Friday, March 18, 2011

The Kite Runner


வாழும் பூமி நரகமாக விட்ட பிறகு வாழ கிடைத்த பூமியில் தங்களுடன் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி அசைப்போட்டு பார்ப்பார்கள். அப்போது இனிமையான நினைவுகளிடையே ஏதாவது வலி கண்டிப்பாக ஒலிந்திருக்கும். இனிமையான நினைவு என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் வேதனை மனதை ஆட்கொண்டிருக்கும்.
அப்படி பாலியத்தில் வாழ்ந்த பூமி பிரிந்து, மீண்டும் தன் சொந்தத்தை தேடி சென்றவனின் பற்றிய கதை தான் ‘The Kite Runner’

எழுத்தாளாராகிவிட்ட சந்தோஷத்தில் அமீர் வீட்டுக்குள் நுழைய ரஹிம் கான் என்பவரிடம் இருந்து போன் வருகிறது. ரஹிம் கான் என்ற பெயரை கேட்டத்தும் அவனது நினைவலைகள் பாலியத்தை நோக்கி செல்கின்றன.

1978ல் ஆப்கானிஸ்தானில் வாழும் அமீரின் நண்பன் ஹாசன் பட்டம் விட அவனுக்கு உதவியாக அமீர் இருக்கிறான். இருவருக்கும் பெரிய பொழுதுபோக்கே பட்டம் விடுவது தான். அமீர் பணக்கார வீட்டு மகன். அவனின் தந்தை பாபா ஒரு கம்யூனிச எதிர்பாளர். அமீரின் தந்தை பாபாவிடம் வேலை செய்யும் அலியின் மகன் தான் ஹாசன். ஆசிப்பும், அவனது நண்பர்களும் அமீரிடம் வம்பு செய்யும் போது ஹாசன் அவர்களை தன் உண்டிக்கோள்ளால் அடித்துவிடுவதாக மிரட்டுகிறான். ஆசிப் அவர்கள் இருவரையும் நண்பர்களல்ல, முதலாளி, வேலைக்காரன் உறவு என்று சொல்லும் போது அமீருக்கு வேதனையாக இருக்கும். அதே சமயம், அவனின் தந்தை ஹாசனின் புத்திசாலி தனத்தை பாராட்டும் போது பொறாமையும் ஒட்டிக் கொள்ளும்.



அமீர் தனியாக இருக்கும் எழுதும் போது கதையை அவனது தந்தையின் நண்பன் ரஹிம் கான் பாராட்டுவார். அவனது முதல் வாசன் ரஹிம் கான். அதே சமயம், ஹாசன் அமீர் கதைக்கு விமர்சன முன் வைக்கும் போது அமீர் மனதில் நண்பன் ஸ்தானத்தில் ஹாசன் ஒரு படி கீழ் தள்ளப்படுகிறான். இருந்தாலும், இருவரும் தொடர்ந்து நண்பர்களாக விளையாடுகிறார்கள். ஒரு முறை பட்டம் விடும் விழா நடக்கும் போது அமீர் பன்னிரண்டு பட்டங்களுக்கு மேல் அருத்து வெற்றிப்பெறுகிறான். அமீர் அருத்த பட்டத்தை ஹாசன் எடுக்க செல்ல, அமீர் தடுக்கிறான். " உனக்காக ஆயிரம் முறை செய்வேன் " என்று சொல்லி பட்டத்தை எடுக்க செல்கிறான். ஆசிப் குழுக்கள் அவனை சுழ்ந்துக் கொள்ள அவனிடம் பட்டம் கேட்கிறார்கள். ஹாசன் அதை தர மறுக்க அவனை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இதையெல்லாம் பயந்தப்படி பார்த்த அமீர் மறைந்துக் கொள்கிறான்.


தனக்கு நடந்த்து என்ன என்று சொல்ல தெரியாத ஹாசன் தன் நண்பர் அமீரிடம் பட்டத்தை தருகிறான். ஹாசன் தனக்காக ஏன் இதை செய்ய வேண்டும் ? ஒரு வேலை ஆசிப் சொல்லுவது போல் தங்களுக்குள் முதலாளி, வேலைக்காரன் உறவு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. அவனை தன் வீட்டில் இருந்து அனுப்ப, அவன் மீது திருட்டு பழி போடுகிறான் அமீர். ஹாசனும் ஏற்றுக் கொள்கிறான். அமீர் அப்பா பாபா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அலி தன் மகனை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறான். அமீர் குற்றவுணர்வோடு ஹாசனை பார்க்கிறான்.


1979ல் ரஷ்யப்படைகள் ஆப்கானிஸ்தானை உடுருவல் செய்ததால், தன் சொத்துக்களை எல்லாம் ரஹிம் கானிடம் நிர்வாகம் செய்ய ஒப்படைத்து மகனை அழைத்து செல்கிறான். வழியில் சோவியத்தின் சிப்பாய் ஆப்கானின் பெண்ணை புணர்ந்து கொள்ள அழைக்க தன் உயிரை பொருட்படுத்தாமல் தைரியமாக எதிர்கிறான். அமீர் மனதில் அவன் அப்பா ஒரு பெரிய ஹீரோவாக உருவாகுகிறார்.


இருவரும், அமெரிக்காவில் தன் வாழ்நாளை கலிக்கிறார்கள். அமீர் படித்து பட்டம் பெறுகிறான். அவன் தந்தை ஹாசனைப் பற்றி நினைவு படுத்தும் போதெல்லாம் அவனின் குற்றவுணர்வு அவனை கொள்ளும். அதை வெளியே காட்டிக் கொள்ளமல் இருப்பான். பாபா தன் நண்பரின் மகள் சொரயாவை திருமணம் செய்து வைத்த சந்தோஷத்தில் இறக்கிறான்.


