Showing posts with label செய்து பாருங்கள். Show all posts
Showing posts with label செய்து பாருங்கள். Show all posts

Wednesday, April 6, 2011

பாப்க்கார்ன் வால் பேப்பர்



தேவையான பொருட்கள்: வெளிர் நீல நிற சார்ட் பேப்பர், பச்சை மற்றும் ப்ரவுன் நிற வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் பென் பசை, ஒரு கப் பாப்க்கார்ன்.

செய்முறை:
1 நீலநிற சார்ட் பேப்பரில் ப்ரவுன் வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் கொண்டு மரத்தின் தண்டு மற்றும் கிளையை
வரையவும்.
1 பச்சை நிற வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் கொண்டு மரத்தின் இலையை வரையவும்.
1 இப்போது பாப்க்கார்னை இலைகளின் இடையே "பூ' போன்று பசைக் கொண்டு ஒட்டவும்.
1 இப்ப பாப்க்கார்ன் வால் பேப்பர் ரெடி. இதை உங்க வீட்டு சுவரில் மாட்டி அழகு படுத்துங்கள்!

Thursday, February 3, 2011

பேப்பர் தேவதைகள்


வீடுகளை அலங்கரிக்க மற்றும் கிறிஸ்துமஸ் மரங்களை அழகுபடுத்த சிறிய தேவதை பொம்மைகளை விலை கொடுத்து வாங்குவோம். நீங்களே எளிதாக பேப்பர் தேவதைகளை உருவாக்கி வீட்டை அலங்கரித்து உங்கள் நண்பர்களை அசத்துங்கள்!

தேவையான பொருட்கள்:
பளபளக்கும் வண்ண பேப்பர்
கத்தரிக் கோல்
பென்சில், பஞ்சு, வெள்ளை பேப்பர்
ஸ்டேப்ளர்.
வட்டமான தட்டு அல்லது வளையம்,
நாணயம்,
பசை




வட்டமான தட்டு அல்லது வளையத்தை வண்ண பேப்பரின் மீது வைத்து அதைச் சுற்றிலும் பென்சிலால் வட்டம் வரைந்து கொள்ளுங்கள்.
வட்டத்தை கத்தரித்துக் கொள்ளுங்கள். இப்போது வட்டத்தை சரிபாதியாக மடித்து கத்தரித்திக் கொள்ளுங்கள்.

அரை வட்ட வண்ணக் காகிதத்தை கூம்பு போல மடித்துக் கொள்ளுங்கள் (மளிகைக் கடைகளில் பொட்டலம் கட்டுவது போல). அதன் முனைகளை ஸ்டேப்ளர் அல்லது பசை போட்டு ஒட்டிக் கொள்ளுங்கள்.


இப்போது வெள்ளை பேப்பரை எடுத்து பாதியாக மடித்துக் கொள்ளுங்கள். மடித்த இடத்தின் விளிம்பில் நாணயத்தை வைத்து ஒரு வட்டம் வரைந்து கொள்ளுங்கள். கத்தரியால அந்த வட்டத்தை அப்படியே கத்தரித்துக் கொள்ளுங்கள். இப்போது மடித்த காகிதத்தை விரித்தால், 8 எண்ணைப் போல அடுத்தடுத்த இரண்டு வட்டங்கள் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் இணைந்திருக்கும் வட்டங்களை பிரித்து விடாதீர்கள்.

பேப்பரின் கீழ்ப்புறம் உள்ள வட்டத்தில் சிரிக்கும் பொம்மை முகத்தை வரைந்து கொள்ளுங்கள். மேல் வட்டத்தில் பஞ்சை பசை போட்டு ஒட்டி, முடி போன்ற அமைப்பை ஏற்படுத்துங்கள்.

இப்போது முகத்தை எடுத்து, ஏற்கனவே செய்து வைத்திருந்த கூம்பின் முனைப் பகுதியில் பசை போட்டு ஒட்டுங்கள்.

