Friday, April 29, 2011

தங்கக் கிண்ணம்



வெகு காலத்திற்கு முன் போதி சத்வர் ஒரு நாட்டில் பழைய பாத்திர வியாபாரம் செய்து வந்தார். பழைய பாத்திரங்களை நியாயமான விலைக்கு வாங்கிக் கொண்டு அதற்கான விலையையோ அல்லது வேறு புதுப்பாத்திரங்களையோ அவர் கொடுப்பார். அவரைப் போலவே அவ்வூரில் பேராசை பிடித்த மற்றொரு பழைய பாத்திர வியாபாரியும் இருந்தான். அவன் மோசடி வியாபாரம் செய்து வந்தான்.

ஒரு முறை தலைநகரிலிருந்து வேறொரு நகருக்கு அவர்கள் இருவரும் போனார்கள். அந்நகருக்கு முன் உள்ள ஆற்றைப் படகில் ஏறிக்கடந்து சென்று நகரை அடைந்தார்கள். இருவரும் தம் வியாபாரத்தை அந்த ஊரில் தொடங்கினார்கள்.

அந்த ஊரில் ஒரு பணக்காரக் குடும்பம் மிகவும் நொடித்துப் போய் ஏழையாகி துன்பப்பட்டுக் கொண்டிருந்தது. அக்குடும்பத் தலைவி வீட்டிலுள்ள பாத்திரங்களை அவ்வப்போது விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தாள். அந்த வீட்டிலிருந்த எல்லாப் பாத்திரங்களும் இவ்வாறு போய் விட்டன. ஒரே ஒரு பாத்திரம் தான் மிஞ்சி இருந்தது. அது பாசி பிடித்துக் கருப்பாகி இருந்தது. உண்மையில் அது தங்கக் கிண்ணம். வெகு நாட்களாக உபயோகப் படுத்தாததால் அழுக்கேறி நிறம்மாறி இருந்தது.

தெருவில் 'பழைய பாத்திரம் வாங்குகிறேன்' என்ற குரல் கேட்டு அந்த வீட்டுத் தலைவி பாத்திரக்காரனை அழைத்தாள். அப்படி வந்தவன் பேராசை பிடித்த பாத்திரக்காரன். அவனிடம் அக்குடும்பத் தலைவி அந்தப் பழைய பாத்திரத்தைக் காட்டவே அவன் அதை வாங்கிப் பார்த்தான். அது தங்கத்தால் ஆனது என்று அவனுக்குத் தெரிந்து


விட்டது. ஆனால் வீட்டுத் தலைவிக்கு அது தெரியவில்லை எனக் கண்டு அவன் அவளை ஏமாற்றத் திட்டம் போட்டான்.

எனவே அவன் அப்பாத்திரத்தை தூர விட்டெறிந்து "இதை யார் வாங்குவார்கள்? இதற்கு பத்துக் காசுதான் தருவேன்" என்று ஒரேயடியாக அடாவடி செய்தான். வீட்டுத் தலைவியோ "என்னப்பா ஒரு வெள்ளிக் காசாவது கொடு" என்று கெஞ்சினாள். அவனோ பிகு செய்து கொண்டு 'முடியாது' எனக் கூறி விட்டு எழுந்து போய் விட்டான்.

அந்தப் பேராசைக்காரன் போனவுடன் போதிசத்வர் குரல் கொடுத்தவாறே வந்தார். அப்போது அந்த இல்லத்தலைவி "சரி, இவனிடமாவது இந்தப் பாத்திரத்தைக் கொடுத்து ஒரு வெள்ளிக் காசு வாங்கி இன்றையப் பொழுதை ஓட்டலாம்" என எண்ணி அவனை வீட்டினுள் கூப்பிட்டு அந்தக் கிண்ணத்தைக் காட்டினாள்.

போதிசத்வர் அதைப் பார்த்து விட்டு அது தங்கக் கிண்ணம் எனக் கண்டு "அம்மா, இது விலை உயர்ந்த தங்கக் கிண்ணம். இதனை நான் எடுத்துக் கொண்டு விலை கொடுக்கிறேன். இது ஆயிரம் வெள்ளிக்காசுகள் பெறும். என்னிடம் ஐநூறு வெள்ளிக்காசுகளும் சில வெள்ளிப்பாத்திரங்களும் உள்ளன. அவற்றைக் கொடுக்கிறேன். எனக்கு ஊர் திரும்ப ஐந்து வெள்ளிக் காசுகளை வைத்துக் கொண்டு மீதம் கொடுக்கிறேன்" என்றார்.