அமீரின் நினைவலைகள் முடிந்து நீண்ட நாட்கள் பிறகு ரஹிமிடம் பேசுகிறான். முக்கியமான விஷய்த்திற்காக அமீரை பாகிஸ்தான் வரச்சொல்லுகிறான். பாகிஸ்தான் சென்ற அமீர் தன் முதல் புத்தகம் ரஹிம் கானுக்கு சமர்பிப்பதை காட்டுகிறான். அப்போது ஹாசன் அவன் தந்தை பாபாவின் இன்னொரு மகன் என்று கூறுகிறான். மேலும், அமீரின் சொத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஹாசனும், அவனது மனைவியும் இறந்ததை கூறுகிறான். முதலில் கோபப்படும் அமீர் ஹாசனின் உறுக்கமான கடிதம் படித்து அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்து நெகிழ்கிறான்.


ரஹிம் ஹாசனின் மகன் சௌரப் காபூலில் இருந்து அமெரிக்காவுக்கு அலைத்து செல்ல சொல்கிறான். தாடி, டர்பன் போட்டுக் கொண்டு அமீர் காபுல்லுக்கு செல்கிறான். சோவியத் படைகளை விட தாலிபன் மிகவும் கொடுமையாக பெண்ணை அடித்து கொள்வதும், கால் இழந்த சிறுவர்கள் தன் கட்டை காலை விற்பதும், தூக்கி தொங்கிய உடல் என்று நரகமாகிவிட காபுலை பார்க்கிறான். ஹாசனின் மகன் தன் சிறுவயது எதிரியான ஆசிப் வைத்திருபதை அறிந்து தன் உயிரை பணைய வைத்து சௌரப்பை மீட்கிறான்.



சௌரபை ரஹிம் கான் வீட்டுக்கு அழைத்து வர அவர் இறந்த செய்தியை அறிகிறான். சௌரப் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்து செல்கிறான் அமீர். அவர்களோடு நெருங்கி பழக சௌரப் தயங்கும் போது அமீர் பட்டம் வாங்கி வானத்தில் விடுகிறான். ஹாசன் தனக்கு சொல்லி தந்ததை அவன் மகன் சௌரப்புக்கு சொல்லி தருக்கிறான். சௌரப் பட்டத்தை அருக்க, அமீர் எடுத்து செல்ல ஓடும் போது ஹாசன் கூறிய " உனக்காக ஆயிரம் முறை செய்வேன்" ஆமீர் சொல்லுவது போல் படம் முடிகிறது.


கதைகளம் ஆப்கானில் நடப்பது போல் இருந்தாலும் பெரும்பகுதி சீனாவில் உள்ள கஷ்கரில் படமாக்கப்பட்டது.


பதின்ம சிறுவர்கள் ஹாசனை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சி எந்த ஆபாசமும் இல்லாமல் இருந்தாலும் பெரும் சர்ச்சை கிளப்பியது.


உலக அரசியல் பார்வையில் தீவிரவாதி நாடு என்று முத்திரை குத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் ரஷ்ய உடுருவல், தாலிபான் ஆக்கிரமிப்பு என்று அழகாய் பார்த்த நாடு தற்காலத்தில் மயாணமாய் காட்டும் போது அமீர் கண்களுக்கு மட்டுமல்ல பார்வையாளனுக்கும் வலியை கொடுக்கிறது.

எத்தனையோ வாழ்ந்து இடிந்த வீடுகளில் பல பாலிய வயது கதைகள் ஒலிந்திருக்கிறது. அமீர் கதாப்பாத்திரம் நினைத்து பார்க்கும் நேரமில்லாமல்

The Color Purple



கலர் பர்ப்பிள் (The Color Purple), 1900ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ஆஃப்ரிக்க, அமெரிக்கப் பெண்கள் அனுபவித்த வறுமை, இனவெறி, பாலியல் கஷ்டங்களைத் தாண்டி வெற்றிபெரும் ஒரு பெண்ணின் கதை.

இந்தப் படத்தைப் பார்க்கும் வரையில், ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் (Stephen Spielberg) ‍-க்கு, வேற்று கிரக வாசிகளையும், கொடூரமான விலங்குகளையும் விட்டால் வேறு எதைப் பற்றியும் படமெடுக்கத் தெரியாது எனத்தான் நினைத்திருந்தேன். இந்தத் திரைப்படம், ஸ்பீல்பெர்கின் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. இவ்வளவு உணர்வுப் பூர்வமான படத்தை எடுக்க முடிந்த ஸ்பீல்பெர்க் ஏன் இதுபோன்ற படங்களை தொடர்ந்து எடுக்க முயற்சிக்கவில்லை எனத் தெரியவில்லை.

படத்தின் கதாநாயகி செலியாக (Celie) வரும் வூப்பி கோல்டுபெர்க் (Whoopi Goldberg) -இன் அற்புதமான நடிப்பே இதன் முதுகெலும்பு. கணவனுக்கு பயந்து நடுங்கும் போதும், இறுதியில் அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி விலகும்போதும், கணவனின் தோழியான‌ ஜாஸ் இசைப்பாடகியுடன் நட்பு கொள்ளுமிடத்திலும், தங்கையை பல நாட்கள் கழித்து காணுமிடத்திலும், என ஒவ்வொரு காட்சியிலும் தனது அற்புதமான நடிப்பை பதிவு செய்திருப்பார் இவர். இந்தப் படத்திற்காக இவர் சிறந்த நடிப்புக்கான கோல்டென் க்ளோப் (Golden Globe) விருதினைப் பெற்றார்.

இது போன்ற படங்களில் வில்லன் நடிகரின் நடிப்பு கதை நாயகர்களை விட முக்கியமானது. அதை உணர்ந்து மிகச் சிறப்பாக செய்திருப்பார் செலியின் கணவன் ஆல்பர்ட் ஜான்ச‌னாக வரும் டேனி க்ளோவர் (Danny Glower). கதையின்படி இளம், நடுத்தர, முதுமை என மூன்று நிலைகளிலும் இவரது நடிப்பு பாராட்டுதலுக்குரியதாகவே இருந்தது.

