Friday, April 29, 2011

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி


  • சிக்கன் - ஒரு கிலோ
  • பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ
  • எண்ணெய் - 200 கிராம்
  • பட்டர் - 50 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • தயிர் - 1/2 லிட்டர்
  • ப்ரைடு ஆனியன் - ஒரு கப்
  • பச்சை மிளகாய் - 3
  • உப்பு - தேவையான அளவு
  • எலுமிச்சை - ஒன்று
  • பட்டை - ஒரு சிறிய துண்டு
  • ஏலக்காய் - 3
  • கிராம்பு - 5
  • பிரிஞ்சி இலை - 2
  • ஷாகிஜீரா - 2 தேக்கரண்டி
  • கருப்பு ஏலக்காய் - 2
  • ஜாதிபத்திரி - சிறிதளவு
  • கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
  • புதினா - ஒரு கொத்து
  • குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் - சிறிதளவு

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பொடி வகைகள் மற்றும் வாசனை பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ப்ரைடு ஆனியன் கடைகளில் கிடைக்கிறது. இல்லையெனில் பல்லாரி வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி அரை தேக்கரண்டி அரிசிமாவை அதில் தூவி கைகளால் நன்கு பிசறி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

சிக்கனை சுத்தம் செய்து கழுவி அதில் 50 மி.லி எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், தயிர், உப்பு, அரைத்த மசாலா பொடி, சிறிதளவு பட்டை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு, 2 ஏலக்காய், ஒரு பச்சை மிளகாய், 2 கிராம்பு, ஒரு பிரிஞ்சி இலை, சிறிதளவு பட்டை, சிறிதளவு ஷாகிஜீரா ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அரை பதமாக வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு 1 1/2 டம்ளர் (350 ml) தண்ணீர் ஊற்றி சிக்கனை சமப்படுத்தி விடவும்.

சிக்கன் கலவையின் மேல் வேக வைத்த சாதத்தை கொட்டி நன்கு பரப்பி விடவும்.

அதன் மேல் ப்ரைடு ஆனியன், மல்லி தழை, புதினா போன்றவற்றை சுற்றிலும் போடவும். கடைசியாக குங்குமப்பூவை பாலில் கரைத்து ஆங்காங்கே தெளித்து விடவும். கலர்பொடி என்றால் இருகலர் பயன்படுத்தலாம். கலர்பொடி சேர்ப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதனால் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.

பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மூடி போட்டு கொள்ளவும். இதுப்போல் க்ளாஸ் மூடியில் ஆவி வெளியே செல்லாது. 1/2 மணி நேரம் மிதமான தீயில் வைக்கவும். இடையிடையே திறக்க கூடாது. ஸ்டீம் வெளியே சென்றால் சாதம் அடியில் பிடித்து விடும். (சாதரணமூடி என்றால் அலுமினியம் பாயில் போட்டு ஒட்டி விட்டு அதன் மேல் மூடி போடவும். அல்லது பாத்திரத்தை சுற்றிலும் சப்பாத்தி மாவை ஒட்டி அதன் மேல் மூடி போடலாம்.)

அரைமணி நேரம் கழித்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி விடவும். இப்போது பிரியாணி தயாராகி இருக்கும். வெயிட் அதிகம் இல்லாத கரண்டியினால் சாதத்தை மெதுவாக பிரட்டி விடவும்.

சுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தயார். விரும்பினால் முந்திரி, திராட்சை, போன்ற நட்ஸ் வகைகளை பட்டரில் ப்ரை செய்து போடலாம். ஒரு சிலர் இன்னும் நிறைய வாசனை பொருட்கள் சேர்ப்பார்கள். இதில் கொடுத்துள்ளவை மற்றும் சேர்த்தாலே சுவை நன்றாக இருக்கும். கசூரிமேத்தி பவுடர் (வெந்தயக்கீரை பவுடர்) சிறிது சேர்த்தாலும் சுவைக் கூடும்.

Thursday, April 7, 2011

நீர் இறைத்த திருடர்கள்

(தெனாலி ராமன் கதைகள்)


ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.

இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.

"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.

