழுதவாறு தெரு ஓரங்களில் ஓடும் சாக்கடை அருகே போட்டிக்கு யாரும் இல்லாததனால் பொறுக்கித் தின்று உழன்றுகொண்டே அந்தக் குறுகிய தெருவில் சில நாட்கள் இந்த நாய் வாழ்ந்தது.
பின் ஒரு நாள் வெயிலடித்தபோது உடம்பின் ஈரம் காய்ந்து, அழுகலையும் கழிவையும் தின்று உடம்பில் ஏறிய பலத்தால் கொஞ்சம் தெம்பும் வளர்ச்சியும் பெற்றிருந்த இந்தக் குட்டி அந்தக் குறுகிய தெருவிலிருந்து வேறொரு பெரிய தெருவுக்கு தனது யாத்திரையைத் தொடங்கிற்று.
அந்த நாளை இந்த நாய்க்கு ஒரு சோபன தினம் என்று சொல்ல வேண்டும்.
அழுது அடம் பிடித்த ஒரு குழந்தையை அதன் தாய் மல்லுக்கட்டி எங்கேயோ தூக்கிக்கொண்டு போகிறாள்.
குழந்தை பிடிவாதமாய் அவள் பிடியில் அடங்காமல் திமிறித் திமிறித் தாயின் இடுப்பிலிருந்து நழுவி நழுவி வழிகிறது.
ஒரு கையில் சிலேட்டும் பையும் வைத்துக்கொண்டு அந்தத் தாய் அந்தக் குழந்தையை ஒரு கையால் சமாளிக்க முடியாமல் வைது அடிக்கிறாள். அடம் பிடித்த குழந்தை அலறி அழுகிறது. அழுகிற குழந்தையை அவள் சமாதானம் செய்து கொஞ்சுகின்ற வேளையில் இந்தக் குட்டி அங்கே போய் சேர்ந்தது. இந்த நாயை வேடிக்கை காட்டி அந்தக் குழந்தையைத் தாய் சமாதானப்படுத்தினாள்.
இப்போது அந்தக் குழந்தை இந்த நாய் வேண்டுமென்று அடம் பிடித்தது.
அந்த மனித நேசத்தைப் புரிந்துகொண்ட இந்த அநாதை நாய் குழைந்து வாலை ஆட்டிற்று.
நல்ல வேளை. மழையில் நனைந்தும் வெயிலில் உலர்ந்தும் இது சுத்தமாக இருந்தது. நேற்றுவரை இது தின்ற அழுகலும் கழிவும் மனிதர்களுடையதுதானே! நாய்க்குட்டியை எடுத்து முத்தம் கொடுத்துக் குழந்தையிடம் கொஞ்சி அதன் கையில் கொடுத்தாள் தாய்.
இந்த நாய் ஜென்ம சாபல்யம் அடைந்தது.
சிலகாலம் அந்த வீட்டின் திண்ணை தூணில் சணல் கயிற்றால் கட்டப்பட்டுக் குழந்தையின் காட்சிப் பொருளாகவும் விளையாட்டுச் சாமானாகவும் அது வளர்ந்தது. அதற்கு அந்தக் குழந்தை தன்
மழலையில் 'பப்பி' என்றோ 'நிக்கி' என்றோ பேரிட்டது.