இவர்கள் மட்டுமில்லாமல், முதலில் செலியின் கணவனின் தோழியாக வீட்டுக்குள் வந்து கொஞ்சம், கொஞ்சமாக செலியின் நெருங்கியத் தோழியாகி, செலியின் திறமைகளை அவளுக்கு எடுத்துச்சொல்லி, அவளும் தனியாக வாழும் தைரியத்தை அளிக்கும் கதாபாத்திரமான ஷக் ஆவ்ரி என்னும் ஜாஸ் பாடகராக வரும் மார்கரெட் ஆவ்ரியும் (Margaret Avery), ஆல்பர்ட் ஜான்சனின் முதல் மகனுக்கு மனைவியாக, மிகவும் தைரியமான பெண்ணாக வந்து, பின்னர் வெள்ளையர்களின் அடக்குமுறையால் அடங்கிப் போய், இறுதியில் அவர்களையே எதிர்க்கும் தைரியம் கொள்ளும் ஷோஃபியா கதாப்பாத்திரத்தில் வரும் ஓபரா வின்ஃப்ரே (Oprah Winfrey), செலியின் தங்கை நெட்டீயாக (Nettie) வரும் பெண் என அனைவரது நடிப்புமே மிகச் சிறப்பாக அமைந்திருந்தது இந்தப் படத்தில்.

வழக்கமான ஸ்பீல்பெர்க் படங்களிலிருந்து முற்றிலும் மாறி, ஒரு காட்சி கூட கிராஃபிக்ஸோ, இல்லை வேறு தந்திரங்களோ இல்லாமல், முழுக்க முழுக்க கதையையும், கதாப்பாத்திரங்களின் நடிப்பையும் நம்பி எடுக்கப் பட்ட படம். இதில் ஸ்பீல்பெர்க் வெற்றிபெற்றிருக்கிறார்.

கலர் பர்ப்பிள் (Color Puple) நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

Matchstick Men (2003) - English


matchstick_men_poster

போன பதிவான 8மிமியை எழுதும்போதே, இந்தப் படத்தைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இப்படத்தைப் பற்றி எழுதாமல் இன்னமும் இருக்கிறோமே என்று. பின்னூட்டத்திலும் விஸ்வா இப்படத்தைப் பற்றிச் சொல்ல, இதோ பதிவு ரெடி.

இப்படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், ‘கான் ஆர்டிஸ்ட்’ என்ற வார்த்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். ‘பலே கில்லாடி’ என்று நம்மூரில் அழைக்கப்படுபவன் தான் இந்தக் கான் ஆர்டிஸ்ட். ஒரு நபருடன் நெருங்கிப் பழகி, அவர்களது நம்பிக்கையைச் சம்பாதித்துக் கொண்டு, பின்னர் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு கம்பியை நீட்டுபவனே இந்தக் கான் ஆர்டிஸ்ட். சில வாழும் உதாரணங்களைச் சொல்லப்போனால், நம்ம ஃப்ரான்க் அபக்னாலி (கேட்ச் மி இஃப் யு கேன் நினைவிருக்கிறதா), நம்மூரு போலி சாமியார்கள் போன்ற பலரைச் சொல்லலாம்.

ஓகே. லாஸ் ஏஞ்ஜலீஸில், இப்படிப்பட்ட ஒரு கான் ஆர்டிஸ்ட் – பலே கில்லாடியாக வாழ்ந்து கொண்டிருப்பவனே ராய். ராய் வாலர் (நிகொலஸ் கேஜ்). அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு ஆளாக இருந்தாலும், அவனுக்குப் பல்வேறு விதமான டிஸார்டர்கள் இருக்கின்றன – தூசியைப் பார்த்தாலே அலர்ஜி வரும் மைஸோஃபோபியா, அதிர்ச்சிகளைத் தாங்க முடியாத அகோராஃபோபியா (என்னது அகோரியா !?), நிறையப் பேருக்குத் தெரிந்த அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் இன்னபிற. இத்தோடு கூட, திடீர் திடீரென அதிர்ச்சியடையும் ஒரு மனிதனாக வேறு அவன் இருக்கிறான்.

இப்படி நாளொரு ஃபோபியாவும் பொழுதொரு அதிர்ச்சியும் அடைந்து அவனது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கையில், ஒரு நாள் திடீரென உடல்நலக் குறைவுக்கு உள்ளாகிறான். அப்பொழுது, அவனது நண்பனான ஃப்ராங்க், ஒரு மருத்துவரைப் பரிந்துரைக்கிறான்.

அந்த மருத்துவரான க்ளெய்ன், ராயைப் பரிசோதித்துவிட்டு, அவனது ஸ்ட்ரெஸ் குறைவதற்காக, அவனது பழைய வாழ்க்கையைப் பற்றிக் கேட்கிறார். நிறைமாதமாக இருந்த மனைவியை ராய் விவாகரத்து செய்ததை அறிகிறார். அவளுக்கு என்னவாயிற்று என்ற ஆர்வமும் ராய்க்கு இருப்பதை அறியும் க்ளெய்ன், சில நாட்கள் கழித்து, அவளிடம் பேசி, அவளுக்கு ஒரு பதிநான்கு வயது மகள் இருப்பதை அறிகிறார். அவள் பெயர் ஏஞ்சலா.

matchstick men_3 தனக்கு ஒரு மகள் இருப்பதை எண்ணி ஆனந்தமடையும் ராய், க்ளெய்னின் மூலமாக ஏஞ்சலாவைச் சந்திக்கிறான். அவளோ, இவனுக்கு நேர் எதிராக இருக்கிறாள். எப்பொழுது பார்த்தாலும் சந்தோஷமாக, வாழ்க்கையைக் கொண்டாடுபவளாக, ஒரு பட்டாம்பூச்சியைப் போல் பறந்துகொண்டிருக்கிறாள். மகளைச் சந்தித்த மகிழ்ச்சியில், தனது தோழன் ஃப்ராங்க் சொல்லும் ஒரு ‘வேட்டையை’ நடத்தச் சம்மதிக்கிறான்.