"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

தங்க முட்டையிடும் வாத்து

ஒரு கிராமத்தில் ஷியாம் என்ற அனாதைச் சிறுவன் இருந்தான். நாள் முழுவதும் கூலி வேலை செய்து அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் அரை வயிற்றுக்கு சாப்பிட்டுக் காலத்தை ஓட்டினான். தனக்கென்று வசிக்க ஒரு சிறிய குடிசை அமைத்துக் கொண்டான். வீட்டிலேயே ஒரு பெட்டைக் கோழியையும் வளர்த்து வந்தான். கோழியிடும் முட்டைகளை விற்று விடுவான். என்றாவது கூலி வேலை கிடைக்கவில்லையெனில், முட்டைகளை விற்காமல் அவற்றை அவித்து உண்டு விடுவான்.
அவனுக்குப் பக்கத்து வீட்டில் தனராஜ் என்ற பணக்காரன் வசித்து வந்தான். அவன் மிகவும் பொறாமை பிடித்தவன். மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் காணப் பொறுக்காது அவனுக்கு! ஷியாம் வளர்த்து வந்த கோழி மதமதவென்று இருந்ததைக் கண்டு ஒருநாள் அந்தக் கோழியைப் பிடித்துக் கொன்று தின்று விட்டான்.
மாலையில் ஷியாம் கோழியைக் காணாமல் திடுக்கிட்டான். கோழியின் இறகுகள் தனராஜ் வீட்டின் கொல்லைப்புறம் சிதறியிருந்ததைக் கண்டதும், நேராக அவனிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டான்.
தனராஜ் கையும் களவுமாக அகப்பட்டக் கொண்டதும், "அது உன் கோழியா? எனக்குத் தெரியாது! என் பூனை ஏதோ ஒரு கோழியை கவ்விக் கொண்டு வந்தது. அது உன்னுடையது என்று தெரியாமல் தின்று விட்டேன்" என்றான்.
அதற்கு ஷியாம், "தனராஜ்! பூனை கடித்த கோழியை நீ தின்னமாட்டாய்! என் கோழியைத் திருப்பிக் கொடு அல்லது நான் ராஜாவிடம் சென்று முறையிடுவேன்" என்றான்.

ராஜாவின் பெயரைக் கேட்டதும் பயந்து போனான் தனராஜ்! ஏனெனில் அந்த ஊர் ராஜா ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்காமல் நியாயமான தீர்ப்பு வழங்குபவர்! அதனால், வீட்டுக்குள்ளிலிருந்து ஒரு வாத்தை எடுத்து வந்த அவன், "இந்தாப்பா ஷியாம்! உன் கோழிக்குப் பதிலாக இந்த வாத்தை வைத்துக் கொள். தயவு செய்து ராஜாவிடம் போகாதே!" என்று கெஞ்சினான்.
ஷியாமும் வீண் சண்டை வேண்டாம் என்று வாத்தைப் பெற்றுக்கொண்டான். அதை கண்ணுங்கருத்துமாகத் தீனிஇட்டு வளர்க்க, அதுவும் முட்டைகள் இடத் தொடங்கியது.
ஒருநாள் இரவு கனத்த மழை பெய்ய, ஒரு சாமியார் தனராஜின் வீட்டுக் கதவைத் தட்ட, அவரை தனராஜ் திட்டியனுப்பினான். அடுத்ததாக அவர் ஷியாமின் வீட்டுக் கதவைத் தட்ட, அவன் உடனே கதவைத் திறந்து அவரை குடிசையினுள்ளே அனுமதித்தான்.
மழையில் நனைந்திருந்த அவருக்கு மாற்றுடை தந்தான். பசியாகஇருந்த அவருக்கு, அன்று வாத்து இட்டிருந்த முட்டைகளை வேக வைத்து உணவளித்தான். இதைக் கண்டு மகிழ்ந்த சாமியார், "மகனே! எனக்குப் புகலிடம் அளித்து உணவுமளித்த உனக்கு நன்றி! நீ தந்த முட்டைகள் சுவையாயிருந்தன. இந்த முட்டைகளையிட்ட வாத்தைக் காட்டு!" என்றார். உடனே, அவன் வாத்தைஎடுத்து அவரிடம் தர, அவர் வாத்தை அன்புடன் தடவிக் கொடுத்தார்.