இப்போது பார்வைக்குப் பெரிய நாய் மாதிரி உருவம் கொண்டிருந்த அந்தப் பெட்டை நாய் நிக்கி, ஒரு நாள் அந்த வீட்டு எஜமானி வெளியில் போனபோது நன்றியுணர்ச்சியுடன் அவளைத் தொடர்ந்து ஓடிற்று. அவள், "வீட்டுக்குப் போ!" என்று எத்தனையோ முறை விரட்டியும் குழந்தைமாதிரி போக்குக் காட்டியும் ஒளிந்து ஒளிந்தும் அவளைத் தொடர்ந்து வாலை ஆட்டிக் கொண்டு துள்ளித் துள்ளி ஓடிற்று. அப்படி அவள் தன்னை விரட்டுவதும் அவள் விரட்டியவுடன் சில அடிகள் ஓடிப் பின்பு திரும்பிப் பார்த்து, அவளைத் தொடர்ந்து ஓடிப் பிடிப்பதும் நிக்கிக்கு ஆனந்தமான விளையாட்டாக இருந்தது. அந்த அம்மாவுக்கு வேலை இல்லையா என்ன? கடைசியில் 'வீட்டுக்குப் போய்விடும்' என்ற நம்பிக்கையோடு அவள் பஸ்ஸில் ஏறிப் போய்விட்டாள். கொஞ்சதூரம் பஸ்ஸைத் தொடர்ந்து நாலுகால் பாய்ச்சலில் ஓடிற்று நிக்கி. அந்த நெடிய சாலையில், பிடிக்க முடியாத, எட்ட முடியாத வேகத்தோடு விலகி விலகி எஜமானியோடு வெகுதூரத்தில் போய் - கடைசியில் அந்தத் திருப்பத்தில் பார்வைக்கும் மறைந்து விட்டது பஸ். ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் பஸ் மறைந்த பிறகும் அந்தத் திருப்பம் வரைக்கும் ஓடிற்று நிக்கி.
பஸ்ஸைக் காணோம்! வேறு வேறு பஸ்களூம் கார்களூம் மனிதர்களூமாகப் பெரும் சந்தடி நிறைந்திருந்தது அந்த வீதியில். வீட்டுக்குத் திரும்ப மனம் கொண்டு நிக்கி வந்த வழியே ஓடி வரலாயிற்று. வரும் வழியில் ஒரு சிறிய சந்து.
அங்கேயிருந்து மசால்வடை வாசனை எண்ணெய்க் கமறலுடன் வீசிற்று. நிக்கி சற்று நின்று காதுகளை உயர்த்தி, வேர்வையின் ஈரம் துளித்த நாசி விரிய வாடை பிடித்தது. மகிழ்ச்சியுடன் ஒரு துள்ளலில் சந்துக்குள் நுழைந்தது.
ஒரு கிழவி, மரத்தடியில் அடுப்பைச் சுற்றிலும் தகர அடைப்பு வைத்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறாள். பக்கத்திலுள்ள குப்பை மேட்டில் ஏறிப் படுத்துக்கொண்டு மிகுந்த சுவாரசியத்துடன் வடை வாசனையை வாயில் நீரொழுக அநுபவித்துக் கொண்டிருந்தது நிக்கி. எப்போதாவது ஒரு வடையில் கொஞ்சம் பிய்த்துத் தன்னிடம் எறிய மாட்டாளா என்ற கற்பனையோடு அவளையே தன் எஜமானியாகப் பாவித்து வாலாட்டிற்று.
ஏதோ ஒரு சமயம் அவளும் ஒரு சிறு துண்டு வடையை நிக்கியிடம் வீசி எறிந்தாள். சந்தோஷம் தாங்கவில்லை நிக்கிக்கு. ஒரு சுற்றுச் சுற்றிப் பரவச நடனம் ஆடிற்று. அந்த வடைத் துண்டைத் தின்னாமல் தரையில் போட்டு, இரண்டடி பின்னால் நகர்ந்து அதன் அழகை ரசிப்பது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குள் யாரோ அந்த வடைத் துண்டை அபகரிக்க வந்துவிட்ட அவசரத்தோடு, அந்தக் கற்பனை எதிரியிடம் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்து தன்னுடைய பொருளை ஸ்வீகரிக்கும் அவசரத்தோடு அதைக் கவ்வியது. மறுபடியும் போட்டியில் ஜயித்த ஆனந்தத்தில் வாயில் கவ்விய அந்த வடைத் துண்டைக் கீழே போட்டுச் சுற்றிச் சுற்றிப் பரவச நடனமாடிச் சுழன்றது.
திடீரென மழை பெய்தது. கிழவி அடுப்பையும் பிற சாமான்களையும் அவசர அவசரமாகத் தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த வீட்டின் திண்ணைக்கு ஓடினாள். நிக்கியும் மழைக்காக அந்தத் திண்ணையோரமாக ஒதுங்கி நின்றது. நல்ல மழை சடசடத்துப் பெய்து சற்று நேரத்தில் ஓய்ந்தது. மழை நின்ற பின் தெருவில் ஜனங்கள் நடமாடினார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகள் திரும்பின.