ஒரு வெள்ளை பேப்பரை சரிபாதியாக மடித்து, படத்தில் உள்ளது போல பென்சிலால் இறகு வரைந் து கொள்ளுங்கள். பிறகு வரைந்த பகுதியை மட்டும் வெட்டி, எடுத்தால், இரண்டு இறகுகள் கிடைக்கும். இரண்டையும் தனித்தனியாக்கி, கூம்பின் இரண்டு பக்கங்களிலும் பசை கொண்டு சரியாக ஒட்டி விடுங்கள்.








இப்போது உங்கள் தேவதை ரெடி! நண்பர்களிடம் காண்பித்து அவர்களை அசத்துங்கள்!!

நடனமாடும் பொம்மை


தண்ணீர் பாட்டில் உள்பட தூக்கி எறியும் பழைய பொருட்களைக் கொண்டே, அழகிய நடனமாடும் பொம்மையை உருவாக்கலாம். என்ன, ஆச்சரியமாக உள்ளதா? சூப்பர் பொம்மையை எளிதாக செய்து அசத்தலாம் வாங்க!



தேவையான பொருட்கள்:
காலி தண்ணீர் பாட்டில், தடிமனான அட்டை, பெரிய ஆணி, உதவாத பேனா ரீஃபில், வெள்ளைக் காகிதம், பாசி மணிகள், நூல், வண்ணக் காகிதத் துண்டு, பசை, கத்தரிக் கோல்.




செய்முறை:

பிளாஸ்டிக் பாட்டிலின் மேற்பகுதியை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மூடியில் ஆணியால் துளையிடுங்கள். மேற்பகுதியின் அடிப்பாகத்தை தடிமனான அட்டை மீது வைத்து, பாட்டிலின் விட்டத்துக்கு சரியாக அட்டையை கத்தரித்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் அட்டையில் ஒரு சிறிய வட்டம் கத்தரித்துக் கொண்டு, அதன் நடுவில் துளையிடுங்கள்.




பேனா ரீஃபிலில் சிறிய வட்டத்தை செருகிக் கொள்ளுங்கள். இப்போது வெள்ளைக் காகிதத்தை நீளமான துண்டாகக் கத்தரித்து, அதை சிறிய அட்டை பொருத்தியுள்ள பகுதிக்கு மேல் ரிஃபில்லில் சுற்றுங்கள்.




இப்போது பாட்டிலின் அடிப்புறமாக ரீபில்லை நுழைத்து, பாட்டில் மூடியில் உள்ள துளை வழியாக ரீஃபில்லின் சிறு பகுதியை வெளியே கொண்டு வாருங்கள். வண்ணக் காகிதத்தை எடுத்துக் கொண்டு, பொம்மைக்கு தலை மற்றும் உடல் பகுதிகளை கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.


சிறிய அளவில் இரண்டு நூல் துண்டுகளை எடுத்து, அதில் பாசி மணிகளை கோர்த்துக் கொண்டு, கைகளைப் போன்று பசை தடவி ஒட்டுங்கள். இதே போல ஐந்து நூல் துண்டுகளை எடுத்து, அதில் பாசி மணிகளைக் கோர்த்து, பாவாடை போல ஒட்டிக் கொள்ளுங்கள்.

பாட்டிலில் செருகப் பட்டிருக்கும் ரீஃபில்லில் பசை தடவி, இந்த பொம்மையை அப்படியே ஒட்டி விடுங்கள். கடைசியாக, பாட்டிலின் அடிப்புறத்தில் பசை தடவி, கத்தரித்து வைத்துள்ள தடிமனான அட்டை மீது ஒட்டி விடுங்கள்.

இப்போது மேற்புறமிருந்து ரீஃபில்லை சுழ்ற்றினால், பாட்டிலின் உள்ளே இருக்கும் பொம்மை அழகாக நடனமாடும்.

Monday, January 31, 2011

பொம்மை பென்சில் மூடி!