வீட்டுத் தலைவியும் "அப்படியா! இது இவ்வளவு விலை பெறுமா?சற்று முன் வந்த ஒருவன் இது


ஐந்து காசு கூடப் பெறாது எனத் தூக்கி எறிந்தானே. அவன் என்னை ஏமாற்றப் பார்த்தான் போலிருக்கிறது" எனக் கூறினாள். போதிசத்வரும் பணத்தையும் வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து விட்டு அந்தத் தங்கக் கிண்ணத்தை வாங்கிக் கொண்டு ஆற்றின் கரைக்குப் போய் படகில் ஏறினார். படகும் அங்கிருந்து செல்லலாயிற்று.

போதிசத்வர் போன சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப் பேராசை பிடித்த வியாபாரி அந்த வீட்டிற்கு வந்து "கொடு அம்மா அந்த பாத்திரத்தை. போனால் போகிறது என்று நீ கேட்டபடியே ஒரு வெள்ளிக்காசைக் கொடுக்கிறேன்" என்றான்.

வீட்டுத் தலைவியோ "ஏய் மோசக்காரா! என்னை ஏமாற்றி ஆயிரம் வெள்ளிக் காசுகள் விலை பெறும் தங்கக் கிண்ணியை ஒரு வெள்ளிக் காசுக்கா வாங்கிக் கொண்டு போகப் பார்க்கிறாய்? போ போ.வேறொரு வியாபாரி எனக்கு அதற்கு உரிய நியாயமான விலையைக் கொடுத்து விட்டு பாத்திரத்தை வாங்கிக் கொண்டு போய் விட்டார்" எனக் கூரி படாரென்று கதவைச் சாத்திக் கொண்டு போய் விட்டாள்.

அடடா! ஒரு வெள்ளிக் காசு கொடுத்து ஆயிரம் வெள்ளிக்காசுகள் பெறுமான பாத்திரத்தைத் தட்டிக் கொண்டு போக நினைத்ததை இந்த போதிசத்வர் வந்து கெடுத்து விட்டாரே என்று அந்தப் பேராசைக்கார வியாபாரி ஆத்திரம் கொண்டான். அவன் வேக வேகமாக ஆற்றின் படகுத்துறைக்கு ஓடினான்.

ஆனால் அப்போது போதிசத்வர் ஏறிச் சென்ற படகு ஆற்றில் பாதி தூரத்திற்கு மேல் சென்று விட்டது.

அதைக் கண்ட பேராசைக்காரனின் ரத்தம் கொதித்தது. கொழுத்த லாபம் வர இருந்தது போதிசத்வரால் கையை விட்டுப் போய் விட்டதே என எண்ண எண்ண அவன் நெஞ்சம் விம்மியது. ரத்த ஓட்டம் அதிகரிக்க அவன் இதயம் வெடித்துக் கீழே விழுந்து இறந்தான். போதிசத்வரின் நேர்மையால் ஏமாற இருந்த ஒரு குடும்பம் நிறையப் பணம் பெற்று நன்கு வாழ வழி ஏற்பட்டது.

வழி காட்டியவர்!



பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் மகத நாட்டு கிராமம் ஒன்றில் மாகதன் என்ற க்ஷத்திரியனாகப் பிறந்தார். அந்த கிராமத்தில் ஊரார் கூடிப் பேசப் பொது இடம் இருந்தது. அக்கிராமத்து ஐம்பது குடும்பத் தலைவர்களும் ஒன்று கூடித் தம் பிரச்னைகள் பற்றிப் பேசிக் கொள்வார்கள். நேர் வழியில் செல்லாமல் திருட்டு, கொலை முதலிய குற்றங்களைச் செய்வதோடு தம்மைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க கிராம அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து வந்தார்கள்.
அக்கூட்டத்தில் சேராமல் தனியாகத் தான் உட்கார மாகதன் இடம் ஒதுக்கிய போதெல்லாம் மற்றவர்கள் அதனை ஆக்கிரமித்துக் கொண்டனர். அதனால் அந்தப் பொது இடத்தில் அல்லாமல் சிறிது தூரம் தள்ளி ஓரிடத்தை சுத்தம் செய்து சிறிய பந்தல் போட்டான். அங்கு நிழல் இருக்கவே எல்லாரும் அங்கு வரலாயினர். மாகதன் சொல்வதைக் கேட்கலாயினர். அவனைத் தம் தலைவனாகவும் ஏற்றனர்.