"மகனே! கடவுள் உனக்கு அருள் புரிவார்!" என்று வாத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். அப்போது மழை நின்று விட்டதால், சாமியார் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வெளிஏறினார்.
மறுநாள் ஷியாமுக்கு ஒரு பேரதிசயம் காத்திருந்தது. அவனுடைய வாத்து தங்க முட்டையிட்டிருந்தது. ஷியாமினால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இது அந்த சாமியாரின் மகிமைதான் என்று புரிந்து கொண்டான். அது மட்டுமல்ல! அந்த வாத்து தினமும் தங்க முட்டைகள் இட ஆரம்பித்தது. ஷியாமின் வறுமையும் நீங்கியது. செல்வம் குவியத் தொடங்கியது.
ஒருநாள், ஷியாமின் வாத்து தங்க முட்டையிடுவதை பக்கத்து வீட்டு தனராஜ் ஒளிந்திருந்து பார்த்து விட்டான். அதனால் பொறாமை அடைந்து அந்த வாத்தை எப்படியாவது தான் கைப்பற்ற நினைத்தான்.
உடனே, தனது இரு வேலைக்காரர்களுடன் ராஜாவிடம் சென்றான். "மகாராஜா! என் பக்கத்து வீட்டு ஷியாம் என் வாத்தைத் திருடி விட்டான். வாத்தைத் திருடும் போது எனது இந்த இரு வேலைக்காரர்களும் பார்த்து விட்டனர். மகாராஜா அவனை விசாரித்து என் வாத்தை தயவு செய்து திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள்!" என்றான்.
உடனே, ராஜா ஷியாமை வாத்துடன் சபையில் ஆஜராகும்படிக் கட்டளைஇட்டார். அவ்வாறே ஷியாம் வாத்துடன் வர, "என்னப்பா? தனராஜின் வீட்டு வாத்தை நீ திருடி விட்டாயாமே! நேற்று நீ திருடியதைப் பார்த்த இரு வேலைக்காரர்கள் இங்கே சாட்சி சொல்ல இருக்கின்றனர்" என்றார்.
உடனே ஷியாமுக்கு தனராஜின் வஞ்சகம் புரிந்து விட்டது. அவன் மன்னனிடம் "ராஜா! இந்த வாத்து தனராஜுடையது தான்! ஆனால் நான் இதைத் திருடவில்லை. என் கோழியைத் திருட்டுத்தனமாக ஒருநாள் கொன்று தின்றவன் இந்த தனராஜ்! அதற்குப் பதிலாக இந்த வாத்தை அவன்தான் எனக்குக் கொடுத்தான்!" என்றான்.
"இல்லை மன்னா! ஷியாம் பொய் சொல்கிறான்!" என்று தனராஜ் எதிர்வாதம் செய்தான். தனராஜ் கூறுவது உண்மையில்லை என்று ராஜாவிற்குத் தெரிந்து விட்டது.

ஆயினும் "இந்த வாத்து இன்றிரவு அரண்மனையிலேயே இருக்கட்டும்! நாளைக் காலை இருவரும் வாருங்கள்!" என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார். மறுநாள் காலை, அந்த வாத்து வழக்கம்போல் தங்க முட்டையிட்டது. செய்தியறிந்த ராஜா வியந்து போனார்.
மறுநாள், தனராஜும், ஷியாமும் சபைக்கு வந்தனர். ஒரு சாதாரண வாத்து முட்டையை தனராஜிடம் காட்டிய ராஜா, "தனராஜ்! உன் வாத்து இந்த மாதிரி முட்டையிடுமா அல்லது இதை விடச் சிறியதாக முட்டையிடுமா?" என்று கேட்டார். சற்று யோசித்த பின், "இதைவிடப் பெரியதாக இடும்!" என்றான் தனராஜ். பிறகு ராஜா அதே கேள்வியை ஷியாமிடம் கேட்க, "மகாராஜா! என்னுடைய வாத்து மகிமை வாய்ந்தது. அது தங்க முட்டையிடும்!" என்று உண்மையைக் கூறினான்.
உடனே தனராஜ், "பாருங்கள் ராஜா! ஷியாம் பொய் சொல்கிறான். வாத்து எங்காவது தங்க முட்டைஇடுமா? இதிலிருந்தே அவன் பேசுவது பொய் என்று தெரிகிறது!" என்றான் உற்சாகத்துடன். உடனே ராஜா, "தனராஜ்! நீ சொல்வதுதான் சரி! இந்த வாத்து உன்னுடையதுதான்! நீ எடுத்துப் போ!" என்றார். தனராஜ் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் வாத்தை எடுத்துச் சென்று விட்டான்.
பிறகு மன்னர் ஷியாமிடம், "ஷியாம்! தனராஜ் எடுத்துச் சென்றது வேறு ஒரு வாத்து! உன்னுடைய தங்க முட்டையிடும் வாத்து வேறிடத்தில் பத்திரமாக உள்ளது!" என்ற ராஜா, "அதிருக்கட்டும்! உன் வாத்து தங்க முட்டையிடும் ரகசியம் என்ன?" என்று கேட்டதும், ஷியாம் தனது குடிசைக்கு ஒருநாள் இரவு தங்க வந்த சாமியாரின் அருள் அது என்று அவருக்கு விளக்கினான்.
அதைக் கேட்டு வியந்த மன்னர் ஷியாமிடம் அவனுடைய வாத்தை ஒப்படைத்ததுடன், அவனுக்கு அரண்மனையிலேயே ஒரு நல்ல வேலையும் போட்டுக் கொடுத்தார்.


சிரித்த முகம் வேணும்!


"இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?"


"ஐந்து வருஷமா இருக்கேங்க!"


"நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை"


"தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள 'நியூரோசைக்யட்ரிக்' நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?"


"என்ன சார் சொல்றாங்க?"


"மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள் ஆரோக்கியமா வாழுறாங்களாம். அதுமட்டுமில்ல...பொறாமை, ஆசை, கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது. உயிர் போற நேரத்துல கூட பதட்டப்படக் கூடாது சார்"


"அடேங்கப்பா...இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதால தான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!"


"ஆமாங்க!"


"ஆனா உங்க கிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர் கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்"


"ஏன் அப்படி சொல்றீங்க?"


"இப்ப இந்த பஸ் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன். தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது. நீங்களாவது முன் பக்கம் போய் பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன், ப்ளீஸ்!"


"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். வர்ற வழியில தான் எங்கயோ விழுந்திருக்கணும்னு நினைக்கிறேன்!"


"எது...பிரேக்கா?"


"இல்ல...டிரைவர்!"

அது என் கடமை



பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் தட்சசீல நகரில் ஒரு சிற்பியாக இருந்தார். அவரது புகழ் எல்லா நாடுகளிலும் பரவியதால் அவரிடம் பல சீடர்கள் வந்து சிற்பக்கலையைக் கற்கலானார்கள்.

காசி மன்னனும் தட்சசீலச் சிற்பியைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தன் மகனும் சிற்பக்கலையில் பயிற்சி பெற வேண்டும் என எண்ணி அவனை தட்சசீலத்திற்கு அனுப்பினான். பதினாறு வயதே நிரம்பிய அந்த இளைஞன் தனியாகவே காசியிலிருந்து நடந்து தட்சசீலத்தை அடைந்தான். அங்கு போதிசத்வரைக் கண்டு அவரது சீடனாகி அவருக்குப் பணிவிடை புரிந்து வரலானான்.

அவன் சிற்பக்கலையை சிரத்தையுடன் கற்பது கண்டு போதிசத்வரும் மகிழ்ந்தார். இப்படியே சில மாதங்கள் கழிந்தன. இந்த சீடனும் குருவும் தினமும் ஊருக்கு வெளியே பாயும் ஆற்றிற்குப் போய் அதில் குளித்து விட்டுத் திரும்புவது வழக்கம். ஒரு நாள் அவர்கள் குளிக்கும் போது ஒரு கிழவி சிறிது எள்ளை எடுத்து வந்து கழுவி அதனைக் கரையில் உலரப் போட்டிருந்தாள்.

அரசகுமாரன் குளித்ததும் கரை ஏறி கிழவி எங்கோ பார்த்துக் கொண்டுஇருந்த போது ஒரு பிடி எள்ளை அள்ளித் தன் வாயில் போட்டு மென்று தின்று விட்டான். ஆனால் அவன் எள்ளை எடுத்துச் சாப்பிட்டதைக் கிழவி கவனித்து விட்டாள். அப்போது அவள் எதுவும் சொல்லவில்லை.

மறுநாளும் அரசகுமாரன் அது போல எள்ளை எடுத்துச் சாப்பிடுவதைக் கிழவி கண்டாள். அப்போதும் பார்த்தும் பாராதது போல இருந்து விட்டாள். ஆனால் மூன்றாவது நாளும் அரசகுமாரன் எள்ளைத் திருடித் தின்ற போது அவள் கோபம் கொண்டு அவனது குருவிடம் போய் "உங்கள் இந்த சீடன் கடந்த மூன்று நாள்களாக என் எள்ளைத் திருடித் தின்று வருகிறான்.


எள் போனது பற்றி நான் கவலைப் படவில்லை. ஆனால் இவன் இப்படித் திருடுவதை வழக்கமாக்கிக் கொள்கிறானே என்றுதான் வேதனைப் படுகிறேன். அதனால் அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுங்கள்" என்றாள்.

குருவும் தம் இருப்பிடத்தை அடைந்ததும் அரசகுமாரனை இழுத்துப் போய் எல்லாச் சீடர்களின் முன் நிறுத்தினார். பின்னர் அவன் ஆற்றங்கரையில் செய்த திருட்டுத் தனத்தை அவர் எல்லாரிடமும் கூறியதோடு பிரம்பை எடுத்து அவன் முதுகில் மூன்று அடிகளைச் ‘சுளீர்’ ‘சுளீர்’ என்று அடித்து "இனிமேல் இப்படிப்பட்ட தகாத செயலைச் செய்யாதே. இது நினைவில் இருக்கவே உனக்கு இந்த தண்டனை" என்றார்.

அரசகுமாரனுக்குத் தன் ஆசிரியர் மீது அடக்க முடியாத கோபம் ஏற்பட்டது. ஆனாலும் அவனால் என்ன செய்ய முடியும்? அப்போது அவன் மனத்தில் ‘இருக்கட்டும். நான் மன்னனானதும் இவருக்குச் சரியான தண்டனை கொடுக்கிறேன்’ எனக் கருவிக் கொண்டிருந்தான்.