அந்தப் பணக்காரனின் பெயர் ’சக்’. இவர்கள் இலக்கு: அவனது பெரும் பணம். ஒரு பிஸினஸ்மேன் போல் நடித்து, அவனது பணத்தை ஒரு இடத்துக்குக் கொண்டுவர வைத்து, அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை விடப் பெரும் பணம் அளிப்பது போன்ற ஒரு வியாபாரத்தைக் கச்சிதமாக செட் செய்கிறார்கள் இருவரும். சக்கும் இவர்களை நம்பிவிடுகிறான்.

இந்நிலையில், ஒரு நாள் ஏஞ்சலா, ராயின் வீட்டிற்கு வந்து விடுகிறாள். தனது தாயோடு சண்டையிட்டுவிட்டு, அங்கு வந்துவிட்டதாக அழும் அவள், அங்கு சில நாட்கள் தங்கிக்கொள்வதற்கு ராயின் அனுமதி கேட்கிறாள். தனது பல ஃபோபியாக்களால், ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் ராய், ஆரம்பத்தில் எரிச்சல் அடைந்தாலும், தன்னுடைய மகள் அருகில் இருப்பது அவனுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

matchstick men_1 ஒருநாள், ஏஞ்சலாவுக்கு ராயின் தொழில் தெரிந்துபோய் விடுகிறது. அவனை விட்டுவிட்டுப் போய்விடுவாள் என்று ராய் நினைக்கும் நேரத்தில், தனக்கும் இத்தொழிலைக் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கெஞ்சுகிறாள் ஏஞ்சலா. மகள் மீது வைத்திருக்கும் அன்பினால், ராயும் அவளுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.

திடீரென, தாங்கள் சக்கைச் சந்திப்பதற்கு முடிவு செய்திருந்த நாள், ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டுள்ளதாக ஃப்ராங்க் வந்து சொல்கிறான். சக்கின் நேரமின்மையால், ஒரு நாள் முன்னதாகவே சந்திப்பு நடக்கிறது. என்ன செய்வதென்றே தெரியாத ராய், வேறு வழியில்லாமல், மகளையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறான்.

ப்ளான்படி, ஏஞ்சலா சக்கை திசைதிருப்புகையில், சூட்கேஸை எடுத்துக்கொண்டு ஃப்ராங்க்கும் ராயும் ஓடிவிட வேண்டும். அத்தனையும் கச்சிதமாக நடக்கிறது. ஆனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட சக், இவர்களைத் துப்பாக்கியுடன் துரத்துகிறான். ஆனால், அனைவரும் பணத்துடன் தப்பிவிடுகிறார்கள்.

ராய் ஏஞ்சலாவிடம், தன்னை வந்து கொஞ்ச நாட்கள் சந்திக்க வேண்டாம் என்று சொல்கிறான். அவளது பாதுகாப்புக்காக. மகள் இல்லாமல், மறுபடி நோய்வாய்ப்படும் ராய், மருத்துவர் க்ளெய்னிடமே மறுபடி செல்கிறான். அவர் கொடுத்த மருந்து, சாதாரண சர்க்கரை மாத்திரை என்பதைத் தெரிந்து கொள்கிறான். அவன் மனதில்தான் எல்லாமே உள்ளது என்று சொல்லும் க்ளெய்ன், அவன் மனது வைத்தால் எல்லாமே சரியாகி விடும் என்றும் சொல்கிறார். எனவே, மகளுடன் இருந்தாலே எல்லாமே சரியாகிவிடும் என்பதை உணரும் ராய், திருட்டுத்தனத்தை விட்டுவிட்டு, ஏதாவது வேலை செய்து, ஏஞ்சலாவுடன் வாழ்ந்து விடலாம் என்று முடிவெடுக்கிறான். இது, அவனது நண்பனான ஃப்ராங்குக்குப் பிடிப்பதில்லை.

சில நாட்கள் கழித்து ஏஞ்சலாவைச் சந்திக்கும் ராய், திடீரென அங்கு, தன்னிடம் பணத்தை இழந்த சக், ஃப்ராங்க்கை அடித்துப் போட்டு, துப்பாக்கியுடன் நிற்பதைப் பார்த்து விடுகிறான். திடீரென செயல்படும் ஏஞ்சலா, சக்கைச் சுட்டுவிட்டு, ஃப்ராங்கை விடுவித்து, அவனுடன் தப்பித்துவிடுகிறாள். அவர்களுடனே ஓட எத்தனிக்கும் ராயை, குண்டடிபட்ட சக்கின் அடி, மயக்கமுற வைக்கிறது.

matchstick men_2 கண்விழிக்கும் ராய் இருப்பது, மருத்துவர் க்ளெய்னின் மருத்துவமனையில். ராய் விழிப்பதற்காகக் காத்திருக்கும் போலீஸ்காரர்கள், சக், குண்டடியால் இறந்துவிட்டதையும், ஃப்ராங்க்கையும் ஏஞ்சலாவையும் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதையும் ராயிடம் சொல்கின்றனர். வருத்தமுறும் ராய், அவர்கள் சென்ற பின், தன்னுடைய வங்கி லாக்கரின் பாஸ்வேர்டைக் க்ளெய்னிடம் கொடுத்து, எப்படியாவது ஏஞ்சலாவிடம் தான் இதுவரை சேர்த்துவைத்திருந்த பணம் அனைத்தையும் கொடுக்கச் சொல்கிறான். க்ளெய்னும் சம்மதிக்கிறார்.

இதன்பின் என்னவாயிற்று? போலீஸினால் ஏஞ்சலாவைப் பிடிக்க முடிந்ததா? தந்தையும் மகளும் ஒன்று சேர்ந்தார்களா? ராய் பிழைத்துக் கொண்டானா? படத்தில் காணுங்கள். ஆனால் ஒன்று – நீங்கள் சற்றும் எதிர்பாராத க்ளைமேக்ஸ் உங்களை அசர அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படத்தின் இயக்குநர், ரிட்லி ஸ்காட். இவரைப் பற்றி எதுவுமே சொல்லத் தேவையே இல்லை. மிகப்பிரபலமான, அருமையான, ஒரு வெர்ஸடைல் இயக்குநர். பல பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்களைக் கொடுத்தவர்.