இவ்விதமாக மாகதன் அவர்களை நல்ல வழியில் திருப்பினான். தம் ஊரைச் சுத்தமாக வைத்து பல வசதிகளை ஊராரின் ஒத்துழைப்புடன் செய்தான். யாவரும் ஒன்று கூடிப் பேச ஒரு பெரிய அரங்கத்தையும் கட்டினான். அங்கு குடிக்க நீரும், படிக்க நூல்களும் வைத்தான். ஐம்பது குடும்பத்தவரும் திருந்தி நல்வாழ்க்கை மேற்கொண்டார். திருடுவது, கொள்ளையடிப்பது, கொலை புரிவது போன்றவற்றை அறவே விட்டு விட்டார்கள். எப்போதும் மண் வெட்டி, கோடரி, கடப்பாரை, சம்மட்டி ஆகியவற்றை அவர்கள் எடுத்து பாதையில் தடங்கலாக உள்ள மரங்களை வெட்டி நிலத்தைச் சமப்படுத்தி வரலானார்கள்.


மாகதனின் அந்த செய்கைகளால் ஊரார் நல்லவர்களானது கண்டு மனம் புழுங்கியவன் அவ்வூரின் கிராம அதிகாரி முன்பு கொள்ளை கொலைகளைச் செய்து விட்டு அவனுக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் இப்போது இல்லையே. அவனது வருமானம் நின்று போயிற்றே. என்ன செய்வான்?

அதனால் அவன் நேராக மன்னனிடம் போய் "அரசே! என் ஊரில் அரசாங்கத்திற்கு எதிராகக் கலகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது. இக்கலக்காரர்களின் தலைவன் மாகதன் என்பவன் ஆவான். அவனது பெரும்பாலான ஆட்கள் எந்நேரமும் கோடரியும் கடப்பாரையும் சம்மட்டியும் எடுத்துக் கொண்டு திரிகிறார்கள். தாங்கள் தாம் இந்தக் கலகக்காரர்களைப் பிடித்து தண்டிக்க வேண்டும்" எனப் பொய்ப் புகார் கொடுத்தான். அரசனும் அவன் கூறியதை நம்பி உடனே தன் வீரர்களிடம் "இவரோடு இவரது கிராமத்திற்குப் போய் அங்கு கோடரி, கடப்பாரை, சம்மட்டி ஆகியவை எடுத்துக் கொண்டு திரிபவர்களைப் பிடித்து இழுத்து வாருங்கள்" என்றான். வீரர்களும் அவ்வாறே அக்கிராமத்திற்குப் போய் கோடரி, கடப்பாரை சம்மட்டிகளுடனும் திரிந்த யாவரையும் பிடித்து வந்தனர். அவர்களில் மாகதனும் ஒருவன்.

அரசன் அவர்களை விசாரிக்காமலேயே தன் காவலர்களிடம் "இந்தத் துரோகிகளை யானையின் கால்களுக்கு அடியே போட்டு மிதிக்கச் செய்யுங்கள்" என்று கட்டளையிட்டான்.


வீரர்களும் அவர்களை இழுத்துச் சென்று ஓரிடத்தில் நிறுத்தினர். பட்டத்து யானையை அவர்கள் கொண்டு வந்ததும் அந்த யானை மாகதனைப் பார்த்ததும் சட்டென நின்றது. பிறகு பின் வாங்கி பயந்தது போல ஓடி விட்டது. வீரர்கள் வேறொரு யானையைக் கொண்டு வந்தும் அதுவும் அவ்வாறே செய்தது. இம்மாதிரி பல யானைகள் செய்யவே அந்த அதிசயத்தை அவர்கள் மன்னனிடம் போய்க் கூறினார்கள்.

"அவர்கள் யானைகள் தம்மிடம் வராதிருக்க ஏதாவது தாயத்து கட்டிக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களைச் சோதனை போட்டு தாயத்துகளை அகற்றி விட்டு யானைகளை அவர்களின் மீது ஏவுங்கள்" என்று மன்னன் கட்டளையிட்டான்.