நிக்கிக்குத் தன் எஜமானியும் தனக்குப் பேரிட்ட அந்தப் பாப்பாவும் நினைவுக்கு வந்தனர். பாப்பாவின் நினைவு வந்ததும் அதற்கு ஒரு விநாடி கூட அங்கே கால் தரிக்கவில்லை. பாய்ந்து பாய்ந்து ஓடிற்று. பாதைகள் பல திசைகளில் பிரிந்தன. வந்த வழி எதுவென்று அதற்குப் புரியவில்லை. எந்த திசையில் பாப்பாவின் வீடு இருக்கிறதென்று பிடிபடவில்லை. நாலு திசையும் ஓடிற்று. எஜமானியின் பின்னால் ஓடி வந்தபோது அந்த அவசரத்திலும் பல இடங்களில் உட்கார்ந்து திரும்பி வருவதற்கு வழி தெரியும் பொருட்டுச் சிறுநீர் கழித்திருந்தது நிக்கி. சற்று முன் பெய்த நல்ல மழையில் தெருவெல்லாம் சுத்தமாகியிருந்தது.
நிக்கி நம்பிக்கை இழக்காமல் ஓடிக் கொண்டிருந்தது. பொழுதும் இருட்டிப் போயிற்று. தெரு விளக்குகளெல்லாம் எரிய ஆரம்பித்தன. நிக்கிக்குப் பயம் பிறந்தது. தன் எஜமானியையோ பாப்பாவையோ பார்க்கவே முடியாதோ என்ற ஏக்கத்தில் அது வானத்தைப் பார்த்து அழுதது. இரவெல்லாம் அழுது அழுது ஏதோ ஒரு தெருவில் எங்கோ ஒரு மூலையில் படுத்து உறங்கி விழித்து அடுத்த நாள் காலை மறுபடி அனாதையாயிற்று!
தெருவில் போகிறவர்களையெல்லாம் தன் எஜமானியோ என்று நினைத்து நினைத்து ஓடி அவர்களால் விரட்டியடிக்கப்பட்டுப் பரிதாபமாகத் திரும்பியது நிக்கி.
இப்போதெல்லாம் தெருவில் எச்சிலை விழுகிறபோது பெரிய நாய்களுக்குப் பயப்படாமல் பாய்ந்து அவற்றோடு சண்டையிட்டுத் தன் பங்கை எடுத்துக் கொள்ளுகிற அளவுக்கு நிக்கி வளர்ந்திருந்ததனால் அதன் வயிற்றுப் பிரச்னை ஒருவாறு தீர்ந்துவிடுகிறது.
ஆனாலும் வாழ்க்கையின் பிரச்னை வயிறு மட்டுமா? அதற்கு மனித நேசம் பசிக்கு உணவு மாதிரி ஓர் அவசியத் தேவையாயிற்று.! அந்தப் பாப்பாவையும் எஜமானியையும் எண்ணி எண்ணி எல்லா இரவுகளிலும் தனிமையில் 'ஓ' வென்று அழுதது நிக்கி.
ரோட்டில் சங்கிலியால் பிணித்துக் கையில் ஒய்யாரமாகப் பிடித்துக் கொண்டு நடக்கும் எஜமானர்களின் பின்னால் ஓடுகிற சிங்கார நாய்களையும், சங்கிலியால் பிணைப்புண்டு மதர்ப்போடு எஜமானர்களையே இழுத்துக் கொண்டு முன்னால் செல்கின்ற கம்பீர நாய்களையும், கார்களில் எஜமானர்களோடு சமதையாக வீற்றிருந்து வெளியே தலைநீட்டிப் பார்க்கிற செல்ல நாய்களையும் பொறாமையோடும் கவலையோடும் பார்த்து அழுதது நிக்கி.
சில சமயங்களில் அந்த நாய்கள் நிக்கி தங்களைப் பார்ப்பதைக் கண்டு, பற்கள் வெளித் தெரிய உறுமியவாறு பாய வரும். அப்போதெல்லாம் அந்த எஜமானர்கள் நிக்கியைத்தான் கல்லெடுத்து அடிக்கிற மாதிரி பாவனை காட்டி விரட்டுவார்கள்.
