Friday, March 18, 2011

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
கலைஞர் உரை:
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
மு.வ உரை:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
கலைஞர் உரை:
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
மு.வ உரை:
முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
கலைஞர் உரை:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
மு.வ உரை:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
கலைஞர் உரை:
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.
மு.வ உரை:
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
சாலமன் பாப்பையா உரை:
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
கலைஞர் உரை:
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
மு.வ உரை:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
சாலமன் பாப்பையா உரை:
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

Wednesday, March 16, 2011

Tsotsi

ஒரு நல்ல படத்தை, எவ்வளவு கேவலமாகத் தமிழில் எடுக்கலாம்? அல்லது எடுக்கிறார்கள்?

Tsotsi , யோகி

Tsotsi - ஒரு அருமையான படம்
யோகி - தொலைக்காட்சியில், பாடல் காட்சிகளிலும், சிறு காட்சிகளிலும் பார்த்தது (அது போதாதா?) முழுன்மையாகப் பார்க்கும் அளவுக்கு என் மனம் இன்னும் பக்குவப் படவில்லை.


எதற்கும் கவலைப்படாத ஒரு சேரிப்புற ரவுடியின் வாழ்வில் எதிர்பாராமல் ஒரு குழந்தை இணைந்து கொள்ள, என்னவாகிறது? - இதுதான் படத்தின் தீம்.

சிறுவயதில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, இரக்கமற்ற தந்தையிடமிருந்து ஓடிவந்து சேரிப்புறத்தில் தஞ்சமடைந்து, வளர்ந்த சொற்சி, நண்பர்களோடு சேர்ந்து வழிப்பறி, கொள்ளை, கொலை என வாழ்ந்து வருகிறான்.


ஒருநாள் பென்ஸ் காரொன்றை திருடும்போது, உள்ளே ஒரு குழந்தை, தாயை சுட்டு விடுகிறான். குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல், அனாதையாக விட்டுச் செல்லவும் மனமில்லாமல், இறுதியில் தனது வீட்டுக்குக் கொண்டு செல்கிறான். ஒருவருக்கும் தெரியாமல் தானே வளர்க்க முடிவு செய்கிறான். வீட்டுக்கு வரும் நண்பர்களை உள்ளே நுழைய விடாமல், சந்தேகப் படும் அவர்களை ஒருவாறு சமாளித்து அனுப்புகிறான்.

கைக் குழந்தையுடன் செல்லும் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று, அவளை மிரட்டி பாலூட்ட வைக்கிறான். முதலில் வற்புறுத்தலால் சம்மதிக்கும் அவள், நாளாக அக்குழந்தையின் மேல் பாசம் கொள்கிறாள்.


ஒரு நாள் நண்பர்களுடன் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்க செல்லும்போது, அது அந்தக் குழந்தையின் வீடு எனத் தெரிய வருகிறது. குழந்தையின் தந்தையிடமிருந்து அதன் தாய் அவன் சுட்டதால், இடுப்புக்கு கீழ் வழங்காமல் இருப்பதையும், குழந்தையைப் பிரிந்து இருவரும் மிகவும் வருந்துவதையும் உணர்கிறான். பணம், நகையை விட்டு குழந்தையின் விளையாட்டு பொம்மைகள், உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கிறான்.

ஒரு சிறு குழப்பத்தில் குழந்தையின் தந்தையை சொற்சியின் சகா கொல்லப் போக, அவனைக் கொன்று தந்தையைக் காப்பாற்றுகிறான். இன்னொரு சகா வெறுத்துப் போய் அவனிப்பிரிந்து செல்கிறான்.

இப்பொழுது அவனுடன் குழந்தை மட்டுமே. அதான் ஆடம்பரமான பெரிய வீட்டைப் பார்த்த அவனுக்கு தனது குடிசையில், பாதுகாப்பின்றி வைத்திருப்பது அவன் மனதுக்கு கஷ்டமாக இருக்க, போலீஸ் வேறு அவனைத் தேட, முதன்முறையாக தான் வாழ்க்கையில் நேசித்த, அன்பு கொண்ட ஒரேயொரு ஜீவனைப் பிரிந்து விட முடிவு செய்கிறான்.


குழந்தையை அதன் வீட்டில் கொண்டுபோய் விட தூக்கி செல்லும்போது, அந்தப் பெண் எங்கே எடுத்துச் செல்கிறாய்? அவனை நான் வளர்க்கிறேன் என்னிடம் விட்டுவிடு எனக் கேட்க, அவன் எதுவுப் பேசாமல் போகிறான்.