நிகொலஸ் கேஜ், மறுபடியும் பிரமாதமான நடிப்பை நல்கியிருக்கிறார். ஒரு அப்ஸெஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் பேஷண்டாக, ஒரு கான் ஆர்டிஸ்டாக, ஒரு தந்தையாக, ஒரு நண்பனாக – இப்படிப் பல தரப்பட்ட வேடங்களைத் திறம்பட செய்திருக்கிறார்.

இப்படம், ‘ப்ளஃப்மாஸ்டர்’ என்ற பெயரில், ஹிந்தியில் சுடப்பட்டது. அபிஷேக்கிற்கு ஒரு நல்ல ப்ரேக்காக அமைந்த இப்படம், அவரது பிந்நாளைய ஹிட்களுக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

படு விறுவிறுப்பாகச் செல்லும் இப்படம், கட்டாயமாக உங்கள் முகத்தில் ஒரு புன்முறுவலை வரவழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- கருந்தேள் கண்ணாயிரம்

8mm (1999) - English

8mm_poster

இந்த வலைப்பூ துவங்கிய நாளிலிருந்து நான் எழுதியே ஆகவேண்டும் என்று நினைத்த படங்கள் சில உண்டு. இப்படமும் அவற்றில் ஒன்று. ஆனால், ஏற்கெனவே நம் பாலா இதைப் பற்றி எழுதிவிட்டார் என்பதனால், இவ்வளவு நாள் எழுதாமலேயே இருந்தேன். நேற்று, பிரபல சாமியாரைப் பற்றி வெளிவந்த வீடியோ (முழுவதுமாக – 20 நிமிடங்கள்) பார்த்தவுடன், சட்டென்று இப்படம் நினைவு வந்தது. எனவே, இதோ ஆரம்பித்தாயிற்று.

வீடியோ என்பது இந்நாட்களில் நமது வாழ்வோடு மிகவும் ஒன்றிவிட்ட ஒரு விஷயம். அதனை நல்லதாகவும் பயன்படுத்தலாம்; கெட்டதாகவும். நேற்று வெளிவந்த வீடியோ ஒரு நல்ல விஷயத்துக்காகப் பயன்பட்டிருக்கிறது. ஒரு பன்னாடையைத் தோலுரித்துக் (அந்த மொள்ளமாறி, நடிகையிடம் ப்ளோஜாப் அனுபவிப்பதை வேறு அந்த வீடியோ பதிவு செய்திருக்கிறது. ப்ளோஜாப் தப்பில்லை; ஆனால் சாமியார் வேடமிட்டு அதைச் செய்தது தவறு) காட்டியிருக்கிறது. ஆனால், ஒரு வீடியோ, ஒரு குரூரமான விஷயத்துக்குப் பயன்பட்டால்?

சில வருடங்கள் முன், இப்படத்தைப் பார்க்க நேர்கையில், அந்த பாதிப்பு அடுத்த இரு நாட்களுக்கு நீடித்தது. மனதை விட்டு அகலவேயில்லை இந்தப் படம். தம்ப்பிங் என்று சொல்வார்களே – அப்படி ஒரு படம்.

டாம் வெல்ஸ் ஒரு துப்பறியும் ஆசாமி. ஒருநாள், அவருக்கு, ஒரு மிகப்பெரிய, வயதான செல்வச் சீமாட்டியிடமிருந்து அழைப்பு வருகிறது. அந்தச் சீமாட்டியின் கணவர் சமீபத்தில் இறக்கவே, அந்தக் கணவரின் சேஃப்டி லாக்கரைத் திறந்த போது, ஒரு படச்சுருள் அகப்படுகிறது. அந்தச் சுருளை டாமிடம் அளிக்கும் சீமாட்டி, அதனைப் பார்க்கச் சொல்கிறாள். அவர்களது திரைஅறையில் அதனை ஓடவிடுகிறார் டாம்.

ஒரு இளம் பெண். படுக்கையில் உள்ளாடைகளோடு அமர்ந்திருக்கிறாள். அவள் கண்களில் போதை. குழப்பமான மனநிலையில் இருக்கிறாள். அப்போது, அவளருகே ஒரு தடியன் வருகிறான். முகத்தை மறைத்திருக்கிறான். அவளைப் பலமாக அறைகிறான். ஒரு மேஜையில் இருக்கும் பல இரும்புக் கருவிகளிடையே தேடி, ஒரு கத்தியை எடுக்கிறான். மெல்ல கேமிராவைப் பார்த்துக்கொண்டே நடந்து, அவளருகில் நின்றுகொண்டு, அவளது உடல் மேல் கத்தியை மெதுவாக நகர்த்துகிறான். பின்னர், ஒரு திடீர் வேகத்தில், கத்தியை அவள் உடலெங்கும் குத்தி, அவளை கிழித்துக் கொல்கிறான். இதைப் பார்க்கும் டாமின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

வெளியே வரும் டாமிடம், இந்த வீடியோ உண்மையா அல்லது பொய்யா? உண்மையாக இருந்தால், அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள், என்ன நடந்தது என்பதைப் பற்றிய உண்மை ஆகியனவற்றைக் கண்டுபிடிக்கச் சொல்லி, பணத்தையும் அளிக்கிறாள் அந்த மாது.

வீட்டிற்கு வரும் டாம், தனது மனைவி மற்றும் சிறு குழந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு, துப்பறியத் துவங்குகிறார். அவருக்கு ஒவ்வொன்றாகக் கிடைக்கும் தகவல்கள், ஒரு பெரிய குற்ற சாம்ராஜ்யத்தையே இருளிலிருந்து வெளியே கொணர்கின்றன.