அப்போதெல்லாம் தொலைவில் வந்து திரும்பிப் பார்த்து ஒரு முறை குரைத்த பின் ஓடிப்போகும் நிக்கி.
ஒருநாள் மத்தியானம். பங்களாக்கள் நிறைந்த ஒரு தெரு. ஜனசந்தடியே இல்லை. நல்ல வெயில். பகலெல்லாம் ஓடி ஓடி, ஊரெல்லாம் பொறுக்கித் தின்று வயிறு புடைத்துக் கொண்டிருந்தது நிக்கிக்கு. எங்காவது சுகமான இடம் தேடி, ஒரு நிழலில் படுத்துக் கிடக்கும் உத்தேசத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.
யாரோ தன்னைக் கூப்பிடுவது மாதிரி குரலோ சிணுங்கலோ கேட்டது. ஓடிக் கொண்டிருந்த நிக்கி நின்று திரும்பிக் காதுகளை உயர்த்திப் பார்த்தது.
ஒரு பங்களாவின் பூட்டிய கேட்டுக்குப் பின்னால் ஒரு நாய் முன்னங்கால்களைத் தூக்கி இரும்பாலான அந்தக் கேட்டின்மீது வைத்து எம்பி நின்றுகொண்டு நிக்கியை அழைத்தது.
அதன் உடம்புதான் என்ன வெள்ளை! சடை சடையாய் வெள்ளி மாதிரி சுருள் முடி வழிகின்றது. அது நின்ற நிலையில் ஆண் நாய் என்று தெரிகிறது. நிக்கி சற்று நின்றது. கம்பியைப் பிறாண்டிச் சிணுங்கிச் சிணுங்கி அது தன்னை அழைக்கும் தவிப்பை ரசித்துப் பார்த்தது. நிக்கியைப் பார்த்துக் குரைக்காமல், கூப்பிடுகிற முதல் நாயே இதுதான்.
நிக்கி லேசாக வாலை ஆட்டிற்று. நிக்கியின் சம்மதம் தெரிந்த அந்த ஜாதி நாய் முன்னிலும் மும்முரமாகக் கதவுகளைப் பிறாண்டித் தாவியது. தரைக்குக் கேட்டுக்கும் இடையே உள்ள சந்தில் நுழைந்து வெளியில் வர முயன்றது. ம், நடக்கவில்லை! அந்தச் சந்தில் நுழைய முடியாத அளவு அது பருமனாக இருந்தது. ஜாதி நாய் பரிதாபமாகக் கொஞ்சியது.
நிக்கிக்கும் அதன் அருகில் போகவேண்டும் போலிருந்தது. அந்த ஜாதி நாய், தான் மனித நேசத்துக்காகத் தவிக்கிற மாதிரி, இன்னொரு நாயின் நேசத்துக்காகத் தவிப்பதை நிக்கி புரிந்து கொண்டது. அது தனக்காகத் தவிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்தது. அதுவும் இவ்வளவு பெரிய இடத்து உயர்ந்த ஜாதி நாயின் நேசம் கிடைக்கும்போது ஓர் ஆதரவுமின்றித் தெரு நாயாக அலையும் நிக்கியால் எப்படி இந்தக் காதல் மிகுந்த அழைப்பை மீறிப்போக முடியும்?
போயிற்று. கேட்டுக்குக் கீழே இருந்த இடைவெளி வழியாக அந்த ஜாதி நாய்தான் போக முடியவில்லை. எனினும் இந்தத் தெரு நாய் நுழைந்து உள்ளே வர முடியும் என்று கனக்கிட்டு வைத்ததுபோல் அந்த ஜாதி நாய் நிக்கியை ' இதன் வழியாக வா' என்று கூறுவது போல் நிக்கியின் முன்னங்கால்களில் ஒன்றைப் பிடித்து இழுத்தது.