துப்பாகிகளால் குறிவைத்தபடி போலீசார் சுற்றிநிற்க, குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அழுதபடி, சொற்சி கைகளை மேலே மெதுவாக தூக்க படம் நிறைவடைகிறது.

மிகத் தெளிவான, எளிமையான, குழப்பமற்ற திரைக்கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு (குறிப்பாக அந்த 'ஸ்லம்' காட்டப்படும் விதம்)

சொற்சி பாத்திரத்தின் இயல்பான நடிப்பு, குழந்தைக்குப் பாலூட்டுவதை பார்க்கும்போது வெளிப்படும் (தாய்ப் பாசத்துக்கு ஏங்கும்) முகபாவனை

இயக்கம் - Gavin Hood
Country- South Africa
Award - Academy Award for Best Foreign Language Film 2005
- Nominated for Golden Globe for Best Foreign Language Film 2006

யோகி

tsotsi என்றால் ரவுடி / பொறுக்கி
யோகி என்றா? ( பெயரிலேயே வித்தியாசமா யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க)

அதில டீன் ஏஜ் ஹீரோ.
இதில நம்ம 'யூத்து' அமீர்.

அதில பெயருக்கு ஏற்றமாதிரி ஹீரோ ரவுடி. மற்ற எல்லாரும் இயல்பான பாத்திரங்கள்.
இதில தமிழ் சினிமா விதிகளின்படி ஹீரோ நல்லவர், வல்லவர், நியாயமானவர் இன்னபிற. அவர்தான் ஹீரோவாச்சே.. அப்போ மற்ற எல்லாரும் கெட்டவங்க.

அதில, அவன் கெட்டவனாகவே வாழ்கிறான். அவன்தான் படத்தில் வில்லன். அதையும் தாண்டி இறுதிக் காட்சியில் அவன் மேல் எங்களுக்கு இரக்கம் ஏற்படும்.
இதில இவர் 'ஹீரோ'வா இருக்கிறார், நடக்கிறார், இறுதியில் சாகிறார். எங்களுக்கு? (அப்பாடா! போயிட்டானா? அவ்வளவு சேட்டை, தாங்க முடியல!)

ஆனா இரண்டிலையும் ஹீரோயின் சறம் கட்டி இருக்காங்க. அபிரிக்காவில பெண்கள் சறம் கட்டுவாங்க ஒக்கே. தமிழ் நாட்டிலையும் கட்டுறாங்களா? எனக்குத் தெரியல.

ஒண்ணு மட்டும் எனக்குப் புரியவே மாட்டேங்குது. யோகிய ஏன் இரண்டு வருஷமா எடுத்தாங்க? ஒன்னுமே தெரியாத நானே, புது முகங்களை வைத்து (பழைய முகம்னா 'நடிக்கத்' தொடங்கிடுவாங்களே), ஒவ்வொரு ஸீனா பாத்துப் பாத்து, காட்சியமைத்து (அவ்வளவு தெளிவா இருக்கு படம்), ஆறு மாசத்தில எடுத்துடலாம் ன்னு நினைக்கிறேன்.
அமீருக்கு ஏன் இவ்வளவு நாள்? இதில டைரக்க்ஷன் வேற ஒருத்தர், கதை அமீரோடதாம் (பார்ரா!!)

tsotsi யை அப்படியே தமிழில் எடுத்திருந்தால், தமிழ் சினிமாவின் ஒரு நல்ல படைப்பாக இருந்திருக்கும். ம்ம் என்னமோ போங்க!

The Pianist

இரண்டாம் உலகப் போரில் மிகக்கொடூரமான முறையில் இன அழிப்பை மேற்கொண்டிருந்தது ஹிட்லரின் படை. ஆனால் அதிலும் மனதில் சிறிதும் விருப்பமின்றி, இராணுவச் சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டும் அப்படிச் செயற்பட்ட, மனித நேயம் கொண்ட, இரக்கமுள்ள இராணுவ அதிகாரிகள் இருந்திருப்பார்கள் தானே?

எல்லா இடங்களிலும் இருப்பார்கள்தானே...!


போலந்தில் வாழ்ந்த ஸ்பில்மென் தன் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய The Pianist இலிருந்து 2002 இல் வெளிவந்த படம்.