சிறிது காலத்திற்குப் பின் அந்த அரசகுமாரனின் பயிற்சியும் முடிந்தது. போகுமுன் அவன் குருவிடம் "ஐயா, நான் மன்னனானதும் தாங்கள் ஒருமுறை எனது அரண்மனைக்கு விஜயம் செய்ய வேண்டும். தங்களுக்குத் தக்க மரியாதை செய்ய விரும்புகிறேன்" என்றான். குருவும் மகிழ்ச்சியோடு அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
அரசகுமாரன் காசிக்குச் சென்ற சில மாதங்களுக்குப் பின் அரசனாக ஆனான். சில நாள்களில் தன்னை தண்டித்த குருவின் ஞாபகம் வரவே அவன் தட்சசீலத்திற்கு ஒரு ஆளை அனுப்பி தன் குருவை அழைத்து வரும்படி அனுப்பினான்.

அவனும் சிற்பியான குருவை தட்சசீலத்தில் கண்டு தன் அரசன் விடுத்த அழைப்பை அளித்தான். ஆனால் அதனைப் பெற்றுக் கொண்ட குரு சிறிது காலம் கழித்து வருவதாகச் சொல்லி அனுப்பினார்.

சில மாதங்களுக்குப் பிறகு குரு தம் சீடனைக் காணக் காசிக்குச் சென்றார். அவர் அரச சபைக்குள் நுழைந்ததும் சபையோர் யாவரும் தம் அரசனின் குரு வந்திருக்கிறாரே என மகிழ்ந்து அவருக்கு மரியாதை செய்து உயர்ந்த ஆசனத்தில் உட்கார வைத்தார்கள்.


ஆனால் மன்னனோ தன் குருவை எரித்து விடுபவன் போலப் பார்த்து "என்னப்பா! ஒரு பிடி எள்ளை எடுத்து நான் தின்றேன் என்ற அற்ப காரணத்திற்காக அன்று நீ என்னை தண்டித்தாயே. இப்போது உனக்கு மரண தண்டனை கொடுக்காமல் விட்டு விடுவேனா?" என்று ஆவேசத்துடன் பொரிந்து தள்ளினான்.

அதுகேட்டு சபையில் இருந்தவர்கள் எல்லாரும் திடுக்கிட்டனர். ஆனால் குரு பயந்து விடாமல் கணீரென்ற குரலில் "நீ இப்போது மன்னன். அப்போது என் சீடன். நான் உனது ஆசிரியராக இருந்தேன். குருகுல வாசத்தின் போது ஒரு சீடன் தவறு செய்தால் அவனைத் தண்டிக்க வேண்டியது அவனது ஆசிரியரின் கடமை. அன்று மட்டும் நான் அப்படிச் செய்யாது உன்னை விட்டுஇருந்தால் இன்று நீ திருடனாகவே ஆகி இருப்பாய். அறிவாளிகள் யாராவது ஒருவர் தவறைச் சுட்டிக் காட்டினால் தம்மைத் திருத்திக் கொள்ளவே முயல்வார்கள். கோபமும் ஆத்திரமும் கொள்ளமாட்டார்கள் " என்றார்.

அதை காசி மன்னனோடு சபையில் இருந்த அனைவரும் கேட்டனர். அரசனுக்கோ ஒரே அவமானமாகப் போய் விட்டது. சபையோரோ "ஆகா! எப்படிப்பட்ட குரு!!" என வியந்து கூறினார்கள்.

மறு நிமிடமே காசி மன்னன் தன் குருவான போதிசத்வரின் கால்களில் விழுந்து "மகாத்மாவே! நீங்கள் தயவு செய்து என்னை மன்னியுங்கள். என்னைத் திருத்தி நல்வழிப்படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றான். போதிசத்வரும் தம் சீடனின் மனம் மாறியது கண்டு மகிழ்ச்சியடைந்தார். பின்னர் காசி மன்னன் வேண்டிக் கொண்டபடி அவர் தட்சசீலத்தில்இருந்து காசிக்கே வந்து அவனது ஆஸ்தான குருவாக இருந்து அவனுக்கு அவ்வப்போது நல்ல வழியைக் காட்டி வந்தார்.


வீண் போட்டி ஏன்?



பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் குத்திலன் என்ற வீணை வித்வானாக இருந்தார். அவர் தம் பதினாறாவது வயதிலேயே தமக்கு இணையாக யாராலும் வீணை வாசிக்க முடியாது என்பதைக் காட்டி விட்டார். அவரது புகழ் எங்கும் பரவி இருந்தது. இதைக் கண்ட காசி மன்னனும் அவரைத் தன் ஆஸ்தான வித்வானாக நியமித்துக் கொண்டான்.

இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பின் காசியிலிருந்து சில வியாபாரிகள் உஜ்ஜயினி நகருக்குத் தம் தொழில் சம்பந்தமாகச் சென்றனர். அவர்கள் குத்திலனது வீணை வாசிப்பைப் பல முறை கேட்டு ரசித்து மகிழ்ந்தவர்கள். உஜ்ஜயினியில் தம் வேலை சற்றுத் தாமதமாகும் என்பதால் சில நாள்கள் தங்கினர். அப்போது ஒரு நாள் இரவு யாரையாவது வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்கலாம் என அவர்கள் நினைத்தனர்.

யாராவது நல்ல வீணை வித்வான் இருக்கிறாரா என அவர்கள் விசாரித்த போது பலர் மாசிலன் என்ற பெயரைக் கூறினார்கள். எனவே காசி வியாபாரிகள் தம் பொழுது போக்கிற்காக மாசிலனை வீணைக் கச்சேரி செய்ய அழைத்து வந்தார்கள். ஆனால் மாசிலனது வீணை வாசிப்பு அவர்களில் ஒருவரைக் கூட கவரவில்லை. அவர்கள் ரசிக்கவும் இல்லை.

இதைக் கண்ட மாசிலன் "நான் இவ்வளவு நேரமாக வீணை வாசித்தது எப்படி இருந்தது?" என்று கேட்டான். அப்போது காசி வியாபாரிகளில் ஒருவன் "நீங்கள் வீணை வாசித்தீர்களா? நீங்கள் சுருதி கூட்டினீர்கள் என்றல்லவா நினைத்தேன்" என்றான்.

அதைக் கேட்ட மாசிலனின் முகம் அவமானத்தால் சுண்டியது. அவன் அவர்களிடம் "அப்படியானால் என்னை விட நன்கு வாசிக்கக் கூடிய வீணை வித்வான் இருக்கிறார் என்று தானே பொருள்" என்று கேட்டான்.


அப்போது இன்னொருவன் "அப்படியானால் நீங்கள் எங்கள் காசி வீணை வித்வானை பற்றிக் கேள்வி பட்டதில்லையா?" என்று கேட்டான். "அவர் பெரிய வித்வானா?" என்று மாசிலன் கேட்டான்.

வேறொருவனோ "அவரது வீணை வாசிப்பைக் கேட்ட பின் நீங்கள் வீணையை வாசிப்பதைக் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்க முடியுமா?" என்றான். அப்போது மாசிலன் "நான் அவருக்குச் சமமாக வீணை வாசித்துக் காட்டி உங்களிடமிருந்த பணம் வாங்கிக் கொள்கிறேன். இப்போது நீங்கள் எனக்கு பணம் கொடுக்க வேண்டாம்" எனக் கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

மாசிலன் அன்றே உஜ்ஜயினியை விட்டுக் கிளம்பி காசி நகரை அடைந்தான். அங்கு குத்திலனான போதிசத்வரைக் கண்டு "ஐயா! நான் உஜ்ஜயினியை சார்ந்தவன். தங்களிடம் வீணைப் பயிற்சி பெற வந்திருக்கிறேன். தங்கள் தயவு இருந்தால் தங்களைப் போல வீணை வாசிக்கும் பேறு பெறுவேன்" என்றான். போதிசத்வரும் அவனைத் தம் சீடனாக ஏற்று தினமும் வீணையில் அவனுக்குப் பயிற்சி அளிக்காலானார். மாசிலனும் குத்திலனான போதிசத்வரிடம் நன்கு வீணை கற்கலானான்.

இப்படியாக சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் போதிசத்வர் தம் சீடனிடம் "நீ என்னிடம் கற்க வேண்டியதெல்லாம் கற்றாகி விட்டது. இனி நீ உன் நாட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்" என்றார். மாசிலனுக்கோ உஜ்ஜயினிக்குத் திரும்பிப் போக இஷ்டமே இல்லை. காசியிலேயே அரச சபையில் உத்தியோகத்தில் அமர்வது என அவன் தீர்மானித்துக் கொண்டான்.

அவன் போதிசத்வரிடம் "குருவே! நான் உஜ்ஜயினிக்குப் போக விரும்பவில்லை. உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் நானும் கற்றுக் கொண்டு விட்டதால் உங்களோடு எனக்கும் சமஸ்தானத்தில் வித்வானாக இருக்கும் வேலையை வாங்கிக் கொடுங்கள். நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டவனாக இருப்பேன்" என்றான். போதிசத்வரும் மறுநாள் காசி மன்னனிடம் மாசிலனுக்கு வேலை போட்டுக் கொடுக்கும்படி கேட்டார்.