படிக்கும் குழந்தைகள் அனைவரும் தவிர்க்க முடியாத பொருள், பென்சில். ஆனால் பென்சில்கள் எப்போதும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருப்பதால் போரடிக்கும் அல்லவா...அழகிய பொம்மைகளை தயாரித்து, பென்சில்களின் மூடி போல ஒட்டி உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்தலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:
பென்சில்
வண்ண ஸ்கெட்ச் பேனாக்கள்
வெள்ளைக் காகிதம்
பசை
கத்தரிக்கோல்

வெள்ளைக் காகிதத்தில், சிறிய அளவில் (உங்கள் கட்டை விரல் அளவு முதல், உள்ளங்கை அளவு வரை) முயல், யானை, பூனை, நாய், பட்டாம்பூச்சி என உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு உருவத்தை வரைந்து கொண்டு, அதை படத்தில் காட்டியபடி சரியாக கத்தரித்துக் கொள்ளுங்கள்.

வரைவதில் சிரமம் இருந்தால், புத்தகங்கள், பத்திரிகைகளில் உள்ள அதே அளவுள்ள பொம்மைகளை சரியாக கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த உருவத்தில் உங்களுக்குப் பிடித்த வண்ணங்களைத் தீட்டுங்கள். கனமான அட்டைத் துண்டை எடுத்துக் கொண்டு, அதன் இரு முனைகளிலும் பசை தடவுங்கள். இப்போது வரைந்து வைத்த உருவத்தை பென்சிலின் அடிப்புறத்தில் வைத்து, பசை தடவிய அட்டைத் துண்டைக் கொண்டு படத்தில் உள்ளவாறு ஒட்டுங்கள். அப்படியே சில நிமிடங்கள் உலர விடுங்கள்.

இப்போது, பென்சில் மூடி தயார். எழுதும் போது, பென்சிலின் பின்புறம் படத்தை செருகலாம். மற்ற நேரங்களில் பென்சிலின் எழுதும் முனையில் செருகி, பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நண்பர்களை அசத்தலாம்!

அட்டைப் பெட்டி உண்டியல்!


சிறிய அட்டைப் பெட்டிகளைக் கொண்டு கைக்கு அடக்கமான, அழகான உண்டியல்கள் செய்து பணத்தை சேமிக்கலாம். அதை உங்கள் நண்பர்களுக்கு பரிசளித்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்:
சிறிய அட்டைப் பெட்டி
கத்தரிக்கோல்
வண்ணக் காகிதம்
காகிதத் தட்டு
காகிதக்கோப்பைகள்
கத்தரிக்கோல், பசை
வண்ண பெயின்ட், பேனா


சிறிய அட்டைப் பெட்டியை எடுத்துக் கொண்டு (சதுரம், செவ்வகம் என எந்த வடிவமானாலும்), அதில் முழுவதும் வண்ணக் காகிதத்தை ஒட்டுங்கள். நான்கு காகிதக் கோப்பைகளை எடுத்துக் கொண்டு, அவற்றன் மீதும் அதே வண்ணக் காகித்தை ஒட்டுங்கள், அல்லது அதே வண்ணத்தைத் தீட்டுங்கள். படத்தில் காட்டியபடி, அட்டை மீது கோப்பைகளை கவிழ்த்து பசை கொண்டு ஒட்டுங்கள்.

இப்போது காகித் தட்டில் வேறொரு வண்ணம் தீட்டி, அதை உலரச் செய்யுங்கள். பின்னர் படத்தில் உள்ளவாறு அட்டைப் பெட்டியின் பக்கவாட்டில் அதை ஒட்டுங்கள். நான்கு கால்களுடன் பன்றியின் உடலும் தலையும் கிடைத்திருக்கும். பிறகு ஒட்டிய தட்டில் பன்றிக்கு கண்கள் வரையுங்கள். மீண்டும் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு, அதை கவிழ்த்தபடி பன்றியின் வாய் பகுதியில் ஒட்டுங்கள், அதன் மீது படத்தில் காட்டியபடி இரண்டு புள்ளிகளை வைத்து விடுங்கள்.