1939 ம் ஆண்டு. போலந்தின் தலைநகர் Warsaw வில் வசிக்கும் திறமையான பியானோக் கலைஞனான ஸ்பில்மென், அங்குள்ள வானொலி நிலையத்தில் பியானோ வாசித்துக் கொண்டிருக்கிறான்.


திடீரெனக் குண்டுகள் வெடிக்க, வானொலி நிலையச் சுவர்கள் தகர்ந்து விழ, வெளியில் வருகிறான். மக்கள் பயந்தோடும் அந்த நேரத்தில் டோரதா என்னும் பெண் ஸ்பில்மெனை அடையாளம் கண்டு அவனது வாசிப்பைப் புகழ, அறிமுகம் ஏற்படுகிறது இருவருக்கும். வீட்டில், எல்லாரும் பாதுகாப்பான இடத்துக்குச்செல்ல தயாராகிறார்கள். வானொலியில் போர் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. ஹிட்லரின் படைகள் ரோந்து வருகின்றன.




யூதர்களான ஸ்பில்மென், டோரதா வீதியில் சந்திக்கிறார்கள், கடைகளில் யூதர்கள் நுழையக் கூடாது, வீதியோர இருக்கைகளில் அமரக்கூடாது என்ற அரசாங்க அறிவிப்பு டோரதாவுக்கு அதிர்ச்சியாகஇருக்கிறது.

யூதர்கள் அனைவரும் வலது கையில் அடையாளத்துக்காக ஒரு Badge அணியச் செய்கிறார்கள். பட்ச் அணிந்தவர்கள் படைவீரர்களால் தாக்கப்படுகிறார்கள். யூதர்களுக்கான தனிக் குடியிருப்பு அமைக்கப்பட்டு, அக்டோபர் 31 க்குள் அனைவரையும் அங்கு குடியேறச் சொல்ல, சோகத்துடன் மக்கள் அந்தச் சிறிய குடியிருப்பில். வறுமையைப் போக்க பியானோவை விற்கிறான் ஸ்பில்மென். யாரும் வெளியேறாமல் குடியிருப்பைச் சுற்றி பெரிய சுவர்.




ஸ்பில்மென் அங்குள்ள ஒரு ஹோட்டலில் பியானோ வாசிக்கும் வேலையில் சேர்கிறான். வறுமை, படையினர் கொடுமை, இரவுகளில் ரோந்து காரணமாக விளக்குகள் அணைத்துவிட்டு வாழ்கிறார்கள். போலீஸ் வேலைக்கு யூதர்களைத் தேர்ந்தெடுக்க, அதில் ஸ்பில்மென் குடும்பத்துக்குத்தெரிந்த யிட்சாக் போலீசாகிறான். அவன் ஸ்பில்மெனை படையின் இசைக்குழுவில் சேருமாறு கேட்க, அவன் மறுக்கிறான்.



ஆகஸ்ட் 16, 1942. எல்லோரும் தங்கள் உடைமைகளுடன் எங்கு போகிறோமெனத் தெரியாமல் அழைத்துச் செல்லப்பட, இறந்த உடல்கள், கூட்டம் கூட்டமாக உறவுகளைதேடியலையும் மனிதர்கள். சித்திரவதை முகாமுக்கு அழைத்துச் செல்லும் ரயிலில் வரிசையாக எல்லோரும் ஏற, யிட்சாக், ஸ்பில்மெனை தனியே இழுத்துவிட, தன் குடும்பத்தைப் பிரிந்து, இறந்த உடல்கள், சிதறிய உடைமைகள், யாருமற்ற வீதியில் அழுதுகொண்டு செல்கிறான்.



குடியிருப்பில் எஞ்சியவர்களோடு ஸ்பில்மென் கட்டடவேலை செய்கிறான். முன்பு தன் இசைக்குழுவில் இருந்த பாடகி ஒருத்தியைச் சந்தித்து, குடியிருப்பிலிருந்து தப்பித்து நகரத்திற்கு செல்கிறான். 16 மே 1943 ம் ஆண்டு. ஜெர்மானியருக்கு எதிரான கலவரத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறி பழைய தோழியான டோரதா வீட்டுக்கு வர, அவளும் கணவனும் அவனுக்கு உதவி செய்து, சந்தேகம் வராதிருக்க, ஜெர்மானியர் தங்கியுள்ள பகுதியிலுள்ள வீடொன்றிலேயே அவனைத் தங்க வைக்கிறார்கள்.