மன்னனும் "மாசிலன் உங்கள் சீடன் என்பதற்காகத்தான் நான் அவனை வேலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அவனுக்கு உங்களுக்குக் கிடைக்கும் சம்பளம் அளவிற்குக் கொடுக்க முடியாது. உங்களுக்கு கொடுப்பதில் பாதிதான் கொடுப்பேன். இதற்கு சம்மதமானால் அவன் இந்த வேலையை ஏற்கட்டும்" என்றான்.

போதிசத்வரும் வீடு திரும்பி மாசிலனிடம் மன்னன் கூறியதைச் சொன்னார். மாசிலன் அது கேட்டு மனம் வருந்தினான். இது என்ன நியாயம்! ஒரே மாதிரியாக உள்ள இருவரில் ஒருவருக்கு நிறையச் சம்பளம்? மற்றவனுக்கு அதில் பாதியா? மன்னனிடமே இதற்கு விளக்கம் கேட்க எண்ணி அவன் மன்னனை பேட்டி கண்டான்.

மாசிலன் மன்னனிடம் "அரசே இப்போது ஆஸ்தான வித்வானாக உள்ளவரின் சம்பளத்தில் பாதி கொடுத்து என்னை வேலைக்கு வைத்துக் கொள்ளவதாகக் கூறினீர்களாமே. நான் எந்த விதத்தில் அவரை விடக் குறைந்து போனேன்? அவர் எப்படியெல்லாம் வீணை வாசிக்கிறாரோ அதுபோல என்னாலும் வாசிக்கமுடியும். இது பற்றி என் குருவிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் எனக்கும் அவருக்குக் கொடுக்கும் அளவிற்கு சம்பளம் கொடுங்கள்" என்றான்.

மன்னனுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. அவன் "நீ குத்திலரின் சீடன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் உனக்கு உத்தியோகம் அளிக்கச் சம்மதித்தேன். நீ அவருக்குச் சமமான வீணை வித்வான் என நான் எப்படி நம்பமுடியும்?" என்று கேட்டான்.

மாசிலனும் "நீங்கள் எனக்கும் அவருக்கும் போட்டி வைத்துப் பாருங்கள். அப்போது தெரியும்" என்றான். காசி மன்னனும் அதற்கு இணங்கி ஒரு போட்டியை வைத்தான். அவன் "நீ இந்தப் போட்டியில் வென்றால் உனக்கு இங்கே உத்தியோகம் கிடைக்கும், தோற்றால் நீ இந்த நாட்டை விட்டே ஓடி விட வேண்டும். தெரிந்ததா?" என்றான். மாசிலனும் அதற்கு இணங்கினான்.

மறுநாளே குருவிற்கும் சீடனுக்கும் இடையே போட்டி நடந்தது. அந்த போட்டியைக் காண்பதற்காகவும், கேட்பதற்காகவும் எல்லாரும் கூடி விட்டார்கள். இருவரும் ஒருவரை மற்றவர் வெல்வதற்காக வீணையை வாசிக்கலானார்கள். சற்று நேரத்திற்குப் பின் போதிசத்வரின் வீணை கம்பிகளில் ஒன்று அறுந்து போகவே அவர் மூன்று கம்பிகளில் வாசிக்கலானார். இது கண்டு மாசிலன் தன் வீணையின் ஒரு கம்பியை அறுத்து விட்டு அவரைப் போல வாசித்தான். போதிசத்வரின் வீணையில் மேலும் இரு கம்பிகள் அறுந்து போகவே ஒரே கம்பியில் வாசித்தார். மாசிலனும் தன் வீணைக் கம்பிகளில் இரண்டை அறுத்து விட்டு ஒரே கம்பியில் வாசித்தான்.

போதிசத்வரின் வீணையின் கடைசி கம்பியும் அறுந்தது. கம்பி இல்லாமலேயே வீணையிலிருந்து அவர் இனிய நாதம் கிளம்பி வரச் செய்தார். மாசிலனும் தன் வீணையின் கடைசிக் கம்பியை அறுத்து விட்டு வாசிக்க முயன்றான். ஆனால் அவனது வீணையிலிருந்து எவ்வித நாதமும் வரவில்லை.

சபையோர் போதிசத்வரைப் பாராட்டினார்கள். மாசிலனை கேலி செய்தார்கள். இதனால் மாசிலனுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. இதனால் அன்றே தன் ஊரான உஜ்ஜயினிக்குக் கிளம்பி விட்டான்.


பற்கள்


பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு. மொத்தம் உள்ள 32 பல்களில் ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 25லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனது
போகட்டும். இருப்பதையாவது எப்படி பாதுகாப்பது ........

பற்களின் பயன்பாடுகளை

1. முகத்திற்கு அழகு சேர்க்க பயன்படுகிறது.

2. அழகான உச்சரிப்பிற்கு பயன்படுகிறது.

3. சிறந்த சிரிப்புக்கு பயன்படுகிறது.

4. உணவை நன்றாக மென்று உண்பதற்கு பயன்படுகிறது.