ஸ்னஃப் படங்கள் என்று ஒரு வகை உண்டு. உலக மக்களில் பெரும்பாலானோர் மிதவாதிகள் (அல்லது அப்படி நடிப்பவர்கள்). இவர்களுக்கு, எந்த வகை சந்தோஷமாக இருந்தாலும், அது பொதுவில் எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு விஷயமாக இருந்தாலே போதுமானது. ஆனால், வேறுவகையைச் சேர்ந்த சில மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆர்கஸம் வரவழைக்க, குரூரமான விஷயங்கள் தேவைப்படும். பிணங்களுடன் உறவு கொள்வது (நெக்ரோஃபீலியா), ஒரு உயிரைக் கொல்வது மூலம் சந்தோஷம் அடைவது, ரத்தத்தைப் பார்ப்பதன் மூலம் உச்சபட்ச இன்பம் அடைவது போன்ற சில விஷயங்கள் இவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

நீலப்படங்கள் பொதுவில் ஒரு குறிப்பிட்ட பேட்டர்னைக் கொண்டிருக்கும். முக்காலே மூன்றரை வீசம் (நன்றி: கல்கி) நீலப்படங்கள் இப்படித்தான். ஆனால், ஸ்னஃப் படங்கள் வேறுவகை. உறவு கொண்டு முடித்த பின், அந்தப் பெண்ணையோ சிறுமியையோ அக்குவேறு ஆணிவேறாகக் கிழித்துக் கொல்வது இந்தப் படங்களின் ஸ்பெஷாலிட்டி. இப்பொழுதும் இந்தவகைப் படங்கள் இருக்கின்றன (இதைப்பற்றி ஒருநாள் விகடனில் மதன் எழுதியிருந்தது நினைவு வருகிறது).

இப்படிப்பட்ட ஒரு ஸ்னஃப் படமே டாம் அந்த வீட்டில் பார்த்தது. அது எங்கு உருவானது, அந்தப் பெண் யார் என்பதை டாம் சிறிது சிறிதாகக் கண்டுபிடிக்கிறார்.

ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பல அதிர்ச்சிகள் அவருக்காகக் காத்திருக்கின்றன. டாம் கண்டுபிடிக்கும் உண்மைகளைப் படத்தில் காணுங்கள். ஒரு அருமையான த்ரில்லர் இது.

டாமாக நம்ம நிகோலஸ் கேஜ். எந்த ரோலைக் கொடுத்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செஇவது இவரது ஸ்பெஷாலிட்டி. இதிலும் மனிதர் பின்னியிருக்கிறார். ஒரு அசாதாரண ஹீரோவாக இல்லாமல், சாதாரண மனிதராக இவரைக் காட்டியிருப்பது அருமை.

சமுதாயத்தில் ஏதோ ஒரு இடத்தில் நிகழும் ஒரு சிறிய அனாமலியை – ஒரு வழக்கத்திற்கு மாறான நிகழ்ச்சியை - எடுத்துக்கொண்டு, அதன் மூலம், இருளில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான உலகத்தையே கண்டுபிடிக்கும் வகையைச் சேர்ந்தது இந்தப் படம்.

இயக்கம்: ஜோயல் ஷூமாக்கர். பல அதிரடிப்படங்களின் இயக்குநர்.

8mm பாருங்கள். உங்கள் மதை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது

- கருந்தேள் கண்ணாயிரம்

Before Sunset - English






நமது வாழ்வில் பத்து ஆண்டுகளுக்கு முன்: அப்பொழுது நாம் எந்தக் கவலையும் இல்லாத, வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகக்கூடிய ஒரு உற்சாகமான நிலையில் இருந்திருப்போம். அந்தச் சமயத்தில், திடீரென்று ஒரு பெண்ணுடன் ஒரு முழு நாள் செலவிடக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் எப்படி இருக்கும்? இருவரும், மெதுவே ஒருவர் மேல் ஒருவர் ஈர்க்கப்படும் அந்தக் கணங்கள் . . . இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் காதல் வயப்படும் அந்த நிமிடங்கள். . சட்டென்று மின்சாரம் பாய்வதைப் போல் உணர்ந்த அந்த நொடிகள் . . சுருக்கமாய்ச் சொல்லப்போனால், பிஃபோர் சன்ரைஸ் படத்தைப் போல் இருக்கும்.

பத்து வருடங்கள் முன், பிஃபோர் சன்ரைஸ் படத்தில் நடந்த கதையின் தொடர்ச்சியே இந்த 'பிஃபோர் சன்செட்'. ஆனால், சன்ரைஸ் படத்தைப் பற்றி எழுதாமல், அதன் இரண்டாம் பாகத்தைப் பற்றி எழுதுவதன் நோக்கம்? முதலில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பின் முதல் பாகத்தைப் பார்த்தால், இரு படங்களின் தாக்கத்தையும் முழுதாய் உணரலாம். இப்படத்தின் ஆரம்ப நிமிடங்களில் நாம் உணரும் ஒரு அற்புதமான மனநிலை, முதல் படத்தைப் பார்க்காமல் இருந்தால் தான் கிடைக்கும்.

ஜெஸ்ஸி (ஈதன் ஹாக்) ஒரு எழுத்தாளன். பத்து வருடங்கள் முன்னால், வியன்னாவில் அவன் பார்த்த ஒரு பெண்ணைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அப்புத்தகத்தைப் பாரிஸில் பிரமோட் செய்வதற்காக, ஒரு நூலகத்தில் ஜெஸ்ஸி பேசுகிறான். அப்பொழுது, அங்கு வந்திருக்கும் பத்திரிக்கை நிருபர்கள், அப்புத்தகத்தைப் பற்றிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர். ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதிலளிக்கிறான் ஜெஸ்ஸி. அப்பொழுது, சாதாரணமாக நூலகத்தின் ஒரு பக்கத்தைப் பார்வையால் துழாவுகையில், ஒரு பெண், இவனையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அதிர்ச்சிக்குள்ளாகிறான். அதே பெண் தான், பத்து வருடங்கள் முன் அவன் சந்தித்த பெண்! பல வருடங்களாக இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அவசர அவசரமாகத் தனது பேச்சை முடித்துக் கொள்ளும் ஜெஸ்ஸி, தனக்கு இன்னமும் ஃப்ளைட்டைப் பிடிக்க மிகக் குறைந்த நேரமே இருக்கும்போதிலும், அந்தப் பெண் செலினிடம் (ஜூலி டெல்ஃபி) சென்று, தன்னுடன் காஃபி அருந்தும்படி அழைக்கிறான்.