பன்றிக்கு காதுகள் வேண்டாமா...இரண்டு வண்ணக் காகிதத் துண்டுகளை எடுத்து, தட்டின் இரண்டு பக்கத்திலும் ஒட்டி விடுங்கள். இறுதியாக, காசு போடுவதற்கு வசதியாக, அட்டைப் பெட்டியின் உடல் பகுதியில் ஒரு துளையிடுங்கள். அவ்வளவு தான்!

அலங்காரக் குருவி


உங்கள் வீடுகளை அலங்கரிக்க இனி கடைகளுக்குச் சென்று அழகுப் பொருட்களை வாங்க வேண்டாம். நீங்களே அழகான தொங்கும் பறவைகள் செய்து வீடுகளில் தொங்க விட்டு அனைவரையும் அசத்தலாம்.

தேவையான பொருட்கள்:
தடிமனான வெள்ளைக் காகிதம், பொட்டு
வெள்ளைக் காகிதத் துண்டுகள், மெல்லிய மூங்கில்
பென்சில், குச்சிகள், கத்தரிக்கோல், கறுப்பு ஸ்டிக்கர்
பசை, வெண்மையான பிளாஸ்டிக் பந்து
நூல்

தடிமனான வெள்ளைக் காகிதத்தை மடித்து, அரைவட்டம் வரையுங்கள். அதை கத்தரிக்கோலினால் கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல சிறிய அரை வட்டம் ஒன்றைத் தயார் செய்யுங்கள். பிறகு படத்தில் காட்டியபடி அவ்விரண்டையும் கொண்டு கூம்பு வடிவத்தில் புனல்கள் செய்து, விளிம்புகளைப் பசையால் ஒட்டுங்கள் அதை சற்று நேரம் உலர விடுங்கள்.

இப்போது படத்தில் உள்ளது போல பிளாஸ்டிக் பந்தை கூம்பின் வாய்ப்புறத்தில் வைத்து ஒட்டுங்கள். செய்து வைத்திருக்கும் சிறிய புனலை எடுத்து பந்தின் மீது ஒட்டுங்கள். இது தான் பறவையின் அலகு. இதே போல கறுப்பு ஸ்டிக்கர் பொட்டுக்களை எடுத்து கண்கள் போல தோற்றமளிக்கும் படி ஒட்டுங்கள்.

எஞ்சியுள்ள காகிதத்தில் இரண்டு சிறகுகளை படத்தில் காட்டியுள்ளபடி வரைந்து அவற்றை அளவாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மூன்று நீளமான காகிதத் துண்டுகளை படத்தில் காட்டியபடி சுருட்டிக் கொள்ளுங்கள். அவற்றை பறவையின் வால் போல தோற்றமளிக்கும் படி ஒட்டிக் கொள்ளுங்கள். சிறகுகளையும் இருபுறமும் ஒட்டிக் கொள்ளுங்கள்.

மூங்கில் குச்சியை அரை வட்டமாக வளைத்து, மற்றொரு மூங்கில் குச்சியுடன் நூலைக் கொண்டு படத்தில் உள்ளது போல இணைத்து விடுங்கள் (குச்சியை வளைத்து கட்டுவது சிரமமாக இருந்தால் விட்டு விடுங்கள். அடிப்பாகத்துக்கு மட்டும் ஒரு குச்சியை பயன்படுத்தலாம்). அதன் மீது வெள்ளைக் காகிதத்தை பசை தடவி ஒட்டுங்கள். பின்னர் அந்தக் குச்சியின் மீது குருவியை பசை தடவி ஒட்டி விடுங்கள். குச்சியின் மேல் பகுதியில் நூல் கட்டி தொங்க விடுங்கள்.

அழகான, அலங்கார குருவி தயார்! உங்கள் வீட்டில் தொங்க விட்டு நண்பர்களை அசத்துங்கள்.