போர் முடிவுக்கு வருகிறது. கிளர்ச்சிப் படையினர் தாக்குதல்களினால் ஆத்திரமடையும் ஜெர்மன் படைகள் ஸ்பில்மென் தங்கியுள்ள பகுதியிலுள்ள கட்டடங்களை எல்லாம் தகர்த்து, கொளுத்த, ஸ்பில்மென் தப்பி ஓடுகிறான்.



ஜெர்மன் படைகள் துரத்த, பசியோடு, இடிந்த கட்டடங்களில் உணவு தேடி, மீந்த தானியங்களை உண்டு, பாசித் தண்ணீரைக் குடித்து, மரணம் துரத்த ஓடுகிறான்.

ஒரு வீட்டில் சமையலறையில் உணவு கொண்ட டின் ஒன்றைக் கண்டெடுத்து, அதைத் திறக்க முயல, பியானோ சத்தம் கேட்க, பயத்தில் மேலே ஏறி, ஒளிந்து கொள்கிறான்.
மறுநாள் அந்த டின்னைத் திறந்து விட்டு நிமிர எதிரே...ஜெர்மன் இராணுவ அதிகாரி ஒருவர். ஸ்பில்மென் பயத்தில் உறைய, யார் நீ? எனக் கேட்கிறார். தான் ஒரு பியானோ கலைஞன் என்று சொன்னதும் அதிகாரி ஆச்சரியப்பட்டு அவனை அங்கிருக்கும் பியானோவை வாசிக்கச் சொல்கிறார்.



பசி, களைப்பு, மரண பீதி, தாடி மீசையுடன் இருக்கும் ஸ்பில்மென் மெதுவாக, வாசிக்கத் தொடங்கி, தன்னை மறந்து அதனோடு ஒன்றிப் போய் வாசிக்க, பிரமிக்கிறார் அந்த அதிகாரி. எங்கே ஒளித்திருந்தாய்? எனக் கேட்க, ஸ்பில்மென் தான் மேலே இருந்த இடத்தைக் காட்டுகிறான்.


அங்கேயே அவனை ஒளிந்திருக்கச் செய்து, அவனுக்குத் தேவையான உணவுகளையும் வழங்குகிறார். இன்னும் சில வாரங்களில் போர் முடிந்துவிடும் எனக்கூறும் அவர், 'அதன்பிறகு என்ன செய்வாய்?' எனக்கேட்க, 'வானொலியில் பியானோ வாசிப்பேன்' என்கிறான் ஸ்பில்மென். 'நான் அதைக் கேட்கிறேன்' எனக் கூறுகிறார் அவர்.
குளிரில் நடுங்கும் ஸ்பில்மெனுக்குத் தனது மேலங்கியைக் கொடுத்து விட்டு விடை பெற்றுச் செல்கிறார் அந்த அதிகாரி.


ஸ்பில்மென், அந்த மனித நேயமுள்ள அதிகாரி என்ன ஆனார்கள்?


-பூட்டப்பட்ட அறையில் தனியாக இருக்கும்போது, அருகில் பியானோ.. வாசிக்கும் ஆவலுடன் ஸ்பில்மென்..ஆனால் சத்தம் கேட்க கூடாது என்ற சூழ்நிலையில், அவன் கை படாமல் காற்றில் கைவிரல்களை அசைக்க, அவன் மனதில் ஒலிக்கும் அந்த இனிய இசை.
-ஜெர்மன் அதிகாரி முன்னிலையில் ஸ்பில்மென் வாசிக்கும் காட்சியும், இசையும்.


-போர் முடிந்து ஜெர்மன் படைகள் போர்க்கைதிகளாக இருக்கும்போது, அந்த அதிகாரி, ஸ்பில்மெனுக்கு உதவியதைக் குறிப்பிட்டு, தன்னைக் காப்பாற்ற முடியுமா? எனக் கேட்கும் நெகிழ்வான காட்சி.
- படம் முழுதும் பின்னணி இசை இவை என்னை வெகுவாகக் கவர்ந்தவை.

இயக்கம் - Roman Polanski
மொழி - Polish

விருதுகள் -
3 Academy Awards - Actor, Director, Screenplay
Cannes Films Festival 2002
2 BAFTA Awards 2003 - Best Film, Best Direction