குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் -
இல்லறவியல் அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 147: அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
கலைஞர் உரை: பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
மு.வ உரை:
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் -
இல்லறவியல் அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 146: பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
கலைஞர் உரை: பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
மு.வ உரை:
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் -
இல்லறவியல் அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 145: எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
கலைஞர் உரை: எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
மு.வ உரை:
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
சாலமன் பாப்பையா உரை:
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் -
இல்லறவியல் அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 144: எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
கலைஞர் உரை: பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
மு.வ உரை:
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?.
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் -
இல்லறவியல் அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 143: விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.
கலைஞர் உரை: நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
மு.வ உரை:
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் -
இல்லறவியல் அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 142: அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
கலைஞர் உரை: பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.
மு.வ உரை:
அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை.
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் -
இல்லறவியல் அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 141: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
கலைஞர் உரை: பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.
மு.வ உரை:
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.