பல்லின் குறுக்கு வெட்டுத்தோற்றம்.




பற்களின் அமைப்பு

1,2 வெட்டுப்பற்கள்.

3- சிங்கப்பல்கள்

4- முதல் கடைவாய்ப்பல்

5- இரண்டாம் கடைவாய்ப்பல்.

20 - பால் பற்களும் 7 வயது முதல் 12 வயது வரை விழுந்து அந்த இடத்தில் நிலையான பற்கள் முளைக்கின்றன.

நிலையான பற்கள்.



1,2 - வெட்டுப்பற்கள்.

3- சிங்கப்பல்

4- முதல் முன்கடைவாய்ப்பல்

5- இரண்டாம் முன் கடைவாய்ப்பல்.

6- முதல் கடைவாய் பல்.

7- இரண்டாம் கடைவாய் பல்.

8-மூன்றாம் கடைவாய் பல்.


பற்களை பாதுகாக்கும் வழிகள்.

1.காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல் வேண்டும்.

2. நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.
3. உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை கொப்பளித்தல் வேண்டும்.

4. ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல்
வேண்டும்.

5. இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல்
வேண்டும்.




6. ப்ளுரைட் கலந்த தரமான பற்பசையை பயன்படுத்துதல் வேண்டும்.

7. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

பற்களில் வரும் பொதுவான நோய்கள்.



பற்களில் நோய் வரக்காரணங்கள்

1. பற்களை முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல் இருப்பது.

2. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள். அதிகமான இனிப்பு உண்பது. சுத்தமில்லாத உணவு வகைகள்.

4. விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது.

5. உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும் நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.

(உதாரணம்:- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் பல் பிரச்சனைகள்).

பல் மருத்துவரால் செய்யப்படும் முக்கிய சிகிச்சை.

பொதுவான ஆரம்ப நிலை சிகிச்சைகள்.

1. சொத்தை வருவதற்கு முன்பாகவே பற்களை சுத்தம் செய்து சொத்தை வராமல் அடைத்தல்.
(Pit and fissure sealant)


2. பற்களை உறுதிப்படுத்த ப்ளுரைடு ஜெல்லை பற்களின் மேல் செலுத்துதல்.
3. ஆரம்ப நிலையில் உள்ள சொத்தையை சுத்தம் செய்து அடைத்தல்.(filling)
4. பற்களின் மேல் படிந்துள்ள காரைகளை சுத்தம் செய்தல்(Scaling) கரைகளை சுத்தம் செய்தல். (Scaling)

நோய் முற்றிய நிலையில் செய்ய வேண்டிய சிகிச்சைகள்.

1. பல்லை எடுத்தல்.

2. செயற்கை பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.

3. வேர் சிகிச்சை.

4. வேர் அறுவை சிகிச்சை.

5. ஈறு அறுவை சிகிச்சை.

புகையிலை, குட்கா, பான் போன்றவற்றை பயன்படுததுவதால் " வாய்புற்றுநோய்" ஏற்படலாம்.

புகையிலையினால் வாயில் ஏற்படும் ஆரம்பநிலை மாற்றங்கள்.

1. வாயில் எரிச்சல்.

2. வாய் திறக்கும் அளவு குறைந்து போதல்.

3. வலி இல்லாத வெண்படலம்.

4. சிவந்த மேல் அன்னம்(புகைப்பதால் ஏற்படுவது)


பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.


1. பல் கறுப்பு நிறமாக மாறுவது.

2. பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது.

3. குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது கூச்சம் மற்றும் வலி.

4. பல்லில் வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.

5. பல்லில் வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம் இருத்தல்.




குழந்தைகளின் பல் பராமரிப்பு.

1. பால் பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது முக்கியம்.

2. நோய் ஏற்பட்டு பல்லை இழக்க நேரிட்டால் நிலையான பற்கள் சரியான இடத்தில் முளைப்பது தடைபடலாம்.

3. இனிப்பு - மிட்டாய் - பிஸ்கேட் - இவற்றின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.

4. முதல் பல் முளைத்த நாள் முதல் பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

5. விரலில் அணியக்கூடிய பிரஷ் கொண்டு குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும்.

6. காய்கறி மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

7. இரவில் படுக்கும் முன் குழந்தைக்கு புட்டிபால் (சர்க்கரை கலந்த பால்) கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் எல்லா பால் பற்களுமே சொத்தையில் சிதையும் வாய்ப்பு உள்ளது.

8. உறக்கப் போகும் முன் குழந்தையின் பற்களை துலக்கிவிட வேண்டும்.

9. மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழந்தையை பல்டாக்டரிடம் காண்பித்து பல்லை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

சிறந்த முறையில் பற்களை துலக்குவது எப்படி?