நிக்கிப் பங்களாக் காம்பவுண்டுக்குள் ஓடிப் போய் விட்டது. இரண்டும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஒன்றன்மீது ஒன்று தாவிப் புரண்டு கவ்வி விளையாடின. நிக்கி அதன் பிடிகளிலிருந்து விலகித் திமிறி ஓடி ஓடி ஆனந்த நடனம் ஆடியது. இதனுடைய ஆட்டத்தைச் சற்று விலகி இருந்து அநுபவித்த ஜாதி நாய் சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென்று நிக்கியின் மீது தாவியது. அவ்வளவுதான்; அந்தப் பிடியிலிருந்து அசைய முடியாமல் கட்டுண்டு கண் கிறங்கியது.
பங்களா வீட்டினுள்ளிருந்து நாயைக் காணோமே என்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த வீட்டு எஜமானி, ' ஏ... சீ! சர்தார்!... சர்தார்!' என்று இரண்டு தடவை கூப்பிட்டாள். அதற்குள் இந்தப் பிணைப்பு பிரிக்க முடியாததாகப் போகவே, தன்னை யாராவது கவனித்தார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு உள்ளே போய்க் கதவை மூடிக் கொண்டாள் எஜமானி.
இப்போதெல்லாம் நிக்கி எங்கே போனாலும் எல்லோருமே விரட்டுகிறார்கள். எந்த வீட்டின் அருகேயும் யாரும் அதனை நெருங்க விடமாட்டேனென்கிறார்களே!
எங்கேயாவது இந்தத் தெரு நாய், குட்டி போட்டு வைத்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே அவர்கள் விரட்டுகிறார்கள் என்று நிக்கிக்குப் புரியவே இல்லை. விரட்டுவதும் ஓடுவதும் அதற்குப் புதிதா என்ன? ஆனாலும் இப்போதெல்லாம் ஓடுவது சிரமமாக இருக்கிறதே, இந்த அநுபவந்தான் அதற்குப் புதிதாக இருந்தது.
சுத்தமான திண்ணையிலும் காம்பவுண்டுகளிலும் இந்த அசுத்தம் பிடித்த நாய்க்கு இடம் தர மறுத்து விரட்டியபின் கடைசியில் ஒருநாள் இரவில் மிகுந்த வேதனையோடும் விரக்தியோடும் அசுத்தம் பிடித்த ஒரு சேரிக்குள் நுழைந்தது நிக்கி.
அது பிறந்ததே, அந்த மாதிரி இன்னொரு குப்பம்.
ஈரம், சகதி. ஒரு குடிசையின் பின்னால் உள்ள மூலையில் சுகமான புழுதி மண்ணில் ஐந்து அழகிய நாய்க் குட்டிகளைப் பிரசவித்தது நிக்கி.
எல்லோரும் வந்து அந்தக் குட்டிகளின் அழகைப் புகழ்ந்தார்கள். ஏதோ ஜாதி நாயின் கலப்பு என்று பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். சில நாட்களில் அவை அனைத்தும் நிக்கியிடமிருந்து பறிபோயின.
வாழ்வும் தாழ்வும், பெருமையும் வீழ்ச்சியும், மகிழ்ச்சியும் துயரமும் நாயின் வாழ்க்கையிலும் மாறி மாறித்தான் வரும் போலும்!
காரில் போகிற, சங்கிலியால் பிணித்துக் கையில் இழுத்துக் கொண்டு போகிற ஜாதி நாய்களைப் பார்த்து இப்போது நிக்கி ஓடுகிறது. ஒருவேளை, தனது குட்டியை அது தேடுகிறதோ? நிக்கி பெற்றதாகவே இருந்தாலும் அவை நிக்கியின் ஜாதியாகிவிடுமா, என்ன?
அதோ, பங்களா நாயையோ அல்லது இன்னுமொரு குப்பத்து நாயையோ தேடித் தெரு நாயாக நிக்கி அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு இப்போது ஒரு நாயின் தேவையை நாடுகிற ஸீஸன். தேவை என்று வந்து விட்டால் ஜாதியையா பார்க்கத் தோன்றும்?
(எழுதப்பட்ட காலம்: 1970)
நன்றி: குருபீடம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - ஏழாம் பதிப்பு: 1995 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
Subscribe to:
Posts (Atom)