பல வருடங்கள் கழித்து ஜெஸ்ஸியைப் பார்த்த மகிழ்ச்சி செலினுக்கு. அவளும் சம்மதிக்கிறாள். இருவரும் மெல்ல செலினுக்குப் பிடித்த காஃபி ஷாப்பை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர். அந்தக் கடை, சில தெருக்கள் தள்ளி இருக்கிறது. மெதுவாக இருவரும் பேசத் தொடங்குகின்றனர். பத்து வருடங்கள் முன், தாங்கள் பிரிந்த போது, ஆறு மாதம் கழித்து வியன்னாவில் சந்திப்பதாகப் போட்டிருந்த திட்டத்தைப் பற்றிப் பேச்சு திரும்புகிறது. தனது பாட்டி திடீரென இறந்து விட்டதால், தன்னால் வர முடியவில்லை என்று சொல்லும் செலின், ஜெஸ்ஸி வியன்னாவுக்கு வந்தானா என்று கேட்கிறாள். தானும் வரவில்லை என்று ஜெஸ்ஸி சொல்கிறான். தனக்கு ஒரு உறுதியான காரணம் இருந்தது என்றும், ஆனால், ஜெஸ்ஸி வராததற்கு ஏதேனும் காரணம் இருந்ததா என்று கேகும் செலின், அவன் வர மறந்து விட்டான் என்று எண்ணிக் கொள்கிறாள். ஆனால், ஜெஸ்ஸியின் கண்கள் அவனைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவன் வியன்னாவுக்கு வந்து, செலினுக்காகக் காத்திருந்து, பின் திரும்பிவிட்டதை அறிந்து கொள்ளும் செலினால், கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஜெஸ்ஸி அவளை சமாதானம் செய்கிறான்.

பேச்சு, மெதுவாக அவர்களது வாழ்க்கையைப் பற்றித் திரும்புகிறது. ஜெஸ்ஸிக்குத் திருமணம் நடந்து, ஒரு பையன் இருப்பதை செலின் அறிந்து கொள்கிறாள். செலினுக்கும் ஒரு காதலன் இருக்கிறான். ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளத் தொடங்குகின்றனர். செலின் தனது உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் எண்ணங்களை மெல்ல வெளியிடத் தொடங்குகிறாள். தங்களது முதல் சந்திப்பிற்குப் பிறகு, தன்னால் எந்த ஆணுடனும் இயல்பாகப் பழக முடிவதில்லை என்றும், எந்த ஆணுடன் தான் இருக்கும்போதும், ஏதோ ஒரு தனிமையைத் தன்னைச் சுற்றி உணர்வதாகவும் சொல்லும் செலின், தன்னுடன் எவரும் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே இந்தத் தனிமை எண்ணத்திலிருந்து விடுபடுவதாகவும் சொல்கிறாள். அதனால் தான் அவளது காதலன் பல நாடுகளுக்கிடையில் சுற்றினாலும் அவள் அதனால் பாதிக்கப்படுவதில்லை என்று சொல்கிறாள்.

செலினின் மனதில், அவள் ஜெஸ்ஸியுடன் சேராமல், அவன் இல்லாமல் போன துயரம் ததும்பி அவள் கண்களினூடே வழிகிறது. இருவருக்குமே, அவர்களது முதல் சந்திப்பிற்குப் பின், தங்களது வாழ்வில் சந்தோஷமான தருணங்களே இல்லாமல் போன உண்மை தெரிந்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில், கடந்த பத்து வருடங்களில், அவர்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் அனைத்தும், ஒருவருக்கு ஒருவரை நினைவுபடுத்திக் கொண்டே இருந்திருக்கின்றன.

இருவரும் காஃபி அருந்துகின்றனர். அங்கிருந்து, செலினை அவளது அபார்ட்மெண்ட்டில் விட்டுவிட்டு வருவதற்காக, ஜெஸ்ஸி அவளுடன் செல்கிறான். காரில், செல்லும் வழியில், ஜெஸ்ஸியின் நெருக்கத்தை உணரும் செலின், அழத்துவங்குகிறாள். அவர்களது முதல் சந்திப்பின் ஒவ்வொரு நொடியையும் நினைவுகூரும் செலின், அவளது மனதில் இருப்பவற்றையெல்லாம் அப்படியே தனது கண்ணீரின் வழியே கொட்டத் தொடங்குகிறாள். தனது மடியில் முகம் புதைத்து அழும் செலினின் தலையை ஆதுரத்துடன் வருடிக் கொடுக்க, ஜெஸ்ஸியின் கரம் எழுகிறது. ஆனால், அவளது தலையை நெருங்கும் கரத்தை, அவன் பின்னிழுத்துக் கொள்கிறான். அதன்பின், தனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை, ஜெஸ்ஸி சொல்லத் துவங்குகிறான். தனது திருமணம், மனைவிக்கும் இவனுக்கும் இடையே எப்போதும் எழும் சண்டைகள், தனது மகனுக்காக மட்டுமே இந்தத் திருமண வாழ்க்கையை இன்னமும் முறிக்காமல் இருப்பது ஆகிய எல்லாவற்றையும் செலினிடம் மனம் திறக்கிறான்.


தங்களாலேயே, தங்கள் மனதில் எழும்பியுள்ள வெறுமையை இருவரும் உணர்கிறார்கள். அந்த வெறுமையைப் போக்கிக்கொள்ள, அவர்களால் மட்டுமே முடியும். ஆனால், அது இனிமேல் சாத்தியமே இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இனிமேல் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பது தெரிந்திருந்தாலும், இன்னுமிருக்கும் மிகக் குறைந்த நேரத்தில், இருவருமே ஒருவரையொருவர் பிரியக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

ஜெஸ்ஸி, செலினின் அபார்ட்மெண்டுக்குள் வருகிறான். செலின், கிதார் பயின்று கொண்டிருப்பதால், அவளை ஒரு பாடல் பாடச் சொல்கிறான். தயக்கமே இல்லாமல், அவர்களது முதல் சந்திப்பினைப் பற்றி செலின் எழுதிய பாடல் ஒன்றை அவள் பாடத் துவங்குகிறாள்.