ஆனால் வீரர்கள் சோதனை போட்டுப் பார்த்ததில் யாரிடமும் ஒரு தாயத்து கூட இருக்கவில்லை. அதைக் கூறவே மன்னன் "சரி. அவர்களை எல்லாம் என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்" என்றான். வீரர்களும் அவர்களை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

மன்னனும் "உங்களுக்கு யானைகளைக் கட்டுப் படுத்தும் மந்திரம் ஏதாவது தெரியுமா?" என்று கேட்டான். அதற்கு மாகதன் "அரசே எங்களுக்கு ஒருவித சக்தி வாய்ந்த மந்திரம் தெரியும். ஆனால் அது நீங்கள் நினைக்கும் சக்தியுள்ள மந்திரம் அல்ல அது" என்றார்.

"அதென்ன அதிசய மந்திரம்?" என்று மன்னன் கேட்கவே மாகதனும் "எங்களில் ஒருவர் கூட எந்தவொரு உயிருக்கும் தீங்கு இழைக்க மாட்டோம். பொய் பேச மாட்டோம். போதை தரும் பொருள்களைச் சாப்பிட மாட்டோம். ஜீவராசிகளிடம் அன்பு செலுத்துகிறோம். பிறருக்கு உதவுகிறோம். பாதைகளைச் செப்பனிட்டு குளங்கள் வெட்டி சத்திரங்கள் கட்டுகிறோம். இந்த வழிகளைக் கடைப் பிடிக்கும் மந்திரம் தான் எங்களுக்குத் தெரியும்" என்றார்.


இதைக் கேட்ட மன்னன் ஆச்சரியப்பட்டு "இப்படி நல்ல செயல்கள் புரியும் உங்களை அந்த கிராம அதிகாரி ஏன் கலகக்கார துரோகிகள் என்று குற்றம் சாட்டினான்?" என்று கேட்டான். மாகதனும் "நீங்கள் தீர விசாரிக்காமல் அவன் கூறியதை நம்பி விட்டீர்கள்" என்றார்.

"நீங்கள் கோடரியும் கடப்பாரையும் எடுத்துக் கொண்டு திரிந்து மற்றவர்களை பயமுறுத்துவதாக அவன் கூறினான். உங்களிடம் இவை எல்லாம் இருக்கவே நானும் நம்பி விட்டேன்" என்றான் மன்னன்.

மாகதனும் "இவை எல்லாம் நாங்கள் பொதுப்பணி புரிய எடுத்துச் செல்கிறோம். யாரையும் தாக்குவதற்காக அல்ல" என்றார். மன்னன் நன்கு விசாரணை நடத்திய போது மாகதனின் முயற்சியால் அந்த ஊரார் திருந்தியதும் கிராம அதிகாரிக்கு முன்பு கிடைத்து வந்தது போல லஞ்சம் கிடைக்கவில்லை என்பதும் தெரிந்தது. பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறியதோடு பல ஆண்டுகளாக லஞ்சம் வாங்கி வந்ததற்காகவும் மன்னன் அவனது சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ததோடு சிறையில் தள்ளினான். அதனை மாகதனிடமே கொடுத்து கிராமத்து நலனுக்காக உபயோகப் படுத்துமாறு கூறி "இனி மேல் நீங்கள் தாம் அந்த கிராமத்துத் தலைவர். நான் இனி எந்த அதிகாரியையும் நியமிக்கப் போவதில்லை" என்றான். அது மட்டுமல்ல தன் பட்டத்து யானையையே அவன் மாகதனுக்குக் கொடுத்து கௌரவித்தான்.


அதிகாரம் - நடுவு நிலைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
கலைஞர் உரை:
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.
மு.வ உரை:
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

அதிகாரம் - நடுவு நிலைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
கலைஞர் உரை:
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
மு.வ உரை:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

அதிகாரம் - நடுவு நிலைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
கலைஞர் உரை:
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.
மு.வ உரை:
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

அதிகாரம் - நடுவு நிலைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 117:
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.
மு.வ உரை:
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
சாலமன் பாப்பையா உரை:
நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

அதிகாரம் - நடுவு நிலைமை

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 116:
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.
மு.வ உரை:
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.