மிக உருக்கமான வரிகளை, மிகவும் சந்தோஷமான ஒரு மெட்டில் அவள் பாடப்பாட, நம் மனதில் ஒரு அற்புதமான உணர்வு எழும்புகிறது. அந்தப் பாடலை இதோ இங்கு காணுங்கள்.

பாடல் முடிந்ததும், நினா சிமோனின் பாடல்களை ஜெஸ்ஸி அங்கிருக்கும் சிடி ப்ளேயரில் போடுகிறான். செலின், மிக நளினமாக, நினா சிமோனை நினைவுபடுத்தும் முறையில் ஆடுகிறாள். ஜெஸ்ஸியின் ஃப்ளைட்டின் நேரம் நெருங்கி விடுகிறது.

இதன் பின் என்ன நடந்தது? காதலர்கள் இருவரும் இணைந்தார்களா? படத்தில் காணுங்கள்.


நினைத்துப் பாருங்கள்: பல வருடங்கள் முன் நாம் காதலித்த ஒரு ஆணோ பெண்ணோ, திடீரென நம் முன் தோன்றினால், எப்படி இருக்கும்? அவர்களுடன் வாழவும் முடியாது; ஆனால், அவர்களைப் பிரியவும் இயலாது. இந்த இருதலைக்கொள்ளி சூழ்நிலையில், நாம் எப்படி நடந்து கொள்வோம்? இதை, அருமையான முறையில் படமாக்கியிருக்கிறார் ரிச்சர்ட் லிங்க்லேட்டர். பல வருடங்களாக நாம் மறக்க நினைக்கும் சில நினைவுகளை, இப்படம் தூண்டிவிட்டு எழுப்புகிறது. ஆனால், அந்த நினைவுகள், நம்மை வருந்த வைப்பதற்குப் பதில், ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்பட வைக்கின்றன. ஒரு அமைதியான மாலை வேளையில், ரம்மியமான மழை நம் மனதில் என்ன உணர்வை ஏற்படுத்துமோ, அதை இப்படம் ஏற்படுத்துகிறது.

இப்படத்தின் திரைக்கதை, ஈதன் ஹாக் மற்றும் ஜூலி டெல்ஃபி இருவராலும் கட்டமைக்கப்பட்டது. முன்பே எழுதப்படாமல், கேமரா முன் நடிக்கும் அந்த நிமிடத்தில், இயற்கையாக அவர்கள் பேசிக்கொள்வதிலேயே இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டது. அதனாலேயே மிகவும் இயற்கையான வசனங்கள் இதன் ஸ்பெஷாலிட்டி. இப்படத்தில் ஈதன் ஹாக்கின் கேரக்டரான ஜெஸ்ஸி, தனது குழந்தையின் காரணத்தாலேயே தன்னுடைய திருமணத்தை முறிக்காமல் தொடர்வதாகக் காட்டப்பட்டிருக்கும். இப்படம் வெளியானவுடனே, ஈதன் ஹாக், தனது மனைவியான உமா தர்மேனை விவாகரத்து செய்தார். திருமணத்துக்கு முன்னரே உருவான குழந்தையின் காரணத்தாலேயே தான் இருவரும் மணந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், பிஃபோர் சன்ரைஸ் படத்துக்கும் இப்படத்தும், சரியாக பத்து ஆண்டுகள் இடைவெளி.

மொத்தத்தில், வாழ்க்கையில் இழந்த தருணங்களின் வலியை நினைவுபடுத்தும் ஒரு படமே இந்த 'பிஃபோர் சன்செட்'. ஆனால், முற்றிலும் சந்தோஷமான ஒரு முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கு மிகப்பிடித்த காதல் கதைகளில் ஒன்றான இப்படம், நமது மனதில் ஏற்படுத்தும் தாக்கம், விவரிக்க இயலாதது.


Posted by கருந்தேள் கண்ணாயிரம்

உள்ளத்தை திறந்து வை!

* எவராலும் தமது சொந்த ஆன்மாவையோ, கடவுளையோ அறிய இயலாது. ஆனால், நாம் ஆன்மாவாகவும், கடவுளாகவும் உள்ளோம்.
* பண்டைக்காலத்தில் கடவுளை மறுப்பதே நாத்திகமாகயிருந்தது. இப்போது தன்னம்பிக்கையை மறுப்பது நாத்திகமாக உள்ளது.
* நம்முடைய பிரார்த்தனைகளில் கடவுளை நம் தந்தையாக ஒப்புக் கொண்டு விட்டு, அன்றாட வாழ்க்கையில் வெளியாரை நம் சகோதரர்களாக அங்கீகரிக்காமலிருப்பதில் நியாயமில்லை.
* நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதேனுமொரு நலனைத் தரவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கும் வரை உண்மையான அன்பு உண்டாகாது.
* உலகத்தில் அனைத்தையும் துறந்து, மன உணர்ச்சிகளின் தீவிரத்தை அடக்கிக் கொண்டு அமைதியை
நாடுகிறவனே சுதந்திர புருஷனும் பெரியோனும் ஆவான்.
* நமது உள்ளங்களை நாம் எப்போதும் திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்திலுள்ள நல்ல நினைவுகள் அனைத்திற்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.
* நாம் அனைவரும் விளக்குகளைப் போல பிறருக்கு ஒளி கொடுத்து பயனுள்ள வாழ்க்கை வாழ்வோம்.

- விவேகானந்தர்

விருப்பங்கள் நிறைவேறும்

* அனைத்திலும் இறைவனை காண்பது
நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும்
ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
* வாழும் காலம் எவ்வளவு
வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய
உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.
* இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும்
வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை
அனுபவிக்கிறான்.
* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம்
மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது.
அப்போது நீங்கள், மனித குலத்திற்கு ஒரு
வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.
* பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

-விவேகானந்தர்